பூமி பாரங்கள் --- 3
அடுத்து
திருவள்ளுவ நாயனார் யாரை நமக்கு "பூமி பாரம்" அடையாளப்
படுத்துகிறார் என்று பார்ப்போம்...
கண்ணோட்டம் என்னும் அதிகாரம். கண்ணோட்டம்
என்றால் கருணை அல்லது இரக்கம் என்று பொருள். Compassion என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். இது
மனிதனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத பண்பு. இது உலக வாழ்வுக்கு, உலக நடைக்கு அமைய வேண்டியது. உலக நடை
என்பது, இல்லாதவருக்குத் தம்மால்
இயன்றதைக் கொடுத்து உதவவேண்டும் என்னும் எண்ணம், புறந்தருதல் என்பதாகிய பிறரைக் காத்தல், பிழைத்தன பொறுத்தல் என்னும் மன்னிக்கும்
குணம் ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்தக் குணங்கள் இல்லாதவர்கள் பூமிக்குப்
பாரமாக விளங்குவர் என்கிறார் நாயனார். திருக்குறளைக் காண்போம்...
"கண்ணோட்டத்து
உள்ளது உலகுஇயல், அஃது இலார்
உண்மை
நிலக்குப் பொறை".
இதன்
பொருள் ---
உலக இயக்கம் அல்லது ஒழுக்கம் என்பது (ஒருவரது
குற்றத்தை மறந்து) கருணை புரிவதால் நிகழ்கின்றது. ஆதலால், உள்ளத்தில் கருணை இல்லாதவர் உயிர் வாழ்ந்து
கொண்டு இருத்தல் இந்தப் பூமிக்குச் சுமை.
திருக்குறளின் பெருமைகளை விளக்க வந்த
நூல்களுள் "முருகேசர் முதுநெறி வெண்பா" என்பதும் ஒன்று. மேற்குறித்த
திருக்குறளை விளக்கும் ஒரு பாடல் அந்நூலில் இருந்து....
"ஓவில்உழ
வன்வேண்ட உக்கிரனார் இந்திரன்கொண்
மூவைவிடு
வித்தார் முருகேசா - தாவல்இலா
கண்ணோட்டத்து
உள்ளது உலகியல் அஃதுஇலார்
உண்மை
நிலக்குப் பொறை".
இதன்
பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, ஓவில் உழவன் வேண்ட --- ஒழிதல் இல்லாத
வேளாளன் ஒருவன் வேண்டிக் கொள்ள,
உக்கிரனார்
--- உக்கிர பாண்டியன், இந்திரன் கொண்மூவை
விடுவித்தார் --- இந்திரனுடைய மேகங்களைச் சிறையில் இருந்து விடுவித்தார். தாவல்
இலா --- அழிதல் இல்லாத, உலகியல் --- உலக
நடையானது, கண்ணோட்டத்து உள்ளது ---
கருணை என்னும் அருள் நிலையிலே உள்ளது. அஃது இலார் --- கண்ணோட்டமாகிய அருள்
இல்லாதவர்கள், உண்மை --- நிலவுலகில்
இருத்தல், நிலக்குப் பொறை ---
நிலத்திற்குச் சுமையாகும்.
வேளாளன் வேண்டிக் கொள்ள உக்கிர பாண்டியன்
இந்திரனுடைய மேகங்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். உலகநடையானது
அருளுடைமையோடு விளங்குதலில் தான் உள்ளது. அருளில்லாதவர்கள் உலகத்திலே இருப்பது
நிலத்துக்குச் சுமையாகும் என்பதாம்.
உக்கிரபாண்டியன் கதை
ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும்
மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி
மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள். சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய
இருக்கைகளிலே இருந்தார்கள். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி
இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது.
சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச்
செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும்
என்று எண்ணினான். இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான் போலத் தூக்க
முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே
போட்டான். பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல்
இருந்தான். பிறகு, தன்னுடைய நாட்டை
அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு முகில்கள் பொதிய
மலைச் சாரலில் மேயக்கண்டு அவைகளைச் சிறையிலிட்டான். இதனை உணர்ந்து இந்திரன்
உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல
முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச்
செய்கிறேன், அன்பு கூர்ந்து எனது
மேகங்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான். அச்சமயத்தில் வேளாளன்
ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான். உக்கிரபாண்டியனும்
அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான்.
பகைவனே ஆனாலும், அவன்பாலும் உள்ளத்தில் கருணை இல்லாதவன் இந்த பூமிக்குப்
பாரமாகவே கருதப்படுவான். தனது வலிமையைக் காட்டுவது பெருமை அல்ல. யாரிடத்தும் கருணையைக்
காட்டுவதே பெருமை.
No comments:
Post a Comment