பதர்





பதர்
-----

     "பதர்" என்னும் சொல்லுக்கு, உள்ளீடு இல்லாத நெல், பயனின்மை, குற்றம் என்று பொருள்.

     நெல்லுக்கு உள்ளீடாக இருக்கவேண்டியது, அரிசி என்னும் மணி. அரிசி இல்லாமல் பயன்படாத நெல்லைப் "பதர்" என்பர்.

     பொதுவாகப் பெண்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் நான்கு என்று கூறுவர். ஆண்களுக்கும் பொருந்தி இருக்கவேண்டிய நற்பண்புகள் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. ஆனால், இதைப் பெரிதாகக் கொள்ளமால், பெண்களுக்கு உரியதையே வலியுறுத்தும் ஆணாதிக்கம்.

     பெண்களுக்கு அமைந்திருக்கவேண்டிய நற்பண்புகள், பொதுவாக, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கூறப்படும்.

     "அச்சம்" என்பது, வர இருக்கும் கேடு, தீங்குகளைக் குறித்த அச்சம்.

     "மடம்" என்பது, அறிந்த விஷயத்தை, அறியாதது போல் இருத்தல். (பிறர் உள்ளக் கருத்தை அறிந்தகொள்ள உதவும். இதனால்தான், பெண்களின் உள்ளக் கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்பர்.)

     "நாணம்" என்பது நாணப்பட வேண்டியதற்கு நாணப்படுதல்.

     "பயிர்ப்பு" என்பது, தனக்கு உரியது அல்லாத ஒன்றின் மீது அருவருப்புக் கொள்ளுதல்.

     ஆண்மக்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள், அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என நான்காக வகுத்துள்ளனர் பெரியோர்.

     "அறிவு" எனப்படுவது, எப்பொருளையும் நன்கு கவனித்து, அதன் உண்மைத் தன்மையை அறிவது. "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் "மெய்த்தன்மை காண்பது அறிவு" என்றும் திருக்குறள் கூறும்.

     "நிறை" எனப்படுவது, காக்க வேண்டியவற்றைக் காத்து, நீக்கவேண்டியதை நீக்கி ஒழுகும் ஒழுக்கம் ஆகும்.

     "ஓர்ப்பு" எனப்படுவது, ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். பொறுமை, நினைவு, தெளிவு கொள்ளுதல்.

     "கடைப்பிடி" எனப்படுவது, நல்லதை மறவாது கடைப்பிடித்தல். "நன்மை கடைப்பிடி" என்பது ஆத்திசூடி.

     தொல்காப்பியம் பெண்மக்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் ஆறு எனக் கூறும். அவை வருமாறு...

செறிவு --- மன அடக்கம்.
நிறைவு --- உள்ளத்தில் உள்ளதைப் புலப்படுத்தாமல் அமைதி காத்தல்.
செம்மை --- மனக் காட்டம் இல்லாது இருத்தல்.
செப்பு --- செய்யத் தகுவனவற்றைக் கூறுதல்.
அறிவு --- நன்மை, தீமைகளை அறிதல்.
அருமை --- உள்ளக் கருத்தினை அறிதல்.

     ஆக, இந்த நற்பண்புகள் இல்லாதவர் குற்றம் உள்ளவர்கள், பயனற்றவர்கள் என்று நூல்கள் கூறும்.

     உள்ளத்தில் பயனற்ற நினைவுகள் இருக்கும். இருக்கவே,
அவர்கள் வாயில் இருந்து பிறக்கும் சொற்கள் பயனற்றவையாக இருக்கும். நினைவும், சொல்லும் பயனற்றவையாக இருக்க, அவரது செயலும் பயனற்றவையாகவே இருக்கும்.

     பயன் இல்லாத சொற்களைப் பேசுதல் கூடாது என்பதை உணர்த்தவே, "பயன் இல சொல்லாமை" என்னும் ஓர் அதிகாரத்தினைத் திருக்குறளில் வைத்தார், திருவள்ளுவ நாயனார்.

      "பயனில்லாத சொற்களைச் சரி என்று பல தரமும் சொல்லுகின்றவனை மனிதன் என்று சொல்லவேண்டாம். அவனை மக்களுள் பதர் என்று சொல்லுக" என்கின்றார் பின்வரும் திருக்குளறில்,

"பயன்இல் சொல் பாராட்டுவானை, மகன் எனல்,
மக்கட்பதடி எனல்".

