அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இரதமான வாய்ஊறல் (பொது)
முருகா!
சிற்றின்பம் எந்தப் பயனும் உடையது அல்ல.
துன்ப வடிவானது.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
சமுக மோத ராபூத ...... முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார ...... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி ...... மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை ...... மறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி காரூட ...... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இரதம் ஆன வாய்ஊறல் பருகிடா விடாய் போக,
இனிய போக வாராழி ...... அதில்மூழ்கி,
இதயம் வேறு போகாமல் உருகி, ஏகமாய் நாளும்
இனிய மாதர் தோள்கூடி ...... விளையாடும்,
சரச மோக மா வேத சரியை யோம க்ரியா ஞான
சமுகமோ, தரா பூதம் ...... முதலான,
சகளமோ? சடாதார முகுளமோ? நிராதார
தரணியோ? நிராகார ...... வடிவேயோ?
பரத நீல மாயூர! வரத! நாக கேயூர!
பரம யோகி! மாதேசி! ...... மிகுஞான
பரமர் தேசிகா! வேட பதிவ்ருதா சுசீ பாத
பதும சேகரா! வேலை ...... மறவாத
கரதலா! விசாகா! சகல கலாதரா! போத
கமுக மூஷிக ஆரூட ...... மத தாரைக்
கடவுள் தாதை சூழ்போதில், உலகம் ஏழு சூழ்போது
கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.
பதவுரை
பரத நீல மாயூர --- நடனமாட வல்ல நீலமயில் வாகனரே!
வரத --- வரம் அருள வல்லவரே!
நாக கேயூர --- பாம்பைத் தோள்களில் அணிந்தவரும்
பரம யோகி --- மேலான யோகியும்,
மா தேசி --- பெருஞ்சோதி வடிவானவரும்,
மிகு ஞான பரமர் தேசிகா --- மேலான ஞானமூர்த்தியும் ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!
வேட பதிவ்ருதா சுசீ பாத பதும சேகரா --- வேடர் குலத்தில் வளர்ந்தவளும், கற்பு நிறைந்த தூயவளும் ஆன வள்ளிநாயகியின் திருவடியைச் சூடுபவரே!
வேலை மறவாத கரதலா --- வேலை மறவாத திருக்கரத்தை உடையவரே!
விசாகா --- விசாகரே!
சகல கலாதரா --- கலைகள் அனைத்துக்கும் ஆதாரமானவரே!
போதக முக --- யானை முகத்தை உடையவரும்,
மூஷிக ஆரூட --- மூடிக வாகனரும் ஆகிய
மத தாரைக் கடவுள் --- மதநீர் ஒழுகுகின்ற கடவுள் ஆகிய விநாயகர்,
தாதை சூழ் போதில் --- தமது தந்தையார் ஆகிய சிவபரம்ப்பொருளை வலமாக வந்த போது,
உலகம் சூழ்போது கருணை மேருவே --- உலகத்தை வலமாக வந்தருளிய கருணைமலையே!
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக --- (விலைமாதரின் வாயில் ஊறும்) சுவையான எச்சிலைப் பருகி, அதனால் காம தாகம் நீங்கி,
இனிய போக வாராழி அதில் மூழ்கி --- இனிமை மிக்க சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி,
இதயம் வேறு போகாமல் உருகி --- மனம் வேறிடத்தை நாடாமல் உருகி,
ஏகமாய் --- மனம் ஒன்றி,
நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் சரச மோகம் --- நாள்தோறும் இனிய விலைமாதர் தோள்களைக் கூடி விளையாடுகின்ற சல்லாப மோகமானது,
மாவேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ --- சிறந்த வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள சரியை மார்க்கமோ? கிரியை மார்க்கமோ? யோக மார்க்கமோ? ஞான மார்க்கமோ? அல்லது இவைகளின் கூட்டோ?
தரா பூதம் முதலான சகளமோ --- மண் முதலாகிய பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ?
