பாம்பையும் அடக்கலாம்
கீழ்மக்களை அடக்குவது இயலாது
-------
கீழ்மக்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிவிக்கும் பாடல்களைக் காண்போம்.....
துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும், பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ? தோகையே! --- துர்ச்சனர்தாம்
எந்த விதத்தாலும் இணங்காரே, பாம்பு மணி
மந்திரத்தால் ஆமே வசம். --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
கெட்ட குணம் உடையோரும், பாம்பும் ஓர் அளவில் ஒத்து இருந்தாலும், பாம்புகள் கெட்டவரோடு ஒக்குமோ? ஆகாது. எவ்வாறு என்றால், பாம்புகள் மணிமந்திரங்களால் கொடுமை செய்யாமல் அடங்கி நிற்கும். ஆனால், கயவர்கள் எந்த விதத்தால் முயன்றாலும் நல்வழிக்கு இணங்கமாட்டார்கள்.
கெட்ட குணம் உடையோரையும் பாம்பையும் அளவிலே ஒத்துள்ளதாகக் கொண்டது ஏனெனில், கெட்ட குணம் உடையவருக்கு எத்தனை நன்மைகளைச் செய்தாலும், அவர்களால் பிறருக்குத் தீமையே விளையும். பாம்புக்கு என்னதான் பால் வார்த்து வளர்த்தாலும், விடத்தையே கொடுக்கும்.
அவ்விய நெஞ்சத்து அறிவு இலாத் துர்ச்சனரை
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? --- திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளி அது
கந்தம் கெடுமோ கரை. --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
மேலான நல்ல மணப்பொருள்களைக் கலந்தாலும், உள்ளிப் பூண்டின் தீயநாற்றம் போகாது. அதுபோல, பொறாமைக் குணம் கொண்ட, அறிவு இல்லாத தீயோரை, நல்லவர் ஆக்க முடியாது.
கண்கூடாப் பட்டது கேடு எனினும், கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி, மற்று இல் ஆகும் --- மண்டுஎரி
தான் வாழ் மடுப்பினும் மாசுணம் கண்துயில்வ,
பேரா பெருமூச்சு எறிந்து. --- நீதிநெறி விளக்கம்.
அடர்ந்த நெருப்பானது பக்கத்தில் சூழ்ந்து எரிந்தாலும், பாம்பு பெருமூச்சு விட்டுக்கொண்டு தூங்குமே அல்லாது, அவ்விடத்தை விட்டு வேறிடம் செல்லாது. அதுபோல, தமக்குக் கெடுதி வருவது கண்கூடு என்றாலும், கீழ்மக்களுக்கு அதில் இருந்து தப்பிப் பிழைக்கும் அறிவு உண்டா என்றால் இல்லை எனலாம்.
No comments:
Post a Comment