அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மனமெனும் பொருள் (சிவபுரம்)
முருகா!
திருவடிப் பேற்றை அருள்வாய்
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே
கதற வென்றுடல் கீணவ னாருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக ......ழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மனம் எனும் பொருள், வான், அறை கால், கனல்,
புனல், உடன் புவி, கூடியது ஓர் உடல்
வடிவு கொண்டு, அதிலே பதிமூணு எழு ......வகையாலே
வரு சுகம் துயர் ஆசையிலே உழல்
மதியை வென்று, பராபர ஞான நல்
வழி பெறும்படி நாய்அடியேனைநின் ......அருள்சேராய்.
செனனி, சங்கரி, ஆரணி, நாரணி,
விமலி, எண்குண பூரணி, காரணி,
சிவை, பரம்பரை ஆகிய பார்வதி ...... அருள்பாலா!
சிறை புகும் சுரர் மாதவர் மேல்பெற,
அசுரர் தம் கிளையானது வேர்அற,
சிவன் உகந்து அருள் கூர்தரு, வேல்விடு ......முருகோனே!
கனகன் அங்கையினால் அறை தூண் இடை
மனித சிங்கம்அது ஆய், வரை பார் திசை
கடல் கலங்கிடவே பொருதே, உகிர் ...... முனையாலே
கதற வென்று, உடல் கீணவன் ஆருயிர்
உதிரமும் சிதறாத அமுதாய் உணு,
கமல உந்தியன் ஆகிய மால் திரு ...... மருகோனே!
தினகரன், சிலை வேள், அருள் மாதவர்,
சுரர்கள், இந்திரனார், உரக அதிபர்,
திசைமுகன், செழு மாமறையோர் புகழ் ....அழகோனே!
திரு மடந்தையர் நால் இருவோர் நிறை
அகமொடு அம்பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ் குரு நாயக! ...... பெருமாளே.
பதவுரை
செனனி --- உலகங்களை எல்லாம் பூத்தவள்,
சங்கரி --- உமாதேவி
ஆரணி --- வேதமுதல்வி,
நாரணி --- நாராயணி,
விமலி --- குற்றமற்றவள், தூய்மையானவள்,
எண்குண பூரணி --- எண்குணங்களும் நிறைந்தவள்,
காரணி --- எப்பொருட்கும் காரணமாக நின்றவள்,
சிவை --- சிவனிடத்தில் உள்ளவள்,
பரம்பரையாகிய பார்வதி அருள்பாலா --- பெரிய பொருளாயுள்ள பார்வதி தேவி ஈன்றருளிய குமாரக் கடவுளே!
சிறைபுகும் சுரர் மாதவர் மேல்பெற --- சூரபதுமனால் சிறைப்படுத்தப்பட்டு இருந்த தேவர்களும், முனிவர்களும் விடுதலை அடையவும்,
அசுரர் தம் கிளையானது வேர் அற --- அசுரர்கள் கூட்டமானது வேர் அற்று அழியவும்,
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல்விடு முருகோனே --- சிவபரம்பொருள் மகிழ்ந்து அருள்கூர்ந்து அருளிய வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!
கனகன் அங்கையினால் அறை தூணிடை --- இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து
மனித சிங்கமதாய் --- நரசிம்ம உருவத்தில் வெளிப்பட்டு,
வரை பார் திசை கடல் கலங்கிடவே பொருதே --- மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து
உகிர் முனையாலே கதற வென்று உடல் கீண --- தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வெற்றிகொண்டு, அவனது உடலைச் சிதைத்து
அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உ(ண்)ணும் --- அவனது அரிய உயிரைப் பொருந்தி உள்ள உடலில் இருந்து ஒழுகும் இரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய
கமல உந்தியன் ஆகிய மால் திருமருகோனே --- தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய திருமருகரே!
