அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருப்புச் சாபன் (திருப்புத்தூர்)
முருகா!
சைவ நன்னெறியில் நின்று அடியேன் பணிபுரிந்து வாழ அருள்.
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப் போடை வனச நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற்
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும்
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ......துயிர்வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காதல் உலவு, நெடுகிய
கடைக்கண் பார்வை, இனிய வனிதையர், ...... தனபாரம்
களிற்றுக் கோடு, கலசம் மலி நவ
மணிச்செப்பு, ஓடை வனச நறுமலர்,
கனத்துப் பாளை முறிய வருநிகர் ...... இளநீர்போல்,
பொருப்பைச் சாடும் வலியை உடையன,
அறச் சற்று ஆன இடையை நலிவன,
புதுக் கச்சு ஆரவடமொடு அடர்வன, ...... எனநாளும்
புகழ்ச்சிப் பாடல் அடிமை, அவரவர்
ப்ரியப்பட்டு ஆள உரை செய் இழிதொழில்
பொகட்டு, எப்போது சரியை கிரியை செய்து ....உயிர்வாழ்வேன்?
இருட்டுப் பாரில் மறலி தனது உடல்
பதைக்க, கால் கொடு உதை செய்து அவன்விழ,
எயில் துப்பு ஓவி, அமரர் உடல்,அவர் ...... தலைமாலை,
எலுப்புக் கோவை அணியும் அவர், மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர், ...... நவநீத
திருட்டுப் பாணி இடப முதுகு இடை,
சமுக்கிட்டு ஏறி அதிர வருபவர்,
செலுத்துப் பூதம் அலகை இலகிய ...... படையாளி,
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள்
எருக்குச் சூடி குமர! வயலியல்
திருப்புத்தூரில் மருவி உறைதரு ...... பெருமாளே.
பதவுரை
இருட்டுப் பாரில் மறலி தனது உடல் பதைக்க--- அஞ்ஞானம் என்னும் இருட்டு நிறைந்த இந்த உலகில், இயமனுடைய உடல் பதைக்கும்படி
கால் கொடு உதை செய்து அவன் விழ--- திருவடியால் உதைத்து, அவன் விழும்படி திருவிளையாடல் புரிந்தும்,
எயில் துப்பு ஓவி --- முப்புரங்களின் வலிமையை அழித்தும்,
அமரர் உடல் அவர் தலை மாலை எலுப்புக் கோவை அணியும் அவர்--- தேவர்களின் உடல்,அவர்களின் தலைகளால் ஆகிய மாலை,எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர்,
மிக அதிர்த்துக் காளி வெருவ --- காளி மிகவும் நடுங்கும்படியாக,
நொடியினில் எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர்--- நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவர்ஆகியபயிரவ மூர்த்தி,
நவநீத திருட்டுப் பாணி --- வெண்ணெயைத் திருடி உண்ட கைகளை உடைய திருமால்,
இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்--- திரிபுர தகன காலத்தில் இடபமாய்த் தாங்குதலும், அவரது முதுகில், சேணம் இட்டு ஏறி அதிர வருபவர்.
செலுத்துப் பூதம் அலகை இலகிய படையாளி--- செலுத்தப்படுகின்ற பூதம், பேய் ஆகியவற்றைப் படைகளாக உடையவர்,
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்குச் சூடி குமர--- திருச்சடையில் பூளை மலர், பிறைச்சந்திரன், கொன்றை மலர், வெள்ளெருக்க மலர் ஆகியகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் திருக்குமாரரே!
வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே--- வயல்கள் நிறைந்துள்ள திருப்புத்தூர் என்னும் திருத்தலத்தில் பொருந்தி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க--- கரும்பு வில்லை உடைய மன்மதனைப் போன்ற அழகிய இளைஞர்கள் (தம்மைப் பார்த்து) வியக்கும்படியாக,
காதல் உலவு--- காம இச்சை கொண்டு உலவி,
நெடுகிய கடைக்கண் பார்வை --- நீண்டுள்ள கடைக்கண் பார்வையினை வீசுகின்ற
இனிய வனிதையர் தனபாரம்--- இனிமையான விலைமாதர்களின் தனபாரங்கள் ஆனவை,
களிற்றுக் கோடு--- யானையின் தந்தம்,
கலச(ம்)--- குடம்,
மலி நவமணிச் செப்பு --- நிறைந்த நவமணிகளை உடைய சிமிழ்,
ஓடை வனச நறுமலர் --- நீரோடையில் பூத்த தாமரை மலர்,
கனத்துப் பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் --- பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இளநீர் ஆகியவற்றைப் போல உள்ளவை.
