கல்வி நலம் கூறல்

 


 

திருக்கோவையார் 

"கல்வி நலம் கூறல்"

----

 

     இந்தப் பதிவு அரிதின் முயன்று எழுதப்பட்டது. புரிந்து கொள்வதற்குச் சுற்று அருமையாக இருக்கும். ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்த்தால் இதன் சுவை விளங்கும். இதுவரை பார்த்திராத பதிவு இது. கேட்டிராத இனிய செய்தியும் இதுவே.

 

     இல்லறத்தில் தலைவனும் தலைவியும் வாழுகின்ற காலத்தில்தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல் உண்டு. அத்தகைய பிரிவுகள்ஓதல் பிரிவுகாவல் பிரிவுதூதுப் பிரிவுதுணைப் பிரிவுபொருள் பிரிவுபரத்தையின் பிரிவு என்று ஆறு வகைப்படும். 

 

     இதில் ஓதல் என்பதுஅறம் முதலிய நான்கினையும் கூறும் பொருள்களையும்அவற்றை அறிவிக்கும் கருவி நூல்களையும் கற்பதற்காகப் பிரியும் பிரவு ஆகும். இவ்வாறு கூறுவதால்,திருமணம் ஆகும் முன்னர் வரைதலைவன் கல்வியைப் பயிலாமல் இருந்தானோ என்னும் ஐயம் எழலாம். கல்வியை எக்காலத்திலும் ஒருவன் பயிலலாம். "சாம் துணையும் கல்லாதவாறு என்?" என்று திருவள்ளுவ நாயனார் வினவுவதால்கல்வியானது ஒருன் தான் சாகின்ற காலம் வரையிலும் கூடப் பயிலவேண்டியது ஆகும்.

 

     மணிவாசகப் பெருமான் அருளிய இரண்டு அருள் நூல்கள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டு உள்ளன. அவைதிருவாசகம்திருக்கோவையார் என்னும் இரு நூல்கள் ஆகும்.

 

     "திருக்கோவையார்" என்னும் அற்புதமான அகத்துறை நூலில்சிவமாகிய தலைவியைத் திருமணம் புணர்ந்து கொண்டது தலைவனாகிய ஆன்மா. திருமணத்தின் பின்னர், கல்வி கற்றலின் பொருட்டுப் பிரிய எண்ணிய தலைவன்தனது கருத்தினை அறிவிக்கும் பொருட்டுத் தோழியை நோக்கி,கல்வியின் நன்மை குறித்துப் பெரிதும் பாராட்டிக் கூறிய பாடல் ஒன்று உள்ளது.

 

சீர் அளவில்லாத் திகழ்தரு

     கல்விச்செம் பொன்வரையின்

ஆர் அளவு இல்லா அளவுசென்

     றார் அம்பலத்துள் நின்ற

ஓர் அளவு இல்லா ஒருவன்

     இருங்கழல் உன்னினர்போல்

ஏர் அளவு இல்லா அளவினர்

     ஆகுவர் ஏந்திழையே.

 

இதன் பொருள் ---

 

     ஏந்திழையே --- உயர்ந்த அணிகலன்களை உடைய தோழியே.  சீர் அளவு இல்லா திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆர் அளவு சென்றார் --- நன்மைக்கு எல்லை இல்லாது விளங்குகின்ற கல்வியாகிய மேருமலையினது மிக்க அளவில்லாத எல்லையை அடைந்தவர்கள்அம்பலத்துள் நின்ற ஓர் அளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் --- பொன்னம்பலத்தில் இன்பக் கூத்து இயற்றுகின்,ஓர் அளவையும் இல்லாத ஒப்பில்லாத இறைவனுடைய பெரிய திருவடிகளை அறிந்து நினைக்கும் அடியார்களைப் போலஏர் அளவு இல்லா அலவினர் ஆகுவர் - நன்மைக்கு எல்லை இல்லாத தன்மையைப் பெற்றவர் ஆவார்.

 

     கல்வியானது மேருமலையைப் போல் அளக்க முடியாத தன்மையை உடையது. அந்தக் கல்வியின் எல்லையைக் கண்டவர்கள்திருச்சிற்றம்பலத்தில் திருநடம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானுடைய திருவடிகளை நினைந்துஅதனால் அளவற்ற நன்மைகளைப் பெற்றவர் ஆவார் என்பது மணிவாசகப் பெருமான் இப் பாடலின் மூலம் நமக்கு அறிவுறுத்தும் கருத்து ஆகும்.

