மதுரை --- 0974. முத்துநவ ரத்னமணி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முத்துநவ ரத்னமணி (மதுரை)

 

முருகா! 

அடியேனுக்கும் அருள் புரிவீர்.

 

 

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

     தத்ததன தத்ததன ...... தனதான

 

 

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட

     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்

 

முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்

     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி

 

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்

 

பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே

 

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான

 

திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு

     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்

 

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ

     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா

 

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள

     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

முத்து நவரத்ன மணி பத்தி நிறை சத்தி இடம்

     மொய்த்த கிரி,முத்தி தரு ...... என ஓதும்,

 

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்

     முப்பது முவர்க்க சுரர் ...... அடிபேணி,

 

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி,

     பற்குனனை வெற்றி பெற ...... ரதம் ஊரும்,

 

பச்சைநிறம் உற்ற புயல்ச்சம் அற வைத்தபொருள்,

     பத்தர் மனது உற்ற சிவம் ...... அருள்வாயே.

 

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான

 

திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்த தகு

     செச்சரிகை செச்சரிகை ...... எனஆடும்

 

அத்தனுடன் ஒத்த நடனித்ரிபுவனத்தி,நவ

     சித்திஅருள் சத்தி,அருள் ...... புரிபாலா!

 

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்றுவளர்

     அல் கனக பத்மபுரி ...... பெருமாளே.

 

பதவுரை

 

            தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகுதெய்த்ததென தெய்தததென தெனனானதிக்குவென மத்தளம் இடக்கை துடி---தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்கு என்ற தாள வரிசையுடன் மத்தளமும்தம்பட்டமும்,  உடுக்கையும் ஒலிக்க,

 

            தத்ததகு செச்சரிகை செச்சரிகை என ஆடும்--- தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஒலிக்குறிப்புடன் திருநடனம் ஆடுகின்ற 

            அத்தனுடன் ஒத்த நடனி--- சிவபெருமானுடன் சமானமாகத் திருநடனம் புரிபவளும்,

 

           த்ரிபுவனத்தி-- மூன்று புவனங்களுக்குத் தலைவியும்,

 

            நவசித்தி அருள் சத்தி--- புதுமையான சித்திகளை அடியார்களுக்கு அருளுபவரும்பராசத்தியும் ஆகிய உமையம்மையார் 

 

            அருள் புரி பாலா--- ஈன்றருளிய திருக்குமாரரே!

 

            அற்ப இடை தற்பம் அது--- நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் 

 

            முற்றும் நிலை பெற்று வளர்--- முழுவதும் நிலைபெற்று வாழ்கின்ற,

 

            அல் கனக பத்மபுரி பெருமாளே--- மதிலுடன் கூடிய பொற்றாமரை புரியாகிய மதுரையில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

            முத்து--- முத்துமணிகளும் 

 

            நவரத்ன மணி--- நவரத்தின மணிமாலைகளும்

 

            பத்தி நிறை --- வரிசையாக விளங்கும் 

 

            சத்தி இடம் மொய்த்த கிரி--- தெய்வயானை அம்மையாகிய கிரியாசத்தி இடப்புறத்தில் ஒன்றியுள்ள மலை,

 

            முத்தி தரு என ஓதும்--- முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதித் துதிக்கும்படியான,

 

            முக்கண் இறைவர்க்கும்--- முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் 

 

            அருள் வைத்த முருகக் கடவுள்--- அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுளே!

 

            முப்பது முவர்க்க சுரர் அடி பேணி--- முப்பத்து மூன்று வகையான தேவர்களும் தமது திருவடியைப் போற்றி விரும்ப,

 

            பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி--- இராவணனுடைய பத்துத் தலைகளும் அறுபட்டு விழுமாறு பொருந்திய கணையை விடுத்த இரகுராமரும்,

 

            பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்--- அருச்சுனன் மகாபாரதப் போரில் வெற்றி பெறும் வகையில் கண்ணனாக வந்து தேரைச் செலுத்திய

            பச்சை நிறம் உற்ற புயல்--- பச்சை நிறம் கொண்ட மேகநிறப் பெருமான் ஆகிய திருமாலுக்கு 

 

            அச்சம்அற வைத்த பொருள்--- பயத்தை நீங்க வைத்த பரம்பொருளே!

