அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வேதத்திற் கேள்வி (திருக்குற்றாலம்)
முருகா!
சிவானந்தப் பெருவாழ்வை அடியேற்கு அருள் புரிவீர்.
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வேதத்தில் கேள்வி இலாதது,
போதத்தில் காண ஒணாதது,
வீசத்தில் தூரம் இலாதது,...... கதியாளர்
வீதித்துத் தேட அரிது ஆனது,
ஆதித்தன் காய ஒணாதது,
வேகத்துத் தீயில் வெகாதது,...... சுடர்கானம்
வாதத்துக்கே அவியாதது,
காதத்தில் பூஇயல் ஆனது,
வாசத்தில் பேரொளி ஆனது,...... மதம்ஊறு
மாயத்தில் காய மத சல
தீதர்க்குத் தூரம் அதுஆகிய
வாழ்வை, சற்காரம் அதா, இனி ...... அருள்வாயே,
காதத்தில் காயம் அது ஆகும்
அ தீ தித்தித் தீதிது தீது என,
காதல் பட்டு ஓதியுமே, விடு ...... கதிகாணார்,
காணப்பட்டே,கொடு நோய்கொடு
வாதைப் பட்டே மதி தீது, அக-
லாமல் கெட்டே தடுமாறிட ...... அடுவோனே!
கோதைப் பித்தாய்,ஒரு வேடுவ
ரூபைப் பெற்றே, வன வேடுவர்
கூடத்துக்கே குடியாய் வரு ...... முருகோனே!
கோதுஇல் பத்தாரொடு,மாதவ
சீலச்சித்த ஆதியர் சூழ்தரு
கோலக் குற்றாலம் உலாவிய ...... பெருமாளே.
பதவுரை
கொடு நோய்கொடு வாதைப்பட்டே --- கூன்பாண்டியன் வெப்பு நோய் கொண்டு மிகுந்த துன்பமுற்று
காதத்தில் காயம் அது ஆகும்--- இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றும், இந்த நிலையில்லாத உடம்பு,
அத் தீ தித்தி--- அதிக அக்கினி போல் தகிக்கப்படுகின்றது,
தீது இது தீது என--- இது மிகப் பெரும் கொடுமை மிகப் பெரும் கொடுமை என்று,
காதல் பட்டு ஓதியுமே--- மிகவும் அன்புடன் கூறியும்
விடு கதிகாணார் காணப்பட்டே--- அந் நோயை விலக்கும் வழியைக் காணாதவர்களாகிய அச் சமணர்கள் கண் முன்னே
மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே--- கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்ற அந்த அமணர்களைக் கழுவில் ஏற்றி அழித்தவரே!
கோதைப் பித்தாய் ஒரு வேடுவ ரூபைப் பெற்றே--- வள்ளியம்மை மீது பித்துக் கொண்டு, ஒப்பற்ற வேட்டுவ வடிவம் கொண்டு,
வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரு முருகோனே--- வனத்தில் வாழும் வேடுவர்களுடைய வீட்டில் தங்கி இருக்குமாறு வந்த முருகக் கடவுளே!
கோது இல் பத்தாரொடு மாதவ சீலச் சித்தாதியர் சூழ்தரு--- குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் இருந்து வாழ்கின்ற
கோலக் குற்றாலம் உலாவிய பெருமாளே--- அழகிய திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்தில் உலவி வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!
வேதத்தில் கேள்வி இலாதது--- வேதங்களினால் ஆராய்ந்து அறியப் படாதது அது.
போதத்தில் காண ஒணாதது--- பசு, பாச அறிவு கொண்டு காண்பதற்கு முடியாதது அது.
வீசத்தில் தூரம் இலாதது--- சிறிது தூரமும் இன்றி ஆன்மாவுடன் ஒன்றுபட்டு இருப்பது அது.
கதியாளர் வீதித்துத் தேட அரிதானது--- அறிகின்றவர்களால் பகுத்து இத்தன்மைத்து என்று தேடுதற்கு அரியது அது.
