ஏறவிட்டு ஏணியை வாங்குதல்
-----
தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை மேல் நிலைக்கு உயர்த்துவதை, ஏணி வைத்து ஏற விடுதல் என்பர். இது உயர்ந்தவர்கள் செயல். இறைவனும், உலகியல் நிலையில் ஆழ்ந்து இருக்கும் உயிர்களை, அருள் நிலைக்கு உயர்த்த, சரியை, கிரியை, யோகம் என்னும் படிநெறிகளை வைத்து உள்ளான். அன்பர்களைச் செந்நெறியில் செலுத்தி, மேல் நிலைக்கு உயர்த்தி, பின்பு கீழ் இறங்கா வண்ணம் ஏணியை எடுத்து விடுவது இறைவன் அருள். அருளாகிய தனது கையைக் கொடுத்து, அன்பர்களை மேல்நிலைக்கு ஏற்றுவது இறைவன் திருவடி.
பேணித் தொழும் அவர் பொன்னுலகு ஆள, பிறங்கு அருளால்
ஏணிப் படிநெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
இதன் பொருள் ---
ஐயாறன் அடித்தலங்கள், விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து, தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம், மரகதம், வைரம், தூய பொன் இவற்றை ஒத்து இருப்பன ஆகும்.
தெளிந்த மெய்யறிவு படைத்த அடியார்களை, செம்மையான நெறியில் செல்லுமாறு ஏற்றிவிடுபவன் திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு இருக்கின்ற பெருமான் என்கின்றார் அப்பரடிகள்.
போற்றும் தகையன,பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றும் தகையன,ஆறு சமயத்து அவர் அவரைத்
தேற்றும் தகையன,தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன, இன்னம்பரான் தன்இணைஅடியே.
இதன் பொருள் ---
இன்னம்பரான் இணையடிகள்வழிபடத் தக்கன. கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையை உடையன. அறுவகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தெளிவிக்கும் தன்மையை உடையன. (சமய நெறிகளில் நின்று ஒழுகி) தெளிந்த அறிவினைப் பெற்ற அடியவர்களை செம்மையான நெறியில் உயர்த்தும் தன்மையை உடையன.
பிறவித் துன்பம் என்னும் கடலில் முழுகி இருந்து, உண்மை அறிவு என்னும் கண் இல்லாமல் குருடராகி, வாழ்வுக்கு உரிய பொருள்களைத் தேடித் தமக்கு ஒரு பற்றுக்கோடு இல்லாமல் வாழுகின்ற அறிவுக் குருடராக இருந்தாலும், தம்மை வழிபடுவார்களானால், அவர்களைக் கொடிய நரகமாகிய குழியில் இருந்து, தனது அருள் என்னும் கையைக் கொடுத்து மேலேற்றி விடுவன திருவையாறு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கின்ற பெருமானுடைய திருவடிகள் ஆகும்.
இருள்தரு துன்பப் படல மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள்தரு கண் இழந்து, உண்பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக்குழி நின்று
அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.
மெய்ப்பொருள் உணர்ச்சியினைத் தருகின்ற ஞானகுருவாகி வந்து, வினைகள் அழியுமாறு, தனது அருளாகிய கையைக் கொடுத்து உதவி செய்ய வல்லவன் ஆகிய கடவுள் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.
"மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி" --- திருவாசகம்.
"எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றி வைத்து,ஏணி வாங்கி,அருள் கொடுத்திட்டு,அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர்அணி அரங்கமே" என்கின்றார் பெரியாழ்வார்.
அடியார்களை முத்தி வீட்டிற்கு ஏற்றி வைத்து, பின்பு அவர்கள் கீழே இறங்காமல்படிக்கு ஏணியை எடுத்து விடுவது இறைவன் அருள்.
ஆனால், உலகியல் நிலை வேறு. துன்பக் காலத்தில் உதவி கிடைக்கும் என்னும் நம்பிக்கையை உண்டாக்கி விட்டு, துன்பம் வந்தபோது, இடையில் உண்டான அச்சம் காரணமாக,உதவி செய்யாமல் மனம் மாறுவது, நம்பிக்கைத் துரோகம் ஆகம்.
எய்ப்புழி வைப்பாம் எனப் போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர்,பைத்தொடீஇ!
அச்சு இடை விட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
பசுமையான பொன் வளையலை அணிந்தவளே! தளர்வு வந்த இடத்து வைத்த பெருநிதியை ஒப்ப உதவி செய்வார் எனக் கருதி, நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர், நமக்கு ஓர் இடையூறு வநது சேர்ந்த போது, ஒரு சிறிதும் உதவி செய்யாதவராகி, அச்சம் காரணமாக மனம் மாறினார் என்றால், அது, ஒருவனை மச்சின் மேல் ஏற்றிவிட்டு,ஏணியை வாங்கிவிடும் செயலோடு ஒக்கும்.
தம்மையே அடைக்கலமாக நினைத்து அடைந்தவர் ஒரு தீமையை அனுபவிக்க நேர்ந்தால்,தமக்கு இறுதி பயப்பினும் அவர்க்கு முன்னின்று உதவுதல் வேண்டும். உதவுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, ஆபத்து வந்தபோது உதவாதவர் நம்பிக்கைத் துரோகி என்பது கருத்து. மச்சின் மீது ஒருவர் பக்குவமாக ஏறுவதற்கு ஏணியை வைத்து கொடுத்தவர்,அவர் திரும்பவும் கீழே இறங்கும் வரையில் ஏணியை வைத்து இருக்கவேண்டும். ஏறவிட்ட பின்,ஏதோ ஓர் அச்சம் காரணமாக மனம் மாறி ஏணியை எடுத்துவிட்டால், அதுவே நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
இவரே நம்முடைய துன்பத்தை நீக்குவார் என்று வேறு சாதனங்களைத் தேடாது நம்பி இருத்தலின், அவர்க்கு உதவி செய்தல் அறிவுடையோர் கடமையாகும்.
இறைவன் தன்னை நம்பினவர்களை எக்காலத்தும் கைவிடுவது இல்லை. தன்னிடத்தில் பெரும்பற்றுக் கொண்ட அடியவர்களை முத்தி வீட்டிற்கு ஏற்றி விடும் ஏணியாக இருப்பவன். துயரக் கடலில் விழுந்து, அதில் உள்ள சுழியில் அகப்பட்டுத் துன்புறுகின்ற, கரை சேர்க்க உதவியாக இருக்கும் தோணியைப் போன்றவன் என்கின்றார் அப்பரடிகள்.
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானை,
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை,இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டுஇங்கு
இளைக்கின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்குந்
தோணியை,தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை,ஆவடுதண் துறையுள் மேய
அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே.
No comments:
Post a Comment