மதுரை --- 0973. மனநினை சுத்தம்

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மனநினை சுத்தம் (மதுரை)

 

முருகா! 

விலைமாதர் கூட்டுறவை விடுத்து,  

தேவரீரது திருவடியில் பொருந்தி இருக்க அருள்வாய்.

 

 

தனதன தத்தந் தான தானன

     தனதன தத்தந் தான தானன

          தனதன தத்தந் தான தானன ...... தனதான

 

 

மனநினை சுத்தஞ் சூது காரிகள்

     அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்

          மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக

 

வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்

     விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்

          வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே

 

குனகிகள் பட்சம் போல பேசிகள்

     தனகிக ளிச்சம் பேசி கூசிகள்

          குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்

 

கொளுவிக ளிட்டம் பாறி வீழ்பட

     அருளமு தத்தின் சேரு மோர்வழி

          குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்

 

தனதன தத்தந் தான தானன

     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு

          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி

 

தவில்முர சத்தந் தாரை பூரிகை

     வளைதுடி பொற்கொம் பார சூரரை

          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா

 

தினைவன நித்தங் காவ லாளியள்

     நகைமுறை முத்தின் பாவை மான்மகள்

          திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே

 

திரிபுர நக்கன் பாதி மாதுறை

     யழகிய சொக்கன் காதி லோர்பொருள்

          செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

மனம் நினை சுத்தம் சூது காரிகள்,

     அமளி விளைக்கும் கூளி,மூளிகள்,

          மத பல நித்தம் பாரி நாரிகள்,...... அழகாக

 

வளை குழை முத்தும் பூணும் வீணிகள்,

     விழலிகள்,மெச்ச உண்டு ஆடி பாடிகள்,

          வரமிகு வெட்கம் போல ஓடிகள்,...... தெரு ஊடே

 

குனகிகள்,பட்சம் போல பேசிகள்,

     தனகிகள்ச்சம் பேசி கூசிகள்,

          குசலிகள்,வர்க்கம் சூறை காரிகள்,......பொருள்ஆசைக்

 

கொளுவிகள்ட்டம் பாறி வீழ்பட,

     அருள் அமுதத்தின் சேரும் ஓர்வழி

          குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட ......அருள்தாராய்.

 

தனதன தத்தந் தான தானன

     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு

          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி

 

தவில் முரசு அத்தம் தாரை பூரிகை

     வளை துடி பொற்கொம்பு ஆர சூரரை,

          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா!

 

தினைவனம் நித்தம் காவல் ஆளியள்,

     நகைமுறை முத்தின் பாவை,மான்மகள்,

          திகழ்பெற நித்தம் கூடி ஆடிய ...... முருகோனே!

 

திரிபுர நக்கன்,பாதி மாது உறை

     அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள்

          செல அருளித் தென் கூடல் மேவிய ...... பெருமாளே.

 

பதவுரை 

 

            தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என பேரி--- தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என்ற இத்தகைய ஒலிகளுடன் பேரிகைகள்

 

            தவில்--- தவில்,

 

            முரசு--- முரசுகள்,

 

            சத்தம் தாரை--- ஒலி செய்கின்ற தாரைகள்,

 

            பூரிகை --- ஊதுகுழல்கள்,

 

            வளை --- வளைந்த குழல்,

 

            துடி--- உடுக்கை,

 

            பொன் கொம்பு ஆர--- அழகிய கொம்புகள் ஆகியவை நிறைந்து பேரொலி செய்ய,

 

            சூரரை சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா--- சூராதி அவணர்கள் யாவரும் சிதறுண்டு அழியுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            தினை வன(ம்) நித்தம் காவலாளியள்--- தினைவனத்தை தினமும் காவல் புரிந்துகொண்டு இருந்தவள்,

 

            நகை முறை முத்தின் பாவை --- முத்துக்கள் வரிசையாக அள்ளது போன்ற பல் வரிசைகளை உடைய பாவை போன்றவளும்,

 

            மான்மகள்--- மானின் வயிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகி,

 

            திகழ்பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே --- மகிழுமாறு தினமும் கூடி விளையாடிய முருகப் பெருமானே!