     ஆண்மக்களுக்கும், பெண்மக்களுக்கும் ஊள்ளீடாகப் பொருந்தி இருக்கவேண்டிய நற்பண்புகள் பற்றிப் பார்த்தோம். நற்பண்புகள் அமையப் பெறாதவர் வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் பயனில்லாதவையாக இருக்கும் என்பதையும் பார்த்தோம்.

     பயனில்லாத சொற்களை ஓரோவழி சொல்லுதலைப் பற்றி இங்குக் கூறவில்லை. பயனில்லாத சொற்களையே பாராட்டிக் கொண்டு இருத்தலைப் பற்றித்தான் கூறப்பட்டது.
   
         மக்களாகப் பிறந்தவர்கள், அறப்பொருள், செல்வப்பொருள், இன்பப்பொருள் ஆகிய மூன்று பொருள்களுள் ஒன்றின் பயனையும், தமக்கும் தராத, பிறர்க்கும் உதவாத சொற்களைச் சொல்லாது இருத்தல் வேண்டும்.

     வாக்கினால் (சொல்லால்) உண்டாகும் பாவங்கள் நான்கு என்பர். அவை, பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், கடும்சொல் சொல்லுதல், பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் என்பன.

     எனவே, பயனில்லாத சொற்களைப் பாராட்டுகின்றவரை, மனிதன் என்று சொல்லாமல், "பதடி" என்று சொல்லுக என்றார் திருவள்ளுவர்.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்கள் உண்டு. (அவை இக் காலத்தில் தேடுவார் இல்லாமல், அரிதாகப் போய்விட்டன என்பது வருந்தவேண்டிய செய்தி) அவற்றில் ஒன்று, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடியருளிய "சிவசிவ வெண்பா" என்பது.

     இந்த நூலில், முன்னர் சொன்ன திருக்குறளுக்கு விளக்கமா, மகாபாரதத்தில் வரும் சிசுபாலன் வரலாற்றை வைத்துப் பாடப்பட்ட ஒரு பாடலைக் காண்போம்...

"மன்அவையில் சொன்ன வசையால் சிசுபாலன்
சின்னம் உற்றான் அன்றோ? சிவசிவா! --- என்னில்
பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல்
மக்கட் பதடி எனல்".

     மன் அவை --- அரச அவை. வசை --- பழிமொழி. சிசுபாலன் --- கண்ணனால் கொல்லப்பட்ட ஓர் அரசன். சின்னம் --- அற்பம், இகழ்ச்சி.

     சிசுபாலன் மகாபாரத இதிகாசத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். கிருஷ்ணனின் அத்தை மகன். சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையும் உடையவனாய் இருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்ன என்று வியக்கும்போது, "யார் இவனைத் தொடுகையில் இவனது கைகள் இரண்டும், மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்" என்று வானொலி (அசரீரி) கூறிற்று. அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டதும் மறைந்தன, அதனால் இவனைக் கொல்பவன் கண்ணனேஎன்று அறிந்த சிசுபாலனின் தாய், யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாதுஎன்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கண்ணன் "இவன் எனக்கு நூறு பிழை செய்யும் அளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன்" என்று கூறியருளினன்.

     பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து, பகைமையைப் பாராட்டி, எப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்து வைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணஞ்செய்து கொண்டது முதல், இவன் கண்ணனிடத்து மிக்க பகைமை கொண்டு இருந்தான்.

     பின்பு இந்திரப்பிரஸ்தத்தில் நாரதர் சொன்னாற் போல இராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாதபூஜை செய்தான்.

     இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிசுபாலன், தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தர்மரின் மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தர் ஆகிய பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலில் இருந்து அறுத்தெறிந்தது.

     சிசுபாலன் பயனில்லாத கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியதால், பலருடைய மனம் புண்பட்டது. இதனால் அவன் பதடி போல் பயனற்று ஒழிந்தான்.

     உள்ளத்தில் நற்பண்புகள் இல்லாத சிசுபாலனிடத்தில், தேவையற்ற தீயபண்பாகிய பகைமை வளர்ந்து இருந்தது. அது எல்லோரையும் எள்ளிப் பேசும் பயனற்ற சொல்லாக அவன் வாயில் இருந்து வந்தது. பெரியோர்களை நிந்தித்தது அல்லாமல், பகவான் கண்ணனையே அவன் நிந்தித்தான். அவனுடைய தீய சொற்களால் அவன் மடிந்தான்.

