நாய் வாலை நிமிர்த்த முடியாது.
எட்டிக் கனி என்றுமே இனிக்காது.
-----
கல்வி அறிவு உடைய பெரியோர்கள் நல்ல நன்மை தரும் அறிவுரைகளைச் சொன்னாலும், கீழ்மக்கள் உள்ளம் திருந்தாமல், நாயினது வாலைப் போல தீய வழிகளிலேயே சுருண்டு திரிவர்.
கல்வியும் கேள்வியும் அறிவை வளர்த்து, மனிதனை மகிமைப்படுத்தி வருகின்றன. அந்த மகிமையை எவ்வழியிலாவது மனிதன் பெற்றுக் கொள்ளவேண்டும். கண்ணைப் போல் கல்வியும், காதைப் போல் கேள்வியும் உள்ளன. கல்வியை இழந்தவன் கண்ணை இழந்தவன் ஆகின்றான். கேள்வியை இழந்தவன் காது இல்லாதவனாய்க் கெடுகின்றான்.
தானும் அறிவு கெட்டு,பிறர் சொல்வதையும் கேளாமல்,குற்றம் மண்டி இருப்பதால், அறிவில்லாதவன் விடுகின்ற மூச்சானது அவனது உடலில் இருந்து நீங்கும் வரையில் உலகுக்கே பொறுக்க முடியாத பெரிய துன்பத்தைத் தரும்.
"ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்"
என்று கீழ்மக்களது நிலைக்கு மிகவும் வருந்திச் சொல்லி உள்ளார் திருவள்ளுவ நாயனார்.
தானும் தெரிந்து கொள்ளமாட்டான். நல்லோர் சொல்லும் அறிவுரையையும் கொள்ளமாட்டான். அத்தகைய பேதை செத்து மடியும் வரை இந்த உலகிற்கு ஒரு கொடிய நோயாக இருப்பான். அவன் இருப்பதாலும் நன்மை இல்லை. செத்து மடிவதாலும் தீமை இல்லை.
இராமன் விட்ட அம்பானது தாடகையின் நெஞ்சில் தங்காது ஊடுருவி,வெளியே விரைந்து போனதைச் சொல்ல வந்த கம்பர், கல்லாத கீழ்மக்களுக்கு நல்லோர் சொன்ன சொல் காதில் ஏறாமல் படுவேகமாகச் செல்வது போல் சென்றதாகப் பாடுகின்றார். பெரியோர் சொன்ன அறிவுரையை,இந்தக் காதில் வாங்கி,அந்தக் கணமே,அந்தக் காதில் விட்டுவிடுவான் கீழ்மகன்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு
சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம்
கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப் போயிற்று அன்றே.--- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடு சரத்தை, கரிய நிறமும் அழகும் உடைய இராமபிரான், இருள்போன்ற கரிய நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விட, அந்த அம்பு, வைரம் பாய்ந்த கல்போன்ற அத் தாடகையின் நெஞ்சில் தைத்துத் தங்கி இராமல், அவளது நெஞ்சில் பாய்ந்து, பின் முதுகின் புறமாகக் கழன்று,கல்வி
அறிவில்லாத கீழ்மக்களுக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல ஓடிப் போய்விட்டது.
கல்வி அறிவு இல்லாத கீழோருக்கு, அறிவாற்றல் மிக்க மேலோர் கூறும் அறம், உள்ளத்தில் நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறு காது வழியாகப் போவதுபோல, தாடகையின் முதுகுப்புறம் இராமனது அம்பு விரைந்து சென்றது.
சில மரங்கள் பூக்கும். ஆனால், காய் உண்டாகாது. அதுபோல,வயதால் முதிர்ந்தவராக இருந்தாலும் நல்லறிவு இல்லாதவர் உள்ளனர். நன்றாகப் பாத்தி கட்டி விதைத்தாலும், முளைக்காத விதைகளைப் போல, அறிவில்லாதவர்க்கு நல்லறிவு புகட்டினாலும் ஏறாது என்கின்றது "சிறுபஞ்சமூலம்" என்னும் நூல்.
"பூத்தாலும் காயா மரமும்உள, நன்று அறியார்
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள, பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது உணர்வு". --- சிறுபஞ்சமூலம்.
பூத்தாலும் காயாத மரம் போன்றவர், வயதால்முதிர்ந்தாலும் அறிவு முதிராதவரும்,நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு என்னதான் சொன்னாலும் அறிவு உண்டாகாது.
நாயினது வால் இயல்பகாவே கோணலாக இருக்கும். அதை நேராக்க யாராலும் முடியாது. நாய்க்கு நல்லதும் பிடிக்காது. அதுபோல, கீழ்மக்கள் மனக்கோட்டம் உள்ளவராக இருப்பதால், அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்தமாட்டார்.
"அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்கும்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.
கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய், பால் சோற்றின்
செவ்விய கொளல் தேற்றாதாங்கு". --- நாலடியார்.
இதன் பொருள் ---
இறைச்சியை எடுத்துக் கொண்டு, வீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்கு, பால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாத பெரியோர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது,நல்லறிவு இல்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.
போரில் மடிவதை விட, தேவர்களை எல்லாம் சிறைவிடுத்து, நலமுற வாழலாம் என்று சிங்கமுகன், தனது அண்ணன் ஆகிய சூரபதுமனுக்கு அறிவுரைகள் பலவற்றையும் சொன்னான். எதையும் சூரபதுமன் ஏற்கவில்லை. அறிவில்லாத இவனுக்கு அறிவுரை சொன்ன நான்தான் அறிவில்லாதவன் என்று தன்னைத் தானே நொந்துகொள்கின்றான் சிங்கமுகன். நல்லறிவு இல்லாதவர்க்கு, அறிவு சொல்லுகின்றவனே அறிவில்லாதவன் என்கின்றான்.