 

     "கற்றதனால் ஆய பயன் வாலறிவன் ஆகிய இறைவனுடைய திருவடிகளை வணங்குவதே" என்னும் கருத்தை வினாவாக, "கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நல் தாள் தொழார் எனின்?" என்று வைத்துக் கூறினார் திருவள்ளுவ நாயனார். மணிவாசகப் பெருமானும்கல்வியின் பயன் இறைவன் திருவடிகளை வணங்கித் தொழுதுஅதனால் அளவற்ற நன்மைகளை வாழ்வில் பெறுவதே ஆகும் என்று கூறினார்.

 

     19-ஆம் நூற்றாண்டு வரை "கல்லாடம்" என்னும் பழந்தமிழ் நூல்தமிழ்ப் புலமைக்கு இன்றியமையாதது. தமிழ்ப் புலமையில் விருப்பம் உடையோர் பலராலும் பயிலப்பெற்று வந்தது. இந் நூலை நன்கு பயின்றவர்களுக்கு ஒரு சிறப்பும் இருந்தது.  'கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதேஎன்ற பழமொழியும் வழங்கி வந்தது.

 

     அத்தகு சிறப்பு வாய்ந்த "கல்லாடம்" என்னும் நூலில்,மேற்படி திருக்கோவையார் பாடலுக்கு விளக்கமாககல்வியின் சிறப்புக் குறித்துப் பின் வரும் பாடல் சொல்லப்பட்டு உள்ளது.

 

"நிலையினில் சலியா நிலைமை யானும்,

பலவுலகு எடுத்த ஒரு திறத்தானும்,

நிறையும் பொறையும் பெறுநிலை யானும்,

தேவர் மூவரும் காவ லானும்,

தமனியப் பராரைச் சைலம் ஆகியும்,                    5

 

அளக்க என்று அமையாப் பரப்பினதானும்,

அமுதமும் திருவும் உதவுத லானும்,

பலதுறை முகத்தொடு பயிலுதலானும்,

முள்ளுடைக் கோட்டு முனை எறி சுறவம்

அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்,                  10

 

நிறை உளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை

தருதலின் வானத் தரு ஐந்து ஆகியும்,

மறைவெளிப் படுதலின்,கலைமகள் இருந்தலின்,

அகமலர் வாழ்தலில் பிரமன் ஆகியும்,

உயிர்பரிந்து அளித்தலின்,புலமிசை போக்கலின்,       15

 

படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும்,

இறுதியில் சலியாது இருந்த லானும்,

அறுமை தந்து உதவும் இருமை யானும்,

பெண்ணிடம் கலந்த புண்ணியன் ஆகியும்,

அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும்,               20

 

கொள்ளுநர் கொள்ளாக் குறையாது ஆகலின்,

நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும்,

அவை முதலாகி இருவினை கெடுக்கும்

புண்ணியக் கல்வி உள் நிகழ் மாக்கள்,

பரிபுரக் கம்பலை இருசெவி யுண்ணும்                  25

 

குடக்கோச் சேரன் கிடைத்த இது காண்க என,

மதிமலி புரிசைத் திருமுகம் கூறி

அன்பு உருத் தரித்த இன்பு இசைப் பாணன்

பெற நிதி கொடுக்க என உறவிடுத்து அருளிய

மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்                  30

 

இருசரண் பெருகுநர் போலப்

பெருமதி நீடுவர்,சிறுமதி நுதலே!.                       32

 

     இனிஇப்படாலின் கருத்தைச் சிறிது சிறிதாகக் கூர்ந்து நோக்குவோம்.

 

கல்வியின் சிறப்புக் கூறுதல். 

