பெண் கல்வியால் வீடும் நாடும் சிறக்கும்

 


பெண் கல்வியால் வீடும்நாடும் சிறக்கும்.

அன்பும் அறமும் வளரும்.

-----

 

     மனித சமுதாயம் முழுமைக்குமே உயர்நிலையைத் தந்து பெருமையுறச் செய்வது கல்வியே ஆகும். எனவேமேலோர் பலரும் கல்வியைப் போற்றி வந்துள்ளனர். கல்வியின் பெருமையைக் கூறாத சங்கநூல்களோநீதிநூல்களோஅருள் நூல்களோ இல்லை என்றே கொள்ளலாம்.

 

     நல்ல கல்வி அறிவால்அறிவு மயக்கத்தை உண்டாக்கும் பொய்ப்பொருள்கள் எவை எவை என்று தெளிந்துமெய்ப்பொருளைத் தலைப்படுதல் கூடும். கல்வியின் பயன் கடவுளைத் தொழுது நற்பேறு பெறுதலே என்பதைத் திருவள்ளுவ நாயனார், "கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்று ஈண்டு வாரா நெறி" என்று அருளினார்.

 

     என்னென்ன கலைத் துறைகளை உள்ளனவோஅவைகளை எல்லாம் உள்ளம் ஒன்றி,ஓயாது பலகாலும்பயின்று வந்ததால்பெற்ற தெளிந்த அறிவு என்னஎன்றால், "சிவன் கழலில் செறிவு" என்றுபெரியபுராணத்தில்சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றின் வழி நமக்கு அறிவுறுத்துகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

உள்ளம் நிறை கலைத்துறைகள் 

     ஒழிவு இன்றிப் பயின்றவற்றால்,

தெள்ளி வடித்து அறிந்தபொருள்,

     சிவன் கழலில் செறிவு என்றே

கொள்ளும் உணர்வினில் முன்னே 

     கூற்று உதைத்த கழற்கு அன்பு

பள்ள மடையாய் என்றும் 

     பயின்றுவரும் பண்புடையார்.

 

இதன் பொருள் ---

 

     தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று,அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, "சிவன் திருவடிகளில் பொருந்திய அன்புடைமையான ஒழுக்கமே ஆகும்" என்று கொள்ளும் உணர்வினால் முதன்மை பெற,  இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கமமானதுபள்ள மடையில் நீர் ஓடுவது போல்தடையில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பை உடையவரானார் சிறுத்தொண்ட நாயனார்.

 

     கல்விக் கடவுள் ஆகிய கலைமகளின் அருளை நிரம்பப் பெற்று, "சரசுவதி அந்தாதி" என்னும் நூலைப் பாடி அருளியகம்பநாட்டாழ்வார்கல்வியே உண்மையான பொருள் என்று காட்டி அருளுகின்றார்.

 

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும்மற்று எப்பொருளும்

பொய்க்கும் பொருள் அன்றி நீடும் பொருள் அல்லபூதலத்தின்

மெய்க்கும் பொருளும்அழியாப் பொருளும்,விழுப்பொருளும்,

உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே. 

 

என்பது சரசுவதி அந்தாதி என்னும் நூலில் ஒரும் ஒரு பாடல். இதற்கு விளக்கம் ஏதும் தேவையில்லை. அழியாத பொருளும்விழுப்பத்தைத் தருகின்ற பொருளும்நன்னெறியில் உய்க்கும் பொருளும் கலைமகள் உணர்த்துகின்ற கல்விப் பொருளே.

 

     "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று காட்டிமற்றையவை எல்லாம் ஒருவனுக்குச் செல்வம் ஆகமாட்டா என்பதை உணர்த்த, "மாடு அல்ல மற்றை அவை" என்றார் திருவள்ளுவ நாயனார். (மாடு --- செல்வம்)

 

     கல்விச் செல்வத்தால் நிறைந்த ஒரு சமுதாயம் எப்படி இருக்கும்எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்துகவிச்சக்கரவர்த்தியின் கருத்தில் ஒரு குறிப்பு இருந்திருக்க வேண்டும். கம்பராமாயணத்தின் மூலம் பல்வேறு வாழ்வியல் நெறிகளைக் காட்டிய கம்பர்கல்விச் செல்வத்தின் அருமையையும் தனது காப்பியத்தில் காட்டத் தவறவில்லை.