தினகரன் --- சூரியன்,
சிலைவேள் --- கரும்பு வில்லை உடைய மன்மதன்,
அருள் மாதவர் --- அருள் மிகுந்த முனிவர்கள்,
சுரர்கள் --- தேவர்கள்,
இந்திரனார் --- வானுகலத்தில் உள்ள இந்திரர்கள்,
உரகாதிபர் --- நாகலோகத்து உள்ள நாகாதிபர்கள்,
திசைமுகன் --- பிரமதேவன்,
செழு மாமறையோர் புகழ் அழகோனே --- செம்மை வேதியர்கள் போற்றிப் புகழ்கின்ற அழகரே!
திருமடந்தையர் நால் இருவோர் நிறை அகமொடு --- அட்டலட்சுமிகள் நிறைந்த வீடுகளிலும்,
அம்பொனின் ஆலயம் --- அழகிய திருக்கோயில்களிலும்
நீடிய சிவபுரம் தனில் வாழ் குருநாயக --- சிறந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி உள்ள குருநாதரே!
பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!
மனம் எனும் பொருள் --- மனம் என்ற ஒரு பொருளுடன்
வான் --- வானம்,
அறைகால் --- வீசுகின்ற காற்று,
கனல் --- நெருப்பு, (ஆகிய பூதங்களோடு)
புனலுடன் புவி கூடியதோர் உடல் வடிவு கொண்டு --- நீரும் நிலமும் கூடிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆகிய ஒரு உடலாகிய வடிவத்தைக் கொண்டு,
அதிலே பதிமூணு எழு வகையாலே --- அதில் சிவதத்துவம் நீங்கலாக உள்ள 91 தத்துவங்களுடன் பொருந்தி இருந்து,
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று --- அதனால் உண்டாகின்ற இன்பம், துன்பம், ஆசை ஆகிய இவற்றில் உழலுகிகின்ற எனது சிற்றறிவினை நான் வெற்றிகொண்டு,
பராபர ஞான நல்வழி பெறும்படி --- மேலான பதிஞானம் என்னும் நல்ல நெறியை அடையும்படியாக
நாய் அடியேனை நின் அருள்சேராய் --- நாயினை ஒத்தவனாகிய இந்த அடியேனுக்கு உனது திருவருளில் கூட்டுவாயாக.
பொழிப்புரை
உலகங்களை எல்லாம் பூத்தவளும், உமாதேவியும், வேதமுதல்வியும், நாராயணியும், குற்றமற்றவளும், தூய்மையானவளும், எண்குணங்களும் நிறைந்தவளும், எப்பொருட்கும் காரணமாக நின்றவளும், சிவனிடத்தில் உள்ளவளும், பெரிய பொருளாயும் உள்ள பார்வதி தேவி ஈன்றருளிய குமாரக் கடவுளே!
சூரபதுமனால் சிறைப்படுத்தப்பட்டு இருந்த தேவர்களும், முனிவர்களும் விடுதலை அடையவும், அசுரர்கள் கூட்டமானது வேர் அற்று அழியவும், சிவபரம்பொருள் மகிழ்ந்து அருள்கூர்ந்து அருளிய வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!
இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் வெளிப்பட்டு, மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வெற்றிகொண்டு, அவனது உடலைச் சிதைத்து, அவனது அரிய உயிரைப் பொருந்தி உள்ள உடலில் இருந்து ஒழுகும் இரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய, தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய திருமருகரே!
சூரியன், கரும்பு வில்லை உடைய மன்மதன், அருள் மிகுந்த முனிவர்கள், தேவர்கள், வானுகலத்தில் உள்ள இந்திரர்கள், நாகலோகத்து உள்ள நாகாதிபர்கள், பிரமதேவன், செம்மை வேதியர்கள் போற்றிப் புகழ்கின்ற அழகரே!
அட்டலட்சுமிகள் நிறைந்த வீடுகளிலும், அழகிய திருக்கோயில்களிலும், சிறந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி உள்ள குருநாதரே!
பெருமையில் மிக்கவரே!