ஆதித்தன் காய ஒணாதது--- சூரியன் தனது வெயிலினால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது.
வேகத்துத் தீயில் வெகாதது--- வேகம் உடைய நெருப்பினாலும் வேகவைக்க இயலாதது அது.
சுடர் கானம் வாதத்துக்கே அவியாதது--- நெருப்புக்கு உதவியாகி எழுகின்ற காற்றினால் அவிக்க முடியாதது அது.
காதத்திற் பூ இயல் ஆனது--- காத தூரம் சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் இயல்பானது அது.
வாசத்தில் பேரொளி ஆனது--- ஞான வாசனையுடன் கூடிய பெரிய ஜோதி மயமாக விளங்குவது அது.
மதம் ஊறும் மாயத்தில் காய மத சல தீதர்க்குத் தூரம் அது ஆனது--- அகங்காரத்தில் ஊறுகின்ற மாயத்தினால் ஆகிய உடம்புடன் கூடி செருக்கும் சினமும் உடைய தீயவர்க்கு வெகு தொலைவில் உள்ளது அது.
ஆகிய வாழ்வை--- (இத்தனைச் சிறப்புப் பெற்ற) பரம்பொருளினை அடைகின்ற பெருவாழ்வை அடையும் முத்தி நிலையை
சற்காரமதா இனி அருள்வாயே--- அடியேனுக்கு உபசாரமாக இனியாவது அருள் புரிவீர்.
பொழிப்புரை
கூன்பாண்டியன் வெப்பு நோய் கொண்டு மிகுந்த துன்பமுற்று, இந்த உடம்பு நெருப்பை இட்ட பை போல் கொளுத்தப்படுகின்றது. இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றும், இந்த நிலையில்லாத உடம்பு, இது மிகப் பெரும் கொடுமை மிகப் பெரும் கொடுமை என்று, மிகவும் அன்புடன் கூறியும், அந் நோயை விலக்கும் வழியைக் காணாதவர்களாகிய அச் சமணர்கள் கண் முன்னே, அவர்கள் கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்றதால், அவர்களைக் கழுவில் ஏற்றி அழித்தவரே!
வள்ளியம்மை மீது பித்துக் கொண்டு, ஒப்பற்ற வேட்டுவ வடிவம் கொண்டு, வனத்தில் வாழும் வேடுவர்களுடைய வீட்டில் தங்கி இருக்குமாறு வந்த முருகக் கடவுளே!
குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் இருந்து வாழ்கின்ற, அழகிய திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்தில் உலவி வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!
வேதங்களினால் ஆராய்ந்து அறியப் படாததும்,பசு, பாச அறிவு கொண்டு காண்பதற்கு முடியாததும்,சிறிது தூரமும் இன்றி ஆன்மாவுடன் ஒன்றுபட்டு இருப்பதும், அறிய முயல்கின்றவர்களால் பகுத்து இத்தன்மைத்து என்று தேடுதற்கு அரியதும்,சூரியன் தனது வெயிலினால் சுட்டுப் பொசுக்க இயலாததும்,வேகம் உடைய நெருப்பினாலும் வேகவைக்க இயலாததும்,நெருப்புக்கு உதவியாகி எழுகின்ற காற்றினால் அவிக்க முடியாததும், காத தூரம் சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் இயல்பினை உடையதும், ஞான வாசனையுடன் கூடிய பெரிய ஜோதி மயமாக விளங்குவதும், அகங்காரத்தில் ஊறுகின்ற மாயத்தினால் ஆகிய உடம்புடன் கூடி செருக்கும் சினமும் உடைய தீயவர்க்கு வெகு தொலைவில் உள்ளதும் ஆகியஇத்தனைச் சிறப்புப் பெற்ற பரம்பொருளினை அடைகின்ற பெருவாழ்வை அடையும் முத்தி நிலையை அடியேனுக்கு உபசாரமாக இனியாவது அருள் புரிவீர்.
