தப்பு செய்தால், சாமி கண்ணைக் குத்தும்.
-----
ஒருவருக்கு அச்ச உணர்வு எப்படி வரும் - எப்பொழுது வரும் என்று விளக்கத் தேவையில்லை. இருப்பினும் அணங்கு, விலங்கு,கள்வர், அரசன் போன்றவற்றால் அச்ச உணர்வு ஏற்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடும்.
குகையில் வாழ்ந்திருந்த ஆதி மனிதன் வேட்டையாடுதல் முதலிய தொழில்களால் தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு இருந்தான். அவனது அறிவையும்,
செயலையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் ஆற்றல் அவனுக்கு அப்போது இருக்கவில்லை. அவனுக்கு அன்று இருந்த பிரச்சினைகள் இரண்டே. ஒன்று அச்சம், இன்னொன்று கவலை. முரண்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த அவனுக்கு, வீடு என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு வாழத் தெரியாத அவனுக்கு, விலங்குகளைக் கண்டு அச்சம், இருளைக் கண்டு அச்சம், இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அச்சம். நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம். நாளைய பசியைப் போக்கிக் கொள்ள என்ன செய்யலாம் என்ற கவலை. தனியே திரிந்துகொண்டு இருந்த அவனுக்கு,அச்சமும் கவலையும் இல்லாமல் இருக்க முடியாது.
அறிவு மெல்ல மெல்ல வளரத் தொடங்கி, சிக்கிக் கல் மூலம் தீயை மூட்டவும், கற்களைக் கொண்டு ஆயுதங்களைச் செய்து கொள்ளவும், இவற்றின் உதவியால் விலங்குகளை வேட்டையாடவும் அவன் கற்றுக் கொண்டான். உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு ஒலிக் குறிப்புகளைப் பழகிக் கொண்டான். நாளாவட்டத்தில் அந்த ஒலிகள் சொல் வடிவம் பெற்றன. சொல்லுக்கு வரிவடிவத்தையும் அவன் கொடுத்துக் கொண்டான்.
இதன் பிறகு அவன் வேகமாக வளரத் தொடங்கிவிட்டான். அறிவு வளர்ச்சி, மொழி வளர்ச்சி இரண்டும் வளர்ந்த நிலையில், கணித வளர்ச்சியும் கண்டான். இந்த வளர்ச்சி, இந்த நூற்றாண்டில் அசுர வேகம் எடுத்து உள்ளது. ஆதி மனிதனின் நிலையை இன்றுள்ள நிலையோடு ஒப்பிடவும் முடியாது. "அவனில் இருந்தா நாம் வந்தோம்" என்று எண்ணத் தோன்றும்.
ஆனால், அறிவு வளர்ந்ததே ஒழிய, ஆதி மனிதன் மனத்தில் தோன்றிய அச்சம், கவலை என்ற இரண்டும் இன்றும் தொடர்கின்றது. அன்று இருளைக் கண்டும், விலங்குகளைக் கண்டு அஞ்சினான். பிற மனிதர்களைக் கண்டும் அச்சம் கொண்டான். இன்று இருளை ஒளிவெள்ளமாக மாற்றிவிட்டோம். விலங்குகளைக் காட்டுக்கு உள்ளேயே அடைத்துப் பாதுகாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், மனிதன் மனிதனைக் கண்டு அஞ்சுகின்ற நிலை மட்டும் இன்னமும் மாறவில்லை. மனிதனுக்கு மனிதன் பயம். சமுதாயத்திற்குள் பயம். ஓர் ஊரார் இன்னொரு ஊராரைக் கண்டு பயம். ஒரு நாடு, மற்றொரு நாட்டைக் கண்டு பயம் கொள்ளுகின்றது.
காரணம், என்ன என்று ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அறிவு வளர்ந்த வேகத்தில், மனிதனுக்கு ஆசையும் தாராளமாகவே வளர்ந்து விட்டது. பொன்னாசை, பொருளாசை, மண்ணாசை என்னும் மூவாசையும் மிகுந்துவிட்டது. அத்தோடு, இன்று பதவி ஆசை என்னும் ஒன்றும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது மற்ற மூன்று ஆசைகளோடு தொடர்பு உடையதாகி விட்டது.
