மதுரை --- 0972. நீதத் துவம் ஆகி

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நீதத் துவமாகி (மதுரை)

 

முருகா!  

உயிர்களிடத்துக் கருணை புரியும் மனத்தை 

அடியேனுக்கு அருள்வீர்.

 

 

 

தானத் தனதான 

     தானத் ...... தனதான

 

 

நீதத் துவமாகி 

     நேமத் ...... துணையாகிப்

 

பூதத் தயவான 

     போதைத் ...... தருவாயே

 

நாதத் தொனியோனே 

     ஞானக் ...... கடலோனே

 

கோதற் றமுதானே 

     கூடற் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நீதத் துவம் ஆகி,

     நேமத் ...... துணை ஆகி,

 

பூதத் தயவு ஆன 

     போதைத் ...... தருவாயே.

 

நாதத் தொனியோனே! 

     ஞானக் ...... கடலோனே!

 

கோது அற்ற அமுதானே! 

     கூடல் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

         நாதத் தொனியோனே--- நாத வடிவாக விளங்குபவரே!

 

         ஞானக் கடலோனே --- அறிவுக் கடலாகியவரே!

 

         கோதற்ற அமுதோனே--- குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவரே!  

 

         கூடல் பெருமாளே--- நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

         நீதத் துவமாகி--- நீதி நெறியில் அசையா நிலை உடையவனாகி,

 

         நேமத் துணையாகி--- சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய்,

 

         பூதத் தயவான--- உயிர்வர்க்கங்களின் மேல் கருணையுடைமை ஆகிய

 

         போதைத் தருவாயே--- மலரைத் (பேரறிவைத்) தந்து அருள்வாயாக.

 

 

பொழிப்புரை

 

         நாத வடிவாக விளங்குபவரே!  

 

        அறிவுக் கடலாகியவரே!

 

         குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவரே!  

 

         நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

         நீதி நெறியில் அசையா நிலை உடையவனாகிசீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய்உயிர் வர்க்கங்களின் மேல் கருணையுடைமை ஆகிய மலரைத் (பேரறிவைத்) தந்தருள்வாயாக.

 

விரிவுரை

 

நீத துவம் ஆகி ---

 

நீதம் --- நீதி. துவம் --- அசையாத நிலை. நீதியில் அசையாது நிற்றல். உயிருக்கு இறுதியே வரினும் உறுதியினின்றும் பிறழாத நிலை.

 

நேமத் துணை ஆகி ---

 

நேமம் --- நியமம். நியமத்திற்கு துணையாகி நிற்றல். நியமம் என்பது யோக அங்கங்களில் இரண்டாவது. இயமம்நியமம்ஆதனம்பிராணாயாமம்பிரத்தியாகாரம்தாரணைதியானம்சமாதி என்பன யோகத்தின் அங்கங்கள்.

 

இயமநியம மட்சணம் வருமாறு ---

 

கொல்லான்பொய் கூறான்,களவுஇலான்,எள்குணன்,

நல்லான்,அடக்கம் உடையான்,நடுச்செய்ய

வல்லான்,பகுத்து உண்பான்,மாசிலான்,கள்காமம்

இல்லான்,நியமத்து இடையில் நின்றானே. --- திருமந்திரம்.

 

கொல்லாமைபொய்யாமைவிருப்பு வெறுப்புக்கள் இன்மைகரவாமைமாசின்மைகள்ளுண்ணாமைகாமம் இன்மைஎன்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

 

தவம்செபம்,சந்தோடம்,ஆத்திகம்,தானம்,

சிவன்தன் விரதமேசித்தாந்தக் கேள்வி,

மகம்சிவபூசைஒண்மதிசொல் ஈரைந்து

நிவம்பல செய்யின் நியமத்தன் ஆமே.