 

            திரிபுர நக்கன்--- முப்புரங்களை சிரித்தே எரித்தவர்,

 

           பாதிமாது உறை அழகிய சொக்கன் காதில்--- திருமேனியின் ஒஒரு பாதியில் உமையம்மையைக் கொண்டு அழகியவன் ஆகிய சிவபரம்பொருளின் திருச்செவியில்,

 

            ஓர் பொருள் செல அருளி --- ஒப்பற்ற பிரணவத்தின் பொருளானது புகுமாறு அருள் புரிந்து,

 

            தென் கூடல் மேவிய பெருமாளே --- அழகிய கூடல் என்னும் மதுரையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே! 

 

            மன(ம்) நினை சுத்தம் சூதுகாரிகள்--- மனநினைவில் முழுதும் வஞ்சகமான எண்ணங்களையே கொண்டவர்கள்

 

            அமளி விளைக்கும் கூளி மூளிகள்--- கலகத்தை விளைக்கின்ற பேய்கள்,  உள்ள அழகு இல்லாதவர்கள்,

 

            மதபலம் நித்தம் பாரி நாரிகள்--- ஆணவத்தோடு கூடிய தமது பலத்தை நாளும் வெளிபடுத்துகின்றவர்கள்,

 

            அழகாக வளை குழை முத்தும் பூணும் வீணிகள்---அழகு விளங்கும்படிகையில் வளையல்களும்காதில் குழைகளும், (மார்பில்) முத்து மாலைகளையும் அணிந்து வீண்பொழுது போக்குபவர்கள்,

 

            விழலிகள்--- பயன் அற்றவர்கள்,

 

           மெச்சுண்டு ஆடி பாடிகள்--- பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள்,

 

            வர மிகு வெட்கம் போல ஓடிகள்--- வருவதற்கு மிக்க நாணம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள்,

 

           தெருவூடே குனகிகள்--- தெருத்தலையில் நின்று கொஞ்சிப் பேசுபவர்கள்,

 

           பட்சம் போலப் பேசிகள்--- அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள்,

 

            தனகிகள்--- சரசம் செய்பவர்கள்,

    

            இச்சம் பேசி கூசிகள்--- விருப்பத்தைப் பேசக்  கூசுவது போல் நடிப்பவர்கள்,   

 

           குசலிகள் --- தந்திரத்தில் வல்லவர்கள்,

 

            வ(ரு)க்கம் --- பிசாசுகள்,

 

            சூறைகாரிகள்--- கொள்ளைக்காரிகள்,

 

            பொருள் ஆசைக் கொளுவிகள்--- பொருளைப் பற்றுவதில் ஆசை கொண்டவர்கள்,

 

            இட்டம் பாறி வீழ்பட--- (இத்தகைய விலைமாதர் மீது) எனக்கு உள்ள விருப்பமானது நிலைகெட்டு அழியுமாறு,

 

            அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி --- திருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு உரிய ஒப்பற்ற நெறியை அடைவதை

 

            குறிதனில் உய்த்து--- இலக்காக வைத்து,

 

            உன் பாதம் ஏறிட அருள் தாராய்--- தேவரீருடைய திருவடிகளில் கூடி இருக்க அருள் புரிவாய்.

 

பொழிப்புரை

 

            தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என்ற இத்தகைய ஒலிகளுடன் பேரிகைகள்தவில்கள்முரசுகள்ஒலி செய்கின்ற தாரைகள்ஊதுகுழல்கள்வளைந்த குழல்கள்உடுக்கைகள்அழகிய கொம்புகள் ஆகியவை நிறைந்து பேரொலி செய்ய,சூராதி அவணர்கள் யாவரும் சிதறுண்டு அழியுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            தினைவனத்தை தினமும் காவல் புரிந்துகொண்டு இருந், முத்துக்கள் வரிசையாக அள்ளது போன்ற பல் வரிசைகளை உடைய பாவை போன்றவளும்மானின் வயிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகிமகிழுமாறு தினமும் கூடி விளையாடிய முருகப் பெருமானே!

 

            முப்புரங்களை சிரித்தே எரித்தவர்திருமேனியின் ஒரு பாதியில் உமையம்மையைக் கொண்டு அழகியவன் ஆகிய சிவபரம்பொருளின் திருச்செவியில்ஒப்பற்ற பிரணவத்தின் பொருளானது புகுமாறு அருள் புரிந்துஅழகிய கூடல் என்னும் மதுரையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே! 