 

     அயோத்தி நகரில் கல்வியும் செல்வமும் சிறந்து விளங்கின என்பதை,

 

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்,கல்வி முற்ற

வல்லாரும் இல்லைஅவை வல்லர் அல்லாரும் இலை;

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.

இல்லாரும் இல்லைஉடையார்களும் இல்லை மாதோ.

 

என்றார். இதைவிட மேலான சமுதாயச் சிந்தனை வேறு ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை.

 

இப் பாடலின் பதவுரை ---

 

     கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் --- நல்ல கலைநூல்களைப் படிக்காது இருப்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே;  கல்வி  முற்றவல்லாரும் இல்லை --- கல்வியில் முற்றும் வல்லவர் என்று   அங்கு (அயோத்தியில்)எவரும் இல்லைஅவை வல்லர் அல்லாரும் இல்லை --- அக் கல்வித்துறைகளில் வல்லவரும்இல்லாதவரும்  இல்லை;  எல்லோரும்எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே --- அயோத்தியில் வாழ்பவர்கள்எல்லோரும் கல்விச் செல்வம்பொருட்செல்வம் ஆகிய எல்லாச் செல்வமும்அடைந்து இருப்பதாலேஇல்லாரும் இல்லை உடையார்களும்  இல்லை --அந்த அயோத்திமா நகரத்திலே இல்லாதவரும் இல்லைஉடையவர்களும் இல்லை.

 

     கல்லாத வீணர் என்று யாராவது இருந்தால் தான்கற்ற பெரியோரைக் காட்டி இப்படி இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தலாம். வீணர் யாரும் அயோத்தியில் இல்லை. எனவேமுற்றும் கற்றவர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கல்வியில் வல்லவர் அல்லாதவர் இன்னார் என்று ஒருவராவது இருந்தால்தான்இவரைத் தவிர ஏனையோர் கல்வியில் வல்லவர்கள் என்று கூறமுடியும். வல்லவர்கள் யார்அல்லாதவர்கள் யார் என்று பிரித்துக் கூறும் நிலையில் அயோத்தி நகர மக்கள் இல்லை. கல்விச் செல்வம் பொருட்செல்வம் ஆகிய இரண்டையுமே எல்லோரும் பெற்று இருப்பதால்இல்லாதவர்கள் யார் என்று அறியமுடியவில்லை. 

 

     கற்பனையிலாவதுஇப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற சமுதாயத்தைக் கண்டு மகிழ முடிகின்றது.

 

     இனிய செல்வங்கள் ஆகிய கல்விச் செல்வம்பொருட்செல்வம்மற்ற செல்வங்கள் அனைத்தையும் பெற்றுள்ள ஒரு போகபூமி போலஅயோத்தி நகரைக் கற்பனை செய்து பார்த்திருக்கின்றார் கம்பர். அவர் பர்வையில் ஓர் அதிசயமான இன்ப உலகமாக அயோத்தி இருந்துள்ளது. கல்விகேள்விஅன்புதவம்தருமம்போகம் என்று சொல்லப்படும் அருமையான நலங்கள் எல்லாம் விளங்குகின்றன.

 

     வித்து இல்லை என்றால்மரம் இல்லை. மரம் இல்லையானால்தழைஇலைதளிர்காய்கனி என்று எதுவுமே இல்லை. அதுபோலவேகல்வி இல்லையானால் எதுவுமே இல்லை. அயோத்தி நகரத்தில் கல்வியின் அருமையை உருவகப்படுத்திகம்பர் காட்டுமாறு காண்க.

 

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து,எண் இல் கேள்வி

ஆகும் முதல் திண் பணை போக்கி,அருந் தவத்தின்

சாகம் தழைத்து,அன்பு அரும்பி,தருமம் மலர்ந்து.

போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

 

"கவிச் சக்கரவர்த்தி" என்பது வெறும் புகழுரை அல்ல என்பதுஇந்த ஒரு பாடலின் மூலமே விளங்கும்.

