சிவனுக்கு ஒன்றரைக் கண்ணா? அரைக் கண்ணா?

 

 

 

சிவபெருமானுக்கு ஒன்றரைக் கண்ணா? அரைக் கண்ணா?

 

------

 

"முக்கண்ணன் என்று அரனை முன்னோர் மொழிந்திடுவார்,

அக்கண்ணற்கு உள்ளது அரைக் கண்ணே --- மிக்க

உமையாள்கண் ஒன்றரை, மற்று ஊன்வேடன் கண் ஒன்று,

அமையும் இதனால் என்று அறி".

 

இப் பாடலின் பொருள் ---

 

சிவபெருமான் மூன்று கண்களை உடையவன் என்று முன்னோர்கள் கூறுவர். எலும்பு மாலையைத் தரித்துள்ள அந்த அண்ணலுக்குச் சொந்தமாக இருப்பது அரைக்கண் மட்டுமே. (எப்படி என்றால்) உமாதேவிக்குத் தனது உடலில் பாதியைத் தந்ததால், உமாதேவிக்கு உரியது ஒன்றரைக் கண். சிவபெருமானுக்கு அப்போது இருந்தது ஒன்றரைக் கண். பின்னர், திருக்காளத்தியில் ஆறு நாள்கள் தொண்டு செய்த கண்ணப்பநாயனார் இடந்து அப்பிய கண் ஒன்று போக, சிவபெருமானுக்கு எஞ்சி உள்ளது அரைக்கண் மட்டுமே என்று அறிதல் வேண்டும்.

 

முக்கண்ணன் --- மூன்று கண்களை உடைய சிவபெருமான்.

அக்கண்ணற்கு என்னும் சொல்லை, அக்கு + அண்ணற்கு என்று பதச் சேதம் செய்யவேண்டும். அக்கு --- எலும்பு. அண்ணல் --- தலைவன் ஆகிய சிவன். அண்ணற்கு --- தலைவனுக்கு. ஊன் வேடன் --- ஊனை உணவாகப் படைத்த வேடராகிய கண்ணப்ப நாயனார்.

 

இப் பாடலைப் பாடியது "காளமேகப் புலவர்" என்பர் ஒரு சாரார்.

வேறு சிலர், "பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்" பாடியது என்பர்.

 

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அளவு கடந்த அன்பு, உரிமை காரணமாக அவரைப் பரிகசித்துப் பேசுவது இயல்பு. அந்த வகையில் இறைவன் மீது கொண்டிருந்த அளவு கடந்த பத்தி காரணமாக இவ்வாறு இறைவனைப் பழித்துப் பேசுவதும், பாடுவதும், அடியவர்களின் இயல்பு.

 

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை இறைவர் தடுத்து அவரை ஆட்கொண்டார். வேதியராக வந்து ஆட்கொண்டு அருளியது சிவபெருமான்தான் என்பதை அறிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அளவற்ற ஆனந்தம் கொள்கின்றார். "நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக" என்கின்றார் சிவபெருமான்.

 

"அருட்கடலாகிய உம்மை நான் என்ன அறிந்து, என்ன சொல்லிப் பாட முடியும்" என்கின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 

"நீதான் முன்பே என்னைப் பித்தன் என்றாயே. என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார் சிவபெருமான்.

"பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!" என்று பாடத் தொடங்கினார் சுவாமிகள்.

 

இறைவனை அன்போடு வைதாலும் ஏற்றுக் கொண்டு அருள்புரிவான் என்பதற்கு இதுவே சான்று.

 

"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்று முருகப் பெருமானை, கந்தர் அலங்காரத்தில் போற்றிய அருணகிரிநாதப் பெருமான், அத்தோடு நில்லாமல், "இதண்மேல் அரிவையைச் சேர நாடிய திருடா" என்றும் திருப்புகழில் பாடி உள்ளார்.

 

நாமும்தான், துன்பம் வந்தகாலத்தில், அது வருவதற்கு முன்பு என்னவோ, அல்லும் பகலும் இறைவனைத் துதித்தது போலவும், அவன் நம்மைக் கண்டுகொள்ளாதது போலவும் கருதி, "பாழும் கடவுளே! என்கின்றோம். அவ்வாறு பழிப்பது நமது அறியாமை, உரிமை என்பது இறைவனுக்குத் தெரியும். சிறுகுழந்தைகள் தம்மைக் கடிந்து கொண்டால், எந்த தாய்தந்தையர் கோபம் கொள்வார்கள்? அது போலத்தான் இதுவும். தம்மை உரிமையோடு பழித்ததற்காக அவன் யாரையும் இகழ்வது இல்லை.

 

     வயதான காலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, இறைவனை உள்ளம் உருகி உருகிப் பாடி வழிபட்ட திருநாவுக்கரசு சுவாமிகளும், திருவொற்றியூருக்கு வந்த போது, இறைவனைப் பரிகசித்து, அவருக்கு உள்ளது ஒன்றரைக் கண் தான் என்னும் பொருள்படும் பாடலைப் பாடி உள்ளார்.

 

 

"இன்றுஅரைக் கண்உடை யார்எங்கும் இல்லை இமயம்  என்னும்

குன்றர் ஐக்கு அண்நல் குலமகள் பாவைக்குக் கூறுஇட்டநாள்

அன்றுஅரைக் கண்ணும் கொடுத்து உமை யாளையும் பாகம் வைத்த

ஒன்றரைக் கண்ணன்கண் டீர் ஒற்றியூர் உறை உத்தமனே".

 

இதன் பொருள் ---

 

     இவ்வுலகில் முழுக் கண் உடையவர்கள் தான் காணப்படுகின்றனர். அரைக் கண் உடையவர் ஒருவரும் இல்லை. ஆனால், இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்பு மகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதி தேவிக்கு, சிவபெருமான் தனது உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே, தனது மூன்று கண்களில் சரி பாதியாக ஒன்றரைக் கண்கள் அவளுக்குப் போ, மீதியுள்ள ஒன்றரைக் கண்கள் தனக்குமாக, திருவொற்றியூரில் எழுந்தருளி இருக்கும் உத்தமனாகிய எம்பெருமான் கொண்டுள்ளார்.

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...