மனம் என்ற ஒரு பொருளுடன் , வானம், வீசுகின்ற காற்று,
நெருப்பு, ஆகிய பூதங்களோடு, நீரும் நிலமும் கூடிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆகிய ஒரு உடலாகிய வடிவத்தைக் கொண்டு, அதில் சிவதத்துவம் நீங்கலாக உள்ள 91 தத்துவங்களுடன் பொருந்தி இருந்து, அதனால் உண்டாகின்ற இன்பம், துன்பம், ஆசை ஆகிய இவற்றில் உழலுகிகின்ற எனது சிற்றறிவினை நான் வெற்றிகொண்டு, மேலான பதிஞானம் என்னும் நல்ல நெறியை அடையும்படியாக, நாயினை ஒத்தவனாகிய இந்த அடியேனுக்கு உனது திருவருளில் கூட்டுவாயாக.
விரிவுரை
மனம் எனும் பொருள், வான், அறை கால், கனல், புனல், உடன் புவி, கூடியது ஓர் உடல் வடிவு கொண்டு, அதிலே பதிமூணு எழு வகையாலே, வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று ---
ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருள் எல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு. நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவை எல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தான் என்பது புலனாகும். நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகமே மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது. எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.
உலகில் எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன. அப்பகுதிகள் எல்லாம் சேர்ந்த காரியப் பொருள் தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த சடப்பொருள்கள் அனைத்தையும் இரண்டு வகையுள் அடக்கி விடலாம். பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் என்பன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப் பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கிவிடும்.
முதல் வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இருவகைப்படுத்திக் கூறலாம். முன்னர் கூறிய இருவகையை இப்படி மூவகைப்படுத்திக் கூறலாம். அதாவது, ஆண் உடம்பு பெண்ணுடம்பு, அவையல்லாத பிற சடப் பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி விடும்.
காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருளை முதற்காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை எல்லாம் நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற்காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும், களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள். காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டும். அம்முதற் காரணமாகிய மூலப் பொருளே மாயை என்பது.
பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம், மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.
தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றால் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோம். அல்லாமல் அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.
ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும். அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.
ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது, அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.
தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் எனக் கண்டோம். அப்பூதங்கள் தோன்றும் முறையைக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். இரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.
காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும். ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும். சுவை நீரின் குணமாய் நிற்கும். நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும்.
சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.
காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம். ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும்.
அதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.
பூதங்கள் இக்குணங்களையே அன்றி, வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும். பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாய் இருத்தல் தெளிவு. இவற்றிற்கு எல்லாம் முதற்காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம். அது தாமதகுணக் கூறு. தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும்.
பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே, பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.
தத்துவம் என்ற சொல்லுக்கு "கருவி" என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவம் ஆகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு கருவியாய் நின்று உதவுகின்றன. தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன.
தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை.
பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும். பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.
பிருதிவி என்னும் மண்ணின் கூறு |
5 |
எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு |
அப்பு என்னும் நீரின் கூறு |
5 |
சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சுரோணிதம் |
தேயு என்னும் தீயின் கூறு |
5 |
இருதயத்தில் வெப்பம், வயிற்றில் பசித் தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம் |
வாயுவின் கூறு |
10 |
உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள் |
ஆகாயத்தின் கூறு |
10 |
அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள் |
ஞானேந்திரியங்களின் விடயங்கள் |
5 |
சத்தம் என்னும் ஓசை, பரிசம் என்னும் ஊறு, ரூபம் என்னும் ஒளி, ரசம் என்னும் சுவை, கந்தம் என்னும் நாற்றம். |
கன்மேந்திரியங்களின் விடயங்கள் |
5 |
வசனம் (பேச்சு), கமனம் (நடை), தானம் (கொடை), விசர்க்கம் (போக்கு), ஆனந்தம் (இன்பம்) |
அகங்காரத்தின் கூறு |
3 |
தைசதம், வைகாரியம், பூதாதி |
மனத்தின் கூறு |
5 |
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் (மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்) |
குணத்தின் கூறு |
3 |
சத்துவம், இராசதம், தாமதம் |
வாக்கு |
4 |
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி |
இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும்.
முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாய் இருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குண வயப்பட்டு இன்ப துன்ப மயக்க உணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டால் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண்மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன.
அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இப்பிரகிருதியே ஆகும்.
பிரகிருதியில் இருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.
எனவே, இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால் ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலைபேறு இல்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது.
ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன, நான்
அறியாத காலம் எல்லாம்
புந்திமகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே
போந்தநெறி என்று இருந்தேன்,
பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை
போனவழி தெரியவில்லை,
எந்தநிலை பேசினும் இணங்கவிலை, அல்லால்
இறப்பொடு பிறப்பை உள்ளே
எண்ணினால், நெஞ்சு அது பகீர் எனும், துயில் உறாது
இருவிழியும், இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகு ஆனது அங்கம், இவை என்கொலோ?
சித்தாந்த முத்திமுதலே!
சிரகிரி விளங்கவரு தட்சிணா மூர்த்தியே!
சின்மய ஆனந்தகுருவே. --- தாயுமானவர்.
ககனமும், அநிலமும், அனல், புனல், நிலம், அமை
கள்ளப் புலால் ...... கிருமிவீடு,
கனல் எழ மொழி தரு சினம் என, மதமிகு
கள்வைத்த தோல்பை ...... சுமவாதே,
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒருபொருள்
உள்ளக் கண் நோக்கும் ...... அறிவுஊறி,
ஒளி திகழ் அருஉரு எனும் மறை இறுதியில்
உள்ள அத்தை நோக்க ...... அருள்வாயே. --- திருப்புகழ்.
இத் திருப்புகழ்ப் பாடலில், அடிகளார், சிவதத்துவம் நீங்கலாக உள்ள, 91 தத்துவங்களைப் பற்றிக் கூறினார். அழிகின்ற இந்த உடலை நிலைத்திருக்கும் உண்மைப் பொருள் என்று அறிவீனத்தால், மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி, உடல் சுகத்தையே பெரிதென எண்ணி, வாழ்நாளை வீணாக்குகின்றோம். துன்ப சொரூபமாக உள்ள சிற்றின்பத்தையே பெரிதும் நாடுகின்றோம். உயிருக்குப் பொருந்தி உள்ள சிற்றறிவால் இந்த விளைவு.
இதனை வள்ளல்பெருமான், பின்வருமாறு காட்டி அருளுகின்றார்....
காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்? எங்கே
குடியிருப்பீர்? ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே
பாடுபட்டீர்! பயன்அறியீர்! பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்!
பட்டதெலாம் போதும். இது பரமர் வரு தருணம்.
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.
எண்மைஉரைத்தேன் அலன், நான் உண்மை உரைத்தேனே.
ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,
அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர், ஐயோ!
கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,
வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,
வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம்இது, சத்தியம், சிற்சத்தியைச் சார்வதற்கே.
பொய் விளக்கப் புகுன்றீர், போது கழிக்கின்றீர்,
புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,
கைவிளக்குப் பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,
மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்
மேவியது, இங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.
என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்
பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ, எம்இறைவர்
மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. --- தாயுமானவர்.
நாய் அடியேனை நின் அருள்சேராய் ---
நாயினை ஒத்தவனாகிய இந்த அடியேனை திருவருளில் கூட்டுவாயாக என்று அடிகளார் வேண்டுகின்றார்.
"நாயினை ஒத்தவன்", "நாயினும் கடையேன்", "நாயினும் இழிந்தேன்", "நாய் அடியேன்" என்று அருணகிர்நாதப் பெருமான் மட்டுமல்லாது, அடியவர்கள் பலரும் அருளி உள்ளனர். இது குறித்து சிந்திக்கலாம்.