 

     கல்வி என்னும் விதையானது முளைத்து மேல் எழுந்தது. எண்ணற்ற பலநூல்களின் கல்வி கேள்வியாகிய திண்மை வாய்ந்த கிளைகள் எங்கும் பரவின. அருமையான தவம் என்னும் இலைகள் தழைத்தன. அன்பு என்னும் அரும்பு விட்டது. தருமம் (அறம்) என்னும் மலர் மலர்ந்தது. இன்ப அனுபவம் என்னும் பழம் பழுத்தது. ஆகாஆகா! என்ன அருமையான கற்பனை. இந்தக் கற்பனையிலாவது இன்னும் சிலகாலம் வாழ்ந்து விடலாம் போல் இருக்கின்றது.

 

பாட்டின் பொருளைக் காண்போம்....

 

     ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து --- கல்வி என்னும்   ஒருவித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து;   எண்ணில் கேள்வி ஆகும் --- எண்ணற்ற பல நூல் கேள்வியாகிய;   முதல் திண் பணை போக்கி --- முதன்மையும். வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும் பரவச் செய்துஅரும் தவத்தின் சாகம் தழைத்து --- அரிய தவமாகிய இலைகள் தழைத்து;  அன்பு அரும்பி --- எல்லா உயிர்களிடமும் செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி;  தருமம்  மலர்ந்து - அறச்

செயல்களாகிய மலர்கள் மலர்ந்து;  போகம் கனி ஒன்று பழுத்தது போலும் --- இன்பஅனுபவம் என்னும் (பழத்தைதந்த)பழுத்த மரத்தைப் போன்று (அந்த அயோத்தி மாநகர்) பொலிந்து விளங்கியது.

 

     கல்வியானதுமனிதனை அறிவு உள்ளவனாக ஆக்கிபண்பாளனாகவும் ஆக்குகின்றது. அப்படி உயர்பவன் கல்வியின் பயனை விரைந்து பெற்றவன் ஆகின்றான்.

 

     கல்வியின் முக்கியக் குறிக்கோள் அறிவு அல்ல. நல்ல நடத்தையே என்கின்றார் ஒரு மேனாட்டு அறிஞர். செயலில் உயர்வு அடைந்தபோதேகற்ற கல்வியானது பயனுடையது ஆகின்றது.

 

      THE GREAT AIM OF EDUCATION IS NOT KNOWLEDGE, BUT ACTION --- Herbert Spencer.

 

      கவிச்சக்கரவர்த்தியின் கற்பனை இத்தோடு நின்றுவிடவில்லை. ஆண்களைப் போலவேபெண்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்கவேண்டும் என்று எண்ணுகின்றார்.

 

       செல்வம் மட்டும் இருந்தால்அறிவு வேலை செய்யாது. உபோலத் தனம் குடி இருக்கும். செல்வம் பொருந்தி உள்ள ஒருவனுக்கு அறிவு இல்லையானால்செல்வத்தைத் தானும் துய்க்கமாட்டான்பிறருக்கும் கொடுக்கமாட்டான்.

 

       அயோத்தி நகரத்துப் பெண்களிடம் கல்வியும் செல்வமும் ஒருசேர நிறைந்து இருப்பதாக எண்ணுகின்றார் கம்பர். கல்வி அறிவின் மூலம், "பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்னும் திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளப்படிதன்னிடம் உள்ளதைப் பிறருக்கும் பகிர்ந்து அளித்துபல உயிர்களையும் இறவாதபடி காத்தல் என்பதுஅறநூலோர் தொகுத்துக் கூறிய அறச் செயல்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும். அயோத்தி நகரத்துப் பெண்களிடம் கல்வி அறிவும்செல்வ வளமும் நிறைந்து இருந்ததால்வருந்தி வந்தவர் யார்வக்கும் இல்லை என்னாது கொடுத்தலும்அன்போடு உணவு அளித்துப் பாதுகாத்தலும் சிறப்பாக நடந்தேறிக் கொண்டு இருந்தது.

 

     "கல்வியும் செல்வமும் பூத்தன" என்கின்றார் கம்பர். கல்வியைக் கற்பதும்செல்வத்தைப் பெறுவதும் எதற்காகதாம் நல்லவராய் வாழ்ந்துபிறருக்கும்வருகின்ற சந்த்திக்கும் வழிகாட்டிஅவர்களையும் நல்வழிப்படுத்துதற்கே ஆகும். அப்போதுதான்கல்வி நல்ல கல்வி ஆகின்றது. செல்வமும் நல்ல செல்வம் ஆகின்றது.