     "நுணலும் தன் வாயால் கெடும்" என்பது முதுமொழி.

     பதடிஎன்பது மக்களுக்குப் பயன்படும்பொருள் அற்ற நெல். உள்ளீடு இல்லாதவற்றைப் பதர் என்று சொல்லுவர். உள்ளீடு இல்லாத தேங்காயை "ஊமைக்காய்" என்று சொல்லுவர்.

     "பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல்" என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக முந்திய பதிவுகளில் பார்த்தோம்.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்கள் சில உள்ளன என்பதும், அவை இக்காலத்தில் கேட்பார் அற்றுக் கிடப்பதையும் பார்த்தோம்.

     திருக்குறளுக்கு விளக்கமாக வந்த நூல்களுள் ஒன்று "திருப்புல்லாணி மாலை" என்பது. இந்த நூலை அருளியது யார் என்று தெரியவில்லை. இதில் வரும் பாடல்களுக்கு, குறிப்புரை மட்டுமே உண்டு. பொழிப்புரை இல்லை. 1905-ஆம் ஆண்டில் குறிப்புரையுடன் வெளிவந்தது இந்த நூல்.       

     "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக வரும் ஒரு பாடலைக் காண்போம். எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பொழிப்புரை தந்துள்ளேன்.

"நட்புஅடி யார்க்கு அருள் புல்லைப்பிரான் திருநாமம் மனத்து
உள்பயன் ஈதுஎன்று உரையாத மாந்தர், ஐயோ! கடல்சூழ்
மட்கட் பயனில் சொல் பாராட்டு வானை மகன் எனல்மக்
கட்பதடி எனல் என்று ஓத வள்ளுவர் காட்டியதே". 
இதன் பொருள் ---
     தன்பால் அன்பு கொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமாலின் திருநாமத்தை மனத்தில் இருத்தி, இதுவே நற்கதியை அருள்வது என்று கொண்டு, அதனைச் செபிப்பதே பயன் தருவதாகும். அல்லாதது யாவும் பயனற்ற சொற்களே என்று உணராத மனிதர்களை, கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் என்று சொல்லாமல், அவர்களை பயனற்ற பதர்கள் என்றே சொல்லவேண்டும் என்று திருவள்ளுவ நாயானர் காட்டினார்.
     பதர்கள் இன்னார் என்று வெற்றிவேற்கை (அ) நறுந்தொகை என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதும் காண்க.

"காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே".

பொருள் --- காலைப் பொழுதிலும், மாலைப் பொழுதிலும் வேதங்களை ஓதாத வேதியர் எனப்படுவோர் அனைவரும் பதர் போலப் பயனற்றவர் ஆவர்.

"குடி அலைத்து இரந்து, வெங்கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே".

பொருள் --- குடிமக்களை வருத்திப் பொருளை வாங்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசனும் பதர் போலப் பயனற்றவன் ஆவான்.

"முதல்உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து,
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே".

பொருள் --- முதலாக உள்ள பொருளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து, அதனால் வரும் ஊதியத்தை (இலாபத்தை) அனுபவிக்காத வணிகரும் பதரே ஆவர்.

"வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே".

பொருள் --- விதையும், உழவிற்கு உரிய ஏரும் தன்னிடத்தில் இருக்கவும், சோம்பேறியாக இருக்கும் அறிவிலியாகிய வேளாளனும் பதர் ஆவான்.

"தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றி,
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே".

பொருள் --- தனது மனைவியைத் அவளது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பின்பு அவளை தன்னிடத்தில் வைத்து, ஆதரிக்காமல் இருக்கின்ற அறிவில்லாதவனும் பதர் ஆவான்.

"தன் மனையாளைத் தனிமனை இருத்தி,
பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே".

பொருள் --- தனது மனைவியை வீட்டில் தனியே இருக்கவிட்டு, பிறர் மனைவியை விரும்பி, அயல் வீட்டிற்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதர் ஆவான்.

"தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே".