"நாயில் கடையேன்" என்னும் தொடர் போலத் திருவாசகத்தில் "நாயனையேன்", "நாயில் கடையேன்" என வரும் தொடர்கள் ஆறுபத்தேழு இடங்களில் வருகின்றன. இங்ஙனம் ஆளுடைய அடிகள் பல இடங்களில் நாயேன், நாயனையேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களை உடைய தொடர்களைக் கூறுகின்றார். இன்னும் ஒரே அடியில் "நாயில் கடையாம் நாயேனை" என்று குழைத்தபத்து என்னும் பகுதியில் கூறியருளியதற்குப் பொருள் உண்டு.
பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனால், நாயினும் கடையேன் என்று கூறுங்கால் நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங்கள் மக்களிடத்தில் அங்ஙனம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவை எவை என ஆராய்வோம்.
1. தன் தலைவனைப் போலவே பல்லாயிர மக்கள், உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும், சிறிதும் ஐயுறாது அவனை அறிந்து கொள்ளும் இயல்பு உடைமை.
2. ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின், அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவில் பதித்து வைத்து இருத்தலுடன், அவனை எங்கேனும் கண்டால், தான் எத்துணைத் துன்ப நிலையில் இருப்பினும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, தனது வாலைக் குழைத்து, இன்முகம் காட்டல் முதலியவற்றால் தனது நன்றி அறிவை அவனுக்குக் காட்டுதல்.
3. தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினான் ஆயின், அப்பணி தன்னால் செய்தற்கு அரிதாயினும், அதில் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேரும் ஆயினும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியில் செல்லுதல்.
இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு.
இனி, இப்பண்புகள் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
மக்களில் சிலர் தலைவன் ஒருவன் உள்ளான் என்னும் உணர்ச்சியே இன்றித் திரிகின்றனர். சிலர் தாமே தலைவர் எனத் தருக்குகின்றனர். சிலர் பொருள் முதலியவற்றால் சிறிது சிறந்த ஒருசில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறுகின்றனர். சிலர் இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரைத் தலைவர் எனத் திரிபு உணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் 'தலைவன் ஒருவன் இருக்கலாம், ஆனால் அவன் இவன் தான் எனத் துணிந்து கூற இயலாது' என்பர். மற்றொரு சிலர் 'இன்ன இன்ன இலக்கணம் உடையவன் தலைவன் ஆவான்' என அறிந்து வைத்தும், "ஆர்ஆர் எனக்கு என்ன போதித்தும் என்ன? என் அறிவினை மயக்க வசமோ?" என்னும் திண்மை இல்லாதவராய் மதிநுட்பம் நூலோடு அமைந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொல்வன்மை உடையவராய ஒருவர் வந்து, "நீங்கள் கருதும் இலக்கணம் உடையவன் தலைவன் அல்லன்" என வேறு சில இலக்கணங்களைக் கூறினால், மயங்கி விடுகின்றனர். இங்ஙனம், மக்கள் தம் தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலைதடுமாறுகின்றார்கள். ஆகலின், தன் தலைவனை நன்கு உணர்ந்து கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.
இனி, இருட்டு அறையில் குருட்டுச் சேய்போல் கிடந்து உழன்ற உயிர்களைத் தன் பெரும் கருணையால் எடுத்து, உடல், கரணம், உலகம் முதலியவற்றை உதவி, அவ் உயிர்கள் நிலைத்தல் பொருட்டு ஒன்றாயும், பொருள்களை அறியும்படி அறிவித்தல் பொருட்டு வேறாயும், அங்ஙனம் அறியினும் அறிந்தவாறே நுகரும் சுதந்தரம் அவைகட்கு இன்மையினால், அவற்றை நுகர்வித்தல் பொருட்டு உடனாயும் நின்று அருளி, ஒவ்வொரு கணமும் உண்டி முதலியவற்றால் ஓம்பி அருளும் தலைவனது கைம்மாறு இல்லாத நன்றியை, ஏனைய உயிர்களிலும் திறந்து பாராட்டுதற்கு உரியவர் பகுத்தறிவு ஆகிய மன உணர்வைப் பெற்ற மக்களே. அவர்களில் பெரும்பகுதியினர் அங்ஙனம் நினைக்கின்றார்கள் இல்லை. ஆதலின், அவர்கள் ஒரு பொழுது உணவு கொடுத்தவனைத் தன் உயிர் உள்ள அளவும் நினைத்துப் பாராட்டும் நாயினும் கடையர் ஆயினர்.