அன்று மனிதன் தனது தேவைக்கு ஆசைப்படும்போது, அச்சத்தை எதிர்கொண்டான். இன்று தேவைக்கு மேல் ஆசைப்பட்டு விட்டு, அச்சத்தை எதிர்கொள்கிறான்.
இன்று,மனிதனுக்குஏன் அச்ச உணர்வு உண்டாகின்றது? என்றால், தனக்கு உரிய பணிகளை, கடமைகளை செவ்வனே செய்யாமல், தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மறந்து, விருப்பு, வெறுப்பு காரணமாக,தனது இச்சைக்கு ஏற்பச் செயல்படும்போது, தன்னைக் கண்காணிக்கின்ற ஒருவர் உள்ளார் என்பதையும் மறந்து செயல்படுகின்ற நிலை உண்டாகும். ஒருவரது தலைமைக்கும், கண்காணிப்புக்கும் உட்பட்டே நாம் இருக்கின்றோம் என்னும் எண்ணம் சிந்தையில் இருக்குமானால், தவறு செய்ய வாய்ப்பு இல்லை. தவறுக்கு இடம் தராமல், கடமையைச் செவ்வனே செய்து வரும்போது, அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்று, சிறு வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்தி, அச்சத்தை உண்டாக்கிய ஆப்தவாக்கியத்தைக் கேட்டறியாதவர்கள் இருக்க முடியாது. ஏன்? சாமி வந்து, கண்ணை உண்மையிலையே குத்துவார் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்டது அல்ல. தப்பு செய்து துன்பத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது என்பதால் சொல்லப்பட்டது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சாமி பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்கின்ற அச்ச உணர்வு இல்லாமல், நமது எண்ணம்போல் செயல்பட்டால் தண்டனை வரும்.
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்பது உண்மையில் ஆப்த வாக்கியம்தான். சிறு வயதில் விளங்கி இருக்காது. வளர்ந்த நிலையில், இப்போது நன்கு சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். சிறு வயதில் இருந்தபோது, ஒருக்கால் இந்த வாக்கியத்தை எண்ணி, சாமி ஒருவேளை நமது கண்ணைக் குத்திவிடுவாரோ என்று பயந்துதான் ஒவ்வொருவரும் இருந்தோம். ஆனால், வயது ஏற ஏற, நமக்கும் அறிவு உள்ளதாக எண்ணிக் கொண்டு, அறிவுற்ற செயல்களைச் செய்துகொண்டு வருவது இயல்பாகவே ஆகிவிட்டது. காரணம், இதுவரை, சாமி நமது கண்ணை வந்து குத்தியதாக இல்லை. ஆனால், நாம் குழந்தைகளாக இருந்தபோது குத்தாத சாமி,இப்போது குத்திக் கொண்டுதான் இருக்கின்றார் என்பதுதான் உண்மை. வெளியில் இருந்து குத்துவது இல்லை. உள்ளே இருந்து குத்திக் கொண்டுதான் இருக்கின்றார். அவர் குத்துவதால்தான் நாம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வருகின்றோம். துன்பம் தீர்ந்தபாடு இல்லை. ஏன்? இறைவன் குத்திக் கொண்டே இருக்கின்றான். அவன் குத்தும் அளவுக்கு நமது மனம், சொல், செயல் அமைந்து விடுகின்றது. ஏன்? சாமி கண்ணைக் குத்துவார் என்ற அச்சம் நமக்கு இல்லை. எனவே, நமது கடமையில் இருந்து தவறிவிடுகின்றோம். காரணம், நமக்கு உள்ள விருப்பு வெறுப்பு. கடமையில் விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை.
விருப்பு வெறுப்பு உள்ளபோது, மனத்தளவில் வினை விளைகின்றது. விருப்பு வெறுப்பு சொல்லாக வெளிவரும்போது வினை விளைகின்றது. விருப்பு வெறுப்பு செயலாகப் பரிணமிக்கும்போதும் வினை விளைகின்றது. வினைதான், துன்பத்துக்குக் காரணம். துக்க சொரூபமான இன்பத்துக்கும் காரணம்.
