தலை எழுத்தை அழித்தல்




தலை எழுத்தை அழிக்கும் வகை
------

திருச்சிற்றம்பலம்

     வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு, இறைவனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடக்கின்றோம் நாம். வினைகள் அற்றுப் போனால் பிறவி இல்லை. "தொல்வினை தீர்தல் எளிதாமே" என்று திருஞானசம்பந்தப் பெருமானார் அருளி உள்ளார். எளிது என்ற பிறகு அதைப்பற்ற முயல்வதே அறிவுடைமை ஆகும்.

     நமது வினைகளுக்கு ஏற்ப, பிரமன் நமது தலையில் எழுதுகிறான், பிறவியானது வாய்க்கிறது. அந்த எழுத்து அழிக்கப்பட வேண்டும். வழக்கமாக நாம் எழுதுகின்றவைகளை அதற்கேற்ற அழிப்பான்களைக் கொண்டு அழித்து விடலாம். அந்த அழிப்பான்களை நாம் உலகியலில் முயன்று தேடிய பொருளைக் கொண்டு பெற்றுவிடலாம். பிரமனுடைய எழுத்தை அழிப்பதற்கு ஒரு சிறந்த வல்லபம் உடைய அழிப்பான் தேவைப்படுகிறது. அந்த அழிப்பானை நாம் அருளியலில் இடைவிடாது மறவாமல் முயன்றுதான் பெற முடியும். அது என்ன என்று பார்ப்போம்.

     பிரமன் தன் தலையில் எழுதிய எழுத்து எவ்வாறு அழிந்தது என்பதைக் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதப் பெருமான் அழகாகப் பின்வருமாறு பாடியுள்ளார்.

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில்;தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்; அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கைஎழுத்தே.
                                         --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

     திருச்செந்தூரில் உள்ள அழகிய கழனிகள் சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் அழிந்து போயின. மலர்க்கொடி போல் உள்ள பெண்களின் மனமானது, முருகப் பெருமான் தன் மார்பில் அணிந்துள்ள, சோலையில் மலர்ந்த இனிமையான கடப்பமலர்களால் ஆன மாலையைக் கண்டு, அதில் விருப்புற்று அழிந்து போனது. மயில்வாகனனாகிய முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள வேல் பட்டு, கடல் வற்றியது, சூரபன்மன் அழிந்தான், கிரௌஞ்ச மலை பொடியாகிப் போனது. அடியேனுடைய தலைமேல் எழுதப்பட்டு உள்ள பிரமனின் கையெழுத்தானது, செந்திநாதனின் திருவடிகள் பட்டு அழிந்து போனது.


     உலகிலே உள்ள உயிருள்ளதும் உயிரற்றதுமான பொருள்களில் எல்லாம் பெரியது எது என்று முருகப் பெருமான் கேட்க, பெரியது எது என்பதை ஔவைப் பிராட்டியார் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்----

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்,
பெரிது பெரிது புவனம் பெரிது,
புவனமோ நான்முகன் படைப்பு,
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்,
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்,
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்,
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்,
கலசமோ புவியில் சிறுமண்,
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்,
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்,
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்,
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்,
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே.

     ஔவைப் பிராட்டியாரின் அருள்வாக்கின்படி ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகிய இறைவனைத் தமது இதயக்கோயிலில் வைத்துப் பூசிக்கும் தொண்டர்கள் பெருமைதான் பெரியது. அவர்கள்தான் பெரியவர்கள்.

     பாம்பன் சுவாமிகள், முருகப் பெருமானுக்குத் திருக்கோயில் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலையம்பதி என்றாலும், அடியார்களின் நெஞ்சமே எப்போதும் இருப்பு ஆகும் என்னும் பொருள்படப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

தமருகத்தை மூவிலையை எழில்பிணையைப்
பிடித்த திருச் சயமாதேவன்
அமர்கயிலைப் பதிஎமக்குத் திருக்கோயில்,
என்னினும், எம் அடியார் நெஞ்சே!
எமதுஇருப்பு என்று எஞ்ஞான்றும் இருந்து, எங்கு-
மேநிறைந்த இறையே! இந்தக்
குமரகுரு தாசனைக்கை விட்டுவிடா-
மல் காத்துக் கோடி அன்றே.

     "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானைத் திருமுதுகுன்று உடையான்தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே" என்றும் அப்பர் பெருமான் பாடியருளி உள்ளார். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறியார்க்கே" என்றும் பாடி உள்ளார். எனவே, இறைவனை நாளும் இதயக் கமலத்தில் வைத்துப் பூசிக்கும் அடியார்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு பெருமான் எழுந்தருளி உள்ளார்.

     "மலர்மிசை ஏகினான் மாணடி" என்றார் திருவள்ளுவ நாயனார். பரிமேலழகர் பெருமான் "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு சேறலின்" என்று சமயம் கடந்த ஓர் உண்மையை நிலைநாட்டினார்.