விரிவுரை
வேதத்தில் கேள்வி இலாதது ---
வேதம் --- அறிவு நூல். வேதங்கள் பரம்பொருளின் உண்மையை அறுதியிட்டு உறுதியாக உரைக்க முடியாமல் திகைக்கின்றன.
வேதக் காட்சிக்கும், உபநிடத்து உச்சியில் விரித்த
போதக் காட்சிக்கும் காணலன்.... --- கந்த புராணம்.
பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்துஅளந்து காண்டும்எனப் பல்கால் மேவி
ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
அளந்துஅளந்து,ஓர் அணுத்துணையும் அளவு காணா
தே,இரங்கி அழுது,சிவ சிவஎன்று ஏங்கித்
திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே, ஈன்ற
தாய்இரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
தண்ணருளால் வளர்த்துஎன்றும் தாங்கும் தேவே. --- திருவருட்பா.
போதத்தில் காண ஒணாதது---
போதம் --- அறிவு. அறிவு மூன்று வகைப்படும்.
1. உலகத்தை அறிகின்ற அறிவு பாசஞானம்.
2. தன்னை அறிகின்ற அறிவு பசுஞானம்.
3. இறைவனை அறிகின்ற அறிவு பதிஞானம்.
பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பதியை அறிய முடியாது. பதிஞானம் கைவரப் பெற்றோரே பதியை அறிவர்.
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
அறிந்தகல அந்நிலையே ஆகும், பின்னும்
ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலாம் ஓட. --- சிவஞானசித்தியார்.
சீவன்ஒடுக்கம் பூதஒடுக்கம்
தேற உதிக்கும் பரஞான
தீபவிளக்கம் காணஎனக்குஉன்
சீதளபத்மம் தருவாயே... --- (காவியுடுத்தும்) திருப்புகழ்.
சீவன் ஒடுக்கம் --- பசுஞான ஒடுக்கம்.
பூதஒடுக்கம் --- பாசஞான ஒடுக்கம்.
அறிவுஒன்று அறநின்று அறிவார்அறிவில்
பிரிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ.. --- கந்தர் அநுபூதி.
வீசத்தில் தூரம் இலாதது---
இறைவன் உயிர்க்கு உயிராய் ஒன்றி இருக்கின்றனன். கண் ஒளியும் கதிர் ஒளியும் போல் அத்துவிதமாகக் கலந்து நிற்கின்றனன். ஆதலின், வீசத்தில் தூரம் இலாதது என்றனர். வீசம் என்பது சிறிய அளவைக் குறிக்கின்றது.
அவையே தானே ஆய்இருவினையின்
போக்குவரவு புரிய ஆணையின்
நீக்கம்இன்றி நிற்கும் அன்றே. --- சிவஞானபோதம்.
பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர வல்லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே. --- திருமந்திரம்.
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே..--- மணிவாசகம்.
இறைவன் எங்கும் நிறைந்து இருக்கின்றான். எல்லாமாய் நிற்கின்றான்.
பார்க்கும்இடம் எங்கும் ஒருநீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
கதியாளர் வீதித்துத் தேட அரிது ஆனது---
கதி --- அறிவு, சாதனம், தத்துவம். விதித்தல் --- பகுத்தல். அறிவினால் ஆராய்ந்து பகுத்து பரம்பொருள் இத் தன்மைத்து என்று அறிய முடியாது.
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்,
ஒப்புஉடையன் அல்லன்; ஒருவன்அல்லன்;
ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவமன் இல்லி;
அப்படியும் அந்நிற மும்அவ் வண்ணமும்
அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தின் இவ்வண் ணத்தன்
இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே. --- அப்பர்.
ஆராய்ந்து அறிய முயன்ற மாலும் அயனும், மேலும் கீழும் வெகுகாலம் தேடியும் அறிந்திலர்.
