பெரியாரொடு நட்பு இனிது
----
"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தா ரேனும்
பெரியார் நட்பு உற்றார் பெரியர், --- பெரியார் நட்பு
இல்லரேல் புல்லவரே, இன்பனை நீர் சுண்ணம் உறின்
நல்லது, இன்றேல் பொல்லதாம் நாடு".
தருமதீபிகை என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.
இதன் பொருள் ---
ஒரே பனைமரத்தில் ஊறிய நீரானது சுண்ணாம்போடு கூடினால், உடலுக்கு நன்மை தருகின்ற, இன் சுவை உடைய "பதநீர்" ஆகின்றது. சுண்ணாம்போடு சேராத போது, உடம்பைக் கெடுப்பதோடு, உள்ள உணர்வையும் மயக்குகின்ற, புளிப்புச் சுவையுள்ள கள்ளாக மாறுகின்றது. அதுபோல, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே ஆனாலும், பெரியவர்களோடு கூடி இருந்தால் பெரியவர் என்று போற்றப்படுகின்றார். பெரியாரோடு கூடாமல், சிற்றினத்தாரோடு கூடி இருந்தால், இழிநிலைக்கு ஆளாகின்றதோடு, எல்லோராலும் பழிக்கப்படுகின்றார்.
ஒருகுடியில் பிறந்தவர் ஆயினும், கற்றாரே சிறப்புப் பெறுவர் என்பது, "நறுந்தொகை" என்னும் நூல் கூறுவது.
"நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்".
இதன் பொருள் ---
நான்கு வகையான குலங்களில், மேல் குலத்தில் பிறந்த ஒருவன், கல்வி அறிவு இல்லாதவனானால், அவன் தாழ்ந்தவனே ஆவான்.
எந்தக் குலத்தில் பிறந்து இருந்தாலும், யாராக இருந்தாலும், அந்தக் குலத்தில் கற்றவரை, மேலோர் "வருக" என்று உபசரித்துப் போற்றுவர்.
இதையே, பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகளும் வலியுறுத்துகின்றன.
"ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவு உடையோன் ஆறு அரசும் செல்லும்,
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே".
இதன் பொருள் ---
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில் மூத்தபிள்ளையை வருக என்று அழைத்துச் சிறப்புச் செய்யாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள கற்றறிந்த பிள்ளை சொல்வதையே அரசனும் கேட்பான். இது மட்டுமா? வேறுவேறு வகையாக உள்ள நான்கு குலத்தில் பிறந்த மக்களில், கீழ்க் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கற்றவனாய் இருந்தால், மேல்குலத்தைச் சார்ந்தவனும், அவனிடம் சென்று பணிந்து கற்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவான்.
எனவே, குலநலம் பேசுவது கூடாது. கற்கவேண்டிய நூல்களை முறையாகப் பயின்று, உள்ளத்தில் உள்ள மாசு அகன்று, கற்றவழியில் நிற்பது வேண்டும் என்பதும், கற்றவழியில் நிற்கவேண்டுமானால், அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியோரைத் துணைக் கொண்டு ஒழுகவேண்டும் என்பதும் விளங்கும்.
இந்தக் கருத்தை வைத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி உள்ள இறைவர் மீது பாடிய ஒரு தேவாரப் பாடலை இங்குச் சிந்திப்போம்...
முண்டம் தரித்தீர், முது காடுஉறைவீர்,
முழுநீறுமெய் பூசுதிர், மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்,
கடலைக் கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர்,
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்,
பெரியாரொடு நட்பு இனிது என்று இருத்தும்,
அண்டம் கடந்து அப்புறத்தும் இருந்தீர்,
அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
இதன் பொருள்
இறைவரே, அடியவர்களாகிய நாங்கள் "பெரியாரொடு நட்புச் செய்வது இன்பந் தருவது" என்று கருதியிருப்பவர்கள். உம்மைப் பெரியார் என்று கருதி, உமக்கு ஆட்செய்யலாம் என்று கருதினால், நீரோ தலை மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்கின்றீர், பிணங்களை எரித்த சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொண்டுள்ளீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள் கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இந்த அண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருக்கின்றீர். (நீர் எம்மோடு இந்த நிலவுலகில் இல்லை. எம்மோடு பொருந்திய வாழ்க்கையையும் நீர் வாழவில்லை) அதனால், ஊனால் திரண்டுள்ள இந்த உடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள முடியாதவர்களாய் நாங்கள் இருக்கின்றோம். எனவே, உம்மைச் சார்ந்து நின்று உமக்குப் பணி செய்ய நாம் அஞ்சுவோம்.
கற்கவேண்டிய அறிவு நூல்களையும், அருள் நூல்களையும், முறைப்படி கற்போம். கற்ற பெரியாரோடு கூடி இருப்போம். இறைவன் திருவருளுக்கு ஆளாவோம்.
No comments:
Post a Comment