கல்வியானது மேருமலைக்கு ஒப்பானது

-----

 

     நிலையினில் சலியா நிலையாமயானும் --- (அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை உணர்த்தும் தன்மையில்) தான் இருக்கும் நிலையில் இருந்து அசையாத தன்மை உடையது என்பதாலும்,  பல உலகு எடுத்த ஒரு திறத்தானும் --- நாடுகள் பலவற்றையும் கைகொண்ட ஒப்பற்ற ஆற்றல் உடையதாலும்நிறையும் பொறையும் பெறும் நிலையானும் --- நிறையையும்,பொறையையும் உடைய இயல்பினாலும்தேவர் மூவரும் காவலானும் --- படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய முத்தொழிலையும் உடைய பிரமனும் திருமாலும் சிவனும் ஆகிய இறைவர் மூவரும் காவலாய் இருத்தலாலும்பராரைத் தமனியச் சைலம் ஆகியும் --- பரிய அடிப்பகுதியை உடைய பொன்மலையாகிய மகாமேருவுக்கு ஒப்பானது (கல்வி ஆகும்)

 

       மேருமலையானது எக்காலுத்தும் தனது நிலையில் மாறாது ஒரு தன்மையாக உள்ளது. அதுபோலவேகல்வியும்அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை உணர்த்துவதில் தன்னிலையில் சற்றும் அசைவில்லாது இருப்பது.  மேருமலை உலகிற்கு நடுவாகத் தாங்குகின்றது. உள்ளது.கல்வியும் பலநாட்டிலும் பரவித் தன்வயப்படுத்தும் ஆற்றல் உடையதாகவும்உலகில் உள்ளோரை அறிவால் தாங்குவதாகவும் உள்ளது. மேருமலை இறைவனுக்கு இருப்பிடமாக உள்ளது. கல்வியும் இறைவனால் உண்டாக்கப்பட்டுஇறைவனுக்கு இருப்பிடமாக உள்ளது.

 

கல்வி கடலைப் போன்றது

---

   

     அளக்க என்று அமையாப் பரப்பினதானும் --- யாரானும் அளந்து அறிய முடியாத பரப்பினை உடையதாலும்,அமுதமும் திருவும் உதவுதலாலும் --- அமுதத்தையும் திருமகளையும் தந்து உதவினதாலும்பலதுறை முகத்தொடு பயிலுதலானும் --- பலவாகிய துறைகளை உடைத்தாய் இயங்குவதாலும்முள் உடை போட்டு முனை எறி சுறவம் அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் --- முள்ளையுடைய கொம்பின் முனையாலே கொல்லுகின்ற சுறாமீன்,முழங்குகின்ற சங்கினைக் கொல்லுதற்கு இடமாக உள்ள கடலை ஒத்தது கல்வி ஆகும்.

 

     யாவரானும் அளக்கப்படாமை கல்விக்கும் கடலுக்கும் பொருந்தும். கல்வி என்னும் அமுதம் தருவதோடு,திரு என்னும் மங்கல மொழிகளால் தொடங்குதவதால் கல்வியானதுஅமுதையும்திருமகளையும் தந்த கடலுக்கு ஒப்பாகும். கல்வியும் பல்வேறு துறைகளை உடையது. கடலும் பற்பல துறைகளை உடையது.

 

கல்வி நினைத்தவற்றைத் தருவது

-----

 

     நிறை உளம் கருதின் நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின் --- நிறைந்த நெஞ்சம் உடையவர்கள் நினைக்குமிடத்தே நிகழ்ந்த பொருள்களையும் நிகழப்போகும் பொருள்களையும் வழங்குவதால், வானத் தரு ஐந்து ஆகியும் --- வானுலகத்தில் உள்ள கற்பகம் முதலிய மரங்கள் ஐந்தையும் ஒத்தது கல்வி.

 

     கல்வி அறிவால் மிக்கவர்கள்,இறந்தகாலப் பொருளையும் எதிர்காலப் பொருளையும் அறியும் ஆற்றல் உடையவர். கற்பகத் தருவும் தன்னை வழிபடுவோர் நினைத்தபோது,முக்காலப் பொருளையும் வழங்கும். கற்பகம் முதலிய தருக்கள் (மரங்கள் ஐந்து)சந்தானம்தேவதாரம்கற்பகம்மந்தாரம்பாரிசாதம் என்பன. 

தேவலோகத்தில் உள்ள இவைகள் கேட்ட பொருளைக் கொடுக்கும் தன்மை உடையவை.