பொருப்பைச் சாடும் வலியை உடையன --- (அவை) மலையையும் குலைக்கும் வலிமையை உடையவை.
அறச் சற்றான இடையை நலிவன --- மெலிந்துள்ள இடையை வருத்துவன,
புதுக் கச்சு ஆரவடம் ஒடு அடர்வன என --- புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருக்கி இருப்பன என்றெல்லாம்
நாளும் புகழ்ச்சிப் பாடல் --- நாள்தோறும் (அவர்களைப்) புகழுகின்ற பாடல்களை,
அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு ஆள உரைசெய் --- (விலைமாதருக்கு) அடிமைப்பட்டு உள்ள காமுகர்கள் அவரவர் விரும்பியபடி சொல்லுகின்ற,
இழிதொழில் பொகட்டு --- இழிந்த தொழிலைப் போகவிட்டு,
எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன் --- எப்பொழுது சரியை, கிரியை ஆகிய நன்னெறிகளில் நின்று உனக்கு உரிய பணி செய்து உயிர் வாழ்வேன்?
பொழிப்புரை
அஞ்ஞானம் என்னும் இருட்டு நிறைந்த இந்த உலகில், இயமனுடைய உடல் பதைக்கும்படி திருவடியால் உதைத்து, அவன் விழும்படி திருவிளையாடல் புரிந்தும், முப்புரங்களின் வலிமையை அழித்தும், தேவர்களின் உடல்,அவர்களின் தலைகளால் ஆகிய மாலை,எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர், காளி மிகவும் நடுங்கும்படியாக,நொடிப் பொழுதில் எதிர்த்துத் திருநடனம் புரிந்த வயிரவர்ஆகியபயிரவ மூர்த்தி, வெண்ணெயைத் திருடி உண்ட கைகளை உடைய திருமால், திரிபுர தகன காலத்தில் இடபமாய்த் தாங்குதலும்,அவரது முதுகில்,சேணம் இட்டு ஏறி அதிர வருபவர். செலுத்தப்படுகின்ற பூதம், பேய் ஆகியவற்றைப் படைகளாக உடையவர்,திருச்சடையில் பூளை மலர், பிறைச்சந்திரன், கொன்றை மலர், வெள்ளெருக்க மலர் ஆகியகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் திருக்குமாரரே!
வயல்கள் நிறைந்துள்ள திருப்புத்தூர் என்னும் திருத்தலத்தில் பொருந்தி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
கரும்பு வில்லை உடைய மன்மதனைப் போன்ற அழகிய இளைஞர்கள் தம்மைப் பார்த்து வியக்கும்படியாகக் காம இச்சை கொண்டு உலவி, நீண்டுள்ள கடைக்கண் பார்வையினை வீசுகின்ற இனிமையான விலைமாதர்களின் தனபாரங்கள் ஆனவை,யானையின் தந்தம், குடம், நிறைந்த நவமணிகளை உடைய சிமிழ், நீரோடையில் பூத்த தாமரை மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இளநீர் ஆகியவற்றைப் போல உள்ளவை.
அவை மலையையும் குலைக்கும் வலிமையை உடையவை. மெலிந்துள்ள இடையை வருத்துவன. புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருக்கி இருப்பன என்றெல்லாம்நாள்தோறும் புகழுகின்ற பாடல்களை, விலைமாதருக்கு அடிமைப்பட்டு உள்ள காமுகர்கள் அவரவர் விரும்பியபடி சொல்லுகின்ற,இழிந்த தொழிலைப் போகவிட்டு, எப்பொழுது சரியை, கிரியை ஆகிய நன்னெறிகளில் நின்று உனக்கு உரிய பணி செய்து உயிர் வாழ்வேன்?
விரிவுரை
கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க, காதல் உலவு நெடுகிய கடைக்கண் பார்வை இனிய வனிதையர்---
கருப்பு --- கரும்பு. சாபம் --- வில்.
கரும்பை வில்லாக உடைய மன்மதன். மன்மதினை ஒத்த அழகும் இளமையும் இடைய இளைஞர்கள் வியக்கும்படியாக, தம்மை அழகுபடுத்திக் கொண்டு வந்து வீதியில் நிற்பவர்கள் வீலைமாதர்கள்.
தமது கணைக்கண் பார்வை ஒன்றினாலேயே காதல் வலைப்படுத்துவார்கள்.
