ஸ்ரீபுருஷமங்கை --- 0977. வேனின் மதன்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வேனின்மதன் ஐந்து (ஸ்ரீபுருஷமங்கை)

 

முருகா! 

விலைமாதர் மயல் ஒழிந்து,

நற்கதியை அடைய அருள்.

 

 

தானதன தந்த தானதன தந்த

     தானதன தந்த ...... தனதான

 

 

வேனின்மத னைந்து பாணம்விட நொந்து

     வீதிதொறு நின்ற ...... மடவார்பால்

 

வேளையென வந்து தாளினில்வி ழுந்து

     வேடைகெட நண்பு ...... பலபேசித்

 

தேனினும ணந்த வாயமுத முண்டு

     சீதளத னங்க ...... ளினின்மூழ்கித்

 

தேடியத னங்கள் பாழ்படமு யன்று

     சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ

 

ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ

     ராலிலையி லன்று ...... துயில்மாயன்

 

ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த

     ஆரணமு குந்தன் ...... மருகோனே

 

வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த

     மானொடுவி ளங்கு ...... மணிமார்பா

 

மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை

     மாநகர மர்ந்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து,

     வீதி தொறும் நின்ற ...... மடவார்பால்,

 

வேளை என வந்து,தாளினில் விழுந்து,

     வேடை கெட நண்பு ...... பலபேசி,

 

தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு,

     சீதள தனங்க ...... ளினின் மூழ்கி,

 

தேடிய தனங்கள் பாழ்பட முயன்று,

     சேர் கதி அது இன்றி ...... உழல்வேனோ?

 

ஆனிரை துரந்து,மாநிலம் அளந்து,ஒர்

     ஆல் இலையில் அன்று ...... துயில்மாயன்,

 

ஆயர் மனை சென்று,பால்தயிர் அளைந்த

     ஆரண முகுந்தன் ...... மருகோனே!

 

வானவர் புகழ்ந்த கானவர் பயந்த

     மானொடு விளங்கு ...... மணிமார்பா!

 

மாமறை முழங்கு ஸ்ரீபுருட மங்கை

     மாநகர் அமர்ந்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            ஆ நிரை துரந்து--- பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும்,

 

            மாநிலம் அளந்து--- பெரிய பூமியை அளந்தும்,

 

           ஓர் ஆல்இலையில் அன்று துயில் மாயன்--- ஒப்பற்ற ஆலிலையில் அன்று துயில் கொண்ட மாயவனும்

 

            ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த--- இடையர் வீடுகளில் போய் பாலையும்தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும்,

 

           ஆரண முகுந்தன் மருகோனே --- வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் திருமருகரே!

 

            வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா --- தேவர்கள் புகழ்ந்து போற்றிய வேடர்களின் மகளாக வளர்ந்தொளும்,மான் வயிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியுடன் விளங்கும் அழகிய திருமார்பரே!

 

            மாமறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மாநகர் அமர்ந்த பெருமாளே--- பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து--- வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்தஅதனால் மனம் வேதனை அடைந்து

 

            வீதி தோறும் நின்ற மடவார் பால்--- தெருமூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே,

 

            வேளை என வந்து தாளினில் விழுந்து--- இதுவே சமயம் என்று வந்துஅவர்கள் காலில் விழுந்து

 

            வேடை கெட--- வேட்கை தீருமாறு,

 

            நண்பு பல பேசி--- நட்பான பல சொற்களைப் பேசி,

 

           தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு--- தேனைக் காட்டிலும் சுவையும் மணமும் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு

 

            சீதள தனங்களினில் மூழ்கி --- (அம் மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி

 

           தேடிய தனங்கள் பாழ் பட முயன்று--- தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிவதற்கு ஏதுவான கலவியில் முயற்சி செய்து

 

            சேர்கதி அது இன்றி உழல்வேனோ--- சேர வேண்டிய கதியை அடைதல் இல்லாமல் அடியேன் அலைந்து திரிவேனோ

 

 

பொழிப்புரை

 

           பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும்பெரிய பூமியை அளந்தும்ஒப்பற்ற ஆலிலையில் அன்று துயில் கொண்ட மாயவனும்இடையர் வீடுகளில் போய் பாலையும்தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும்வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் திருமருகரே!

 

            தேவர்கள் புகழ்ந்து போற்றிய வேடர்களின் மகளாக வளர்ந்தொளும்,மான் வயிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியுடன் விளங்கும் அழகிய திருமார்பரே!

 

            பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

           வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்தஅதனால் மனம் வேதனை அடைந்து,  தெருமுனைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே,இதுவே சமயம் என்று வந்துஅவர்கள் காலில் விழுந்துதாம் கொண்டுள்ள காமவேட்கை தீருமாறுநட்பான பல சொற்களைப் பேசிதேனைக் காட்டிலும் சுவையும் மணமும் கொண்டதாகக் கருதி அவர்களின் வாயிதழ் ஊறலை உண்டு,  அம் மாதர்களின் குளிர்ந்த மார்பகங்களில் முழுகிஇருந்து,தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிவதற்கு ஏதுவான கலவியில் முயற்சி செய்து,சேர வேண்டிய நற்கதியை அடைதல் இல்லாமல் அடியேன் அலைந்து திரிவேனோ

 

விரிவுரை

 

வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து--- 

 

மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூமாம்பூமுல்லைப்பூஅசோகம்பூநீலோற்பலப்பூ என்ற மலர்கள். 