இனி, அவ் இறைவன் தானே உயிர்கள் தன்னை அறிந்து அடைய ஒட்டாமல் மறைத்து நிற்கும் மலத்தின் இலக்கணங்கள் இவை எனவும், உயிர்களின் இயல்கள் இவை எனவும், தனது தன்மை இது எனவும், நமக்கு அறிவு நூல்கள் வாயிலாக விளக்கி அருளினான். இவ்வாற்றான், இன்ன செயல்களை மேற்கொள்ளக் கடவீர் எனத் தலைவன் பணித்தும், அச் செயல்கள் மக்களால் செய்யக் கூடியனவுமாய் இருந்தும், அவைகளை மேற்கொள்ளாமல், பிற துறைகளில் சென்று உழலும் மக்கள், தன்னால் இயலாதது ஒன்றைத் தன் தலைவன் பணித்தானாயினும், அதனை விரைந்து மேற்கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.
நான்காவதாக, நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணம் காணப்படுகின்றது. அதாவது, தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமும் இன்றி, தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்படுத்தாது, அத்துன்பம் தன் உடலின் கண்ணதாய் இருக்கும் போதும், தன் வாலைக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும். இவ் உண்மையை,
"யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் -- யானை
அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய்"
என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது.
கடவுள் நம்பிக்கை உடையவராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களில் பெரும்பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்தபோது, அது தாம் செய்த தீவினை காரணமாக வந்தது என்று அறிந்து இருந்தும், பாழும் கடவுளே! நீதியற்ற கடவுளே! எம்மை இங்ஙனம் துன்புறுத்தல் தகுமா? உனக்குக் கருணை இல்லையா? எனக் கதறிப் பதறுவதுடன், அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள் இல்லை என்னும் கொள்கையை உடையர் ஆதலைக் காண்கின்றோம். இதனாலும் மக்கள் நாயினும் கடையர் ஆகின்றனர்.
ஐந்தாவதாக, நாயினிடம், செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு. மக்களில் பெரும்பாலோரிடம் அது இல்லை. இல்லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின்றோம். எங்ஙனம் எனில், ஒரு நாயை ஓர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான். தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல். ஆனால், எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பது இல்லை. அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ்ந்து கடிக்கும். வாய்ப்பு இல்லையானால் வாளா போய்விடும்.
மக்களுள் யாருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அதற்கு மூல காரணம், தாம் முன் செய்த வினை என்று அறியாதது மட்டுமல்ல. அவ்வினையினால் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு, அவர்களைத் துன்புறுத்தக் காண்கின்றோம்.
எனவே, நாயின் மேலே பட்ட கல்லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணமாய் உள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களை விட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக. மக்களின் அத் தவறான செயலைக் குறித்துத் தான், "எய்தவன் இருக்க அம்பை நோவது" என்ற பழமொழியும் எழுந்து வழங்குவது ஆயிற்று.
மேற்காட்டிய பல நற்குணங்களை உடைய நாயினிடத்து, ஒரு இழிகுணம் காணப்படுகின்றது. அதாவது, தன் வயிறு நிறைய உண்டு, தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அருவருப்பு இல்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல்.
மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்பும் இல்லாமல் நுகர்தல் கண்கூடாகக் காணப்படுவதாகும்.
நாய்க்கு உள்ள மற்றொரு இழிகுணம் குறிக்கோள் இல்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்கள் நாய்க்கு ஒப்பிடப்படுகின்றார்கள்.