 

            மனநினைவில் முழுதும் வஞ்சகமான எண்ணங்களையே கொண்டவர்கள்கலகத்தை விளைக்கின்ற பேய்கள்;  உள்ள அழகு இல்லாதவர்கள்;ஆணவத்தோடு கூடிய தமது பலத்தை நாளும் வெளிபடுத்துகின்றவர்கள்அழகு விளங்கும்படிகையில் வளையல்களும்காதில் குழைகளும், (மார்பில்) முத்து மாலைகளையும் அணிந்து வீண்பொழுது போக்குபவர்கள்; பயன் அற்றவர்கள்பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள்வருவதற்கு மிக்க நாணம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள்;தெருத்தலையில் நின்று கொஞ்சிப் பேசுபவர்கள்அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள்சரசம் செய்பவர்கள்விருப்பத்தைப் பேசக் கூசுவது போல் நடிப்பவர்கள் தந்திரத்தில் வல்லவர்கள்பிசாசுகள்கொள்ளைக்காரிகள்பொருளைப் பற்றுவதில் ஆசை கொண்டவர்கள்இத்தகைய விலைமாதர் மீது எனக்கு உள்ள விருப்பமானது நிலைகெட்டு அழியுமாறுதிருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு உரிய ஒப்பற்ற நெறியை அடைவதை இலக்காக வைத்துதேவரீருடைய திருவடிகளில் கூடி இருக்க அருள் புரிவாய்.

 

 

விரிவுரை

 

மன(ம்) நினை சுத்தம் சூதுகாரிகள்---

 

சூது --- வஞ்சகம். 

            

அமளி விளைக்கும் கூளி மூளிகள்--- 

 

அமளி --- கலகம்ஆரவாரம். 

 

கூளி -- பேய்.

 

மூளி -- அழகற்றவர்.

 

மதபலம் நித்தம் பாரி நாரிகள்--- 

 

பாரி -- வளர்த்தல்.

 

நாரிகள் --- பெண்கள்.

 

விழலிகள்--- 

 

பயன் அற்றவர்கள்,

 

தெருவூடே குனகிகள்--- 

 

குனகுதல் --- கொஞ்சிப் பேசுதல்.

 

பட்சம் போலப் பேசிகள்--- 

 

பட்சம் --- அன்பு.

            

தனகிகள்--- 

 

தனகுதல் --- சரசம் புரிதல். 

 

குசலிகள்---

 

குசலம் --- தந்திரம். 

     

வ(ரு)க்கம்---

 

வருக்கம் --- பிசாசு.

 

அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி --- 

 

திருவருளாகிய அமுதம் என்பதால்விலைமாதர் மீது வைத்து அன்பு விடத்தைப் போன்றது என்பது கருத்து.

 

குறிதனில் உய்த்து--- 

 

குறி --- இலக்கு.  உய்த்தல் --- செலுத்துதல்,

 

தினை வன(ம்) நித்தம் காவலாளியள்--- 

 

இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார்சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்துதினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

     உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும்மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய் போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும்சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

(1)   ஒரு நாளைக்கு 50ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.  இது பொய். உண்மையாக இருக்கும்பட்சத்தில்,நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன்,புத்தகம் அடங்கிய பெரிய பையைச் சுமந்துவிற்றுக்கொண்டு அலைய வேண்டாமே

(2)      இந்த மருந்து பல வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000இனாம். இதுவும் பொய். 

(3)      நோயில்லாத பொழுதுமருத்துவரிடம் பணம் தந்துமருத்துவச் சான்றிதழ் பெற்றுவிடுமுறை எடுத்தல்

     இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

இந்தப் பொய்யான வாழ்க்கையால்ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்துநல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும்.