 

            பத்தர் மனது உற்ற சிவம்--- பக்தர்களது உள்ளத்தில் பொருந்தி விளங்கும் சிவமே!

 

            அருள்வாயே--- அடியேனுக்கும் அருள் புரிவாயாக.

 

பொழிப்புரை

 

            தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்கு என்ற தாள வரிசையுடன் மத்தளமும்தம்பட்டமும்,  உடுக்கையும் ஒலிக்கதத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஒலிக்குறிப்புடன் நடனம் ஆடுகின்ற சிவபெருமானுடன் சமானமாக நடனம் புரிபவளும்மிகுதியான மூன்று புவனங்களுக்குத் தலைவியும்புதுமையான சித்திகளை அடியார்களுக்கு அருளுபவரும்பராசத்தியும் ஆகிய உமையம்மையார் ஈன்றருளிய திருக்குமாரரே!

 

            நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் முழுவதும் நிலைபெற்று வாழ்கின்றமதிலுடன் கூடிய பொற்றாமரைபுரியாகிய மதுரையில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

            முத்துமணிகளும் நவரத்தின மணிமாலைகளும் வரிசையாக விளங்கும் தெய்வயானை அம்மையாகிய கிரியாசத்தி இடப்புறத்தில் ஒன்றியுள்ள மலை,முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதித் துதிக்கும்படியான முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுளே!

 

            முப்பத்து மூன்று வகையான தேவர்களும் தமது திருவடியைப் போற்றி விரும்பஇராவணனுடைய பத்துத் தலைகளும் அறுபட்டு விழுமாறு பொருந்திய கணையை விடுத்த ஸ்ரீராமரும்அருச்சுனன் மகாபாரதப் போரில் வெற்றி பெறும் வகையில் கண்ணனாக வந்து தேரைச் செலுத்தியவரும்பச்சை நிறம் கொண்ட மேகநிறப் பெருமான் ஆகிய திருமாலுக்கு பயத்தை நீங்க வைத்த பரம்பொருளே!

 

            பக்தர்களது உள்ளத்தில் பொருந்தி விளங்கும் சிவமே!

 

            அடியேனுக்கும் அருள் புரிவாயாக.

 

விரிவுரை

 

 

முத்து நவரத்னமணி பத்தி நிறை சத்தி ---

 

இது தெய்வயானை அம்மையாரைக் குறிக்கின்றது.  இடம் மொயத்த கிரி என்பதனால் அறிக. முருகவேளின் இடப்புறத்தில் தெய்வயானை அம்மையார் இருப்பர். அவர் கிரியாசத்தி. இந்திரனுக்குப் புதல்வியாகிதிருப்பரங்குன்றத்தில் எம்பெருமானைத் திருமணம் செய்து கொண்டனர். இந்த அம்மையைப் பற்றி அருணகிரிநாதர் திருவகுப்பில் கூறுமாறு காண்க.

 

அகரு ம்ருகமத களப பரிமள

    விகட முகபட கடின புளகித

அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி

    குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி

அக்கம் ஒரு கோடிபெறு வஜ்ரபாணிக் குமரி

    தக்க அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவன்..       --- பூதவேதாள வகுப்பு.  

                                    

 

சத்தி இடம் மொய்த்த கிரி---

 

கிரியா சத்தியாகிய தெய்வயானையம்மை இடப்பாகத்தில் எழுந்தருளி இருப்பர். மலையாக முருகனை உருவகிக்கின்றனர். மலையில் கொடி படர்வது போல் முருகவேளின் இடப்புறத்தில் தெய்வயானை அம்மையார் மருவி உள்ளனர்.

 

முத்தி தரு---

 

முத்தி --- பாசநீக்கம். தரு --- மரம்.

 

முருகனைத் தருவாக உருவகிக்கின்றார் அடிகளார். பொன்னுலகத்தில் நினைத்ததைத் தரும் ஒரு மரம் உண்டு. அதற்குக் கற்பகத் தரு என்று பெயர். இது முத்தியைத் தருவதால்முத்தி தரு எனப்படும். தெய்வயானை வள்ளி என்ற இருகொடிகள் தாவிப் படர்கின்ற தரு.

 

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்---

 

சத்தி இடம் மொய்த்த கிரி என்றும்முத்தி தரு என்றும் துதிக்கின்ற முக்கண் பெருமானுக்கும் பிரணவ உபதேசம் புரிந்து அருளினர்.  உம்மை சிறப்பு.