சிறைபுகும் சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தம் கிளையானது வேர் அற சிவன் உகந்து அருள்கூர் தரு வேல்விடு முருகோனே ---
ஆணவமலமாகிய சூரபதுமன் காமக்குரோதாதி துர்க்குணங்களாகிய அசுரர்களுடன் அறநெறிப் பிறழ்ந்து, சம தமாதி சற்குணங்களாகிய அமரர்களுக்குத் துன்பம் புரிந்தபோது, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டுமாறு ஞான பண்டிதராகிய எந்தை கந்தவேள், அசுத்த போகமாகிய கள்ளைக் குடித்து மயங்கியுள்ள அவ்வாணவ மலமாகிய சூரனோடு எதிர்த்துப் போர்புரிந்து ஆணவமலத்தை அழிப்பதைக்கண்ட அருட்சத்தியாகிய அம்பிகை மனமகிழ்ந்து, ”சத்து வடிவாகிய சிவபெருமானுக்கும், சித்து வடிவமாகிய எனக்கும் தோன்றிய ஆனந்த வடிவமாகிய அண்ணலே! நீ ஆன்மாக்களின் ஆணவமலத்தை அழிப்பதற்காகவே வெளிப்பட்டுத் தோன்றினை. ஆதலால், ஆன்மாக்களது மலத்தைக் கெடுத்து ஆனந்தத்தைக் கொடுத்துக்கொண்டு நீடூழி வாழ்வாயாக” என்று வாழ்த்துகிறார் என்பது அதன் தத்துவம்.
கனகன் அங்கையினால் அறை தூணிடை மனித சிங்கமதாய், வரை பார் திசை கடல் கலங்கிடவே பொருதே, உகிர் முனையாலே கதற வென்று உடல் கீண, அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உ(ண்)ணும் கமல உந்தியன் ஆகிய மால் திருமருகோனே ---
கனகன் --- இரணியன்.
கமல உந்தியன் --- பதுமநாபன். கமலநாபன்.
திருமால், கனகன் ஆகம் கீண்ட வரலாறு
பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர். காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர். இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.
இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டான். மனம் வெருண்டான். பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டான். அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை, சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.
தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன், சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன். இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கருவளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.
இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர். பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள். மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றான்.
பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினான். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண முடியவில்லை" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான். எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பான். கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவான். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டான். காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.
தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர். திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சி இருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருங்கள். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்ப்போம்" என்று அருளிச் செய்தனர்.
பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியானபரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும், தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.
பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார். பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே! பிழைபடக் கூறலுற்றீர். இன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.
"ஓதப் புக்கவன் உந்தைபேர் உரைஎன லோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
மூதக்கோய், இது நல்தவம் அன்று என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்".
பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே! அந்தோ, இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.
"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ என்றான்".
பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயனே! இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.
"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்".
ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர். பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.
ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே! உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.
இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே! நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.
"காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய".
"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டும் எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய இரணியாய நம என்றே கூறுகின்றனர்".
"யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்? அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த பாம்பின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன். அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.
தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.
அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுங்கள்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர். பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார். ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.
நிருதன் வியந்து, நெருப்பில் இடுமாறு பணித்தனன். விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.
அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து, பணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.
இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதா' என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன். அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின. வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.
ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, "அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்" என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் 'ஓம் நமோ நாராயணாய' என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள். ஞானக்குருந்தர் பகிய பிரகலாதர், "அம்மா! இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.
இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான். மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், சாகர சயனா என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.
ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களே! என் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.
அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே! மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல், என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா! என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உள்ளானோ? உரை" என்று கேட்டான்.
"சாணிலும் உளன், ஓர்தன்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக்
குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன
சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார்,
நன்றுஎனக் கனகன் சொன்னான்".
