தன்னை முதலில் காதலிக்க வேண்டும்
-----
உயிர்கள் இன்பத்தை விரும்புவது அன்றி, துன்பத்தை ஒருபோதும் விரும்புவது இல்லை. ஓர் உயிர், தான் துன்பத்தை விரும்பாது இன்பத்தை விரும்புவது போலவே, பிற உயிர்களும் துன்பத்தை விரும்பாது இன்பத்தையே விரும்புகின்றன என்பதை உணர்ந்து, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது இருத்தல் வேண்டும். இதுதான் நீதி.
தனக்குத் துன்பம் தருவது என்று தான் உணர்ந்த ஒரு செயலை, யாரிடமும், எப்போதும் ஒருவன் செய்யாது இருத்தல் வேண்டும். துன்பங்கள் பலவகைகளில் தோன்றும். ஆயினும், அவை சொல், செயல் என்னும் இருவகையுள் அடங்கும். பிறர் கூறுகின்ற கடுஞ்சொல்லும், மூண்டு செய்கின்ற கொடும் செயலும் தனது உள்ளத்தை வருத்தி, உயிரை வேதனைப் படுத்துவதை அறிந்தவன், தனக்கு வந்த துன்பம் பிறருக்கு நேரக் கூடாது என்னும் நல்ல உள்ளத்தைக் கொண்டவனாய், யாருக்கும் தனது சொல்லாலும், செயலாலும் வருத்தம் உண்டாகாதவாறு நடந்து கொள்ளுவது இதம் எனப்படும்.
"இன்னா எனத்தான் உணர்ந்தவை, துன்னாமை
வேண்டும், பிறன்கண் செயல்".
"தன்உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல்".
நாயனார் அருளிய இப் பொய்யாமொழிகளை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். இவை தேவ வாக்குகள். இவை செய்யாத மொழிகள்.
----- தீவினையாளர் இழிந்தவராய் அழிந்து போகின்றார்.
----- நல்வினையாளர் உயர்ந்தவராய் உயர்கதி பெறுகின்றார்.
பிறர்க்கு ஏதேனும் துன்பம் செய்தால், அது தனக்கே தீமையாய் வந்து முடியும். எனவே, நல்ல உணர்வு உள்ளவன்,பிற உயிர்க்கு நலம் புரிவதன் மூலம் தனக்கும் நலம் புரிந்துகொள்பவன் ஆகின்றான். எனவேதான்,பின்வரும் அறவுரைகளை அறிவுரைகளாக நமக்கு வழங்கினார் தெய்வத் திருவள்ளுவ நாயனார்.
மறந்தும் பிறன் கேடு சூழற்க, சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு. --- திருக்குறள்.
கேடு எண்ணுவது பாவம், எனவே, அவன் பாவி ஆகின்றான். அவனிடம் இருந்து அறம் நீங்கி விடுகின்றது. அதுவே, கேடு தருகின்றது. பிறருக்கு கேடு தரும் செயல்களை எக்காலத்தும் செய்தல் தகாது என்பதைக் குறிக்க, "மறந்தும்" என்றார். பிறருக்குக் கேடு சூழுகின்றவன் எவ்வகையிலும் அழிந்தே போவான் என்பதை மேல் திருக்குறளால் உணர்த்தினார். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் என்னும் பல் அவையோர் சொல்லும் பழுது அல்ல" என்கின்றது சிலப்பதிகாரம்.
தீப்பால தான் பிறர்கண் செய்யற்க,நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்.
துன்பத்தைச் செய்தவருக்கே துன்பம் வந்து சேரும். இது இயற்கை நியதி. எனவே,தனக்குத் துன்பம் வந்து சேராமல் காத்துக் கொள்ள ஒருவன் விரும்பினால், அவன் பிறருக்குத் துன்பம் செய்யாமல் இருக்கவேண்டும்.
