பூமி பாரங்கள் --- 5
----
அடுத்து, ஆழ்வார்கள் "பூமி பாரங்கள்" பற்றி அறிவிப்பதை
அறிவோம்...
வாழவேண்டிய முறையின் வாழாதவனும்
உண்ணுகின்றான். இதனால் அவனுக்கு மட்டுமே நன்மை. உடல் மட்டும் கொழுக்கின்றது. அறிவு
சிறுக்கின்றது. முறை அறிந்து வாழ்பவனும் உண்ணுகின்றான். இவனது உடல் வளர்வதோடு, அறிவும் வளர்கின்றது. நல்லவன் உண்ணும்
உணவால் அவனுக்கு மட்டும் அல்லாது பிறருக்கும் நன்மை உண்டாகின்றது.
அப்படிப் பார்க்கும்போது, யாருக்கும் பயன்படாமல், பூமிக்குப் பாரமாக உள்ள ஒருவன்
உடுக்கின்ற உடையும், குடிக்கின்ற நீரும்
கூடப் பாவம் செய்தவையோ என்று அச்சப்படுகின்றார் "பெரியாழ்வார்". அவருடைய
"திருமொழி"யைப் பார்ப்போம்.
"உரக
மெல் அணையான் கையில் உறை
சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம்
பரந்து ஏறும் செங்
கமல வயல் திருக்கோட்டியூர்
நரக
நாசனை நாவில் கொண்டு அழை
யாத மானிட சாதியர்
பருகு
நீரும் உடுக்கும் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ?".
முற்பிறவிகளில் செய்த வினையின் பயனை நுகர்வதற்கு
இந்த உடம்பு வருகின்றது. வினைகளை அனுபவிப்பதோடு, வினைகளையும் பெருக்குகின்றோம். விளைவு துன்பமே. துன்பத்தை
அனுபவிப்பது நரகம் ஆகும். அந்த நரகத்தை நாசம் செய்வது இறைவன். அதற்கு அவனது திருநாமங்களை
வாயாரப் புகழவேண்டும். இறைவனது "பொருள் சேர் புகழைப் புரிந்தார் மாட்டு, இருள்சேர் இருவினை
சேராது" என்றார் திருவள்ளுவ நாயனார். நரக நாசனாகிய பெருமாளின் திருநாமங்களை
நாவால் அழையாத மானிடர்கள் உடுக்கின்ற உடையும், குடிக்கின்ற நீரும் பாவம் செய்தவையோ என்று
ஐயுறுகின்றார் ஆழ்வார்.
புண்ணியவானிடத்தில் சேரும் உடையும் அவன்
குடிக்கின்ற நீரும் புண்ணியம் செய்தவை என்று பொருள்.
இந்தப் பூமிபாரங்கள் விலங்காகப் பிறக்காமல், மனிதனாகப் பிறந்து, மனிதனானவன் உண்ணுகின்ற சோற்றை
உண்ணுகின்றனவே. வேண்டாம், வேண்டாம். அவர்கள்
உண்ணும் சோற்றை விலக்கிவிட்டு, அவர்கள் வாயிலே
புல்லைத் திணியுங்கள் என்கின்றார் பெரியாழ்வார். அவருடைய திருமொழியைச்
சிந்திப்போம்.
"ஆமையின்
முதுகு அத்திடைக் குதி
கொண்டு, தூ மலர் சாடிப் போய்த்
தீமை
செய்து இளவாளைகள் விளை
யாடும் நீர்த் திருக்கோட்டியூர்
நேமி
சேர் தடங்கையினானை
நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமிபாரங்கள்
உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே".
தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் இதையே
வலியுறுத்திப் பாடினார்.
"வண்டினம்
முரலும் சோலை,
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்
மீது அணவும் சோலை,
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன்
அமரும் சோலை,
அணி திருவரங்கம் என்னா
மிண்டர்
பாய்ந்து உண்ணும் சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமின் நீரே."
திருவரங்கத்தின் வண்டுகளின் கூட்டங்கள்
சோலைகளில் ரீங்காரம் செய்கின்றன.
மயில்
கூட்டங்கள் நடனமாடுகின்றன. மேகங்கள் மேலே வந்து
அணைந்து நிற்கின்றன. குயில் கூட்டங்கள்
ஒன்றை ஒன்று இனிமையான குரலில் கூவி அழைக்கின்றன. தேவாதி தேவனான சர்வேசுவரன் நித்தியவாசம்
செய்கிறான். சம்சாரத்திற்கு ஆபரணமாகவுள்ள (இப்படிப்பட்ட பெருமைகளையுடைய) "திருவரங்கம்"
என்று வாயால் சொல்லாத, நன்றி இல்லாத
மூர்க்கர்கள், மேல் விழுந்து
சாப்பிடும் சோற்றை விலக்கி, நீங்கள் நாய்க்குப்
போடுங்கள்.
இறைவன் திருநாமத்தை இடையறாது எண்ணுவோம். பரகதியை
அடைவோம்.
No comments:
Post a Comment