மால்அயனுக்கு அரியானே
மாதவரைப் பிரியானே. --- (காலனிடத்து) திருப்புகழ்.
ஆஆ அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்..
--- மணிவாசகம்.
ஆராய்ச்சிக்கு அரியது. அன்புக்கு எளியது.
ஆதித்தன் காய ஒணாதது---
மெய்ப்பொருள் கதிரவனுடைய வெயிலினால் சூடு ஏறாதது.
பருதி காயில் வாடாது... --- (சுருதியூடு) திருப்புகழ்.
வேகத்துத் தீயில் வெகாதது---
வேகாதது என்ற சொல் சந்தம் நோக்கி வெகாதது என வந்தது. வேகமாக எரிகின்ற வெந்தழலாலும் பதியை வேகவைக்க இயலாது.
வடவை மூளில் வேகாது... --- (சுருதியூடு) திருப்புகழ்.
வாதத்துக்கே அவியாதது ---
வாதம் --- காற்று. பிரசண்ட மாருதத்தினாலும் பதியை அணைத்துவிட முடியாது.
பவனம் வீசில் வீழாது சலியாது..--- (சுருதியூடு) திருப்புகழ்.
தீதர்க்குத் தூரம் ஆனது ---
தூயர்க்கு அண்மையில் உள்ள கடவுள், தீயர்க்கு நெடுந்தொலைவில் விளங்குகின்றார்.
மாசர்க்குத் தோண ஒணாதது
நேசர்க்குப் பேர ஒணாதது... --- (வாசித்து) திருப்புகழ்.
காதத்தில் அடுவோனே ---
ஐந்தாவது ஆறாவது அடிகளாகிய இந்த இரண்டிலும், முருகவேள் திருஞானசம்பந்தரை அதிட்டித்து, மதவெறி பிடித்த சமணர்களைக் களைந்த தன்மை அழகாகக் கூறப்படுகின்றது.
கோதைப் பித்து ---
வள்ளியம்மையாரை, அவர் செய்த தவம் காரணமாக ஆட்கொள்ள வேண்டும் என்று கந்தவேள் கருணை கொண்டு, வள்ளிமலை சென்று வலிதில் மணந்துகொண்டார்.
பித்து என்பது கருணையின் முதிர்ச்சி என்க. எத்தனை குற்றம் புரியினும், மகனை முனியாது அருள்கின்ற தாயை நோக்கி, "பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்ற பழமொழியையும் உன்னுக.
கோதுஇல் பத்தாரொடு ….. சித்தாதியர் சூழ்தரு கோலக் குற்றாலம் ---
குற்றம் இல்லாத அடியவர்களும், சித்தர்களும் வழிபடுகின்ற திருத்தலம். திருக்குற்றாலம் தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் உள்ள அருமையான திருத்தலம்.
இதன் தலத்தரு குறும்பலா ஆதலின், திருக்குறும்பலா எனவும் வழங்கும். இப்போது சுகாதாரத்திற்கும் உல்லாசத்திற்குமாகப் பலர் சென்று மகிழ்கின்றனர்.
முற்காலத்தில், அகத்திய முனிவர் இங்கு எழுந்தருளிய போது, இங்குள்ள வைணவப் பிராமணர்கள் குறுமுனிவரை வெறுமுனி என்று கருதி வெறுத்து விரட்டினார்கள். முனிவர் வைணவ பாகவத வடிவம் கொண்டு வந்து, திருக்கோயிலுள் அவர் உபசரிப்பச் சென்று, திருமாலின் திருமுடிமேல் தமது திருக்கரத்தை வைத்து, குறுகு குறுகு என்று கூறி திருமாலின் திருவுருவத்தைச் சிவலிங்கம் ஆக்கினார்.
இது பஞ்ச சபைகளுள் சித்திர சபை ஆகும். இயற்கை வளம் மிக்கது.
கருத்துரை
முருகா! சிவானந்தப் பெருவாழ்வை அடியேற்கு அருள் புரிவீர்.
No comments:
Post a Comment