பொருள் --- தனது தொழிலுக்கு உரிய கருவிகளையும், தனது கையில் இருக்கும் பொருளையும், அயலான் கையில் கொடுத்து வைக்கும் அறிவில்லாதவனும் பதர் ஆவான்.

     கைகேயி பெற்ற வரத்தினால், இராமபிரான் தனது தம்பி இலக்குவனுடனும், தேவி சீதையுடனும் காட்டிற்குச் செல்கின்றார். இராமபிரான் கானகம் சென்றதை அறிந்த தசரதன் தனது உயிரைத் துறக்கின்றான். அயோத்திக்கு வந்த பரதன், தனது தாயின் மூலம் நிகழ்ந்தவற்றை அறிந்து, உள்ளம் நொந்து, தாயைப் பழிக்கின்றான்.

     இராமபிரானை ஈன்ற கோசலையை அவன் காணுகின்றான். கதறி அழுகின்றான். " உனது தாயாகிய கைகேயி பெற்ற வரமும், அதன் விளைவும் நீ அறியாததா?" என்று கோசலை வினவுகின்றாள். இந்த சொல் பரதன் உள்ளத்தை மிகவும் சுட்டது. "எனக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்பது உண்மையனால், தீயவர்கள் செல்லுகின்ற நரகத்திற்கு நான் இப்போழுதே செல்வேன் ஆகுக" என்று பலவாறாகத் தனது உள்ளக் கிடக்கையைக் கொட்டித் தீர்க்கின்றான். அவனது துன்பத்தைக் கண்ட கோசலை, குற்றமற்றவன் என்று தெளிந்து, அவனை மார்பாரத் தழுவி மகிழ்ந்தாள்.

     தசரசதனுக்கு இறுதிக் கடன்கள் செய்யவேண்டி, பரதன் செல்லுகின்ற பொழுது, வசிட்டர் அவனைத் தடுக்கின்றார்.

"அன்னை தீமையால், அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்,
முன்னரே"                          --- கம்பராமாயணம்.

     "உனது  அன்னை செய்த தீமையால் உண்டான பெருந் துன்பத்தால், தசரதன் உயிரோடு இருந்த போதே கைகேயியைத் தனது மனைவி அல்ல என்றும், நீ அவனது மகன் அல்ல என்றும், அந்த உரிமை உனக்கு இல்லை என்றும் கூறிவிட்டான். அதனால் நீ அவனுக்கு ஈமக் கடன் செய்ய உரிமை ஆகமாட்டாய்" என்று வசிட்ட முனிவர் கூறினார்.

     வசிட்டரது சொல்லைக் கேட்டு உள்ளம் வருந்தி,  வளப்பம் பொருந்திய தென்னை மரத்தில் உள்ள குலையில், உள்ளே ஒன்றும் இல்லாத ஊமைக்காயாக, பதடியாக நான் ஆகிவிட்டேனே. என்னை ஈன்று காத்த தாயே எனக்கு நன்மை செய்வதாக எண்ணி, இழைத்த கொடுமை அழகாய் இருக்கின்றது என்று பலவாறாக, அங்கும் புலம்புகின்றான்.

     பாடலைக் காண்போம். இந்தப் பாடலில், கவிச்சக்கரவர்த்தி "பதடி" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

     "பதர்" என்பது உள்ளீடு இல்லாத நெல்லைக் குறிக்கும். உள்ளீடு இல்லாத மனிதர்களை "பதடி" என்று சொல்லுவர். இந்தப் பாடலில், தென்னை மரத்தில் உள்ள குலையில் பல தேங்காய்கள் இருக்க, அக் குலையில் இருக்கும் ஒரு உள்ளீடு இல்லாத, "பதடி ஆயினேன்" என்று பரதன் வருந்துவதாக உள்ளது. "தாழை" என்பதற்குத் தென்னை என்பதுதான் நேர்பொருள்.  தென்னை மரத்தில் உள்ளீடு இல்லாமல் இருக்கும், தேங்காயை, "ஊமைக்காய்" என்று சொல்லுவர். அது எதற்கும் பயன்படாது.

துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்;
என்னை! என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா!   ---  இராமாயணம், பள்ளிபடை படலம்.