தனபாரம் களிற்றுக் கோடு, கலச(ம்), மலி நவமணிச் செப்பு, ஓடை வனச நறுமலர், கனத்துப் பாளை முறிய வரு நிகர் இளநீர் போல்--
இனிமையான விலைமாதர்களின் தனபாரங்கள் ஆனவை,
களிற்றுக் கோடு--- யானையின் தந்தம்,
மலி நவமணிச் செப்பு --- நிறைந்த நவமணிகளை உடைய சிமிழ்,
ஓடை வனச நறுமலர் --- நீரோடையில் பூத்த தாமரை மலர். தாமரை அரும்புகளை பெண்களின் கொங்கைக்கு ஒப்பாகக் கூறுவது மரபு.
இளநீர் --- இளநீர் போன்ற கொங்கைகள்.
இரண கிரண மடமயில், ம்ருகமத புளகித இளமுலை இள-
-நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்.
தென்னம் பாளையைப் போல் சிறுத்துள்ள இடையானது முறிந்து போகும் அளவுக்குப் பருத்து உள்ள முலைகள்.
புதுக் கச்சு ஆரவடம் ஒடு அடர்வன என---
"கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து முன்பு அணைந்து
ஈர்க்கு இடை போகா இளமுலை" --- திருவாசகம்.
நாளும் புகழ்ச்சிப் பாடல் அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு ஆள உரைசெய் இழிதொழில் பொகட்டு---
பொகட்டு --- போகட்டு என்னும் சொல் இப்படி வந்தது. போக விட்டு என்பது பொருள்.
விலைமாதர் மீது இச்சை கொண்ட காமுகர்கள், அவர்களைப் பலவிதமாகப் புகழ்ந்து பாடி, அவர்க்குத் தொழில் செய்து உழலுவார்கள்.
கலக சம்ப்ரமத்தாலேவிலோசன
மலர் சிவந்திட,பூண் ஆரம் ஆனவை
கழல,வண்டு எனச் சாரீரம் வாய்விட,...... அபிராமக்
கன தனங்களில் கோமாளம் ஆகியெ,
பல நகம்படச் சீரோடு,பேதக
கரணமும் செய்து உள் பால்ஊறு தேன்இதழ் ...... அமுது ஊறல்
செலுவி,மென்பணைத் தோளோடு தோள்பொர,
நிலை குலைந்து, இளைத்து, ஏர் ஆகும் ஆருயிர்
செருகு உந்தியில் போய் வீழும் மால்உடன் ......அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில்
உருகி,மங்கையர்க்கு ஆளாகி,ஏவல் செய்-
திடினும், நின் கழல் சீர்பாதம் நான் இனி.....மறவேனே.
விலைமாதர்களைப் புகழ்ந்தால் உள்ளதும் போகும். இறைவனைப் புகழ்ந்தால், இயல்பாகவே உள்ள மும்மலங்களும், வினைகளும் நீங்கி, வாலாத செல்வமாகிய திருவடிப் பேறு வாய்க்கும்.
"அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால்,
சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சிஏகம்பனே". --- பட்டினத்தார்.
திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பொய்யாகிய உடம்பைப் போற்றி வளர்க்கும் பொருட்டு மனிதனுக்கு முதலில் எழுகின்ற கவலை உணவைப் பற்றியது. அந்தக் கவலை எவ்வகையிலாவது நீங்கினால், அடுத்து உடம்பைக் கிடத்த நல்ல படுக்கை, இருக்க வீடு,உடுத்த உடை தேவைப்படுவதால், அதற்கான பொருளைத் தேடுவது அடுத்த கவலை ஆகிறது. இவையெல்லாம் வாய்த்துவிட்டால், அழகு மிக்க மயில் போலும் சாயலை உடைய இளம்பெண்களைப் புகழ்ந்து பேசும் இந்த விசாரம் பலகாலத்து விசாரமாக உள்ளது. சித்த சாந்தம் அடையாத, இந்தப் பாவியின் மனத்திற்கு வேறு என்ன கவலையை வைத்தாய்.
"வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கு ஓதுவேன், அஞ்செழுத்தும் சொலேன், தமியேன் உடலம்
நரிக்கோ, கழுகு, பருந்தினுக்கோ,வெய்ய நாய்தனக்கோ,
எரிக்கோ, இரை எதுக்கோ, இறைவா,கச்சிஏகம்பனே". --- பட்டினத்தார்.
திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! செவ்வரிகளை உடையதும், அழகிய வேலை ஒத்ததும் ஆகிய கண்களை உடைய பெண்களின் காம மயக்கத்தில் போய், அவருடைய நட்பு வேண்டி, அவர்களைப் புகழ்ந்து பேசுவேன். உனது மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதமாட்டேன். ஆதலால், அடியேனது உடம்பானது,விழுந்தால், நரிக்கு உணவாகுமா? கழுக்குக்கா?, பருந்தினுக்கா?, கொடிய நாயினுக்கா? அல்லது நெருப்பில் தான் இட்டு சுடப்படுமா? வேறு எதற்கு இரை ஆவேன்.
"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து,மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான்.
"வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே,செப்புநேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை" என்றும், "குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.
"வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்நகை, செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,
உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."
என்ற மணிவாசகப் பெருமான் பாடினார்.
சுடர்இலை நெடுவேல் கருங்கணார்க்கு உருகித்
துயர்ந்துநின்று அலமரும் மனம்,நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
நைந்துநைந்து உருகுநாள் உளதோ;
மடல்அவிழ் மரைமாட்டு எகின்என அருகு
மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி இலங்க வளர்ந்துஎழும் சோண
சைலனே கைலைநா யகனே.
என்றும சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.
இதன் பொருள் ---
இதழ் விரிந்த செந்தாமரையின் அருகில் அன்னம் இருப்பதைப் போல,திருக்கார்த்திகை விளக்கின் அருகில் சந்திரன் இருக்குமாறு உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலை நாயகனே! இலை வடிவை ஒத்து ஒளி பொருந்திய கருநிறத்தோடு கூடிய கண்களை உடைய பெண்களின் மயக்கத்தால் துன்புறுகின்ற எனது மனமானது, நடனமிடும் நினது திருவடி மலரை நினைந்து, நைந்து நைந்து உருகுகின்ற நாளும் உளதாகுமோ. அறியேன்.
மேலும்,
பெண்அருங் கலமே, அமுதமே எனப்பெண்
பேதையர்ப் புகழ்ந்து,அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ
பயன்தரல் அறிந்து,நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
சைலனே கைலைநா யகனே.
என்றும் சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.
இதன் பொருள் ---
காணக்கூடிய அழகிய உறுப்புக்களை மறைத்தும், இலக்கம் கோடி சூரியர்களுடைய ஒளியை மறைக்காது உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! பெண்களுக்குள் அழகிய அணிகலன் போன்றவளே, அமுதம் நிகர்த்தவளே என்று பேதைகளாகிய அவர்களைப் புகழ்ந்து வீணே திரிகின்றேன். இனிய பாடலால் பித்தா என்று உன்னைப் பழித்தாலும் நீர் நன்மை செய்வதை அறிந்து உம்மைப் புகழேன். என் அறியாமை என்னே.
"தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
தயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை;
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்,
பிழைத்தவை பொறுத்து அருள், பூங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த
கங்கை கொண்ட சோளேச்சரத்தனே!"
என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.
இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும். ஆனால், பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.
"முப்போதும் அன்னம் புசிக்கவும், தூங்கவும்,மோகத்தினால்
செப்புஓது இளமுலையாருடன் சேரவும், சீவன்விடும்
அப்போது கண்கலக்கப் படவும் வைத்தாய், ஐயனே,
எப்போது காணவல்லேன், திருக்காளத்தி ஈச்சுரனே". --- பட்டினத்தார்.
காலை, பகல், இரவு என்னும் மூன்று வேளையும், எப்போதும் தூராத குழியாகிய வயிற்றை நிரப்புதற்கு சோற்றை உண்ணவும், உண்டபின் உறங்கவும், காம மயக்கத்தால் செப்புக் கலசங்கள் போலும் தனங்களை உடைய இளமாதர்களுடன் புணரவும், உயிர் நீங்குகின்ற காலத்திலே இவற்றையெல்லாம் எண்ணி வருத்தப்படவும் வைத்தாய். சுவாமீ! திருக்காளத்தியில் எழுந்தருளிய பெருமானே! உமது திருவடியை எப்போது காணத் தக்கவன் ஆவேன்.
"இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து,மின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டு அருள், பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழல்கீழ் அமர்ந்துஅருள் காளத்தியே". --- பட்டினத்தார்.
சொர்ணமுகி என்னும் பெயர் அமைந்த பொன்முகலி ஆற்றின் கரையிலே, கல்லால மரத்தின் நிழலிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருக்காளத்தி நாதா! வயிறு புடைக்க உண்பதற்கே இரவும் பகலும் உழன்று,இளைத்து, மாதரின் கடிதடத்திலே உள்ள துன்பத்திற்கு இடமான வழுவழுப்பு நீர் பொருந்திக் கசிகின்ற பள்ளத்திலே ஆசை வைத்து உழலும், அடியேனை ஆண்டு அருள் புரிவாயாக.
