சாங்காலம் "சங்கரா" என்றால்

 

 

சாகின்ற காலத்தில் "சங்கரா!" என்றால்?!

-----

 

வாங்காலம் உண்டசெழுந் தண்டலையார்

     அடிபோற்றி வணங்கி நாடிப்

போங்காலம் வருமுன்னே புண்ணியம்செய்து,

     அரியகதி பொருந்து றாமல்,

ஆங்காலம் உள்ளது எல்லாம் விபசாரம்

     ஆகி, அறிவு அழிந்து, வீணே

சாங்காலம் சங்கரா! சங்கரா!

     எனின் வருமோ தருமம் தானே!

 

"தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் பாடல் இது.

 

இதன் பொருள் ---

 

     வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார் அடிபோற்றி வணங்கி நாடி --- எடுத்த நஞ்சினைப் பருகிய, வளமிக்க தண்டலையில் எழுந்தருளிய சிவபரம்பொருளின் திருவடியைக் கும்பிட்டு ஆராய்ந்து, போங்காலம் வரும் முன்னே புண்ணியம் செய்து அரிய கதி பொருந்துறாமல் - இறக்கும் காலம் வருவதற்கு முன்னே நலம் புரிந்து சிறந்த நிலையை அடையாமல், ஆம் காலம் உள்ளது எல்லாம் விபசாரம் ஆகி அறிவு அழிந்து --- வாழும் நாள் உள்ள வரைக்கும் தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்து; சாம்காலம் வீணே சங்கார சங்கரா எனின் தருமம் வருமோ --- இறக்கும்போது வீணாகச் சங்கரா! சங்கரா! என வேண்டின் நன்னெறி கிடைத்திடுமோ?

 

      வாழுகின்ற காலத்தில் ஒருவனுக்கு எதன்மேல் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதுவே இறுதியில் அவன்  நினைவில் இருக்கும். ஆகையால், வாழ்நாள் முழுதும்  இல்லாத சிவ நினைவு இறுதியில் வராது. மற்றும் வாழ்நாள் முழுதும் தவறு செய்தவன் அதன் பயனை நுகர்ந்தே ஆகவேண்டும். எனவே, சாங்காமல் சங்கரா! சங்கரா! என வேண்டினால் பயன்பெறுதல் முடியாது. சாங்காலத்தில் சங்கரா என்றால் முடியுமோ' என்பது பழமொழி.

 

விபசாரம் --- தீய ஒழுக்கம், தீய நடத்தை.

 

(அபசாரம் -- மரியாதைக் குறைவு. உபசாரம் ---மரியாதை, புகழ்மொழி, வாழ்த்து, வழிபாடு)

 

தருமம் --- நன்னெறி --- "நன்னெறிக்கு உய்ப்பது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்பது திருஞானசம்பந்தர் அருள் வாக்கு.

 

     இளமைக் காலத்தில் எதை எதையோ நினைப்பதும் செய்வதுமாக இருந்துவிட்டு, முதுமைக் காலத்தில் தள்ளாமை என்னும் நிலை வந்தபோது, அப்போது இறைவன் திருநாமத்தைச் சொல்லலாம், வழிபாடு செய்யலாம் என்றால். பொருந்தி உட்கார உடம்பு இடம் கொடுக்காது. மனம் எங்கெங்கோ அலைபாயும். ஒருநிலைப் படாது. இறைவன் திருநாமத்தை அப்போதாவது இடைவிடாது சொல்லலாமே என்றால், அஷ்டோத்தரம் சொன்னாலே போதும் என்ற நிலைக்கு மனமானது ஏற்கெனவே பழகிப் போய்விட்டது. அந்தப் பழக்கமே முதுமையிலும் வரும்.

 

     கொஞ்ச நேரம் இறை சிந்தனையில் எதையாவது கேட்டு இருக்கலாம் என்றால், இடையிலே பருகுவதற்கு ஏதாவது கொடுப்பார்களா என்றும், முடிந்த பிறகு உணவு இடுவார்களா என்றும் ஏங்கும் நிலைக்கு, இன்றைய சூழல் உட்படுத்தப்பட்டு விட்டது.

 

     இதையெல்லாம் உணர்ந்துதான், முதுமையில் இளைப்பு நிலை வந்தபோது, உன்னுடைய திருநாமத்தை எனக்குச் சொல்லவராது. அதனால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்னும் பொருள்பட,

 

 

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது, அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே" என்றார் பெரியாழ்வார்.