இப்படிப்பட்டவர்களைப் பார்த்து "அறிவில்லாதவர்களே" என்கின்றார் குமரகுருபர அடிகள். பிறர் அறியவில்லை என்பதாக நினைத்துக் கொண்டு வஞ்சகமாகச் செயல்படுபவர்களையும், போலியான கோலம் பூண்டு, சுகபோகத்தைக் கருதி, உலகத்து மக்களை வஞ்சித்து வாழ்கின்றவர்களையும் நோக்கி, "அறிவில்லாதவர்களே" என்கின்றார். "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்துவார்" என்று பெரியவர்கள் சொன்னதை மறந்துவிட்ட "அறிவில்லாதவர்களே" என்கின்றார். நமது அறிவுச் சாமர்த்தியத்தால், நாம் செய்த வஞ்சகத்தைப் பிறர் அறியாதவாறு சாதித்துவிட்டோம் என்று கருதுகின்றவர்கள் "அறிவில்லாதவர்கள்" தான்.
நீதி என்ன, நெறி என்ன என்பதை அறிவிக்கும் பொருட்டு, "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், அடிகளார் பாடியுள்ள பாடலை இப்போது பார்ப்போம்...
வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தேம் என்று மகிழன்மின், - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி,
அங்கம் குலைவது அறிவு.
இதன் பொருள் ---
போலிவேடம் பூண்டு,பிறரை வஞ்சித்து வாழுகின்ற அறிவிலிகளே! எல்லோரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நூங்கள் மகிழ வேண்டாம். அது அறிவுடைமை அல்ல. நீங்கள் வஞ்சனையாகச் செய்த செயலை, எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குகின்ற இறைவன் காண்கின்றான் என்று உள்ளம் நடுங்கி, உங்களுடைய உடல் பதறவேண்டும். அதுவே அறிவுடைமை ஆகும்.
நாம் வணங்குகின்ற இறைவன் எங்கும் இருக்கின்றான் என்று எண்ணுவது அறிவுடைமை. இறைவன் திருவுருவத்தைத் திரையிட்டு மறைத்துவிட்டால், அவர் காண மாட்டார் என்று எண்ணுவது அறியாமை.
போலியான கோலம், போலி வேடம் எனப்படும். மனிதனுடைய எல்லா நிலைகளிலும் இடம் பெற்று இருப்பதைக் காணலாம். உள்ளீடாக இருக்கவேண்டியது இல்லாது இருப்பது போலி. கணவன் என்ற போர்வையில் இருந்துகொண்டு, தனது கடமையில் இருந்து தவறுவது. மனைவி என்ற போர்வையில் இருந்துகொண்டு தனது கடமையில் தவறுவது. பணியாளன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு,தனது கடமையில் தவறுவது. அதிகாரி என்னும் போர்வையில் இருந்துகொண்டு, அதிகாரிக்கு உரிய கடமையில் தவறுவது. மாணவன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு, அல்லாத செயல்களில் ஈட்படுவது. ஆசிரியர் என்ற போர்வையில் இருந்துகொண்டு, ஆசிரியருக்குத் தகுதி அல்லாத செயல்களில் ஈடுபடுவது. இவ்வாறு போலி வேடங்கள் பல உண்டு. கடமை தவறி செயல்படுவதோடு, எதையோ சாதித்து விட்டதாகவும் பெருமை கொள்ளுவதும் உண்டு. ஆசை காரணமாகச் செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு, பின்னர் குற்றம் வருமோ என்னும் அச்சத்தால், மேலும் குற்றங்களைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அகத்திலும்,புறத்திலும், நாம் கண்காணிப்புக்கு உட்பட்டே வாழ்கின்றோம் என்னும் எண்ணம் இருந்தால், வஞ்சத்தால் அச்சமும், அச்சத்தால் வஞ்சகமும் நிகழாது.
இதே கருத்தை வலியுறுத்தி, "பழமொழி நானூறு" என்னும் நூல் கூறுவதையும் காண்போம். "காணார் எனச் செய்யார் மாணா வினை" எனனும் பழமொழிக்கு விளக்கமாக அமைந்த பாடல் இது.
எனக்குத் தகவு அன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரி ஆவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத் தன் கைகுறைத்தான் தென்னவனும்,காணார்
எனச்செய்யார் மாணா வினை.