தன்னைத்தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
எவனும் தான் துன்பத்தை அடைய விரும்பமாட்டான். சுகமாய் வாழவே விரும்புவான். அப்படி எண்ணுபவன் எந்த வகையிலும், பிற உயிருக்குத் துன்பத்தை எண்ணுதல் கூடாது. தன்னைத் தானே காத்துக் கொள்ள ஒருவன் விரும்பினால், தனது உயிர் மீது அவனுக்கு அன்பு இருந்தால், தீய செயல்களைச் செய்தல் கூடாது. அது தீயை விடவும் கொடியத். தீயானது நெருங்கினால்தான் சுடும். ஆனால், தீய வினையானது எங்கு சென்றாலும்,எப்பிறவி எடுத்தாலும் தவறாமல் சுட்டுவிடும்.
பிறருக்குத் துன்பத்தை ஒருவன் செய்வதைக் காட்டிலும் முட்டாள்தனம் வேறு இல்லை. பிறர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்துக் கொண்டு, தனக்குத் துன்பத்தை விளைத்துப் பயிர் செய்து கொள்ளுவது போன்ற அறியாமை வேறு இருக்கவே முடியாது என்கின்றது அறநெறிச்சாரம்.
பிறர்க்கு இன்னா செய்தலில் பேதைமை இல்லை;
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டுத் - தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலில்
பித்தும் உளவோ பிற. --- அறநெறிச்சாரம்.
தனக்கு இன்பம் என்றால், அது பிறர்க்கும் இன்பத்தைத் தருவதாக அமையவேண்டும். பிறர்க்குத் துன்பத்தைச் செய்து இன்பத்தைக் காணுவது அறியாமை. தனக்குத் துன்பம் என்றால், அது பிறர்க்கும் துன்பத்தைத் தான் தரும் என்று அறிதல் வேண்டும்.
வினைப்பயன் ஒன்று இன்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா இன்னா பிறர்க்கு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
மலையைச் சார்ந்த கொல்லைகளில், பொன் போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டு இருக்கும், கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே! உனக்குத் துன்பம் தருவதாக இருப்பது, பிறருக்கும் துன்பம் தருவதே என்பதை அறிந்து கொள்வாயாக. எனவே, நீ செய்யும் செயலின் பயனை எண்ணிப் பாராமல், மனத்தில் கொண்டுள்ள வேற்றுமை காரணமாக, அதையே எண்ணி எண்ணி இருந்து, பிறருக்குத் துயரம் விளைக்கும் செயல்களைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
தனக்குத் துன்பமாய் இருக்கும் ஒன்று பிறருக்கும் துன்பமாகவே இருக்கும் என்பதை உணர்ந்து, துன்பம் தரும் செயல்களைச் செய்வதை விட்டுவிட வேண்டும் என்பதை அறிவுறுத்த, "தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு" என்னும் பழமொழி உண்டானது.
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலஆம், நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர்.
இப்போது வருகின்ற துன்பங்கள் எல்லாம், முன்பு பிறருக்குத் துன்பம் செய்தவரையே சாரும். எனவே,துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர், பிறருக்குத் துன்பம் செய்யாது இருத்தல் வேண்டும்.
"இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்"
என்கின்றது சிவஞானசித்தியார்.
----- இதம் உயிர்க்கு உறுதி செய்தல்.
----- அகிதம் மற்று அது செய்யாமை.
இதம் --- நன்மை, இன்பம். அகிதம் -- தீமை,துன்பம். உறுதி -- நன்மை. அகிதம் உயிருக்கு உறுதியைத் தராத்.
நன்மை தரும் செயலையோ, தீமை தரும் செயலையோ ஒருவன் செய்கின்றான் என்றால், அதன் பயன், அவனுக்கு இதற்கு முன், யார் நன்மையோ தீமையோ செய்தாரோ, அவரையே சென்று சாரும். பிறரிடம் அன்பு இருந்தால் தீமை செய்ய மனம் வராது.