     எனவே, ஔவைப் பிராட்டியார் நமக்குக் காட்டியபடி, தொண்டர்களிடத்தில் இறைவன் அடக்கம் பெற்றுள்ளதால், இறைவனைத் தம் மனத்தகத்தே கொண்ட அடியவர்களின் திருவடி, நமது தலைமேலே பொருந்துமானாலே, பிரமனுடைய எழுத்தானது அழிந்து போகும் என்று பாம்பன் சுாமிகள் பின்வருமாறு பாடி உள்ளார்....

பெரிதினுக்கு எல்லாம் பெரிய சிவன் அடியார்
உள் அடக்கம் பெறுவான் என்னா,
அரிய ஔவை சொன்னபடி, நின்அடியருள்
அடக்கம் ஆவாய்! அன்னோர்
திருவடியை அடிமை முடி பொருந்தும் எனில்,
பிரமலிபி சிதைவு ஆகாதோ?
சரவண சண்மய துரிய அமலசிவனே!
கருணை தாராய் மன்னோ.

     தமது தந்தையாகிய பரம்பொருளுக்கே குருவாக உபதேசம் செய்தவன் முருகப் பெருமான் என்பதை மனத்தில் உன்னி, "குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா" என்று அருணகிரிநாதப் பெருமான் பாடினார். அவருடைய வேண்டுகோளையும், ஏக்கத்தையும் கண்ட முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கும் குருவாக எழுந்தருளி உபதேசம் செய்தார். "உபதேச மந்திரப் பொருளாலே, உனாநான் நினைந்து அருள் பெறுவேனோ, செபமாலை தந்த குருநாதா, திருஆவினன்குடிப் பெருமாளே" எனத் தமக்கு உபதேச மந்திரத்தை அருளியதோடு, செபமாலையும் தந்த பெருமானின் எல்லை இல்லாக் கருணையைப் போற்றிப் பாடுகிறார். அகத்திய முனிவருக்கும் முருகப்பெருமானே குருநாதன். ஆனால் முருகப் பெருமானுக்கு குரு என யாரும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒப்பும் உயர்வும் அற்ற, பரம்பொருளின் திருவடிகளைத் தமது இதயத்திலே தரித்துக் கொண்ட, பெருமைக்கும் வழிபாட்டுக்கும் உரிய அடியவர்களின் திருவடிகளைத் தியானித்தல் செய்தாலே உயிர்க் குற்றங்கள் யாவும் ஒழிந்து போகும். பிறப்பதும் இறப்பதும் ஆகிய தொழில் அற்றுப் போகும் என்பதை உணர்ந்து நாம் ஈடேறக் கருணைத் திருவுள்ளம் கொண்ட பாம்பன் சுவாமிகள் பின்வரும் அருட்பாடலைத் தந்து உள்ளார்.

இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருட்
குருஎன உற்று இருந்தாய் அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத--
லால், உன்அடி உளமே கொண்ட
கனத்த அடியவருடைய கழல்கமலம்
உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மரிப்பதுவும் ஒழிந்திடுமே,
குறக்கொடியைச் சேர்ந்திட்டோனே.

     எனவே, முருகப் பெருமானின் அருளால் அவனது திருவடிகளைச் சூடும் பேறு கிடைக்குமாயின், பிரமன் நமது தலையில் எழுதிய எழுத்தானது அழிந்து போகும்.

     அதற்கும் மேலாக அவனது அருள்பெற்ற அடியவர்களின் திருவடிகள் நமது தலையில் பொருந்துமானாலும், அடியவர்களின் திருவடிகளைத் தியானித்தாலுமே கூட, பிரமலிபியானது அழிந்து போகும் என்பதை அறிந்து நமது உள்ளம் மகிழ்கிறது. கழல் கமலம் உள்ளுவதைத் தான், தெளிவு குருஉரு சிந்தித்தல் என்றார் திருமுல நாயனார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

     குருவின் திருமேனியைக் காணுவது, அவருடைய திருநாமத்தை, இறைவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து அல்லது அவரவர் கொள்ளுகின்ற மந்திரங்களுக்கு ஒப்பக் கொண்டு, எப்போதும் சொல்லுவது, அவர் திருவாயில் இருந்து பிறக்கும் அருளாணைகளைக் கேட்பது (அதன்வழி நடக்கத் தலைப்படலும்), குருவின் திருவுருவத்தைச் சிந்தித்துக் கொண்டு இருத்தல் ஆகியவை தெளிவு எனப்பட்ட மெய்யுணர்வைப் பெறுதற்குரிய உபாயங்கள். ஐயஉணர்வும், திரிபு உணர்வும் ஆன்மாவுக்குத் தெளிவைத் தராது. அதனால்தான் ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, மெய்யுணர்வைத் தரவல்லது ஞானம் எனப்பட்டது. குரு என்பவர் நம்மைப் போல, மானிடச்சட்டை தாங்கி இருந்தாலும், அவரை நம்மவரில் ஒருவராக எண்ணுவது ஆணவ மலச்சார்பினால் நிகழும். அவர்களுக்கு உண்மை ஞானம் விளங்காது.



No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...