 

கல்வி பிரமனைப் போன்றது

----

 

     மறை வெளிப்படுத்தலின் --- மறைகளைத் (வேதங்களைத்) தோற்றுவிப்பதால்கலைமகள் இருத்தலின் --- தன்னிடத்து எப்பொழுதும் கலைமகள் குடிகொண்டு இருப்பதால்அகமலர் வாழ்தலின் - (உள்ளத்) தாமரை மலரில் வாழ்வதால்பிரமனாகியும் --- பிரமனை ஒத்தது (கல்வி).

 

     மறை என்பது வேதங்களைக் குறிக்கும். வேதங்களை ஓதுதல் பிரமனின் தொழில். தன்னிடத்தில் மறைந்துள்ள பொருள்களைத் தருவது கல்வி. பிரமனிடத்தில் எப்போதும் கலைமகள் இருப்பாள். கல்விக்குத் தலைவி கலைமகள்.

 

கல்வி திருமாலைப் போன்றது

-----

 

     பரிந்து உயிர் அளித்தலின் --- இரங்கி உயிர்களைப் பாதுகாப்பதாலும்புலமிசை போக்கலின் --- தனது உருவத்தை உலகில் உயரச் செலுத்தினதால்,  படி முழுது அளந்த நெடியோன் ஆகியும் --- உலகம் முழுவதையும் தன் அடியினாலே அளந்தருளிய திருமாலை ஒத்தது கல்வி.

 

     காத்தல் தொழிலை உடைய திருமால் உயிர்களைக் காப்பான். கல்வியும் உயிர்களுக்கு அறிவைத் தந்து காக்கும். திருமால் உலகத்தில் நெடியோனாக உயர்ந்தார். கல்வியும் தன்னைக் கற்றோரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும். 

 

கல்வி சிவபெருமானுக்கு ஒப்பானது

-----

 

     இறுதியில் சலியாது இருத்தலானும் --- பேரூழி முடிவில் அழியாது நிலைத்து இருப்பதாலும்அறுமை தந்து உதவும் இருமையானும் --- ஆறுவகையான நலங்களைத் தந்து உதவுகின்ற பெருமையாலும்,  இடம் பெண் கலந்த புண்ணியன் ஆகியும் --- இடப்பாகத்தே உமாதேவியை வைத்துள்ள புண்ணியன் ஆகிய சிவபெருமானை ஒத்தது (கல்வி).

 

     ஊழி முடிவிலும் அழியாது இருப்பவன் சிவன்.  பொருட்செல்வம் எல்லாம் அழிந்தாலும் அழியாது இருப்பது கல்விச் செல்வம். கல்வியாகிய வேதம் ஆறுவகையான அங்கங்களை உடையது. ஈசன் ஆகிய சிவபெருமானும் உயிர்களுக்கு,ஆறுவகையான ஐசுவரியங்களை அருள்பவன்.

 

 கல்வி கண் போன்றது

-----

 

     அருள் வழி காட்டலின் --- திருவருள் நெறியை விளக்குவதால்இருவிழி ஆகியும் --- இரண்டு கண்களைப் போன்றது (கல்வி)

 

     அருள்நெறியையும்உலகியல் நெறியையும் விளக்குவதால்இரண்டு கண்களைப் போன்றது கல்வி. 

  

இறையருளை ஒத்தது கல்வி

-----

 

     கொள்ளுநர் கொள்ளக் குறையாதாகலின் --- ஏற்றுக் கொள்ளுவோர் எவ்வளவு ஏற்றுக் கொண்டாலும் குறைதல் இல்லாததால்நிறை உளம் நீங்காது உறைஅருள் ஆகியும் --- தான் நிறைந்த நெஞ்சினின்றும் ஒருகாலத்தும் நீங்காமல் உறைகின்ற அருளை ஒத்தது (கல்வி)

 

     மாணவர்கள் எவ்வளவு எடுத்தாலும் குறையாதது கல்வி. திருவருளும் எப்போதும் குறைவு இல்லாமல் எல்லோருக்கும் வேண்டியபோது எல்லாம்வேண்டியவாறு கிடைக்கும்.