 

     சாகும் காலத்தில் இறைவனை இழைக்க முடியுமா? அழைத்தாலும் இறைவன் வருவானா?  இளமையில் பழக்கப்பட்டால் முடியும். அழைத்தால் வருவான். எப்படி?

அப்பர் பெருமான் பாடி அருளிய, பின் வரும் தேவாரப் பாடல்களை எண்ணுவோம்...

 

 

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய

     செம்மேனி அம்மான்

அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில்,

     அவன் தனை யான்

பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து

     பல்நாள் அழைத்தால்,

இவன் எனைப் பல்நாள் அழைப்பு ஒழியான்

     என்று எதிர்ப்படுமே!

 

 

இதன் பொருள் ---

 

     சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில், அவனை அடியேன் பவன்என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி, அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால், இவன் என்னை பலநாளாக அழைத்து வருகின்றான். அழைப்பதை ஒழியாமல், தவறாது செய்கிறான் என்று திருவுள்ளத்தில் கருணை வைத்து, அடியேனுக்குக் காட்சி வழங்குவான்.

 

பவன் --- உலகத் தோற்றத்திற்கு முதல் காரணம் ஆனவன். "பவாயநம" என்பது வடமோழித் தோத்திரம்.

 

நாமம் பிடித்துத் திரிதல் --- எங்கெல்லாம் நாம் இயங்குகின்றோமோ, அங்கெல்லாம் இறைவன் திருநாமத்தை மறவாது சொல்லுதல். திருக்கோயில் வழிபாட்டின் போதும். தீர்த்த யாத்திரையின் போதும். வழிபாடு நிகழும் இடங்களுக்குச் செல்லும்போதும். பராக்குப் பார்க்காமல், ஒருமுகமாக இருந்து இறைவன் திருநாமத்தையே வாயாரச் சொல்லுதல்.

 

அளி --- கருணை, அருள். அளித்தல் --- கருணை புரிதல். அருள் புரிதல்.

 

எந்தச் சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோமோ, அந்தச் சொல்லே ஆபத்துக் காலத்திலும் வாயில் இருந்து வரும்.

 

 

"அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி,

     ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றி,

     பாவித்தேன், பரமா!  நின்னை,

சங்கு ஒத்த மேனிச் செல்வா!

     சாதல் நாள், நாயேன் உன்னை,

எங்கு உற்றாய்?” என்ற போதா,

     இங்கு உற்றேன்என் கண்டாயே!

 

இதன் பொருள் ---

 

     பரம்பொருளே! சங்கை ஒத்த வெண்மையான திருமேனியை உடைய செல்வனே! இந்த உடம்பு மண்ணில் பொருந்துமாறு நெடிது வீழ்ந்து உன்னை (அட்டாங், பஞ்சாங்கமாக) வணங்கி, எனது விருப்பத்தை, உன்னிடத்திலேயே வைத்து, பிறவி என்கின்ற சேற்றினை அடியோடு போக்கி, உன்னையே ஞான பாவனையால் மனத்தில் கொண்டு வழிபட்டு வருகின்றேன். என் உயிர் போகின்ற அந்த நாளில், நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை, "எங்கிருக்கின்றாய்" என்று வினவினால், " இதோ இங்கு இருக்கிறேன்" என்று என் முன் தோன்றி அருள் செய்வாயாக.

 

     அங்கத்தை மண்ணுக்கு ஆக்குதல் --- திருக்கோயில் வழிபாடாகில், பலிபீடத்தின் அருகில், பூமியில் உடம்பு படியுமாறு விழுந்து, ஆண்கள் என்றால் அட்டாங்கமாகவும், பெண்கள் என்றால் பஞ்சாங்கமாகவும் வணங்குதல். திருக்கோயிலில் வேறு எந்த இடத்திலும், அவ்வாறு வணங்குதல் கூடாது. சிலர் ஆடையில் தூசு படியக் கூடாது என்பதற்காக, விதவிதமாக விழுந்து வணங்குவதைக் காணலாம். உள்ளம் தூசு பட்டு, அழுக்காக இருந்தால் பரவாயில்லை!!!!. ஆடை அழுக்காகக் கூடாது?????

 

     இல்லத்தில் வழிபாடு செய்யும்போதும் அவ்வாறே அட்டாங்க பஞ்சாங்கமாக விழுந்து வணங்குதல் வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...