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி,முன்பு உற

மெய் எ(ன்)னும் எருவை விரித்துங்கு ஐயம் இல்

பத்தித் தனிவித்து இட்டு,நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சிஉள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட,அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி,செம்மையின் ஓங்கி,

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டும் எனக்

கண்ணீர் அரும்பி,கடிமலர் மலர்ந்து,

புண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி,நஞ்சுபொதி

காள கண்டமும்,கண்ஒரு மூன்றும்,

தோள்ஒரு நான்கும்,சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று,தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்,

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

 

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப,சிலர்இதின் வாராது

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி,

 

காமக் காடு மூடி,தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர,

இச்சைவித்து உகுத்துழி,யான் எனப் பெயரிய

 

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி,செய்யும்

பாவப் பல்தழை பரப்பிப்,பூ எனக்

கொடுமை அரும்பிகடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி,பின்பு

 

மரணம் பழுத்து,நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

 

என வரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவைஎன்னும் அருள் நூலில்மெய்ம்மையான உழவு குறித்தும்அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

இதன் பொருள்---

            நெஞ்சப் புனத்து --- மனமாகிய கொல்லைப் புறத்தில்வஞ்சக் கட்டையை வே ர்அற அகழ்ந்து போக்கி --- (அநாதியே முளைத்து வேர்விட்டு இருந்தவஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்திதூர்வை செய்து --- நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்திஅன்பு என் பாத்தி கோலி--- அன்பு என்னும் பாத்தியை ச்செய்துமுன்புற மெய் (ன்)னும் எருவை விரித்து --- முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டுஆங்கு --- அந்த க்கொல்லையில்ஐயம் இல் பத்தித் தனி வித்து இட்டு ---பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாதபத்தி எனப்படுகின்ற விதையை விதைத்துநித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி --- நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சி ,நேர் நின்று--- எதிரில் நின்றுதடுக்குநர்க்கு அடங்காது --- உள்புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காதுஇடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி ---துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டி மாடுகளுக்குப் பயந்துஉள் சென்று--- அவைகளைத் தடுப்பதற்குகொல்லையின் உள்ளே சென்றுசாந்த வேலி கோலி --- சாந்தம் என்னும் வேலியினை அமைத்துவாய்ந்த பின் --- (இவை அனைத்தும்முடிந்த பின்னர்ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து --- ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்துகருணை இளந்தளிர் காட்ட--- அது வளர்ந்துகருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து ,அருகா --- எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்றகாமக் குரோதக் களை அறக் களைந்து--- காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வேரோடு பறித்து எறிந்துசேமப் படுத்துழி --- அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர்செம்மையின் ஓங்கி --- செம்மையாக வளர்ந்துமெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு --- உடம்பில் உள்ளமயிர்க் கால் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னு ம்அரும்பு உண்டாகிஅம் எனக் கண்ணீர் அரும்பி --- அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டுகடிமலர் மலர்ந்து --- ஞானமணம் உள்ள மலர் மலர்ந்துபுண்ணிய  அஞ்செழுத்து அருங்காய் தோன்றி --- புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகிநஞ்சு பொதி காளகண்டமும் --- ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும்,கண் ஒரு மூன்று ம்--- ஒப்பற்றமூன்றுதிருக்கண்களும்தோள் இரு நான்கும்---எட்டுத் திருத்தோள்களும்சுட ர்முகம் ஐந்தும் --- அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும்பவளநிறம் பெற்று--- பவளநிறத்தோடு விளங்கிதவள நீறு பூசி --- வெண்மையான திருநீற்றினைப் பூசிஅறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் --- கைப்புஇனிப்புதுவர்ப்புகார்ப்புபுளிப்புஉவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய்காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் --- கண்ணால் கண்டாலும்,காதால் கேட்டாலும்மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்றசேண் உயர் மருதமாணிக்கத் தீங்கனி--- மிக உயர்ந்த மருத மாணிக்கம் என்னும் இனிய கனியானதுபையப் பையப் பழுத்துக் கை வர --- மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்கஎம்மனோர்கள் இனிது இனிது அருந்திச் செம்மாந்து இருப்ப --- எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியைஇன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

