திரு இலஞ்சி --- 0981. மாலையில் வந்து

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மாலையில் வந்து (இலஞ்சி)

 

முருகா! 

திருவருள் புரிவாய்.

 

 

தான தனந்த தான தனந்த

     தனா தனந்த ...... தனதான

 

 

மாலையில் வந்து மாலை வழங்கு

     மாலை யநங்கன் ...... மலராலும்

 

வாடை யெழுந்து வாடை செறிந்து

     வாடை யெறிந்த ...... அனலாலுங்

 

கோல மழிந்து சால மெலிந்து

     கோமள வஞ்சி ...... தளராமுன்

 

கூடிய கொங்கை நீடிய அன்பு

     கூரவு மின்று ...... வரவேணும்

 

கால னடுங்க வேலது கொண்டு

     கானில் நடந்த ...... முருகோனே

 

கான மடந்தை நாண மொழிந்து

     காத லிரங்கு ...... குமரேசா

 

சோலை வளைந்து சாலி விளைந்து

     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே

 

சூரிய னஞ்ச வாரியில் வந்த

     சூரனை வென்ற ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

மாலையில் வந்து மாலை வழங்கு

     மாலை அநங்கன் ...... மலராலும்,

 

வாடை எழுந்து வாடை செறிந்து

     வாடை எறிந்த ...... அனலாலும்,

 

கோலம் அழிந்து,சால மெலிந்து,

     கோமள வஞ்சி ...... தளராமுன்,

 

கூடிய கொங்கை நீடிய அன்பு

     கூரவும் இன்று ...... வரவேணும்.

 

காலன் நடுங்க வேல்அது கொண்டு

     கானில் நடந்த ...... முருகோனே!

 

கான மடந்தை நாணம் ஒழிந்து,

     காதல் இரங்கு ...... குமரேசா!

 

சோலை வளைந்து சாலி விளைந்து

     சூழும் இலஞ்சி ...... மகிழ்வோனே!

 

சூரியன் அஞ்ச வாரியில் வந்த

     சூரனை வென்ற ...... பெருமாளே!

 

பதவுரை

 

      காலன் நடுங்க வேல் அது கொண்டு--- யமன் நடுங்கதிருக்கையில் வேலாயுதத்தைக் கொண்டு

 

     கானில் நடந்த முருகோனே--- (பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகப் பெருமானே!

 

     கான மடந்தை நாணம் ஒழிந்து--- வள்ளிமலைக் காட்டில் இருந்த மடந்தையாகிய வள்ளிநாயகி இடம் நாணம் இல்லாமல் பேசி,

 

     காதல் இரங்கு குமரேசா--- அவள்மீது இருந்த காதலை வெளிப்படுத்திய குமாரக் கடவுளே!

 

     சோலை வளைந்து--- சோலைகளால் சூழப் பெற்று,

 

     சாலி விளைந்து சூழும்--- நெல்வயல்களால் சூழப்பபெற்று உள்ள

 

     இலஞ்சி மகிழ்வோனே ---  இலஞ்சி என்னும் திருத்தலத்தில் திருவுள்ளம் மகிழ்ந்து திருக்கோயில் கொண்டவரே! 

 

     சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே--- சூரியன் தான் உதிப்பது எப்படி என்று அஞ்சகடலில் மாமரமாக எழுந்து நின்ற சூரபதுமனை வென்ற பெருமையில் சிறந்தவரே!

 

     மாலையில் வந்து--- மாலை நேரத்தில் வந்து,

 

     மாலை வழங்கு--- காம மயக்கத்தைத் தருகின்ற 

 

     மாலை அனங்கன் மலராலும்--- மாலையை அணிந்த மன்மதன் விடுகின்ற மலர்க் கணைகளாலும்,

 

     வாடை எழுந்து-- வாடைக் காற்று மிகுந்து

 

     வாடை செறிந்து--- அந்தக் காற்றின் ஊடே வருகின்ற மலர் மணத்தாலும்,

 

     வாடை எறிந்த அனலாலும்--- உடலும் உள்ளமும் வாடுமாறு எழுந்த காம அக்கினியாலும்,

 

     கோலம் அழிந்து--- அழகு அழிந்து,

 

     சால மெலிந்து--- உடலும் உள்ளமும் மெலிவுற்று,

 

     கோமள வஞ்சி தளரா முன்--- அழகு வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற இந்த இளம்பெண் சோர்வு அடைவதற்கு முன்பு,

 

     கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவும்--- இளமையான கொங்கைகள் அன்பு மிகுதியால் விம்மிதம் அடையும்படிக்கு

 

     இன்று வரவேணும்-- இன்று தேவரீர் வந்து அருள் புரிய வேண்டும்.

 

பொழிப்புரை

 

     யமன் நடுங்கதிருக்கையிலே வேலாயுதத்தைக் கொண்டு

பொய்யாமொழிப் புலவர் வரும் காட்டில் வேட்டுவக் கோலம் பூண்டு நடந்த முருகப் பெருமானே!

 

     வள்ளிமலைக் காட்டில் இருந்த மடந்தையாகிய வள்ளிநாயகி இடம் நாணம் இல்லாமல் பேசிஅவள்மீது இருந்த காதலை வெளிப்படுத்திய குமாரக் கடவுளே!

 

     சோலைகளால் சூழப் பெற்றுவயல்களில் நெல் விளைந்து சூழ்ந்துள்ளஇலஞ்சி என்னும் திருத்தலத்தில் திருவுள்ளம் மகிழ்ந்து திருக்கோயில் கொண்டவரே! 