 

தாமரைப்பூ --- நினைப்பூட்டும்

மாம்பூ --- பசலை நிறந்தரும்

அசோகம்பூ --- உணர்வை நீக்கும்

முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்

நீலோற்பலப்பூ --- கொல்லும். 

 

நினைக்கும் அரவிந்தம்,நீள்பசலை மாம்பூ,

அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு

முல்லை இடைகாட்டும்,மாதே முழுநீலம்

கொல்லுமதன் அம்பின் குணம்       --- இரத்தினச் சுருக்கம்.

 

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும்அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

 

வனசம்செழுஞ்சூத முடன்அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்இவைசெயும் குணம்முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;

 

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லைநீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;

 

நினைவில்அது வேநோக்கம்வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல்அனம் வெறுத்திடல்காய்ச்சல்

     நேர்தல்மௌனம் புரிகுதல்,

 

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

            தாமரைவளமிகுந்த மாஅசோகுமுல்லைமலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

 

            இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

 

            இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல்மற்றொன்றில் ஆசை நீங்கல்பெருமூச்சுடன் பிதற்றுதல்உள்ளம் திடுக்கிடல்உணவில் வெறுப்புஉடல் வெதும்புதல்மெலிதல்பேசாதிருத்தல்ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

 

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

 

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

 

வஞ்சியர் பெருஞ்சேனைகைதைஉடை வாள்நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

 

சஞ்சரிக இசைபாடல்குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

 

அஞ்சுகணை மாரவேட் கென்பர்எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

 

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

 

---        கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

---        அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

---        உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

---        தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

---        குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

---        யானை அழியாத இருளாகும்.

---        மிகுபடை பெண்கள் ஆவர்.

---        உடைவாள் தாழை மடல் ஆகும்.

---        போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்

---        கொடி மகர மீன் ஆகும்.

---        சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

---        பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

---        பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

---        குடை சந்திரன் ஆவான்.

---        காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

---        அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.

---        எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின்  அல்குல் ஆகும்.

 

ஆ நிரை துரந்து--- 

 

பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான்அவன் நல்ல மேய்ப்பன்.

 

கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால்இறைவனாகிய கண்ணனுக்கும்அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்துஅவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும்தின்னும் வெற்றிலையும்,பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள்பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

 

எனவேபசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம்அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்துபருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டிதக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்துஅவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

 

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல்,கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள்ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

 

"தேங்காதே புக்க இருந்து சீர்த்த முலை பற்றி வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

 

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரேஅவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

 

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்துஅவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.

 

இந்த விசாரசருமர் தான்பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுசண்டீச நாயனார் ஆனார்.

 

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்றுமேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன்அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர்மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோஇதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்றுஅன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

 

வேதம் ஓதுவதன் பலன்எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது. 

 

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும்,வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்புஅன்புஅன்பு.

 

மாநிலம் அளந்து--- 

 

பிரகலாதருடைய மகன் விரோசனன் விரோசனனுடைய மகன் மகாபலிச் சக்ரவர்த்தி. அவன் பேராலேயே மகாபலி பெரிய ஆற்றல் படைத்தவன் என்பது விளங்குகின்றது அல்லவாமாபலி மூன்று உலகங்களையும் வென்றுஇந்திர வாழ்வையும் பெற்றுஒப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்தவன். அவனை அடக்கி இந்திரனுக்கு வாழ்வு தரும் பொருட்டுதிருமால் அதிதி வயிற்றில் வாமனனாகத் தோன்றிமாவலி புரியும் யாகசாலையில் சென்று மூவடிமண் தானமாகக் கேட்டுமண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து, “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்றார். மாவலி “அடியேன் சிரம்” என்றான்.

 

திருவிக்கிரம மூர்த்தி மாவலியின் சிரத்தில் திருவடியை வைத்து அவனை அதல உலகத்தில் வைத்தருளினார். அவனுடைய வேண்டுகோளின்படிவாசலில் காவல் புரிபவராகவும் நின்றார்.

 

வாமன அவதார வரலாறு

 

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின்மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிவாள்வலியும்தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்றுஇந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்துஅவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகிஅங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும்அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும்காசிபருக்கு அருளவும் வேண்டிதிருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகிசிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

 

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

 

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்துபொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

 

அத் தருணத்தில்வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும்வேதம் நவின்ற நாவும் ஆகசிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டுசெவியும் சிந்தையும் குளிர்வுற்றேன்.  மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

 

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால்இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

 

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்துஎன் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

 

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

 

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி,

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

 

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின்யான் ஈந்து உவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

 

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல்அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகை எல்லாம் ஓரடியாகவும்விண்ணுலகை எல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி.  வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

 

ஓர் ஆல்இலையில் அன்று துயில் மாயன்--- 

 

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஞானப் பொருளை சின்முத்திரையோடு இருந்து காட்டினார். எனவே, ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். ஆலிலைக்கு ஒரு சிறப்பு உண்டு. அது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். 