 

புண்ணியக் கல்வியைப் பெற்ற சான்றோர் 

மெய்யறிவு பெற்று நெடிது வாழ்வர்

---

     அவை முதலாகி --- அவையின்கண் முதன்மை உடையதாய்இருவினை கெடுக்கும் ---- இருள்சேர் இருவினைகளையும் அழிக்கும்புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள் --- அப்படிப்பட்ட புண்ணியம் ஆகிய கல்வியைத் தமது உள்ளத்தே கொண்ட சான்றோர்.

 

     பரிபுரக் கம்பலை இருசெவி உண்ணும் குடக்கோச் சேரன் --- அம்பலத்தில் கூத்தாடுகின்ற இறைவன் திருவடியில் அணிந்த சிலம்புகளின் ஓசையைத் தன் இருசெவியாலும் கேட்டு மகிழும் பேறு பெற்ற குடநாட்டு மன்னனாகிய சேரமான் பெருமாள் நாயனார்மதிமலி புரிசை திருமுகம் கூறி --- "மதிமலி புரிசை" என்று அடி எடுத்துப் பாடி இந்த ஒலையைகிடைத்துக் காண்க எனக் கூறி --- நீ பெற்றுக் காண்பானாக என்று திருவாய் மலர்ந்தருளிஅன்பு உருத் தரித்த இன்பு இசைப்பாணன் --- அன்பு வடிவாகப் பெற்ற இனிய இசையினை உடைய பாணன்நிதி பெறக் கொடுக்கென --- பொருளைப் பெறும்படி பாணனுக்குப் பெரும்பொருளை வழங்குவாயாக என்றுஉற விடுத்து அருளிய --- விடுத்து அருளியவனும்மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன் --- பெரிய தவத்தை உடையோர் வணங்குகின்ற நான்மாடக்கூடல் என்னும் மதுரைக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளின்இரு சரண் பெருகுநர் போல --- இரண்டு திருவடிகளையும் பெற்ற அடியார் போலபெருமதி நீடுவர் --- மிகுந்த மெய்யறிவு பெற்று நெடுங்காலம் வாழ்ந்திருப்பர்.

 

     அவை --- நல்லவை முதலாக உடையதால்இருவினைகளையும் கெடுக்கும் புண்ணியத்தை உடையது கல்வி.

 

     மதுரையில் பாணபத்திரர் என்ற சிவனடியார் இருந்தார். அவர் இறைவனை இசையால் வழிபடும் திருத்தொண்டில் நின்றவர். அவருக்குப் பெரும்பொருள் உதவத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் அவரது கனவிலே தோன்றி, "சேரமான் நம்மிடத்தில் மிக்க அன்பு உடையவன். அவன் உமக்குப் பொருள் கொடுத்து உதவுவான். அதற்கு நாம் ஒரு திருமுகம் (கடிதம்) கொடுக்கின்றோம். போய்வா" என்று அருளி, "மதிமலி புரிசை" எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை வரைந்து கொடுத்து அருளினார். பாணபத்திரர் அதனைக் கொண்டுசேரமானுடைய அரண்மனை நாடிச் சென்றார். இறைவன் கொடுத்து அருளிய திருமுகத்தைக் கண்ட சேரமான் ஆனந்தக் கூத்தாடிவேண்டிய பொருள்களை எல்லாம்,யானைமீது ஏற்றிக் கொடுத்து அனுப்பினார்.

 

     "நிலமிசை நீடு வாழ்வார்" என்று திருவள்ளுவ நாயனார் கூறி அருளியது காண்க.

 

     இதனால்கல்வியானதுமேருமலைக்கு ஒப்ப நிலையானது,உயர்வானது. அது கடலைப் போலப் பரந்து உள்ளது. நினைத்தவற்றை அளிக்கவல்லது. மும்மூர்த்திகளுக்கு இருப்பிடமாக உள்ளது. கண்ணைப் போன்றது. திருவருளைத் தருவது. இத்தகு சிறப்பு வாய்ந்த கல்வியைப் பயிலுவது இறைவன் திருவடியில் அன்பு வைப்பதற்கே. இறைவன் திருவடியில் அன்பு வைத்தோர்எல்லா நலங்களையும்சிறப்புகளையும் பெற்று நெடிது வாழ்வர் என்பது சொல்லப்பட்டது.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...