            சிலர் இதின் வாராது --- இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர்இந்த உழைப்பினை முயலாதுமனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி --- மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ்நிலமாக இருக்க விட்டுகாமக் காடு மூடி--- காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால்தீமை செய் ஐம்புல வேடர் ஆறலைத்து  ஒழுக --- தீமைகளைப் புரிகின்ற ஐம்புல வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்கஇன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட --- சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட,  கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர--- கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படிஇச்சை வித்து உகுத்துழி--- ஆசை என்னும் வித்தை(அந்தப் பாழ்நிலத்தில்உதிர்த்த காலத்தில்,யான் எனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்து --- நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சு மரமானது மிகவும் முளைத்துபொய் என் கவடுகள் போக்கி --- பொய்ம்மையாகி கிளைகளைப் பரப்பி,செய்யும் பாவப் பல் தழை பரப்பி --- செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்துபூ எனக் கொடுமை அரும்பி --- கொடுமை என்னும் அரும்புகளை விட்டுகடுமை மலர்ந்து --- தீமையே மலர்ந்துதுன்பப் பல்காய் தூக்கி --- துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டுபின்பு --- அதன் பின்புமரணம் பழுத்து --- மரணம் என்கின்ற பழமானது பழுத்துநரகிடை வீழ்ந்து --- நரகத்தில் விழுந்துதமக்கும் பிறர்க்கும் உதவாது --- தமக்கும்மற்றவர்க்கும் பயன்படாதுஇமைப்பில் கழியும் --- இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின்றஇயற்கையோர் உடைத்தே--- குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.  

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய் எ(ன்)னும்

தூய்மை இல் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை,

அரிதின் இகழ்ந்து போக்கி,பொருதிறல்

மையஇருள் நிறத்து மதன் உடை அடுசினத்து

ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி,அருள்விளக்கு ஏற்றித்

துன்ப இருளைத் துரந்து,முன்புறம்

மெய்யெனும் விதானம் விரித்து,நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கி,

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு

எந்தை! நீ இருக்க இட்டனன்.... எம்பெருமானே!

 

என்று "திருக்கழுமல மும்மணிக் கோவைஎன்னும் அருள்நூலில்பட்டினத்தடிகள்மெய்ம்மையான உழவைச் செய்துதமது உள்ளம் என்னும் பாழறையைஇறைவனுக்குப் பள்ளியறை ஆக்கிய அருமை குறித்துப் பாடி உள்ளார்.

இதன் பொருளைச் சிந்திப்போம்....

            கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்--- நான் கருவில் அகப்பட்டுபூமியில் பிறக்கத் தொடங்கிய காலம் முதலாகக் கழிந்த எண்ணில்லாத காலங்கள் எல்லாம்காமம்--- காமத்தால் விளைந்த தீமையும்வெகுளி--- நல்லோரையும் மற்றோரையும் கோபித்துக் கொண்டதால் வந்த தீமையும்கழிபெரும் பொய் (ன்)னும்--- மிகுதியாகப் பொய்யைப் பேசுவதால் வந்த தீமையும் எனப்படும்தூய்மையில் குப்பை--- தூய்மை இல்லாத குப்பைகள்தொலைவின்றிக் கிடந்ததை--- அழியாமல் இருப்பில் இருந்தவற்றைஅரிதின் இகழ்ந்து போக்கி--- நீக்கக் கூடாதவையாக இருந்த அவற்றால் விளைந்த தீமைகளால் அவற்றை வெறுத்துஅவை என்னை விட்டு ப்போகும்படியாகச் செய்துபொருதிறல்--- போர் புரியும் தன்மை கொண்டமை இருள் நிறத்து--- மிக்க கருமை நிறம் கொண்டமதன் உடை--- மதம் பிடித்தஅடுசினத்து ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி--- கொல்ல த்தக்க கோபத்தினை உடைய ஐந்து வகையான வேறுபட்ட ஒழுக்கம் கொண்டஐந்து புலன்கள் ஆகிய கடாக்களையும்அவைகள் கட்டப்பட்டு இருந்த கட்டினை அவிழ்த்து அப்புறப்படுத்தி,  அன்புகொடு மெழுகி--- அந்த இடத்தினை அன்பு என்னும் நீரால் மெழுகிஅருள்விளக்கு ஏற்றி--- அருள் என்னும் விளக்கினை ஏற்றி வைத்துதுன்ப இருளைத் துரந்து--- துன்பமாகிய இருட்டினை ஓட்டிமுன்பு றம்--- இவ்வாறு இருந்த அந்த இடத்தில்,  மெய் (ன்)னும் விதானம் விரித்து--- வாய்மை என்கின்ற மேற்கட்டினை விரித்து விளங்கக் கட்டிநொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் பாழறை---அற்பமாகிய தாழ்ந்த குணங்களில் சிக்கியிருந்த எனது மனமாகிய பாழானஅறையைஎந்தைஉனக்குப் பள்ளியறை ஆக்கி--- எனதுபெருமானேநீ திருத் துயில்கொண்டு இருக்கும் இடமாகப் பண்ணிஅந்தப் பள்ளியறையில்நீஇருக்க--- தேவரீர் எழுந்தருளி இருக்கசிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு இட்டனன்--- எனது சிந்தையாகிய அழகிய தாமரை மலரினால் ஆகிய அழகிய இருக்கையை இட்டு வைத்தேன்