சடாதார முகுளமோ --- ஆறு ஆதாரங்களின் அரும்பு நிலையோ?
நிராதார தரணியோ --- சார்பு இல்லாத சூரிய ஒளியோ?
நிராகார வடிவேயோ --- உருவம் அற்ற திருமேனியோ?
பொழிப்புரை
நடனமாட வல்ல நீலமயில் வாகனரே!
வரம் அருள வல்லவரே!
பாம்பைத் தோள்களில் அணிந்தவரும், மேலான யோகியும், பெருஞ்சோதி வடிவானவரும், மேலான ஞானமூர்த்தியும் ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!
வேடர் குலத்தில் வளர்ந்தவளும், கற்பு நிறைந்த தூயவளும் ஆன வள்ளிநாயகியின் திருவடியைச் சூடுபவரே!
வேலை மறவாத திருக்கரத்தை உடையவரே! விசாகரே!
கலைகள் அனைத்துக்கும் ஆதாரமானவரே!
யானை முகத்தை உடையவரும், மூடிக வாகனரும் ஆகிய மதநீர் ஒழுகுகின்ற கடவுள் ஆகிய விநாயகர், தமது தந்தையார் ஆகிய சிவபரம்ப்பொருளை வலமாக வந்த போது, உலகத்தை வலமாக வந்தருளிய கருணைமலையே!
தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
விலைமாதரின் வாயில் ஊறும) சுவையான எச்சிலைப் பருகி, அதனால் காம தாகம் நீங்கி, இனிமை மிக்க சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி, மனம் வேறிடத்தை நாடாமல் உருகி, மனம் ஒன்றி, நாள்தோறும் இனிய விலைமாதர் தோள்களைக் கூடி விளையாடுகின்ற சல்லாப மோகமானது, சிறந்த வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள சரியை மார்க்கமோ? கிரியை மார்க்கமோ? யோக மார்க்கமோ? ஞான மார்க்கமோ? அல்லது இவைகளின் கூட்டோ? மண் முதலாகிய பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ? ஆறு ஆதாரங்களின் அரும்பு நிலையோ? சார்பு இல்லாத சூரிய ஒளியோ? உருவம் அற்ற திருமேனியோ?
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் மாதர் கூட்டுறவால் விளையும் சிற்றின்பமானது எந்த வகையிலும் நன்மை புரிவது அல்ல என்கிறார். துன்பத்திற்கு இடமான இன்பமே அது.
நாக கேயூர ---
கேயூரம் - தோள் அணிகளில் ஒருவகை. சிவபெருமான் பாம்பைத் தோளிகளில் அணிந்தவர்.
மா தேசி ---
தேசி, தேசு - ஒளி வடிவானவர்.
மிகு ஞான பரமர் தேசிகா ---
முருகப் பெருமான் மேலான ஞானமூர்த்தி ஆகிய சிவபரம்பொருளுக்கே குருவாகத் திகழ்ந்தவர்.
வேட பதிவ்ருதா சுசீ பாத பதும சேகரா ---
பதிவ்ருதா - பதிவிரதம்.
சுசீ - தூய.
பாத பதுமம் - திருவடித் தாமரை.
சேகரர் - அணிந்தவர்.
"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா!" --- திருப்புகழ்.
"பணி யா என, வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே!" --- கந்தர் அனுபூதி.
போதக முக மூஷிக ஆரூட மத தாரைக் கடவுள் தாதை சூழ் போதில் உலகம் சூழ்போது கருணை மேருவே ---
பெருச்சாளி வாகனரும், மதநீர் ஒழுகுகின்ற யானை முகத்தை உடையவரும் ஆகிய விநாயகப் பெருமான் சிவபெருமானை வலமாக வந்த போதில், உலகத்தையே வலமாக வந்தவர் முருகப் பெருமான்.
விநாயகப் பெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் உண்டான போட்டியில், முருகப் பெருமான் விரைந்து இந்த உலகை ஒரு நொடியில் வலம் வந்தார்.
“செகமுழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தைமுன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா” --- (அனைவரு) திருப்புகழ்
“இலகுகனி கடலைபயறு ஒடியல்பொரி அமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன்
இகலி,முது திகிரிகிரி நெரிய,வளை கடல்கதற,
எழுபுவியை ஒருநொடியில் வலமாக வோடுவதும்” --- சீர்பாத வகுப்பு.
“ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
னாருடன் உணக்கைபுரி தீமைக்காரனும்
ஆகமம் விளைத்து அகில லோகமு நொடிப்புஅளவில்
ஆசையொடு சுற்றும்அதி வேகக்கரனும்” --- திருவேளைக்காரன் வகுப்பு.
“வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல
வாகைமயில் கொண்டுஉலகு சூழ்நொடி வரும் குமரன்” --- பூதவேதாள வகுப்பு.
ஆறுமுகப் பரம்பொருள் அகில உலகையும் வலம் வந்து திருக்கயிலை வந்து சேரும் முன், மூத்தபிள்ளையார், விநாயகப் பெருமான் தமது தாய்தந்தையரை வலம் வந்து, முதலில் கனியைப் பெற்றுக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்த வரலாறு.
இதன் மூலம் அறிந்து கொள்ளவேண்டிய நுண்பொருள்
ஒரு கனியைப் பெறுவதற்கு வேண்டித் தமது பிள்ளைகளிடம் போட்டியை உண்டாக்குவது சிவபரம்பொருளின் நோக்கம் அல்ல. காரைக்கால் அம்மையாருக்கு ஒன்றுக்கு இரண்டு கனிகளை அருளிய சிவபரம்பொருள், இன்னொரு கனியை உண்டாக்கித் தமது பிள்ளைகளுக்கு, ஆளுக்கு ஒன்றாக அளித்து இருக்கலாம். அவரால் அது முடியாதது அல்ல. ஆரமதுரித்த ஒரு கனியைக் காரணமாக வைத்து, முருகப் பெருமான் தமது தமையனாரோடு பிணக்கம் கொள்ளுவாரா? தம்பியின் மீது அன்பு வைத்த விநாயகப் பெருமான்தான் இதற்கு இசைவாரா?
சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையும் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றிலும் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.
இந்த உண்மையைத் தனது இரு பிள்ளைகளின் வழி நமக்கு உணர்த்த, சிவபரம்பொருள் ஆடிய அருள் விளையாடல் இது ஆகும்.
சிவத்திற்கு அந்நியமாக வேறு ஏதும் இல்லை என்பதை தெரிவிக்க விநாயகர், தமது தாய்தந்தையர் ஆகிய இருவரையும் வலம் வந்தார். இந்த உலகமே சிவபரம்பொருளின் வடிவானது என்பதையும் தெரிவிக்க முருகப் பெருமான் உலகை ஒரு நொடியில் வலம் வந்து காட்டினார்.
யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது.
மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.
இது குறித்ததொரு வரலாறு
வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன, பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப் பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.
சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.
"விழிமலர்ப் பூசனை உஞற்றித் திருநெடுமால்
பெறும் ஆழி மீளவாங்கி,
வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி
முடைநாற்றம் மாறும் ஆற்றால்,
பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப்
பூசைகொண்டு புதிதா நல்கிப்,
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்." --- காஞ்சிப் புராணம்.
" உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்
தறிநிறுவி, உறுதியாகத்
தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,
இடைப்படுத்தித் தறுகண் பாசக்
கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்
களித்து உண்டு, கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து
வரு வினைகள் தீர்ப்பாம்." --- திருவிளையாடல் புராணம்.
எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.
கருத்துரை
முருகா! சிற்றின்பம் எந்தப் பயனும் உடையது அல்ல. துன்ப வடிவானது.
No comments:
Post a Comment