பிரகலாதர், "தந்தையே! அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன். காணுதி" என்று அருளிச் செய்தார்.
இரணியன் சீற்றம் மிக்கு, "பேதாய்! நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான். பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.
"என்உயிர் நின்னால் கோறற்கு
எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட
இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன்,
பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்
என்றனன் அறிவின் மிக்கான்".
கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான். அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.
அதுகண்ட கனகன், அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே! இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய்! உன் கண் காண இந்த நரசிங்கத்தையும், உன்னையும் கொன்று, என் வீரவாளை வணங்குவன்" என்றான்.
"கேள்இது நீயும்காணக்
கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி,
நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால்
வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா
அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்".
அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர். பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய்! உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர்.
"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்"
பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார்.
"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.
நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.
என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப |
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட |
“நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு |
ஒன்று பெருமை உரிமை புரிக “ என்றான். |
திருமடந்தையர் நால் இருவோர் நிறை அகமொடு ---
இறைவனை யார் உள்ளன்போடு வழிபடுகின்றார்களோ, அவர்கள் விட்டு நீங்காமல் திருமகள் உறைவாள்.
அப்படிப்பட்ட அன்பர்கள் வாழும் இல்லத்தில் இறைவன் எழுந்தருளி இருப்பான்.
"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்
வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே". --- அப்பர்.
"இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்து அருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடு ஏல்ஓர் எம்பாவாய்". --- மணிவாசகம்.
அம்பொனின் ஆலயம் ---
பொன் --- அழகு.
அழகிய திருக்கோயில்களிலும் இறைவன் எழுந்தருளி இருப்பான்.
நீடிய சிவபுரம் தனில் வாழ் குருநாயக ---
சிறந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி இருப்பவர் முருகப் பெருமான். சிவபுரம், சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில் "பட்டாமணி ஐயர் பேருந்து நிறுத்தம்" பக்கத்தில் பிரியும் சிவபுரி கிளைப் பாதையில் 2 கி. மீ. சென்றால் சிவபுரத்தை அடையலாம்.
இறைவர் : சிவகுருநாதசுவாமி, சிவபுரீசுவரர், பிரமபுரீசுவரர்,சிவபுரநாதர்.
இறைவியார் : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற திருத்தலம். இதற்குச் சான்றாகப் பின்வரும் தேவாரப் பாடல்களைக் காண்க.
"அன்றுஅடல் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதன்நகர்,
வென்றிகொள் எயிற்றுவெண் பன்றி,முன்னாள்
சென்றுஅடி வீழ்தரு சிவபுரமே". --- திருஞானசம்பந்தர்.
பார்அவன்காண், பார்அதனில் பயிர் ஆனான்காண்,
பயிர்வளர்க்கும் துளிஅவன்காண், துளியில் நின்ற
நீர்அவன்காண், நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்,
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேர்அவன்காண், பிறைஎயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீர்அவன்காண், சீர்உடைய தேவர்க்கு எல்லாம்
சிவன்அவன்காண், சிவபுரத்து எம்செல்வன் தானே.--- அப்பர்.
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே திருஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை' என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.
குபேரபுரம், பூகயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலை அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. பின்னர் அது கண்டு பிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர்த் திருக்கோயிலில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபடப்படுகிறது.
இங்குள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.
இங்குள்ள பைரவர் சிறப்பு. இவருக்கு காலை சந்தி, அர்த்தசாமம் காலங்களில் அபிடேகம் செய்து, வடைமாலை சாத்தி, தயிர் நசாதமும், கடலை உருண்டையும் நிவேதித்து, சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால், வழக்குகளில் வெற்றி கிட்டும், தீராத நோய் தீரும் என்பது இன்றும் நம்பிக்கையில் உள்ளது.
கருத்துரை
முருகா! திருவடிப் பேற்றை அருள்வாய்
No comments:
Post a Comment