தாயில் சிறந்த கோயில் இல்லை
-----
அன்னையைப் போற்றுவோம்
-----
அன்பு உருவமான அருமைத் தாய் போல், எவரே
இன்புஉதவி நம்மை இனிது அளிப்பார்? -- என்புஉருகி
அன்னாள் பணி புரிந்து, ஆர்வமுடன் போற்றிவரல்
நன்னாளே ஆகும் நமக்கு.
"தருமதீபிகை" என்னும் நூலில் வரும் அருமையான பாடல் இது.
இதன் பொருள் ---
அன்பு உருவமான அருமைத் தாய் போல, மக்களுக்கு இன்பத்தை அளிப்பவர் யாரும் இல்லை. அத்தகைய பெருங்கருணைத் தெய்வத்தை உள்ளார்ந்த அன்புடன் பேணி வருவதால், நமக்கு எந்த நாளும் நல்ல நாளாகவே அமையும்.
மற்ற எல்லாரும், விரும்பினால் நினைந்து, மனம் மகிழ்ந்து வலிந்து அன்பு செய்வார்கள். அது கடப்பாடாகவும் அமையும். ஆனால், தனது மக்கள் எப்படி இருந்தாலும், பெற்ற தாயானவள் இயல்பாகவே அன்பைப் பொழிபவள் என்பதால், தாயை "அன்பு உருவம்" என்றார். அவளைப் போல் அன்பு பாராட்டுபவர் உலகில் யாரும் இல்லை.
குழந்தைக்கு ஏதேனும் நோய் உண்டானால், அந்தப் பச்சைக் குழந்தையின் குடலானது மருந்தின் வேகத்தைப் பொறாது என்பது உணர்ந்து, அந்த மருந்தினைத் தானே உண்டு, தனது மார்பகத்தில் இருந்து பொழியும் பாலின் வழியே, அதனை ஊட்டிக் காத்து அருளுகின்ற தாயைப் போல் கருணை உள்ளவர் உலகில் யாரும் இல்லை.
எனவே, பெற்ற தாயை தெய்வத்திற்கு நிகராக வைத்துப் போற்றுதல் வேண்டும். நாம் வேண்டாமலே நமக்கு நலம் தருபவள் தாய். நாளும் நாம் நலம் பெற்று வாழ, தெய்வத்தை அவள் நமக்காக வேண்டுவாள்.
எனவே, தாயை,
1. ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்து பெற்று, பையல் என்ற போதே பரிந்து எடுத்து, செய்ய இருகைப் புறத்தே ஏந்தி, கனகமுலை தந்தவள்,
2. முந்தித் தவம் கிடந்து, முன்னூறு நாள் சுமந்து, அந்தி பகலாச் சிவனை ஆதரித்து, தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாய்,
3. வட்டிலிலும், தொட்டிலிலும், மார்மேலும், தோள்மேலும், கட்டிலிலும் வைத்துக் காதலித்து, முட்டச் சிறகில் இட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்,
4. நொந்து சுமந்து பெற்று, நோவமல் ஏந்தி முலை தந்து வளர்த்து எடுத்து, தாழாமே அந்தி பகல் கையிலே கொண்டு காப்பாற்றும் தாய்,
5. வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல், ருசியுள்ள தேனே! அமிர்தமே! சொல்வத் திரவியப் பூமானே! என அழைத்து மகிழ்ந்தவள்,
6. மெள்ள முகம் மேல் முகம் வைத்து, முத்தாடி, "என்தன் மகனே" என அழைத்து மகிழ்ந்தவள்,
7. மாகக் குருவி பறவாமல், கோதாட்டி, என்னைக் கருதி வளர்த்து எடுத்த தாய்,
8. சந்ததமும் இறைவனையே நோக்கி வரம் கிடந்து, ஈன்று எடுத்த தாய்,
என்றெல்லாம் பட்டினத்து அடிகளார் தனது தாயைப் போற்றிப் பாடினார்.
இவ்வளவு பேரன்போடு ஈன்றெடுத்து, இளமையில் போற்றிப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கி விட்ட தாயை, முதுமையில் போற்றிப் பாதுகாத்து வரவேண்டும். கணக்குப் பார்க்கக் கூடாது. அவ்வாறு பணிந்து போற்றி வரும் நாள் எல்லாம் ஒருவனுக்கு நல்ல நாளாகவே அமையும். நலங்கள் எல்லாம் கூடும்.
கடவுளை வருந்திச் சூலாய்க்
கைப்புறை உண்டு, அனந்தம்
இடர்கள் உற்று, உதரம் தன்னில்
ஈரைந்து திங்கள் தாங்கி,
புடவியில் ஈன்று, பன்னாள்
பொன் தனப் பாலை உட்டித்
திடம் உற வளர்த்து விட்ட
செல்வியை வணங்காய் நெஞ்சே. --- நீதிநூல்.
இதன் பொருள் ---
கடவுளைத் தொழுது கருவுற்று, கசக்கும் மருந்துகளை உண்டு, பல துன்பங்களை அடைந்து, பத்துத் திங்கள் சுமந்து, பெற்று எடுத்து, பாலூட்டி, வலிமையுடன் வளர்த்த அருமைத் தாயை, நெஞ்சமே! வணங்குவாயாக.
No comments:
Post a Comment