ஆக, இந்தக் கருத்துகளை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, இறைவன் தந்த அருமையான இந்த உடம்பினைச் சுமந்து வாழவேண்டும்.
எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்---
முத்தி நெறிகள் நான்கு ---
சரியை - தாசமார்க்கம்.
கிரியை - சற்புத்திர மார்க்கம்
யோகம் - சகமார்க்கம்
ஞானம் - சன்மார்க்கம்.
இம்முறைகளையே திருமந்திரம் தெளிவு படுத்துகின்றது. இம் மார்க்கங்களின் இலக்கணம்...
தாசமார்க்கம்---
எளியநல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
சற்புத்திர மார்க்கம்---
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசுஅற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்று
ஆசுஅற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
சகமார்க்கம்---
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
சன்மார்க்கம்---
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து,
ஒசியாத உண்மைச் சொரூபோ தயத்துஉற்று,
அசைவானது இல்லாமை ஆனசன் மார்க்கமே.
இதை அரும்பு, மலர், காய், கனி ஆகியவற்றிற்கு ஒப்பிடுகின்றார் தாயுமானார்.
விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.
காய் முற்றிக் கனியாவது போல், யோக சாதனையில் சித்தி பெற்றோர்க்கே ஞானத்தில் இச்சை உண்டாகும். விட்ட குறையால், சில பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தின்கண் இச்சை எழுமாயின், அவர்கள் முற்பிறப்பில் யோக அனுட்டிப்பில் சித்தி பெற்றவர்களே ஆம்.
யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம், பேர் அன்பான
தாகியரும் யோகமுன்னே சார்ந்தோர் பராபரமே.
இந் நான்கு நிலையில் நின்றோர் முறையே பெறுமுத்திகள் நான்கு. அவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம். சாரூபம் பெற்றார் அங்கிருந்தே மேலும் தவம் செய்து சாயுச்சியம் பெறுவர்.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால் அவைதாம் ஞானம் யோகம்
நல்கிரியா சரியைஎன நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க முத்திகள்சா லோக்கிய சா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி
முடிவு என்பர்; மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்
தாதமார்க் கம் சாற்றில், சங்கரன்தன் கோயில்
தலம் அலகுஇட்டு, இலகுதிரு மெழுக்கும் சாத்தி
போதுகளும் கொய்து பூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி
தீதுஇல் திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து திருவேடங்கண்டால் அடியேன் செய்வது
யாது? பணியீர்! என்று பணிந்து, அவர்தம் பணியும்
இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்.
புத்திரமார்க் கம்புகலின், புதியவிரைப் போது
புகைஒளிமஞ் சனம் அமுது முதல்கொண்டு ஐந்து
சுத்திசெய்துஆ சனம், மூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்துஆ வாகித்து சுத்த
பத்தியினால் அருச்சித்து பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும் இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர், நினையுங் காலே.
சகமார்க்கம் புலன் ஒடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம்அறிந்து அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அங்கு
அணைந்துபோய் மேல்ஏறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுஉடலம் முட்டத் தேக்கி
முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல், உழந் தவர்சிவன் தன் உருவத்தைப் பெறுவர்.
சன்மார்க்கம் சகலகலை புராணம் வேதம்
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமைஉடையோர் சிவனைப் பெறுவர் காணே.
இருட்டுப் பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ---
இருட்டு --- அஞ்ஞானம், துயர்.
அஞ்ஞானத்தால் உயிர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றன. மெய்ஞ்ஞானத்தைப் பெற்று இன்பத்தை அனுபவிக்கவே இறையருளால் இந்த உடம்பு வந்தது. "துயர் இலங்கு உலகில் பல ஊழிகள்" என்றார் திருஞானசம்பந்தர்.
அப்படிப்பட்ட இந்த உலகில் தமக்கு உண்டான துயர் தீரும்பொருட்டு சிவபரம்பொருளை வழிபட்டுக் கொண்டு இருந்தார் மார்க்கண்டேயர். அவரது உயிரைக் கவர வந்த இயமனை, சிவபரம்பொருள் தமது திருவடியால் உதைத்து அருளினார்.
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பரடிகள்.
சிவபரம்பொருள் இயமனை உதைத்த வராலறு
அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து,தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி,காசித் திருத்தலத்தை அடைந்து,மணிகர்ணிகையில் நீராடி,விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.
வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர். முனிவர் பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டும் என்றனர்.
அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து,“தீங்குறு குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர்.
"தீங்கு உறு குணமே மிக்கு,சிறிது மெய் உணர்வுஇலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி,முடமும் ஆய்,விழியும்இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",
"கோலமெய் வனப்பு மிக்கு,குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல் உறு பிணிகள் இன்றி,எமக்கும் அன்பு உடையோன்ஆகி,
காலம் எண் இரண்டே பெற்று,கலைபல பயின்றுவல்ல
பாலனைத் தருதுமோ?நின் எண்ணம் என் பகர்தி"என்றான்.
முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர்.
அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.
மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி,யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி,எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன்,புரிக"என்றான்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன. விண்ணவர் மலர்மழைச் சிந்தினர். முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாதாண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர்,இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.
மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்று, காசி க்ஷேத்திரத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து, நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து,அன்பின் மயமாய்த் தவமியற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய
மெய்யனே! பரமனே! விமலனே! அழல்
கையனே! கையனேன் காலன் கைஉறாது
உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’ --- கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து,இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி,சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி,முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன், வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”
“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன்,விரைவில்
போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”
அது கேட்ட காலன்,நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற,இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி,ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன்.
அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது,நான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும்,ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு,கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்ட.; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும்,மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன், விரைவில் வருதி” என்றனன்.
மார்க்கண்டேயர் “அந்தக! அரன் அடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.
“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய்,நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.--- கந்தபுராணம்
“இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடலுற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய் ! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.
மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான் என்னா உன்னி,வெகுண்டான்,பதி மூன்றும்
சிதைத்தான்,வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி
உதைத்தான்,கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான். --- கந்த பராணம்.
நலமலி தருமறை மொழியொடு
நதிஉறு புனல், புகை,ஒளிமுதல்,
மலர்அவை கொடுவழி படுதிறல்
மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி தரு மறலி தன்உயிர்
கெட உதை செய்தவன் உறைபதி
திலகம் இது என உலகுகள் புகழ்
தருபொழில் அணிதிரு மிழலையே. --- திருஞானசம்பந்தர்.
நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே.
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,
சாற்றுநாள் அற்றது என்று,தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.--- அப்பர்.
அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்தகாலன் தன்ஆருயிர் அதனை
வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்
எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்
இவன் மற்றுஎன் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட
உதைத்துக்கோத்த தோள்உடை
என்அப்பர்க்கு ஏற்றி திரிவோனே. ---(வார்குழல்) திருப்புகழ்
எயில் துப்பு ஓவி ---
எயில் --- மதில். ஊர், நகரம்.
துப்பு --- வலிமை. ஓவுதல் -- ஒழித்தல்.
சிவபெருமான் முப்புரங்களை எரித்த வரலாறு
கமலாட்சன், வித்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.
திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதி குலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.
அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும்,எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.அமரர் அமர்க்கருவிகளை அமைத்துக் கொண்டு வந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று,தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற,இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே நாராயணர் இடபமாக வடிவெடுக்க, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.
"கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ". --- திருவாசகம்.
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய,அவரருளால் இரதம் முன்போலாக,சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின்,அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும், படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னைச்
சிவனே, எம் பெருமான் என்று இருப்பார்க்க் என்றும்
நன்றாகும் நம்பியை,நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே --- அப்பர்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.
ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற. --- மணிவாசகர்.
“உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
உருளை இருசுடர் வலவனும் அயன்என மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன,புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.
பன்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மை இலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
வில் மலையில் நாண்கொளுவி வெங்கணையால் எய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.--- திருஞானசம்பந்தர்.
குன்ற வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.
கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. --- அப்பரடிகள்.
அமரர் உடல் அவர் தலை மாலை எலுப்புக் கோவை அணியும் அவர்---
"மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார்" என்பது அருணை அடிகள் அருள்வாக்கு.
சர்வ சங்கார காலத்தில் சிவபெருமானார்,மாலயனாதி வானவரைத் தமது நெற்றிக் கண்ணால் எரித்து, அவர்கள் சிறந்த சிவபத்தி உடையவராதலின் அவர்கள் நலம் கருதி அவர்களுடைய எலும்புகளை அணிந்து கொள்வார்.எல்லாம் அவரிடத்திலே ஒடுங்கும் என அறிக.
