புரட்டாசித் திங்கள் முதல் சனிக்கிழமை விரதம்.
ஆண்டாள் நாச்சியார் பாடி அருளிய "திருப்பாவை"யில் வரும் 29-ஆம் பாடல் சிந்தனைக்கு....
"சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொன்தாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்,
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண், கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்!"
இதன் பொருள் ---
மிகவும் விடியல் காலத்திலேயே நீ இருக்கும் இடத்தில் வந்து உன்னை வணங்கி, உனது அழகிய தாமரை போன்ற திருவடிகளையே நாங்கள் மங்களாசாசனம் செய்கின்றதன் பயனைக் கேட்பாயாக.
மாடுகளை மேய்த்து, அவை உண்டதைக் கண்ட பின்னர் உண்ணுகின்ற எங்கள் குலத்திலே நீ அவதரித்து, எங்கள் பணிவிடைகளைக் கொள்ளாமல் விட்டுவிடுவது உனக்குத் தகாது.
இப்போது, நாங்கள் உன்னிடத்தில் வந்தது, உன்னிடம் இருந்து பறையைப் பெறுதல் பொருட்டாக அல்ல. கோவிந்தனே! நாங்கள் எப்போதும், இனி நாங்கள் எடுக்கப் போகும் பிறவிகளிலும், நீ எடுக்கப் போகும் அவதராங்களிலும், இப்போது இருப்பது போலவே, உன்னோடு பொருந்தியவர்களாகவே இருக்கவேண்டும். உனக்கே அடிமை செய்பவர்களாகவும் நாங்கள் இருக்கவேண்டும். நாங்கள் மனிதப் பிறவி. நீயோ கடவுள். அஞ்ஞானத்தால் எங்களிடத்தில் வேறு விதமான விருப்பங்கள் தோன்றலாம். நாங்கள் வேண்டிக் கொண்டது போக, பயனற்ற மற்ற விருப்பங்கள் எங்களிடத்தில் தோன்றுமாயின், அவற்றை நீ மாற்றி எங்களுக்கு அருளவேண்டும்.
இந்தப் பாசுரத்தில், "சிற்றம் சிறுகாலை" என்பதற்கு, அதிகாலையில், கருக்கலில் என்று பொருள் கண்டுள்ளனர். மார்கழி நோன்பு என்றாலே, விடியல்காலையில் தான் கடைப்பிட்டிக்கப்பட வேண்டும். விடியல்காலைப் பொழுது, இறை வழிபாட்டிற்கு உகந்தது என்பதை "காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய், கறைக் கண்டா" என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும் அறியப்படும். "சங்கு ஒலிப்பித்திடுமின் சிறுகாலை" என்று அப்பர் தேவாரத்திலும் வருவதை அறியலாம்.
இது தவிர, "சிறுகாலை" என்பதற்கு, "இளவயது" என்பதே சிறப்பான பொருள் என்பதை அறிதல் வேண்டும்.
"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை
உணரில் பொருள்அன்று,
தேன்அமர் கொன்றையினான் அடிக்கே
சிறுகாலை ஏத்துமினோ"
என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளார்.
இதன் பொருள் ---
"தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இந்த உடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது, தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள்" என்பதாகும்.
"புறம் திரைந்து, நரம்பு எழுந்து,
நரைத்து, நீ உரையால் தளர்ந்து
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை
அரிது காண், இஃது அறிதியேல்,
திறம்பியாது எழு நெஞ்சமே! சிறு
காலை நாம்உறு வாணியம்,
புறம்பயத்து உறை பூதநாதன்
புறம்பயம் தொழப் போதுமே".
என்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி உள்ளார்.
இதன் பொருள் ---
மனமே! தோல் திரைந்து, நரம்புகள் வெளித் தோன்றி, வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனில்லாதது ஆகும். இதனை நீ உணர்ந்து இருந்தால், நாம் இளமையிலே பெருமானை வழிபாடு செய்து, அதற்கான ஊதியத்தைப் (பயனை) பெறுதற்குரிய வாணிகம் இதுவே ஆகும். எனவே, புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். இந்த நினைவில் இருந்து என்னைப் பிறழச் செய்யாது, விரைந்து புறப்படுவாயாக.
"ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே! தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே! அரசே! முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குள் சுடரே! செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே! பிரமஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத்து ஓங்கும்
விளக்கமே! ஆனந்த வெள்ளமே! முன்
தேறுமுகப் பெரிய அருட்குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே".
என்று இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய பாடலிலும், "சிறுகாலை" என்பது, "இளம்பருவம்" என்னும் பொருளில்தான் வந்துள்ளது என்பதையும் அறிக.
இதன் பொருள் ---
ஆறுமுகங்களை உடைய பெரிய கருணைக் கடல் போன்றவரே!, தெய்வயானை அம்மையார் கூடி இன்புறுகின்ற மாணிக்க மணிமலையே! அருளரசே! மூன்று கண்களைப் பெற்ற முகத்தை உடைய பெரிய சுடராய்த் திகழும் சிவத்துக்குள் ஒளிரும் சுடர!, செவ்விய வேற்படையைக் கையில் ஏந்தி வரும் பெருந்தகையே! பிரம ஞானத்தால் சிறப்புறுகின்ற பெரிய குணவான்களின் இதய கமலத்தில் உயர்ந்து திகழும் ஞான விளக்கமே! இன்ப வெள்ளமே! முன்பு எதனையும் தெளிவிக்கும் பெருமை சான்ற அருட்குருவாய்ப் எழுந்தருளி, இளம் பருவத்திலேயே எளியேனை ஆட்கொண்ட தேவதேவனே! உனது திருவருளை என்னென்பேன்!
"இளமையில் கல்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்", "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" என்பன முதுமொழிகள்.
"காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்" என்றார் மணிவாசகப் பெருமான்.
எனவே, இறைவழிபாட்டினை இளமையிலேயே மேற்கொண்டு இறையருளைப் பெறுதல் வேண்டும், காலைப் பொழுதிலேயே தொழவேண்டும் என்பதும் தெளிவாகும்.
No comments:
Post a Comment