இதன் பதவுரை ---

     துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் --- நெருங்கிய வளப்பமான அடிமரத்தை உடைய தென்னை மரத்தில்; பன்னு வான் குலை --- பலராலும் பாராட்டப் பெறுகின்ற பெருத்த குலையில்; பதடி ஆயினேன் --- உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று காத்த என் அன்னையார் --- என்னைச் சுமந்து பெற்று வளர்த்த என் தாயார்;  எனக்கு அழகு செய்தவா --- எனக்கு நன்மை செய்தவாறு; என்னையே --- என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?’


'இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், ''கோடியால் விலைக்கு'' எனும் பதடியின், விட்டான் 
கருப்புக் கார் மழை வண்ண! அக் கடுந்திசைக்  களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம்.
                                                       --- இராமாயணம், இராவணன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     கருப்பு --- கடும் பஞ்ச காலத்தில் (பெய்தற்கு முற்பட்ட); கார் மழை வண்ண --- கரியமுகில் நிறமுடையாய்!; இருப்புக் கம்மியற்கு --- இரும்பினால் பணிசெய்கின்ற கொல்லனுக்கு; இழை நுழை --- நூலிழை நுழைகின்ற; ஊசி ஒன்று இயற்றி ---
ஓர் ஊசி செய்து; விருப்பின் --- ஆசையோடு; விலைக்கு கோடியால் --- விலைக்குப் பெற்றுக்கொள்;  எனும் --- என்று உரைக்கும்; பதடியின் --- அறிவிலான் போன்று; அக்கடுந் திசைக் களிற்றின் --- அந்தக் கடுமை வாய்ந்த திசை யானையின்;  மருப்பு --- கொம்பினால்;  கல்லிய -- துளைக்கப்பட்ட;  தோளவன் --- தோள்களையுடைய இராவணன்; மீள அரும் மாயம் --- தப்புதற்கு அரிதான மாயாஸ்திரத்தை; விட்டான் --- எய்தான்?

     மாயனாகிய உன் மீது மாயாஸ்திரத்தை விடுவது, கொல்லனிடமே ஊசி விற்பது போன்றது என்றான். பதடி - உள்ளீடில்லாத பதர் போன்றவன்.


     "பதர்" என்னும் சிந்தனையின் தொடக்கத்தில், பொதுவாகப் பெண்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் நான்கு என்றும், ஆண்களுக்கும் பொருந்தி இருக்கவேண்டிய நற்பண்புகள் பற்றிக் கூறப்பட்டு உள்ளது என்றும், ஆனால், இதைப் பெரிதாகக் கொள்ளமால், பெண்களுக்கு உரியதையே வலியுறுத்தும் ஆணாதிக்கம் என்றும், பெண்களுக்கு அமைந்திருக்கவேண்டிய நற்பண்புகள், பொதுவாக, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கூறப்படும் என்றும், ஆண்மக்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள், அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என நான்காக வகுத்துள்ளனர் பெரியோர் என்றும் கண்டோம்..

     தொல்காப்பியம் பெண்மக்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் ஆறு எனக் கூறும். அவை வருமாறு என்றதையும் கண்டோம்...

செறிவு --- மன அடக்கம்.
நிறைவு --- உள்ளத்தில் உள்ளதைப் புலப்படுத்தாமல் அமைதி காத்தல்.
செம்மை --- மனக் காட்டம் இல்லாது இருத்தல்.
செப்பு --- செய்யத் தகுவனவற்றைக் கூறுதல்.
அறிவு --- நன்மை, தீமைகளை அறிதல்.
அருமை --- உள்ளக் கருத்தினை அறிதல்.

     ஆக, இந்த நற்பண்புகள் இல்லாதவர் குற்றம் உள்ளவர்கள், பயனற்றவர்கள் என்று நூல்கள் கூறும் என்று தெரிவித்து இருந்தேன்.

     இரண்டு அன்பர்கள், அது என்ன? ஆணுக்கு நான்கு? பெண்ணுக்கு மட்டும் ஆறு? என்னும் வினாவை எழுப்பி இருந்தனர், தொலைபேசி வாயிலாக. இந்த ஐயம் மற்றவர்க்கும் இருக்கலாம் என்று தோன்றுவதால், சிறு விளக்கத்தைத் தர முற்படுகின்றேன்.

     பொதுவாகவே, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்க்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அடுத்த நிலையில் உள்ளவர்க்கு அது இல்லை. தலைமை நிலையில் உள்ளவர்கள் பண்புகள் பொருந்தியவர்களாக இருந்தால்தான், பிறரை வழிநடத்த முடியும்.

