ஸ்ரீபுருஷமங்கை --- 0976. கார்கல் குலைந்து

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கார்குழல் குலைந்து (ஸ்ரீபுருஷமங்கை)

 

முருகா! 

விலைமாதர் மயல் அறத் திருவருள் புரிவாய்.

 

 

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த

     தானதன தந்த தந்த ...... தனதானா

 

 

கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து

     காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார்

 

காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த

     காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார்

 

பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க

     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே

 

பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை

     பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய்

 

ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த

     ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா

 

ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்

     ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே

 

தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த

     சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே

 

சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த

     ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

கார்குழல் குலைந்து அலைந்து,வார்குழை இசைந்து அசைந்து,

     காதல் உறு சிந்தை உந்து ...... மடமானார்,

 

காமுகர் அகம் கலங்க,போர் மருவ முந்தி வந்த,

     காழ் கடிய கும்ப தம்ப ...... இருகோடார்,

 

பேர் மருவு மந்தி தந்தி வாரண அனங்கன் அங்க

     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே,

 

பேரறிவு உகுந்து நொந்து,காதலில் அலைந்த சிந்தை,

     பீடை அற வந்து நின்தன் ...... அருள்தாராய்.

 

ஏர்மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த!

     ஏகமயில் அங்க! துங்க ...... வடிவேலா!

 

ஏ மன் உமை மைந்த! சந்தி சேவல் அணி கொண்டு அண்டர்

     ஈடெற இருந்த செந்தில் ...... நகர்வாழ்வே!

 

தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த

     சீர் அலர் குளுந்து உயர்ந்த ...... பொழிலோடே,

 

சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த

     ஸ்ரீபுருடமங்கை தங்கு ...... பெருமாளே. 

 

பதவுரை

 

            ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த--- அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தசுவாமியே!

 

           ஏக மயில் அங்க துங்க--- ஒப்பற்ற (சூரனாகிய) மயிலை அங்கமாக உடைய தூயவரே!

 

          வடிவேலா --- கூரிய வேலை ஏந்தியவரே!,  

 

           ஏ மன் உமை மைந்த--- பெருமை பொருந்திய உமாதேவியின் மைந்தரே!

 

          சந்தி சேவல் அணி கொண்டு --- (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு,

  

         அண்டர் ஈடு எற இருந்த செந்தில் நகர் வாழ்வே--  தேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தில் நகர் வாழ்வே!

 

            தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த--- தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும்,

 

          கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே--- நறுமணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன் 

 

            சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு(ம்) பெருமாளே --- ஒன்று சேரவே விளங்கும் தூய்மையான குளங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            கார் குழல் குலைந்து அலைந்து --- மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும்,

 

          வார் குழை இசைந்து அசைந்து--- நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும்

 

          காதல் உறு சிந்தை உந்து மடமானார்--- காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள் 

 

         காமுகர் அகம் கலங்க--- காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்பவர்கள்.

 

         போர் மருவ முந்தி வந்த--- சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும்,

 

         காழ் கடிய கும்ப(ம்) தம்ப(ம்) இரு கோடார்--- உறுதியும் கடினமும் கொண்ட,குடத்தைப் போலவும்யானையின் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்களின் 

            பேர் மருவு மந்தி தந்தி வாரணம்--- (சேட்டையால்) பெண் குரங்கு, (விஷத் தன்மையால்) பற்களை உடையபாம்பு, (கர்வத்தால்) யானை என்று சொல்லத் தக்கவர்கள்,

 

          அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள்--- மன்மதனது தொழிலுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்களின்,

 

          கண்கள் வலையாலே--- கண்கள் என்னும் வலையாலே,

 

            பேர் அறிவு (உ)குந்து நொந்து--- சிறந்த (எனது) அறிவு சிதறிப் போய்மனம் நொந்து 

 

          காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து--- காம இச்சையால் அலைபாய்கின்ற மனத்தின் துன்பம் அற்றுப் போகஎழுந்தருளி வந்து 

 

         நின்றன் அருள் தாராய்--- தேவரீரது திருவருளைத் தருவாயாக.

 

 

பொழிப்புரை

 

     அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தசுவாமியே!

 

     ஒப்பற்ற சூரனாகிய மயிலை அங்கமாக உடைய தூயவரே!

 

     கூரிய வேலை ஏந்தியவரே!,  

 

      பெருமை பொருந்திய உமாதேவியின் மைந்தரே!

 

     சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச் சந்தித்த கோழியைக் கொடியாகக் கொண்டுதேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தில் நகர் வாழ்வே!

 

       தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும்நறுமணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன் ஒன்று சேரவே விளங்கும் தூய்மையான குளங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும்நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும்,  காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள்காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்பவர்கள்.சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும்உறுதியும் கடினமும் கொண்டகுடத்தைப் போலவும்யானையின் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள்சேட்டையால் பெண் குரங்குவிஷத் தன்மையால் பற்களை உடையபாம்புகர்வத்தால் யானை என்று சொல்லத் தக்கவர்கள்மன்மதனது தொழிலுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்களின்கண்கள் என்னும் வலையாலேசிறந்த எனது அறிவு சிதறிப் போய்மனம் நொந்துகாம இச்சையால் அலைபாய்கின்ற மனத்தின் துன்பம் அற்றுப் போகஎழுந்தருளி வந்து 

தேவரீரது திருவருளைத் தருவாயாக.