உறுதியை உரைத்தனன்,உணர்வு இலாதவன்
வறிது எனை இகழ்ந்தனன்,வருவது ஓர்கிலன்,
இறும்வகை நாடினன்,யாதொர் புந்தியை
அறிவிலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர்.--- கந்தபுராணம்.
தேனைச் சொரிந்து, பாதுகாத்து வளர்த்தாலும், எட்டிக் கனியின் கசப்புத் தன்மை போகாது. அதுபோலத்தான் அறிவில்லாதவனுக்கு அறிவு புகட்டித் தெளிய வைக்க எண்ணுவது என்று தன்னைத் தானே நொந்துகொள்கின்றான்.
உய்த்தனர் தேன்மழை உதவிப் போற்றினும்
கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி?
அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்
சித்தம் அது உணர்வகை தெருட்டுகின்றதே.--- கந்தபுராணம்.
சாகும் காலம் வரையிலும் கூட நல்லறிவு இல்லாதவராய் வாழுகின்றவர்க்கு அறிவு உண்டாகவேண்டும் என்று பாம்பாட்டி சித்தர் பாடியது...
"யானை சேனை தேர்ப்பரி யாவும் அணியாய்
யமன்வரும் போது துணையாமோ அறிவாய்,
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்குப் புத்தி
நாடி வரும்படி நீ நின்று ஆடுபாம்பே".
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து,
மிக்கவே மஞ்சள் பூசி,மிகுமணம் செய்தாலும் தான்,
அக்குலம் வேறதாமோ?அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால்,குலம் தனில் சிறந்ததாமோ?
என்கின்றது "விவேக சிந்தாமணி"
தெருநாயைப் பிடித்து, புனுகு பூனையை அடைக்கவேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து,அதற்குத் தினந்தோறும் மேன்மையான மஞ்சளைப் பூசி,மிக்க நறுமணமுடையதாக ஆக்க முயறசித்தாலும்,அந் நாயானது வேறாகி,புனுகுப் பூனையாக மாறிவிடுமோ? அதனிடத்தில் மணம் மிகுந்த வாசனைப் பொருளான புனுகுதான்உண்டாகுமா? நாய் என்றுமே நாய்தான். அது என்றும் உயர்ந்த புனுகுப் பூனை ஆகாது.
நாயினது வால் இயல்பகாவே கோணலாக இருக்கும். அதை நேராக்க யாராலும் முடியாது. அதுபோல, கீழ்மக்கள் மனக்கோட்டம் உள்ளவராக இருப்பதால், அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்தமாட்டார். எனவே, அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற குற்றத்தைச் செய்து அவமானப் படவேண்டாம்.
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
குற்றம் தமதே, பிறிதுஅன்று, முற்று உணர்ந்தும்
தாம்அவர் தன்மை உணராதார் தம்உணரா
ஏதிலரை நோவது எவன். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
தாம் படித்த நூற் பொருள்களை, படிக்காத மூடர்களுடைய காதில் நுழைப்பதனால், அவமானம் உண்டாகும். அந்தக் குற்றம் கற்றவர்களையே சாரும். பிறரைச் சாராது. எல்லாம் தெரிந்திருந்தும், அம் மூடர்களுடைய மூடத் தன்மையை உணராதவர்கள், தம்மைக் கற்றவர்கள் என்று உணர்ந்து கொள்ளாத அம்மூடர்களை நொந்து கொள்வது ஏன்?
நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்தும் கூடத் தம் அறிவுரைகளை அம்மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’என்று அறிந்து கொள்ளாமல் போனால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால், இவர்களுக்கு மதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள் என்பது இதன் கருத்து.
அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருள்அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பால்கூழை
மூழை சுவை உணரா தாங்கு. --- நாலடியார்.
இதன் பொருள் ---
பால் சோற்றின் அருமையை அதை உண்பவர்களே அறிவர். அல்லாது, அதைச் செய்யும் அகப்பைக்குத் தெரியாதது போல, கருணை மனமும், கல்வி ஞானமும், அன்பு உள்ளமும் கொண்ட பெரியோர் கூறும் சொற்களின் பெருமையைக் கற்று அறிந்த மக்களே உணர்வர். அறிவில்லாதவர்கள் அதனை வெறும் சொல்லாகவே எண்ணி இகழ்வர்.
கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
நொய்யரிசியைத் தவிடு போகத் தெள்ளிக் கொழித்து, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னத்தான் கோழியானது போகும். அதுபோல, என்னதான் பெரிய, உயர்ந்த அறிவு நூல் கருத்துக்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிதொழில்களைச் செய்துகொண்டுதான் இருப்பர்.
எனவே, கீழ்மக்களுக்கு அறிவுரை சொல்லி, அவமானப் படுதல் கூடாது. கீழ்மக்களுக்குப் பட்டால்தான் தெரியும். கீழ்மக்கள் என்பதை எப்படி அறிந்துகொள்வது? அறிவுரை சொல்லிப் பாருங்கள். அனுபவத்தில் விளங்கும்.
நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும்.நண்டுக்குப் பட்டால்தான் தெரியும். குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும்.
பழுக்கக் காய்ச்சிய இரும்பு தான்பட்டை ஆகிறது. பட்டுத் தேறிய மனம் தான்பக்குவப் படுகிறது.
No comments:
Post a Comment