     "மாதா, பிதா, குரு, தெய்வம்"
     "அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்"

என்ற வழக்குச் சொற்களில், பெண்ணினமே முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளதை அறியலாம்.

     "தாயில் சிறந்த கோயிலும் இல்லை" என்ற பின்னர் தான்,
"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று வருகின்றது.

     கோயில் என்று ஒன்று இருந்தால் தான், மந்திரம் சொல்பவருக்கு வேலை.

     "வாழ்க்கைத் துணைநலம்" என்று திருவள்ளுவர், மனைவியைத் தான் சொன்னார். கணவனைப் பற்றி சொல்லவில்லை. "இல்லத்தரசி" என்று மனைவியானவரைச் சொல்லுகின்றோமே ஓழிய, கணவனாக இருப்பவரை, "இல்லத்தரசன்" என்று சொல்லுவதில்லை.

     ஏனவே, எல்லா விதத்திலும் பெண்கள்தான் முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பதை அறியவேண்டும்.

     பொறுப்பிலாமல் திரியும் ஒருவனை நல்வழிப்படுத்த வேண்டுமானால், "கால்கட்டுப் போடவேண்டும்" என்றுதான் பெரியவர்கள் சொல்லுவார்கள். கட்டுப்பட்டுத்தக் கூடிய தகுதி, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்க்கே உண்டு. 

     "தலையணை மந்திரம் சொல்வதற்குப் பொருத்தமானவர் பெண்தான்". இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாகத் தருகின்றேன்.

     "வீட்டிற்கு விளக்கு ஏற்ற ஒரு நல்ல பெண் வேண்டும்" என்றுதான் தேடுகின்றோம்.

     எல்லா உரிமைகளும் உள்ளவர்க்கே எல்லா அலங்காரங்களும் உண்டு. பெண்கள் அணிவதைப் போல அலங்காரங்களுடன் ஒரு ஆண்மகன் வந்தால், அதை யாரும் பாராட்டமாட்டார்கள், அற்பன் என்பார்கள். ஒரு பெண்மணி அலங்கார பூஷிதையாக வந்தால், மகாலட்சுமி போல் இருப்பதாக எண்ணிப் பெருமை கொள்வார்கள்.

     இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், ஆண், பெண் என்பது புறத் தோற்றதில் மட்டுமே இல்லை. உள்ளத்தில் உள்ள நற்பண்புகளில்தான் உள்ளது.

     "ஆண் இயல் அறிவும், பெண் இயல் மனமும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி" என்பது வள்ளலார் பாடியது.

     ஆண் இயல் என்பது அறிவு. பெண் இயல் என்பது அன்பு.

     அறிவு மட்டும் மிகுந்து இருந்தால், உருவத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணே. அறிவோடு அன்பும் மிகுந்து இருந்தால், ஆண் வடிவில் இருந்தாலும் அவர் பெண்ணியல்பு உடையவரே.

      வெறும் அறிவால் பயனில்லை. அறிவோடு அன்பும் கூடி இருந்தால் பயன் உண்டு. எனவே, ஆணும் பெண்ணுமாக வாழும் வாழ்க்கை நிலை உண்டானது.

     இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி இத்தோடு விடுக்கின்றேன்.

     ஆக, நற்பண்புகள் அமையாதரைப் பயனற்றவர் என்று குறிக்க, "பதர்", "பதடி" என்று காட்டினர் தமது முன்னோர் என்று அறிக.

     "பதர்" குறித்து, குமரேச சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடலைப் பார்ப்போம்...


"தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்,
     சமர்கண் டொளிக்கும்பதர்,
தக்கபெரி யோர்புத்தி கேளாத பதர்,தோழர்
     தம்மொடு சலிக்கும் பதர்,

பின்புகாணாஇடம் தன்னிலே புறணிபல
     பேசிக்க ளிக்கும்பதர்,
பெற்றதாய் தந்தைதுயர் படவாழ்ந் திருந்தபதர்,
     பெண்புத்தி கேட்கும் பதர்,

பொன்பணம் இருக்கவே போயிரக் கின்றபதர்,
     பொய்ச்சாட்சி சொல்லும்பதர்,
புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர், தன்மனைவி
     புணர்தல்வெளி யாக்கும்பதர்,

மன்புணரும் வேசையுடன் விபசரிக் கின்றபதர்,
     மனிதரில் பதரென்பர்காண்.
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே".

       இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தன் பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்த பதர் --- தன்னுடைய பெருமைகளைக் கூறித் தன்னையே புகழ்ந்து கொண்ட பதர்,

     சமர் கண்டு ஒளிக்கும் பதர் --- போரைக் கண்டு பதுங்குகின்ற பதர்,

     தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் --- நல்ல பெரியோர் சொல்லும் அறிவுரையைக் கேட்காத பதர்,

     தோழர் தம்மொடு சலிக்கும் பதர் --- நண்பரிடம் கோபம் கொள்ளுகின்ற, வெறுத்துப் பேசுகின்ற பதர்,

     பின்பு காணா இடம் தன்னிலே புறணி பல பேசிக் களிக்கும் பதர் --- ஒருவரைப் பற்றி அவர் தம்மிடத்தில் இருந்து சென்ற பிறகும், அவரைக் காணாதபோதும், அவரைப் பற்றிக் புறம் கூறி மகிழ்கின்ற பதர்,

     பெற்ற தாய் தந்தை துயர் பட வாழ்ந்திருந்த பதர் ---தன்னைப் பெற்ற தாய் தந்தையர் துன்பத்தில் இருக்க, தான் மட்டும் இனிமையுடன் வாழ்ந்திருந்த பதர்,

     பெண் புத்தி கேட்கும் பதர் --- பெண்கள் சொல்லும் புத்தியைக் கேட்டு நடக்கின்ற பதர்,

     பொன் பணம் இருக்கவே, போய் இரக்கின்ற பதர் ---தன்னிடத்தில் பொன்னையும் பணத்தையும் வைத்துக்கொண்டே பிறரிடத்தில் சென்று இரந்து நிற்கின்ற பதர்,

     பொய்ச் சாட்சி சொல்லும் பதர் --- பொய்யாக சாட்சி கூறுகின்ற பதர்,

     புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் --- உயர்ந்தோரைப் பழிக்கின்ற பதர்,

     தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் --- தன் மனைவியோடு அனுபவித்த புணர்ச்சி இன்பத்தை வெளியிலே கூறுகின்ற பதர்,  

     மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் --- அரசனைச் சேர்ந்து இருக்கும் பரத்தையுடன் விபசாரம் செய்கின்ற பதர்,

ஆகிய இவர் எல்லாம்,

     மனிதரில் பதர் என்பர் --- மக்களிலே பதர் என்று மதிக்கப்படுவர்.

       விளக்கம் --- புறங்கூறாமை என்று ஒரு அதிகாரத்தையே திருக்குறள் ஆசிரியர் வைத்து உள்ளார். இதிலிருந்தே புறம் கூறுதல் எவ்வளவு கொடுமையானது, பாவத்திற்கு இடம் தருவது என்பது தெளிவாகும். "புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்" என்னும் திருக்குறளைக் காண்க.

     பெண்புத்தி கேட்டல் தவறு என்பதை அப்படியே பொருள் கொள்ளுதல் கூடாது. மனைவியாய் இருந்தும், அதற்கேற்ப நடவாதவர்களும் உண்டு என்பதால், இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் பொருந்தும்.                         

"எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை".            --- நாலடியார்.

     தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களே போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.

     இப்படிப்பட்ட மனைவியிடம் ஒரு வேளை அவள் தரும் இன்பத்தை விழைந்து அவள் சொல்லுவதைக் கேட்டு நடக்கவும் கூடும் என்பாதல் இவ்வாறு ஆசிரியர் காட்டினார் என்று கொள்ளல் பொருந்தும்.

     பொய் சாட்சி கூறுதல் கூடாது என்பதும் அதனால் விளைவது என்ன என்பதும் ஔவைப் பிராட்டியார் பாடலால் அறியலாம்.

வேதாளம் சேருமே, வெள் எருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே, --- மூதேவி
சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,
மன்று ஓரம் சொன்னார் மனை.          --- நல்வழி.

         நியாய சபையிலே நடுவுநிலையிலிருந்து தவறி ஒருதலையாக சாட்சி சொன்னவருடைய வீட்டிலே, பேய்கள் வந்து சேரும். வெள் எருக்கு முளைத்து மலரும். பாதாள மூலி என்னும் கொடி படரும். மூதேவியானவள் வந்து நிலை பெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும்.