 

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா!

ஊழி தோறு ஊழி பல ஆலின் இலை அதன் மேல்

பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே!

பங்கயம் நீள் யயனத்து அஞ்சன மேனியனேய!

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி

செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக,

ஐய! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.   --- பெரியாழ்வார்.

 

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,

ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்,

கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும்,

முடிவு இல்லதோர் எழில்

நீலமேனி, ஐயோ, நிறைகொண்டது என் நெஞ்சினையே.  --- திருப்பாணாழ்வார்.

                                    

 

வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா --- 

 

வானவர்கள் புகழ்ந்து போற்றிய பெருமையை உடையவர்கள் வள்ளிநாயகி வளர்ந்திருந்த வேடர் குலத்தவர்கள்.

 

எம்பெருமான் முருகனை அடையத் தவம் முயன்ற இருவருள் தேவயானையை தேவலோகத்தில் வளர்க்கத் தவம் புரிந்தவன் இந்திரன். வள்ளிநாயகியைத் தனது திருமகளாக வளர்த்தவன் வேடர் தலைவன் ஆகிய நம்பி. எனவே, தன்னினும் மிக்க தவத்தைப் புரிந்தவன் நம்பியே என்று, வள்ளிநாயகியை வளர்த்த வேடர்கோமானாகிய நம்பியை, தேவர் கோமான் ஆகிய இந்திரன், புகழ்ந்து போற்றுகின்றான். தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

 

எத்துணை அறங்கள் சால ஈட்டினன் வேடர் கோமான்,

பத்தியிற் பலநாள் தாழ்ந்துஎன் பாவையை அளிப்ப ஏற்ற

உத்தமன் தானே அண்மி ஒளியிலன் ஆகித் தாழ்ந்து

புத்திரி செங்கை பற்ற என்றனன் புலவர் கோமான்.   --- தணிகைப் புராணம்.

                                    

இதன் பொருள் ---

 

தேவேந்திரன் "நான் பற்பல நாள் மெய்யன்போடு வழிபாடு செய்யா நிற்ப, என்மகள் தேவசேனையை ஏற்றருளிய அப்பெருமாள், தானே வலிந்து சென்று ஒளியற்ற வேடனாகி அடியில் வீழ்ந்து வணங்கித் தன் மகளினது சிவந்த கையைப் பற்றுதற்கு இவ் வேடர் வேந்தன் எவ்வளவு நல்லறங்களைப் பெரிதும் செய்து அவற்றின் பயனைச் சேர்த்தனனோ அறிகிலேனே என்று மருண்டனன்.

 

     திருமால் வேடர்கோமான் ஆகிய நம்பியையும், அவன் மனைவியையும் புகழ்ந்து போற்றுகின்றான்

 

மாதவன் எனும்பேர் அல்லான், மாதவம் ஈங்கு ஒன்று இல்லை,

மாதவன் புலவர் கோமான் மற்றவன்ல்ன்னிற் சால

மாதவன் புளினர் கோமான் வளர்த்தருள் தெய்வக் கற்பின்

மாதவள் பாங்கின் நின்றாள் என்றனன் மதுவை அட்டோன்.  --- தணிகைப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     மது என்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால், "எனக்கு மாதவன் என்று பெயர் வெறும் பெயர் மாத்திரையாய் இருந்தது. அன்றி, அதன் பொருளாகிய பெரிய தவமாண்பு என்பால் சிறிதும் இல்லையே! உண்மைமையாகவே பெரிய தவப்பயனை உடையோன் இந்திரன். அவ் இந்திரனைக் காட்டிலும், மிகவும் பெரிய தவப்பயன் எய்தியவன் வேடர் வேந்தன். அவனைக் காட்டிலும் மிகப் பெரிய தவத்தை உடையவள் வள்ளிநாயகியை வளர்த்தருளிய தெய்வக் கற்பினை உடையவளாய்வ,அவன் பக்கத்தே நிற்கின்ற மனைவியே ஆவள்.

 

மாமறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மாநகர் அமர்ந்த பெருமாளே--- 

 

வேதகோஷம் மிகுந்து விளங்கும் திருத்தலம் நாங்குநேரி ஆகும்.

 

"கருளப் புட்கொடி சக்க ரப்படை வான 

     நாட! எம் கார்முகில் வண்ணா!

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி 

     அடிமை கொண்டாய்!

தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்

      சிரீவர மங்கல நகர்க்கு

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் 

     ஒரு கைம்மாறே".

 

"வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்

     கொழுந்தே! உலகுக்கு ஓர்

முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் 

     உலகும் உண்டாய்

செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்

     சிரீவர மங்கலநகர்

அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே"

 

எனவரும் நம்மாழ்வார் திருவாய்மொழிகளைக் காண்க. சிரீவரமங்கை என்பது, ஸ்ரீபுருடமங்கை என்னும் நாங்குநேரித் தலம் ஆகும்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயல் ஒழிந்து, நற்கதியை அடைய அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...