பன்றிஅம் கொம்பு, கமடம் புயங்கம், சுரர்கள்
பண்டைஎன்பு அங்கம்அணி ...... பவர்சேயே...
ஊண்தானும் ஒலிகடல் நஞ்சு, உடை தலையில் பலிகொள்வர்,
மாண்டார் தம் எலும்பு அணிவர்,வரியரவோடு எழில் ஆமை
பூண்டாரும்,ஓரிருவர் அறியாமைப் பொங்கு எரியாய்
நீண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. --- திருஞானசம்பந்தர்.
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. --- திருவாசகம்.
மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் ---
திருப்புத்தூரில் வயிரவர் சந்நிதி சிறப்பு. எனவே,வயிரபயிரவர் என்றார்.
சிவபரம்பொருள் காளியோடு ஆடிய வரலாறு
திருவாலங்காட்டின் பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர், பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ அருட்கோலத்தைக் காண விழைந்து திருவாலங்காடு சென்று தவம் புரிந்து இருந்தனர். கண்ணுதல் பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்க, பெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன் நீ செய்த தீமைக்காகத் திருக்கைலையினின்று நீங்குக” எனப் பணித்தனர். நாகம் நடுநடுங்கிப் பணிய,சிவமூர்த்தி, “திருவாலங்காட்டில் அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப் பிறகு வருதி” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச,எம்பெருமான் “இத் தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள் பாலிக்க, அரவு அவ்வாறே ஆலவனம் வந்து, சுநந்தரைக் கண்டு தொழுது, தனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு தவத்து இருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்தில் இருப்ப, அவரைப் புற்று மூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றனர். இது நிற்க,
நிசுபன், சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரு மிக்காரும் இன்றி,பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள் உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை அழிப்பேன்” என்று அருளிச்செய்து,மலைச்சாரலை அடைந்து, தவ வடிவத்தைக் கொண்டு உறைகையில், சண்டன் முண்டன் என்னும் அவுணர் இருவர் அம்பிகையை அடைந்து “நீ யார்? தனித்திருக்கும் காரணம் என்ன? சும்பனிடம் சேருதி” என்னலும், உமாதேவியார், "தவம் இயற்றும் யான்,ஆடவர்பால் அணுகேன்” என்று கூற, அவ்வசுரர் சும்பன்பால் சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறி, அவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து அழைத்தும் அம்பிகை வராமையால், வலிந்து இழுக்க எண்ணுகையில் இமயவல்லி, சிறிது வெகுள, அம்மையார் தோளிலிருந்து அநேகம் சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றி,அவற்றால், அசுர சேனையும் சண்டனும் முண்டனும் அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர் பெற்று உலகோர் தொழ விளங்குதி” என அச்சக்திக்கு அருள் புரிந்தனர்.
அதனை அறிந்த நிசும்பன், சும்பன் என்போர் வெகுண்டு ஆர்த்து, அளப்பற்ற அசுர சேனையுடன் வந்து, அம்பிகையை எதிர்த்துக் கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும் சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கனுப்பி, அவர்களால் அசுரசேனையை அழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றருளினார்.
அவ்விரு நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன் இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால், அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம் பெற்றவன். அவன், இச்செய்தி அறிந்து இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்தமாதர்கள் சமர் செய்கையில், அவன் உடம்பினின்றும் விழுந்த உதிரத் துளிகளில் இருந்து,அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம் பேர் தோன்றி எதிர்த்தனர். இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூற, அம்பிகை வெகுள, அவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன் காளி தோன்றினாள். “பெண்ணே; யான் இரத்த பீசனைக் கொல்லும்போது உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக் கடவாய்” என்று பணித்து,இரத்த பீசனை அம்பிகை எதிர்த்து, காளி உதிரத்தைப் பருக, இறைவியார் இரத்த பீசனை சங்கரித்து அருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, காளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் உறைதலும் ஆகிய நலன்களைத் தந்தருளி, சத்த மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.
காளி,அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும், உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப் புசித்து, மோகினி, இடாகினி, பூத பிசாசுகள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய், உலகம் முழுவதும், உலாவி, திருவாலங்காட்டிற்கு அருகில் வந்து அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தனர்.
ஒரு நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுகையில் காளி விழுங்க வர, அவர் மறைந்து சென்று திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடம் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய,முக்கட்பெருமான் “இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு (திருவாலங்காடு) வருவோம்” என்று திருவாய் மலர்ந்து, சுநந்த முனிவர் கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு எழுந்தருளினார்.
