பூமி பாரங்கள் --- 1.




பூமி பாரங்கள் - 1.
---------

     "சோற்றுக்குக் கேடும் பூமிக்கு பாரமுமாக உள்ளவனே" என்று நாட்டுப்புற வழக்கு ஒன்று உள்ளது.

     வயிறு புடைக்க உண்பதற்கே உடம்பைச் சுமந்து, பிறருக்குப் பயன்படாமல் வாழுகின்ற மனிதர்களுக்காக எழுந்த வழக்கு தான் இது.

     பூமிக்கு பாரமாக விளங்குவதாக யாரையெல்லாம் திருவள்ளுவ நாயனார் அறிவிக்கின்றார் என்று பார்ப்போம்...

1.    புறங்கூறாமை என்னும் அதிகாரத் தலைப்பு. இந்த அதிகாத் தலைப்புக்குப் பொருள்...  காணாதவழி பிறரை இகழ்ந்து உரையாமை. புறம் பேசுகின்ற குற்றமானது மனத்தை அடியாகக் கொண்டு வரும். மனத்தால் பிறரை இகழவேண்டும் என்ற எண்ணம் அமைந்து விட்டால், அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இகழ்ந்து பேசும் தீயகுணம் அமையும். இது கூடாது என்பதால், புறங்கூறாமை என்பதை வலியுறுத்தினார் திருவள்ளுவ நாயனார். திருக்குறளைப் பார்ப்போம்...

"அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்?  புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை".

இதன் பொருள் ---

     பிறர் இல்லாத இடம் பார்த்து, அவரைப் பழித்துப் பேசுகின்றவனது உடல் பாரத்தை, இந்த நிலமகளானவள், இக் கொடியனையும் தாங்குவது எனக்குத் தருமம் போலும் எனக் கருதித் தாங்குகின்றாள் போலும்.

     இவனும் இந்தப் பூமியிலே பிறந்துவிட்டானே, இவனையும் தாங்குவது எனது கடமை என்று பூமித் தாயானவள் பொறுத்துக் கொள்வாளாம். இப்படி ஒருவன் இருந்து என்ன பலனும் இல்லை. அவன் இறந்தாலும் இழக்கப் போவது எதுவும் இல்லை.

     புறங்கூறுவது பாவம் என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் ஒரு தேவாரப் பாடலில் காட்டியுள்ளார்.

"பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன், ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன்,
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்,
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே".

இதன் பொருள்---

     பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய் , கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?

     ஏன் நாயனார் இப்படிப் பாடினார் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. "புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார் மேலும். ஒருவனைப் புறத்தே இகழ்ந்து பேசி வாழ்வதைக் காட்டிலும், அப்படிப்பட்டவன் இறந்துவிட்டான் என்றால், அந்தச் சாவானது அவனுக்கு அறநூல்களில் சொல்லப்பட்டுள்ள ஆக்கத்தைத் தரும் என்றார். அவன் உயிரோடு இருந்தான் என்றால் மேலும் புறம் கூறுவதாகிய பாவச் செயலைச் செய்துகொண்டே இருப்பான். பாவச் செயல் தவிர்க்கப் படவேண்டும் என்றால், ஒன்று, அவன் புறங்கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது இறந்து போகவேண்டும்.

     எனவே, புறம் பேசுபவன் பூமிக்குப் பாரமாக உள்ளவன் என்பதை அறியலாம்.

     மனிதானாகப் பிறந்து மனித உணர்வு இல்லாமல், விலங்குத் தன்மையினும் கீழாக வாழுகின்றவர்களைப் பார்த்து, "பூமி பாரங்கள்" என்று அறிமுகம் செய்தவர், பெரியாழ்வார்.

     திருவள்ளுவர், இப்படிப்பட்ட மனிதர்களுக்கு உரிய அடையாளங்களைக் காட்டி, அவர்களைப் "பொறை" என்றார்.

     பொறை என்ற சொல்லுக்கு, பாரம், சுமை, கனம், கல், சிறு குன்று, பொறுமை, அடக்கம், கர்ப்பம் வலிமை என்றெல்லாம் பொருள் இருந்தாலும், "பொறையுடைமை" என்னும் அதிகாரத்தில் பொறுமையைப் போற்றிய திருவள்ளுவநாயனார், "பொறை" என்று காட்டுவது எல்லாம், சுமை அல்லது பாரத்தையே குறிக்கும்.

     அடுத்தவரின் உயர்வை, நலத்தைப் போற்றிக் கொள்ளவேண்டும். பொறுத்துக் கொள்ளும் நற்குணம் ஒருவனிடம் இருக்கவேண்டும். முடிந்தால், அவரைப் போல் உழைத்து உயரவேண்டும். நல்ல குணம் வாய்க்கப் பெறாதவர்கள், பொறாமை காரணமாக, பிறரிடம் எதையாவது ஒரு குற்றத்தைக் கற்பித்து, அவரைப் பற்றிக் கோள் சொல்லி (புறம் பேசி) எப்படியாவது உயர்ந்த நிலையில் இருப்பவரைத் தனது நிலைக்குத் தாழ்த்தவேண்டும் என்று பெரிதும் முயல்வார்கள். சில நேரங்களில் வெற்றியும் பெறுவார்கள். அந்த வெற்றி நிலைத்து இருக்காது.

     அடுத்தவரைப் பற்றி எப்போதும் கோள் சொல்லுகின்றவர்கள் இருப்பதால், அவருக்கோ, பிறருக்கோ நன்மை ஏதும் இல்லை. தானும் உருப்படாமல், பிறரையும் உருப்பட வைக்காமல், ஒருவன் வாழ்வது, இந்த பூமிக்குப் பாரம் என்றார் திருவள்ளுவ நாயனார்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...