 

ஐம்முகச் சிவனே அறுமுகச் சிவன். எனினும் உபதேச சமயத்தில் குருமூர்த்தியைச் சீடன் துதிக்கவேண்டும் என்ற நியாயத்தை விளக்க அரனார் துதி புரிந்தனர்.

 

அகரமுதல் எனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்

அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்

அபரிமித சுருதியும் அடங்குந்த னிப்பொருளை...   எப்பொருளுமாய


அறிவைஅறி பவர்அறியும் இன்பந்த னைத்துரிய

முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய

அணுவைஅணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமும்...     அற்றதொருகாலம்

 

நிகழும்வடி வினை,முடிவில் ஒன்றுஎன்று இருப்பதனை 

நிறைவுகுறை வொழிவற நிறைந்து எங்கும் நிற்பதனை

நிகர்பகர அரியதைவிசும்பின் புரத்ரயம்.....எரித்தபெருமானும்


நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு

பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய

நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது...   உணர்த்தியருள்வாயே.            ---  திருப்புகழ்.      

                                             

 

முப்பது முவர்க்க சுரர் அடிபேணி---

 

தேவர்கள் முப்பத்துமூன்று வகைப்பட்டவர்.  ஆதித்தர் 12, அசுவினிகள் 2, உருத்திரர் 11, வசுக்கள் 8,  ஆக 33.

 

அடிபேணி --- திருவடியை விரும்பி. விரும்பி என்ற வினை எச்சத்துடன் அதன் பயனாகிய உய்யுமாறு என்ற சொல்லையும் உடன்கூட்டி பொருள் செய்து கொள்ளலாம்.

 

பத்துமுடி தத்தும் வகை உற்ற கணை விட்ட அரி---

 

இராஜச குணம் இராவணன். தாமதகுணம் கும்பகர்ணன். சத்துவகுணம் விபீஷணர். சத்துவத்தை மீட்டுதாமத இராஜச குணங்களை இராகவர் அழித்தனர். அதில் இராஜச குணத்திற்கு காமம்,குரோதம்லோபம்மோகம்மதம்மத்ரசம்ஈர்ஷைடம்பம்அகங்காரம்மமகாரம் என்ற பத்துத் தலைகள்.  ஞானமென்ற கணையால் இந்தப் பத்துத் தலைகளையும் அறுத்துசத்துவகுணத்திற்கு முடி சூட்டினர்.

 

பற்குணனை வெற்றி பெற ரதம் ஊரும்---

 

அருச்சுனன் ஆன்மா. இந்த உடம்பு ரதம். மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்கள் குதிரைகள். மனம் கடிவாளம். அறிவு கண்ணபிரான். அறிவு என்ற சாரதி மனமாகிய கடிவாளத்தை இழுத்துப் பிடித்துஐம்புலன்களாகிய குதிரைகளை நன்மார்க்கத்தில் செலுத்திதீவினைத் தொகுதிகளாகிய துரியோதனாதிகளை வென்று ஆன்மாவுக்கு அனுகூலம் புரிதல் வேண்டும்.

 

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்---

 

மரகத நிறமுடைய திருமாலுக்கு உண்டாகி இருந்த அச்சத்தை அறுமுகவேள் அகற்றினர். திருமாலுடன் தாரகாசுரன் போர் புரிந்தபொழுது,தாரகன் மீது திருமால் விடுத்த சக்கராயுதம் அவன் மார்பில் பூமாலையாக விழுந்தது. தராகனால் தோல்வியுற்ற திருமால் அஞ்சி அகன்றனர். இளவலாகிய தாரகனுக்கே வலி இழந்து விலகிய திருமாலுக்கு சிங்கமுகனும் சூரபன்மனும் மிகுந்த அச்சத்தை விளைவித்தனர். முருகவேள் தாரகாதி அவுணர்களை மாய்த்ததனால்,திருமால் அச்சம் நீங்கி மகிழ்ந்தனர்.