 

 

விரிவுரை

 

கார் குழல் குலைந்து அலைந்து --- 

 

கார் குழல் --- மேகம் போன்ற கருமையான கூந்தல்.

 

விலைமாதர்கள் பொது இடத்தில் இருந்துகொண்டுமுடித்து வைத்துள்ள தமது கருமையான கூந்தல் கலைவது போல் பாசாங்கு செய்து,அவிழ்த்துதூற்றி முடிப்பார்கள். அது காமுகர் உள்ளத்தை மயக்கும்.

 

வார் குழை இசைந்து அசைந்து--- 

 

வார் குழை --- தொங்குகின்ற குழைகள்.

 

கூந்தலை அசைத்துவிரித்துமுடிக்கின்றபோதுகாதில் உள்ள குழையும் அதற்கேற்ப அசையும்.

 

காமுகர் அகம் கலங்க--- 

 

அகம் --- உள்ளம்.

 

போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப(ம்) தம்ப(ம்) இரு கோடார்--- 

 

காழ் --- உறுதி வாய்ந்,

 

கடிய --- கடினத் தன்மை.

 

கும்பம் --- குடம்.

 

தம்பம் --- யானை கட்டும் தறி. யானையைக் குறித்தது.

 

கோடு --- தந்தம்.

 

யானைத் தந்தம் போன்ற கொங்கைகள் என்றார்.

 

பேர் மருவு மந்தி தந்தி வாரணம்--- 

 

விலைமாதர்களைமந்தி (குரங்கு)தந்தி (பாம்பு) வாரணம் (யானை) ஆகியவற்றுக்கு ஒப்பாகச் சொல்லலாம்.

 

சேட்டைத் தனத்தால்குரங்கு போன்றவர்கள். விஷமத் தனத்தால் பாம்பு போன்றவர்கள்மதம் பிடித்த தன்மையால் யானையைப் போன்றவர்கள்.

 

அனங்கன் அங்கம் பேதையர்கள் ---

 

அங்கத்தோடு இருந்தவன்சிவபரம்பொருளின் நெற்றிக் கண்ணால் எரிந்தபின்அவனுடைய மனைவியாகிய இரதிதேவிக்கு மட்டும் தோன்றும்படி அநங்கன் ஆனான்.

 

அனங்கனுக்கு அங்கமாக உள்ளவைகள் பற்றி, "அறப்பளீசுர சதகம்" கூறுமாறு காண்க.

 

வெஞ்சிலை செழுங்கழைவில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

 

வஞ்சியர் பெருஞ்சேனைகைதைஉடை வாள்நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

 

சஞ்சரிக இசைபாடல்குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

 

அஞ்சுகணை மாரவேட் கென்பர்எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

 

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

 

---        கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

---        அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

---        உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

---        தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

---        குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

---        யானை அழியாத இருளாகும்.

---        மிகுபடை பெண்கள் ஆவர்.

---        உடைவாள் தாழை மடல் ஆகும்.

---        போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்

---        கொடி மகர மீன் ஆகும்.

---        சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

---        பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

---        பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

---        குடை சந்திரன் ஆவான்.

---        காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

---        அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்  முடி ஆகும்.

---        எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின்  அல்குல் ஆகும்.

 

கண்கள் வலையாலே பேர் அறிவு (உ)குந்து நொந்து--- 

 

விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

 

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

 

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால்அதற்கு ஒரே வழிஇறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

 

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

"வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச் செவ்வாய்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே".             ---  திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.           --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?                  --- திருப்புகழ்.

 

"பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!"

 

"சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே"!                  --- பட்டினத்தார்.

 

"பால்என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலைவெட்சித்தண்டைக்

கால் என்கிலைநெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?."   ---  கந்தர் அலங்காரம்.

 

"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."                    --- பட்டினத்தார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம்- ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                              ---திருப்போரூர்ச் சந்நிதி முறை.   

                                     

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

 

ஆனால்,இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

 

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.           --- பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார்.

 

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.

 

ஏ மன் உமை மைந்த--- 

 

ஏ --- பெருமை.

 

பின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களைக் காண்க.

 

கூவிளம் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது

தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம்

ஏவிளங் கும்நுத லாளையும் பாகம் உரித்தனரின்

பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

 

பூஆர் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்

நாஆர் மறையர் பிறையர் நறவெண் தலைஏந்தி

ஏவார் மலையே சிலையாக் கழிஅம்பு எரிவாங்கி

மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

 

ஸ்ரீபுருடமங்கை தங்கு(ம்) பெருமாளே --- 

  

ஸ்ரீபுருடமங்கை என்னும் திருத்தலம் தற்காலத்தில் நாங்க்நேரி என்று வழங்கப்படுகின்றது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயல் அறத் திருவருள் புரிவாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...