எலி அழுதாலும் பூனை விடாது

 

 

எலி அழுதாலும் பூனை விடாது

---

 

     நமது உடம்பில் வல்லமை இருக்கின்ற போது, நம்மால் முடிந்ததை எல்லாம் செய்கின்றோம். முடியாதவற்றையும் முயன்று பார்க்கின்றோம்.

 

     நாம் சொல்வதுதான் சரி, செய்வதுதான் சரி என்று வாதம் புரிகின்றோம். சண்டை பிடிக்கின்றோம். எடுத்து எறிந்து பேசுகின்றோம். எரிந்தும் பேசுகின்றோம். அடுத்தவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பது கிடையாது. நினைப்பது நல்லதா, கெட்டதா என்று பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்துவிட்டுச் சாதிக்கின்றோம். அறத்தைப் பற்றிச் சொன்னால், அப்புறம் பார்க்கலாம் என்கின்றோம். நல்லதைச்செய்ய நாள் பார்க்கின்றோம். அல்லதைச் செய்ய அவசரப்படுகின்றோம்.

 

     உடம்பில் வலிமை குன்றி, முதுமை வந்தபோது, படுக்கையில் இருந்தபடியே, நாம் எண்ணியதை, சொல்லியதை, நடந்துகொண்டதை எல்லாம் எண்ணிப் பார்க்கின்றோம். இப்போது நிகழ்பவை எல்லாம், இளமையில் செய்த செயல்களின் விளைவுதானா என்றும் சிந்திக்கின்றோம். இப்போது ஏதாவது, பரிகாரம் செய்யலாமா, எந்தக் கோயிலுக்குப் போகலாம், எந்தத் தீர்த்தத்தில் முழுகலாம், என்ன செய்யலாம்? என்று சிந்திக்கின்றோம். அப்போது, முதுமை இடம் தருவது இல்லை. நமது சிந்தனையும் செயலாவது இல்லை. அமைதியாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வழி ஏதும் தோன்றுவதில்லை.

 

     நம்மைச் சார்ந்து இருந்தவர்களை, இப்போது நாம் சார்ந்து இருக்கும் நிலை வந்துவிடும்.    

 

     ஐந்தில் வளையவில்லை. ஐம்பதில் எப்படி வளையும்?

 

     ஒருநாள், நாம் சற்றும் எதிர்பாராத நிலையில் மரணபயம் நம்மை வந்துத் தொற்றிக் கொண்டு ஆட்டிப்படைக்கும். அப்போது நாம் அழுது புரண்டாலும் ஆகாது. நம்மைச் சார்ந்தோர் அழுது புரண்டாலும் ஆகாது.

 

     எலியைக் கண்ட பூனையானது தாவி வந்து பற்றுவது போ, உயிரை இயமன் சற்றும் இரக்கமில்லாமல் கொண்டு போவான். எலி என்னதான் அழுது புரண்டாலும், பூனை விடாது. அதுபோல, நாம் அழுது புரண்டாலும், நம்மைச் சூழ்ந்து உள்ளோர் அழுது புரண்டாலும், நம்மை அவன் விடமாட்டான். அப்போது, சங்கரா, சங்கரா என்று கூவத் தோன்றும். கூவவும் வாய் வராது, முடியாது.

 

     எலி அழுதாலும் பூனை விடாது என்னும் பழமொழிக்கு விளக்கமா, "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்....

 

 

"பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்

     நெறிபாதம் போற்றி, நாளும்

வலிய வலம் செய்து அறியீர்? மறம்செய்வீர்!

     நமன்தூதர் வந்து கூடி

மெலியவரைந் திடுபொழுது கலக்கண்ணீர்`

     உகுத்தாலும் விடுவது உண்டோ?

எலிஅழுது புலம்பிடினும் பூனைபிடித்

     ததுவிடுமோ? என்செய் வீரே?"

 

இதன் பொருள் ---

 

     பலவளம் பொலியத் தழைத்த தண்டலை நீள்நெறி பாதம் நாளும் போற்றி --- பலவகை வளங்களும் அழகுற மிகுந்த திருத்தண்டலை (என்னும் திருல்லத்திலே)) நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளி உள்ள சிவபெருமானது  திருவடிகளை எப்போதும் வாழ்த்தி, வலிய வலம் செய்து அறியீர் --- உடல் வலிமை உள்ளபோதே வலம்வந்து வணங்க அறியமாட்டீர்கள்! (மறந்து போனது என்பீர்கள், ஆனால்), மறம் செய்வீர் --- தீவினைகளை (மட்டும் மறவாமல்) செய்வீர்கள்!, நமன் தூதர் வந்து கூடி மெலிய வரைந்திடு பொழுது --- எமனுடைய தூதர் வந்து சேர்ந்து (நீங்கள்) சோர்வு அடையும்படி (வாழ்நாளை) எல்லையிட்டு (அழைக்கும்) பொழுது, கலக் கண்ணீர் உகுத்தாலும் விடுவது உண்டோ --- கலம் கலமாக மிகுதியான கண்ணீர் விட்டு அழுதாலும், எமதூதர்கள் உங்களை விட்டுச் செல்வது நேருமோ?, எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது விடுமோ --- எலி கதறி அழுதாலும் (அதனைப் பிடித்த) பூனை தனது பிடியை விடுமோ?, என் செய்வீர் --- (எமன் தூதர் அழைக்கும் போது) என்ன செய்வீர்?

 

     என்ன செய்யலாம். இப்போதாவது இயன்ற வரையில் நல்லதையே நினைப்போம். நல்லதையை பேசுவோம், நல்லதையே செய்ய முயல்வோம். நல்லதே நடக்கும்.

 

     எனது சிறுவயதில், எனது ஊரில் ஒரு பெரியவர் பஜனைப் பாட்டுப் பாடுவார்...அது அப்போது இருந்து என்னுடைய நினைவில் அவ்வப்போது நிழலாடும்...

 

எமனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

எம்பெருமான் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

நமனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

நடராஜன் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

காலனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

கண்ணபிரான் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

     சொல்லலாம் என்று தோன்றும்நாள் தொடங்கி வாழ்நாள் இறுதிவரையில் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பது நல்லது. சொல்லாது கழிந்த நாளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்.

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...