எனவே, பிறரிடம் அன்பு காட்டப் புகும் முன்னர், ஒருவன் தன்னைத் தானே நேசிக்க வேண்டும். தனக்கு இன்பமானது தான், பிறருக்கும் இன்பமாக இருக்கும். தன்னே நேசிப்பவன், தனக்குத் தானே கேட்டை உண்டாக்கிக் கொள்ளமாட்டான். தனக்குக் கேடு வேண்டாம் என்பவன் பிறரிடம் அன்பு உள்ளவனாய் இருந்தால், பிறருக்கும் கேடு நினைக்கவோ,செய்யவோ மாட்டான். காரணம், அது தனக்கே திரும்பி வரும்.
இந்த உணர்வு இல்லாதவர்கள், உயிரோடு வாழ்ந்துகொண்டு இருந்தாலும், அவர்கள் செத்த பிணத்திற்குச் சமானமாக எண்ணப் படுவார்கள். தனக்குத் தானே அன்பு இல்லாதவனால் பிற உயிர்க்கு அன்பு காட்ட முடியாது. பிற உயிர்களிடத்தில் அன்பு இல்லாதவன், இறை அடியார்களிடத்திலும் அன்பாக இருக்கமாட்டான். எனவே, அவன் இறைவனிடத்திலும் அன்பு உள்ளவன் ஆக மாட்டான். பிணத்திற்கு அறிவு, அதற்கேற்ற செயல் எதுவும் இருக்காது. அன்பு இல்லாதவன் உயிரோடு இருந்தாலும், பிற உயிர்களிடத்து அன்பு காட்டவேண்டும் என்ற நல்லறிவும், அதற்கேற்ற செயலும் இல்லாமையால், அப்படிப்பட்டவரை "அறிவில்லாத பிணங்கள்" என்றார் அருள்நந்தி சிவாச்சாரியார். சிவஞானசித்தியாரில் வரும் பாடலைக் காண்போம்...
ஈசனுக்கு அன்புஇல்லார்,அடியவர்க்கு அன்பு இல்லார்,
எவ்வுயிர்க்கும் அன்பிலார்,தமக்கும் அன்பு இல்லார்,
பேசுவதுஎன்? அறிவில்லாப் பிணங்களை நாம் இணங்கில்
பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ;
ஆசையொடும் அரன் அடியார் அடியாரை அடைந்திட்டு
அவர் கருமம் உன்கருமம் ஆகச் செய்து,
கூசி மொழிந்து,அருள்ஞானக் குறியில் நின்று,
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே. --- சிவஞானசித்தியார்.
சிவனடியாரிடத்து அன்பு இல்லாதவர்கள் சிவபரம்பொருளின் இடத்தும் அன்பு இல்லாதவரே. அத்தகையவர்கள் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல் இல்லை. அவர்களுக்குத் தம் மீதும் அன்பு இல்லை. அத்தகையவர்கள் உயிரோடு இருந்தும் அறிவற்ற பிணத்தினை ஒத்தவர்கள். இதற்கு மேலும் அவர்களைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்களோடு இணங்கி இருத்தல் மேலும் பிறப்பு இறப்புக்களில் நம்மை ஆழ்த்தும். ஆதலால்,அவர்களை விட்டு நீங்கி இருத்தலே நலம் பயக்கும். சிவபிரானின் அடியார்க்கு அடியார்கள் கூட்டத்தில் அன்போடும் உன்னை இணைத்துக் கொண்டு,அவர்களுடைய திருத்தொண்டையே உனது தொண்டாகக் கொண்டு,அவர்களுடன் பணிவோடு பேசியும்,அவர்கள் குறித்த நெறியில் நின்றும்,அவரை வணங்கியும் மகிழ்ந்து கூத்தாடி வாழ்வாயாக.
