பிறந்தும் பிறவாதவர்
-----
பெறுதற்கு அரிய மானிடப் பிறவியை எடுத்ததன் பயனாக, பெறுதற்கு அரிய பேற்றைப் பெறுதல் வேண்டும்.
வாழ்வதற்கு வேண்டிய பொருளை நல்ல நெறியில் ஈட்டுதல் வேண்டும். ஈட்டிய பொருளைக் கொண்டு, தாம் துய்ப்பதோடு அறநெறியில் செலவிட்டு, அதனால் வந்த இன்பத்தைத் துய்த்து, அருளைத் தேடிக் கொள்ளவேண்டும்.
இந்த உடலை விட்டுப் போகும்போது, நாம் ஈட்டிச் சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை. அதைக் கொண்டு செய்த நல்வினைப் பயனே தொடர்ந்து வரும்.
அவ்வாறு வாழாதவர்கள் பிறந்து உயிரோடு வாழ்ந்து கொண்டு இருந்தாலும், பிறவாதவராகவே கருதப்படுவார் என்கின்றது திரிகடுகம் என்னும் நூல்.
நெல்லோடு பிறந்தும் பயன் படாத பதரைப் போன்று, மக்களுள் ஒருவராகப் பிறந்து இருந்தும் பயனற்றவர்கள் இன்னின்னார் என அறிவுறுத்தும் பாடல்களைப் பார்ப்போம்...
அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், இம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
இதன் பதவுரை ---
அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் --- பிற உயிர்க்கு அருளை மனத்தில் நிறைத்து வையாதவனும்; பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் --- செல்வத்தைத் தானும் நுகராது, பிறர்க்கும் கொடுத்து உதவாமல் பூமியில் புதைத்து வைக்கின்றவனும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும் --- தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும் சொற்களை சொல்லுகின்றவனும்;
இ மூவர் பிறந்தும் பிறந்து இலதார் --- ஆகிய இம் மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்திருந்தும் பிறவாதவர் ஆவர்.
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், --- என்றும்
இறந்து உரை காமுறுவானும், இம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.
இதன் பதவுரை ---
விழுத் திணை தோன்றாதவனும் --- மேலான அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய சிறந்த குலத்தில் பிறவாதவனும்; எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும் --- அறிவு நூல்களை எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத பேதையும்; என்றும் இறந்து உரை காமுறுவானும் --- எப்பொழுதும் முறை தப்பிய சொற்களைப் பேச விரும்புகின்றவனும்; இ மூவர் பிறந்தும் பிறவாதவர் --- ஆகிய இம் மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்தும், பிறப்பின் பயனை அடையாமையால் பிறவாதவர் ஆவார்.
No comments:
Post a Comment