"துட்டனைக்
கண்டால் தூர விலகு"
"துட்டனைக் கண்டால் தூர
ஓடு"
என்பன முதுமொழிகள்.
இம் முதுமொழிகளுக்கு விளக்கமாக, "நீதி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல் உண்டு. நூறு பாடல்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. விளம்பரம் இல்லாமலே அரிய செயல்களை, நமது நன்மை கருதிச் செய்துவிட்டு, சொல்லாமலே போய்விட்டார்கள்.
"கொம்பு உளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, --- வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி".
கொம்பு உள்ள மாடு முதலிய விலங்குகளுக்கு அருகில் போனால் முட்டும். எனவே, கொம்பு உள்ள விலங்குகளைக் கண்டால் ஐந்து முழத் தொலைவில் உடனே சென்று விடவேண்டும். குதிரைக்குப் பத்து முழத் தொலைவில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும்,
சினம் கொண்ட யானைக்கு ஆயிரம் முழத் தொலைவில் விலகி இருக்கவேண்டும். ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களில் படும்படி நேர்ந்தால், அவர்கள் கண் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பது நல்லது.
காரணம் தீயவர்களைக் காண்பதே தீமையாய் முடியும்.
தீயவர்களோடு வாழ்தல் கொடிய நரகத் துன்பத்தைத் தரும். எனவே, அவர் இருக்கும் இடத்தைச் சேராது நீங்கிவிடவேண்டும் என்னும் கருத்தில், "தருமதீபிகை" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்....
"நெஞ்சம் கொடிய நெடுமூர்க்கரோடு உறைதல்,
நஞ்சம் கொடிய நரகமே --- தஞ்சம் என
எவ்வழியும் அன்னார் இருக்கும் இடம் சேராதே,
வெவ்வழி நீங்கி விடல்".
இதன் பொருள் ---
நெஞ்சத்தால் கொடிய குணம் படைத்த மூர்க்கரோடு சேர்ந்து வாழ்தல் கொடிய நரகத் துன்பத்தையே தரும். எந்த வகையிலும் அவர் இருக்கும் இடத்தை ஆதவராகக் கருதி அடைதல் கூடாது. வெகுதொலைவில் விலகி விடவேண்டும்.
நெஞ்சத்தில் உள்ள கொடுமை, நெடுமூர்க்கத் தனத்திற்குக் காரணமாக நின்றது. நெஞ்சு பாழ்பட்ட அவர் யாருக்கும் எக்காலத்தும் நன்மை செய்யமாட்டார். எனவே, அவரைக் கண்டால், கண்ணுக்கு எட்டாதபடி கால்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
No comments:
Post a Comment