இதன் பொருள் ---
தென்னவனும் --- பாண்டிய மன்னனும், எனக்கு தகவு அன்று என்பதே நோக்கி --- எனக்குத் தகுதி அல்ல என்பதனை ஆராய்ந்து அறிந்து, தனக்கு கரியாவான் தானாய் --- தனக்குச் சாட்சியாக இருந்து,தவற்றை நினைத்து --- கதவை இடித்த தனது குற்றத்தை நினைத்து, தன் கை குறைத்தான் --- தனது கையைத் தானே வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) காணார் என செய்யார் மாணா வினை --- அறிவுடையோர் பிறர் காணவில்லை என்பதற்காக, தகுதி அற்ற செயல்களைச் செய்யமாட்டார்.
இறைவன் எங்கும் இருக்கின்றார். அவர் எல்லாவற்றையும் அறிவார் என்ற அச்சம் உண்டாகவேண்டும். மனிதர்கள் தண்டிப்பதை விட, இறைவன் தண்டிப்பது மிகவும் கொடிதாக இருக்கும், துல்லியமாகவும் இருக்கும் என்பதால், அதை நினைந்து உள்ளம் பதைக்கவேண்டும்.
கீரந்தை மனைவிக்காகக் கதவைத் தட்டிய பாண்டியன்,தான் செய்தது நன்மை கருதியது என்றாலும்,தகுதி இல்லாத செயல் எனத் தெரிந்து, கதவைத் தட்டிய தனது கையைத் தானே வெட்டிக் கொண்டு, பின்னர் "பொற்கைப் பாண்டியன்" ஆனான். இந்த வரலாற்றை வைத்து மேற்கண்ட பாடல் எழுந்தது.
இதில் கண்ட வரலாறு
மதுரையை ஆண்ட பாண்டியன், காவல் பொருட்டு நள்ளிரவில் வீதிவலம் வருகின்ற காலத்தில்,ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த போது, ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது,கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" என்று சொல்ல,அவனது மனைவி "அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு" எனச் சொன்னாள். வேதியன் "நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும்,அஞ்சாதே" எனக் கூறிச் சென்றான். இந்த உரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் கொண்டுள்ள நன்மதிப்பை நினைந்து வியந்தான். பாண்டியன் அத் தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயம் உற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன்,தான் வந்துள்ளதை அறிந்தால்,அவன் தனது மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ் வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டிச் சென்றான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் "எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும்" என்று முறையிட்டனர். பாண்டிய மன்னன் வாள் ஒன்றைக் கொண்டு வரச்சொல்லி,தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்தனர். பாண்டியனும் பொன்னால் ஆன கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து "பொற்கைப் பாண்டியன்" என்ற பெயரைப் பெற்றான்.
கண்காணியாக ஒருவன் உள்ளான் என்பதை அறிந்தவர்கள், "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்பதை உணர்ந்து, கள்ள மனத்தை ஒழித்து, தகுதி அற்ற செயல்களைச் செய்து பாவத்தைச் சுமந்து கொள்வதில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டவர்கள் ஆவர்.
கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்,
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்,
கண்காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந் தாரே.
என்கின்றார் திருமூல நாயனார்.
அறிவில்லாதவர் "தங்களை உடன் இருந்து காவல் புரிபவர் இல்லை"என்று தவறாகக் கருதிக் கொண்டு,தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால், யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம் என்பதை அறிவார். எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை,அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒருபோதும் செய்யாது, தமது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றனர்.
கடமையைச் சரிவரச் செய்தால், கண்காணிப்பாளர் மகிழ்வார். அவர் மகிழ்ந்தால் நாமும் மகிழ்வோம். தப்பு செய்யவில்லையானால், சாமி கண்ணைக் குத்த மாட்டார்.
"வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை" என்பது "கொன்றைவேந்தன்". தூய்மையான மனம் உள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை. வஞ்சக எண்ணம் இல்லையாதலால், கடமையில் தவறுதல் இல்லை. அதனால், தவறு புரிதல் இல்லை. எனவே, அச்சம் கொள்ளத் தேவையும் இல்லை.
No comments:
Post a Comment