கூற்றை உதைத்த குன்றவில்லி, வயிரவ வடிவு கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலியிழந்து காளியிடம் கூற, அவள் போர்க்கோலம் தாங்கி வந்து, அரனாரைக் கண்டு அஞ்சி “நிருத்த யுத்தம் செய்வோம்” எனக் கூற, கண்ணுதற் கடவுள் இசைந்து, முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனம் தந்து திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார். அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம், அற்புதம், ரௌத்ரம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரியம் என்னும் நவரசங்களும் அபநியமும் விளங்க வாத்தியங்களுக்கு ஒப்ப பாண்டரங்கம் ஆகிய சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதி அற்புத விசித்திரமாகச் செய்தருளினார்.
இவ்வாறு நடனஞ் செய்கையில், பெருமானது திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழ, அதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத் தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய,காளி செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருத்தி” எனத் திருவருள் புரிந்து, இரு முனிவரும், எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத் திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க திருவாலங்காட்டில் எழுந்தருளியிருந்தார்.
வென்றிமிகு தாருகனது ஆருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்றுநடம் ஆடிஇடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்திருவை யாறே.
புள்ளித்தோல் ஆடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டம்
காளியைக் குணம்செய் கூத்து உடையோன்
அள்ளல்கார் ஆமை அகடுவான் மதியம்
மேய்க்கமுள் தாழைகள் ஆனை
வெள்ளைக் கொம்புஈனும் விரிபொழில் வீழி
மிழலையான் எனவினை கெடுமே. --- திருஞானசம்பந்தர்.
அறுகினை முடித்தோனை,ஆதாரம் ஆனவனை,
மழு உழை பிடித்தோனை,மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை,மாதாதையே எனவும் ..... வருவோனே!
--- (தலைவலி) திருப்புகழ்.
நவநீத திருட்டுப் பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் ---
நவநீதம் --- வெண்ணெய்.
பாணி --- கையை உடையவன்.
சமுக்கு --- சேணம்.
திரிபுர தகன காலத்தில் தேவர்கள் அமைத்துக் கொடுத்த தேரில் சிவபெருமான் ஏறியருளும்போது அதன் அச்ச முறிந்தது. உடனே திருமால் இடபமாக உருவெடுத்தார். அந்த இடபத்தின் முதுகில் ஏறி இருந்து திருபுரங்களைத் தகனம் செய்து அருள் புரிந்தார்.
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
"கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ". --- திருவாசகம்.
செலுத்துப் பூதம் அலகை இலகிய படையாளி---
பூதங்களையும், பேய்களையும் தனக்குப் படையாக உள்ளவர் சிவபெருமான்.
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான்,விறலார் கரியின்தோல்
உடையான்,அவன்எண் பலபூதப்
படையான்,அவன்ஊர் பனையூரே. --- திருஞானசம்பந்தர்.
சடையார்புனல் உடையான், ஒரு சரிகோவணம் உடையான்,
படையார் மழு உடையான்,பல பூதப்படை உடையான்,
மடமான்விழி உமைமாது இடம் உடையான்,எனை உடையான்,
விடையார்கொடி உடையான் இடம் வீழிம்மிழ லையே.
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்குச் சூடி குமர ---
செடை --- சடை.
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்இருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள்இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்
நள் இருப்பர் நரகக் குழியிலே. ---- அப்பரடிகள்.
பூளை,எருக்கு மதி, நாக
பூணர் அளித்த சிறியோனே . --- திருப்புகழ்.
வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே---
வயல்கள் நிறைந்துள்ள திருப்புத்தூர். பாண்டி நாட்டுத் திருத்தலம்.
காரைக்குடியில் இருந்து சுமார் 20கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள இரயில் நிலையம் காரைக்குடி.
இறைவர்: திருத்தளிநாதர்.
இறைவியார் : சிவகாமி.
தல மரம் : சரக்கொன்றை.
திருநாவுக்கரசு சுவாமிகளும், திருஞானநம்பந்தப் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.
தல வரலாறு: எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், திருத் தலங்கள்தோறும் கோயில்கொண்டு எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயம். இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இத்திருத்தலமாகும்.
பைரவர் சந்நிதி: இத்தலத்திலுள்ள பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்.சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர,யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்கிரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாக்க் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
கருத்துரை
முருகா! சைவ நன்னெறியில் நின்று அடியேன் பணிபுரிந்து வாழ அருள்.
No comments:
Post a Comment