         நீதிமன்றத்திலே பொய்சாட்சி சொன்னவர் குடும்பத்தோடு அழிவதும் அல்லாமல், அவர் குடியிருந்த வீடும் பாழாகும்.

     "பதர்" என்பது உள்ளீடாக இருக்க வேண்டியது இல்லாத நிலையைக் குறிக்கும். மனிதனாகப் பிறந்தவனுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள் அமைந்து இராதவரைப் "பதர்" என்பர்.

     "பதர்" என்பது குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூலில் ஒரு பாடலைப் பார்ப்போம்.....

"மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாய்இலா தவன்ஒரு பதர்;
  வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தான்ஒரு பதர்;

ஏறா வழக்குஉரைத்து அனைவருஞ் சீசியென்று
     இகழநிற் பான்ஒரு பதர்;
  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்துஅவளோடு
     இணங்கிவாழ் பவன்ஒரு பதர்;

வேறுஒருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
     வீண்பேசு வான்ஒரு பதர்;
  வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
     விட்டுவிடு வான்ஒரு பதர்;

ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!"

இதன் பொருள் ---

         ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல! --- தீராத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள் செய்கின்ற இயல்பாகவே மலமற்ற தூயவனே!

     (இன்பமும் துன்பமும் இல்லானே என்பது மணிவாசகம்.  இன்பமும் துன்பமும் வேண்டுதல் வேண்டாமை என்னும் இச்சைகளால் வருவன.  அவை இறைவனுக்கு இன்மையால், அவனால் தான் பிறருக்கு வரும் துன்பத்தைத் தீர்த்து வைக்க இயலும்.)

     எமது அருமை மதவேள் --- எமது அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     மாறாத கலை கற்றும் நிலைபெற்ற சபையிலே வாய் இலாதவன் ஒரு பதர் --- என்றும் மாறுபடாத பொருளைத் தரும் உயர்ந்த நூல்களைக் கற்றிருந்தும், பெரியோர் கூடியுள்ள நிலைபெற்ற சபையிலே தான் கற்றதை எடுத்துக் கூறும் திறமை அற்றவன் பயனற்றவன்.

     வாள் பிடித்து எதிரி வரின் ஓடிப் பதுங்கிடும் மனக் கோழை தான் ஒரு பதர் --- எதிரி வாளைப் பிடித்துப் போருக்கு வந்தால், அஞ்சி ஓடி பதுங்குகின்ற மன உறுதி இல்லாத கோழையானவன் பயனற்றவன்.

      ஏறா வழக்கு உரைத்து, அனைவரும் சீசி! என்று இகழ நிற்பான் ஒரு பதர் --- செல்லுபடி ஆகாத ஒரு வழக்கைச் சொல்லி,  யாவரும் சீசி! என்று பழிக்கும்படி நிற்பவன் பயனற்றவன்.

      இல்லாள் புறம் செலச் சம்மதித்து, அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் --- தன்னுடைய மனைவியானவள் அயலானிடத்தில் போக மனம் இசைந்தும், அவளுடன் கூடி வாழ்பவன் பயனற்றவன்.

      தன்னை வேறொருவர் மெச்சாது, தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர் --- பிறரால் புகழப் படாமல், தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு டம்பப் பேச்சுப் பேசுபவன் பயனற்றவன்.

     வேசையர்கள் ஆசை கொண்டு, உள்ள அளவும் மனையாளை விட்டு விடுவான் ஒரு பதர் --- பரத்தையரிடம் ஆசை வைத்து, காலம் எல்லாம் தனது மனைவியைப் பிரிந்து அவளைத் தவிக்க விடுபவன் பயனற்றவன்.

     குறிப்பு --- "பதர்" என்னும் சொல்லுக்கு உள்ளீடு இல்லாத நெல், குற்றம் உள்ளது, பயன்றறது என்று பொருள்.

     "பயன் இல் சொல் பாராட்டுவானை, மகன் எனல், மக்கள் பதடி எனல்" என்றார் திருவள்ளுவ நாயனார். பதடி என்னும் சொல்லுக்கு, "அறிவு என்னும் உள்ளீடு இன்மை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...