 

தவம் என்னும் நெறிப்பட்ட வாழ்க்கை. மந்திரங்களை மிகுதியாகக் கணித்தல் ஆகிய செபம்,  நூல்களில் சொல்லப்படும் கடவுள்இருவினைமறுபிறப்புதுறக்க நிரையங்கள் உள்ளன என உணரும் உணர்வு ஆகிய ஆத்திகம். `உள்ளது போதும்என்னும் உள்ள நிறைவு ஆகிய சந்தோடம்,பொருளை நல்வழியில் ஈட்டிஉயர்ந்தோர்க்குக் கொடுத்தல் ஆகிய தானம்,சிவனுக்குரிய சிறப்பு நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல் ஆகிய சிவ விரதம், சிவாகமங்களின் ஞானபாதப் பொருளைக் கேட்டல் ஆகிய சித்தாந்தக் கேள்வி.  இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தல்செய்வித்தல்.  சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டுவிடாது செய்து வருதல். நற்பண்பு. ஆகிய நெளிகளைச் சிறப்பாகப் பாதுகாத்தல் நியமம் ஆகும்.

 

 

பூதத் தயவான போது ---

 

பூதம் - உயிர்கள். உயிர்களிடத்து கருணை செலுத்துதல். கருணையை மலர் என்று உருவகித்தனர்.

 

பூத பரம்பரை பொலிய என்பார் சேக்கிழார் அடிகள். எல்லா உயிர்களும் எம்பெருமானுடைய திருக்கோயில்கள். ஆதலின்அவ்வுயிர்கட்கு அன்பு செய்தல் வேண்டும்.

 

எவ்வுயிரும் தன்உயிர்போல் எண்ணும் தபோதனர்கள்

செவ்வறிவை நாடிமிகத் சிந்தைவைப்பது எந்நாளோ....

 

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்,நின்

தெய்வஅருட் கருணை செய்யாய் பராபரமே.   ---  தாயுமானார்.

 

எவ்வுயிரும் பராபரன் சந்நிதிஅது ஆகும்,

         இலங்கும்உடல் உயிர்அனைத்தும் ஈசன் கோயில்,

எவ்வுயிரும் என்உயிர்போல் என்று நோக்கி

         இரங்காது,கொன்றுஅருந்தும் இழிவினோரை

வவ்வியம தூதர்அரும் தண்டம் செய்து,

         வல்லிரும்பை உருக்கிஅவர் வாயில் வார்த்து,

வெவ்வியதீ எழுநரகில் வீழ்த்தி,மாளும்

         வேதனை செய்திடுவர் என ஓதுநூலே. --- சிவஞான தீபம்.

 

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே

         எண்ணிநல் இன்புறச் செய்யவும்,

அவ்வுயிர்களுக்கு வரும்இடை யூற்றை

         அகற்றியே அச்சம் நீக்கிடவும்,

செவ்வைஉற்று உனது திருப்பதம் பாடி,

         சிவசிவ என்று கூத்தாடி,

ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே

         ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.--- திருவருட்பா

 

உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் 

     ஒரு திருப் பொது என அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் 

     சித்தெலாம் வல்லது ஒன்று அறிந்தேன்

மயிரெலாம் புளகித்து உளமெலாம் கனிந்து 

     மலர்ந்தனன் சுத்த சன்மார்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப் 

     பாடுகின்றேன் பொதுப் பாட்டே.  --- திருவருட்பா

 

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

     தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

     யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்

     இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

     சிந்தை மிக விழைந்ததாலோ.   --- திருவருட்பா.

 

போது --- போதம் --- பேரறிவு. 

 

நாதத் தொனியோனே ---

 

நாதம் --- முப்பத்தாறு தத்துவங்களில் முதலானது. அதில் இருந்தே அனைத்தும் தோன்றின. நாத வடிவமாக உள்ளவன் இறைவன். "ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே" என்றார் அப்பர் பெருமான்.

 

கருத்துரை

 

முருகா! உயிர்களிடத்துக் கருணை புரியும் மனத்தை அடியேனுக்கு அருள்வீர்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...