 

     பெண்கள் கல்வி கற்பதால்நல்ல பண்பாடு வளர்ந்து வரும். பெண் கல்வியால் வீட்டுக்கும்நாட்டுக்கும் பெருமை வந்து சேரும்.

 

     அயோத்தி நகரில் இருந்த பெண்களின் தொழில் விருந்தோம்பலும்ஈகையுமே என்று கம்பர் காட்டும் பாடலைப் பார்ப்போம்.

 

பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம்

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,

வருந்தி வந்தவர்க்கு ஈதலும்,வைகலும்

விருந்தும் அன்றி, விழைவன யாவையே?.

 

இப் பாடலின் பதவுரை ---

 

     பெருந் தடங்கண் --- பெரிய அகன்ற கண்களை உடையபிறை நுதலார்க்கு எலாம் --- பிறை வடிவமான நெற்றியை உடைய பெண்களுக்கு எல்லாம் பொருந்து செல்வமும் --- நிலையாகப் பொருந்தியபொருட்செல்வமும்;    கல்வியும் --- கல்வி அறிவும்,    பூத்தலால் ---நிறைந்து இருப்பதால்;  வருந்தி வந்தவர்க்கு ஈதலும் -  வறுமையால்வருந்தி,  உதவி நாடி வந்தோர்க்குப் பொருளை வழங்குதலும் வைகலும் விருந்தும்அன்றி --- நாள்தோறும் விருந்து  ஓம்புதலும் அல்லாது;  விளைவனயாவை --- (பெற்ற செல்வத்தாலும்   கற்ற கல்வி அறிவாலும்)விளைவன வேறு யாவையும் இல்லை.   

 

     "செல்வத்துப் பயனே ஈதல்துய்ப்பேம் எனினே தப்புன பலவே" என்னும் புறநானூறுப் பாடல் வரியின்படி,உணர்ந்து இருந்தவரிடம் செல்வம் சேர்ந்து இருந்ததால், "பொருந்து செல்வம்" என்றார். 

 

     பசித் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்க்கு உண்டான பசியைப் போக்குவதே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. அல்லாதுபசியைத் தாங்கிக் கொள்பவர்க்கு வழங்குதல்பயனைக் கருதி வழங்கியது ஆகும். அறத்தின் பயன் அவர்க்கு உண்டாகாது. அவர்கள் அறத்தை விலைபேசி விட்டார்கள் என்கின்றது "மணிமேகலை"

 

"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்,

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை,

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே"  --- மணிமேகலை.

 

     வறுமைத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் வன்மை உடையவர் ஆகிய செல்வர்க்கு கொடுக்கின்றவர்கள்,அறத்தினை விலை பேசுகின்றவர் ஆவர். வறுமையில் வாடுவோரின் தீர்த்தற்கு அரிய பசியை நீக்குவோரால்தான் இந்த உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை நடக்கின்றது. இந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோர் ஆவர்.

 

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்,பிறரும்

சான்றோர் சென்ற நெறி என

ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே". 

 

முடமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை.

 

கொஞ்சம் நமது பழந்தமிழ்ச் சமுதாயத்தைத் திரும்பிப் பார்ப்போமானால்ஓர் உண்மையைப் புறநானூற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

 

    உலகில் பலரும் தம்மிடத்து உள்ள செல்வத்தைப் பிறருக்கு வழங்குவதுஇந்தப் புண்ணியத்தைச் செய்தால்இந்தப் பிறவியில் புகழும்மறுமை என்னும் அடுத்த பிறவியில் மோட்சமும் உண்டாகும் என்பது கருதியே. அப்படிப் பயன் கருதிச் செய்வதால்,அது அறத்தை வியிபாரம் செய்வது ஆகும். ஆனால்ஆய் அண்டிரன் என்பவன் அப்படிப்பட்டவன் அல்லன் என்று இப்பாடலில் கூறப்பட்டது.

 

பெண்கல்வியால் வீடும்நாடும் சிறக்கும். 

அன்பும் அறமும் வளரும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...