அன்பு உடையவர் போல் ஒழுகுவது நாடகமாகவே இருக்க முடியும். எனவே, "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்றார் மணிவாசகப் பெருமான். "எவ்வுயிர்த் திரளும் உலகில் என் உயிர் எனக் குழைந்து உருகி, நன்மையாய் இதம் உரைப்ப" எனத் தாயுமான அடிகளார் பாடியது போல, உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தனது உயிரைப் போலவே கருதி,இதம் செய்து வாழவேண்டும்.
இக் கருத்துக்களை எல்லாம் வைத்து, இரத்தினச் சுருக்கமாக, வள்ளல்பெருமான் பாடி, நமக்கு வழிகாட்டி உள்ளார்.
எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே
எண்ணி, நல் இன்புறச் செ(ய்)யவும்,
அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்சம் நீக்கிடவும்,
செவ்வை உற்று, உனது திருப்பதம் பாடி,
சிவசிவ என்று கூத்தாடி,
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே
ஓங்கவும் இச்சைகாண்,எந்தாய். --- திருவருட்பா.
இதன் பொருள் ---
எனது உயிர்த் தந்தை ஆகிய சிவபரம்பொருளே! உயிர் வகைகள் யாவையும் எனது உயிர் போலக் கருதி, அவை அனைத்தும் நல்ல இன்பத்தைப் பெறச் செய்யவும், அவற்றிற்கு, வருகின்ற துன்பங்கள் யாவற்றையும் நீக்கி,அவற்றை அலைக்கும் அச்சத்தைப் போக்கவும், எனது மனத்தில் செம்மையான அறநெறியை இருத்தி,உன்னுடைய திருவடிகளை வாயாரப் பாடி,சிவசிவ என்று இன்பக் கூத்தாடி, உள்ளத்தில் பொருந்துகின்ற மகிழ்ச்சியினால், எனதுஅறிவு கெடாமல் இவ்வுலகில் உயர்வு பெறவும் விரும்புகின்றேன்.
எனவே, முதலில் தனக்கு நன்மையை விரும்புபவன், "தன்னைத் தான் காதலன் ஆகின்",எந்த உயிருக்கும் எந்தவிதமான தீமையையும் எண்ணாமலும், செய்யாமலும் இருக்கக் கடவன் "எனைத்து ஒன்றும் துன்னற்க தீவினைபால்". அதுதான், உயிர்களை மீது வைத்த உண்மையான அன்பு. அல்லாத எல்லாம் வெறும் நடிப்பாகவே அமையும்.
பிறரை நேசிக்கப் புகும் முன்பு ஒருவனை தன்னைத் தானே நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கு எது நல்லதோ, அது பிறருக்கும் நல்லது. தனக்கு எது தீமையோ, அது பிறருக்கும் தீமை. எந்த உயிரும் இன்பத்தை விரும்புவது அன்றி, துன்பத்தை ஒருபோதும் விரும்புவது இல்லை.
"எவ்வுயிரும் தன்உயிர்போல் எண்ணும் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்பது எந்நாளோ?".
எத்தகைய சிற்றுயிரினையும் தன் உயிர்போல் நினைக்கின்ற நன்னெறிச் செல்வர்களாகிய தவத்தினர்கள் பெற்றுள்ள நல்ல அறிவினை விரும்பி, அதன் பொருட்டு அடியேன் மிகுந்த சிந்தை வைப்பது எந்நாளோ?
"எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும், நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே". --- தாயுமானார்.
எத்தகைய சிற்றுயிர்க்கும் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்று,அவ்வவற்றை இயக்கி அருள்பவன் நீயே பரம்பொருளே!. ஆகையால், எல்லா உயிர்களிலும் பொருந்தி உள்ள உனது தொடர்பை நினைந்து,அனைத்து உயிர்களையும் எனது உயிர்போல் எண்ணி இரக்கம் உற்று,அவற்றிற்கு அன்பால் உதவி செய்து ஒழுகும்படி உனது தெய்வத் திருவருட் பெருங்கருணையைச் செய்து அருளவேண்டும்.
No comments:
Post a Comment