 

பத்தர் மனது உற்ற சிவம்---

 

இறைவர் அன்பர்கள் உள்ளக் கோயிலில் நீங்காது உறைகின்றனர். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்பார் அப்பமூர்த்திகள். "மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப் பெருமாள் காண்" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

 

தித்திமிதி …..  துடி---

 

நடராஜமூர்த்தி அகிலாண்டங்களும் உய்ய அநவரத ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற போதுமத்தளம் தம்பட்டம் உடுக்கை முதலிய வாத்தியங்கள் பலவகையான தாளவரிசைகளுடன் ஒலிக்கும். நடராஜப் பெருமான் ஆடுவதனால்,உலகங்கள் ஆடுகின்றன.  அவருடை திருவடிப் பெருமையை அருட்பிராகச வள்ளலார் இனிது கூறுகின்றனர்.

 

     தடைய உறாப் பிரமன்விண்டு உருத்திரன்மா

          யேச்சுரன்சதாசிவன்விந்து,

     நடைஉறாப் பிரமம்உயர்பரா சத்தி,

          நவில்பர சிவம்எனும் இவர்கள்

     இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்

          இடதுகாற் கடைவிரல் நகத்தின்

     கடையுறு துகள்என்று அறிந்தனன் அதன்மேல்

          கண்டனன் திருவடி நிலையே.

 

அத்தனுடன் ஒத்த நடம் ---

 

இறைவனுடன் இறைவியும் ஒத்து நடனம் புரிகின்றனள். "பம்பரமே போல ஆடிய சங்கரிவேதாள நாயகி" என்பார் கொம்பனையார் எனத் தொடங்கும் திருப்புகழில். அவன் எவ்வண்ணமோ அவள் அவ்வண்ணம் ஆவாள்.

 

சிவபரம்பொருளுடன்உமாதேவியும் திருநடனம் புரிகின்றார் என்பதைபின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களால் அறியலாம்.

 

வெந்தவெண் பொடிப்பூசு மார்பில்விரி

            நூல்ஒருபால் பொருந்தக்

"கந்தமல்கு குழலியோடும் கடிபொழில்

            கச்சி தன்னுள்

அந்தம்இல் குணத்தார் அவர்போற்ற

            அணங்கினொடு ஆடல்புரி

எந்தை மேவிய ஏகம்பம்"  

            தொழுது ஏத்த இடர்கெடுமே.

 

கணைபிணை வெஞ்சிலை கையில்ஏந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்

"இணைபிணை நோக்கி நல்லாளோடு ஆடும் இயல்பினர்" ஆகிநல்ல

இணைமலர் மேல்அன்னம் வைகுகானல் இராமேச்சுரம் மேயார்

அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.

 

 

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்றுவளர்---

 

தற்பம் --- மெத்தை.

 

நுண்ணிய நூல் போன்ற இடையுடைய சிறந்த பெண்மணிகள் மாடங்கள் தோறும் இனிது பயில்கின்றனர். இல்லாள் அகத்து இருக்கஇல்லாதது ஒன்று இல்லை என்றபடி கற்புடைய உத்தமிகள் வாழ்வதனால் மதுரையில் எல்லாம் உளவாகின்றன.

 

கனக பத்ம புரி---

 

கனகம்--- பொன். பத்மம் --- தாமரை. பொற்றாமரை. மதுரையில் விளங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் மிகவும் சிறந்தது. அதனால்மதுரை "கனகபத்ம புரி" எனப் பெயர் பெற்றது.

 

அலகிலாத் தீர்த்தம் தம்முள் அதிக உத்தமமாய்த் தோன்றி

இலகலால்தனைத் தீர்த்த உத்தமம் என்பர் ஆய்ந்தோர்,

பலஇதழ் விரித்துச் செம்பொன் பங்கயம் மலர்ந்த நீரால்

உலகவர் யாரும் பொற்றாமரை என உரைப்பர் அன்றே.

 

தருமம் முன் ஆகும் நான்கும் தருதலால் தரும தீர்த்தம்,

அருமைசால் அருத்த தீர்த்தம்,அரும்பெறல் காம தீர்த்தம்,

இருமைசேர் முத்தி தீர்த்தம்,என்பதாம் இனைய தீர்த்தம்,

வெருவரு பாவம் என்னும் விறகினுக்கு எரியாம் அன்றே.

 

எனவரும் திருவிளையாடல் புராணப் பாக்களால்,பொற்றாமரைக் குளத்தின் சிறப்பு விளங்கும்.

 

கருத்துரை

 

முருகா! அடியேனுக்கும் அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...