            இவ்வாறுமனம்என்னும்நல்லகொல்லைப்புனத்தில்வளர்கின்றநல்ல எண்ணம் ஆகிய தினைப்பயிரைதீய எண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல்புரிந்து கொண்டுஇறைவனையே எண்ணித் தவம் புரிந்துகொண்டுதமது மனத்தை முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கும் பள்ளியறையாக மாற்றி இருந்தவர்சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டிஅகிலாண்டநாயகியாகிய வள்ளித்தாயார்நாரதர் ஆகிய பழஅடியார் பரிந்துரைக்கஅவரது சகாயத்தோடுமுருகப்பெருமான் அந்த சீவான்மா ஆகிய வள்ளிநாயகியைத் தேடிவந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

            வள்ளிநாயகியார் தினைப்புனம் காத்த வரலாறு அவ்வளவு உண்மைகள் பொதிந்தது. சிந்தித்துதெளிவு பெற்று வாழ்ந்து காட்டுவோமாக.

மான்மகள்--- 

 

மானின் வயிற்றில் உதித்தவர் வள்ளிநாயகி,

 

திரிபுர நக்கன்--- 

 

நகுதல் --- சிரித்தல்.

     

பாதிமாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள் செல அருளி--- 

 

சொக்கு --- அழகு.

 

அழகு வாய்ந்தவர் என்பதால்மதுரையில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமானுக்கு, "சொக்கன்" என்றும் "சொக்கேசன்" என்றும், "சொக்கநாதர்" என்றும் திருப்பெ ர்கள் வழங்கலாயின. சொக்கேசன் திருச்செவியில் ஒப்பற்ற பிரணத்தின் பொருளானது உட்புகுமாறு அறிவுறுத்தியவர் முருகப் பெருமான்.

 

தென் கூடல் மேவிய பெருமாளே --- 

 

தென் கூடல் --- அழகிய கூடல் மாநகரம்,மதுரை ஆகும்.

 

மதுரை "நான்மாடக் கூடல்" ஆன வரலாறு....

 

பண்டைய பாண்டிய நாட்டை அபிடேகபாண்டியன்ஆட்சி செய்து வந்த காலத்தில்பேரூழி ஏற்பட்டது. இதனால் கடல் பொங்கிச் சீற்றம் கொண்டுகடலலைகள் மதுரைவரை வந்தன. அப்போது பூமியில் படிந்த கடல்நீர் எல்லாம் ஆவியாகி ஏழு மேகங்களாக மாறின. இம் மேகங்கள்பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளுடன்பளிங்குத் தாரை போன்ற நீர்த் தாரைகளுடன்  இடைவிடாது மழையாய் பெய்தன. இப் பெருமழையில் மதுரை மாநகரம் அழியும் நிலை ஏற்பட்டது.  அப்போதுமதுரை சோமசுந்தரப் பெருமான் திருவருள் செய்துதனது சடைமுடியிலிருந்து நான்கு மேகக் கூட்டங்களை அனுப்பினார். இந்த நான்கு மேகக் கூட்டங்களும் மதுரையை வளைத்து மாடங்களாகிச் சந்துவாய் தெரியாதவாறுமதுரைக்கு மேலே ஒரு குடைபோல் காத்து நின்றன. இதனால் பெருமழையின்  அழிவிலிருந்து மதுரை மாநகரம் காப்பாற்றப் பெற்றது. இந் நிகழ்ச்சியால் மதுரைக்கு, "நான்மாடக் கூடல்" என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம். 

 

"வன்திறல் வருணன் விட்ட மாரியை விலக்க,ஈசன்

மின்திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்

குன்றுபோங் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே

அன்றுநான் மாடக் கூடல் ஆனதால் மதுரை மூதூர்". --- திருவிளையாடல் புராணம்.

                           

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் கூட்டுறவை விடுத்து,  தேவரீரது திருவடியில் பொருந்தி இருக்க அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...