 

     சூரியன் தான் உதிப்பது எப்படி என்று அஞ்சகடலில் மாமரமாக எழுந்து நின்ற சூரபதுமனை வென்ற பெருமையில் சிறந்தவரே!

 

     மாலை நேரத்தில் வந்துகாம மயக்கத்தைத் தருகின்றமாலையை அணிந்த மன்மதன் விடுகின்ற மலர்க் கணைகளாலும்வாடைக் காற்று மிகுந்துஅந்தக் காற்றின் ஊடே வருகின்ற மலர் மணத்தாலும்உடலும் உள்ளமும் வாடுமாறு எழுந்த காம அக்கினியாலும்,அழகு அழிந்துஉடலும் உள்ளமும் மெலிவுற்றுஅழகு வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற இந்த இளம்பெண் சோர்வு அடைவதற்கு முன்புஅவளது இளமையான கொங்கைகள் அன்பு மிகுதியால் விம்மிதம் அடையும்படிக்குஇன்று தேவரீர் வந்து அருள் புரிய வேண்டும்.

 

விரிவுரை

 

இத் திருப்புகழ்ப் பாடல் அகத்துறையில் பாடப் பெற்றது.

 

மாலையில் வந்து--- 

 

மாலைக் காலத்தில் தான் காமநோய் வேதனைப் படுத்தும்.

 

"காலை அரும்பிபகல் எல்லாம் போது ஆகி,

மாலை மலரும் இந்நோய்"             --- திருக்குறள்.

 

மாலை வழங்கு--- 

 

மால் -- மயக்கம்ஆசைகாமம்.

 

மாலை அனங்கன் மலராலும்--- 

 

மகிழம்பூ மாலையை அணிந்த மன்மதன்,மலர்க் கணைகளை விடுத்துக் காம உணர்வைத் தூண்டுவான்.

 

வாடை எழுந்து-- 

 

வாடை --- வாடைக் காற்று. வடதிசையில் இருந்து வாசும் குளிர்க்காற்று.

 

வாடை செறிந்து--- 

 

வாடை --- மணம். 

 

வாடை எறிந்த அனலாலும்--- 

 

வாடை --- வாட்டம்.

 

வேல்அது கொண்டுகானில் நடந்த முருகோனே ---

 

பொய்யாமொழிப் புலவருக்கு முருகப் பெருமான் அருள் புரிந்த வரலாற்றை சுவாமிகள் பாடுகின்றார்.பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலத்தில் சைவ வேளாளர் குடியில் தோன்றியவர்.இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

 

ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார்.வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார்.

 

பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணினார்மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த வெவ்விய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச்சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றினார்."இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது"எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார்.அப்போது முருக வேடன் நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன் "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் முருகவேள். "தெரியும்"  என்றார் புலவர்.முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல்பாடுக"  என்று கூறினார். உடனே புலவர் உன் பெயர் யாதெனக் கேட்டனர். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவாகக் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"

 

என்னும் வெண்பாவைப் பாடினர்

 

இச்செய்யுளைக் கேட்டுக்கொண்டிருந்த முருகவேடன்,   "இச் செய்யுளிற் பொருள் குற்றமுளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி  அதன் பொறிபறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்கஇயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோயான் பாடுவேன்கேட்டிடுகஎன்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

     அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்றுகூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  இவ்வுருவில் வந்துள்ளது  முருகப்பெருமானே எனத் துணிந்தனர். தம் பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலங் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

"முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”  --- (பத்தித்தர) திருப்புகழ்.

                                                                                     

"கல் தாவில் காட்டிக் கரைதுறை

   நற்றாயில் காட்டிப் புகழ்கமலை

   கற்றார்சொல் கேட்கத் தனிவழி வருவோனே”.   --- (சிற்றாய) திருப்புகழ்.

                                                                             

பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்து,எனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”              --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.

                                                   

 

கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா--- 

 

கானம் --- காடு. வள்ளிமலைக் காடு. 

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால்அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டிவேட்டுவர் குடிலில் தவழ்ந்தும்தளர்நடை இட்டும்முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,சிற்றில் இழைத்தும்சிறு சோறு அட்டும்வண்டல் ஆட்டு அயர்ந்தும்முச்சிலில் மணல் கொழித்தும்அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து,கன்னிப் பருவத்தை அடைந்தார்.

 

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டுதமது சாதிக்கு உரிய ஆசாரப்படிஅவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும்மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை,வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்ததுஉயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவிதன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

 

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டுமுருகப் பெருமான்கந்தமாதன மலையை நீங்கிதிருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டுகைதொழுதுஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்துவள்ளிநாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டுதிருத்தணிகை மலைக்குச் சென்றுதிருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டுகரிய திருமேனியும்காலில் வீரக்கழலும்கையில் வில்லம்பும் தாங்கி,மானிட உருவம் கொண்டுதணியா அதிமோக தயாவுடன்திருத்தணிகை மலையினின்றும் நீங்கிவள்ளிமலையில் வந்து எய்திதான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்றுபரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

 

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியேஉலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல்இந்தக் காட்டில்பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதேநின் பெயர் யாதுநின் ஊர் எதுநின் ஊருக்குப் போகும் வழி எதுஎன்று வினவினார்.

 

"நாந்தகம் அனைய உண்கண் 

     நங்கை கேள்,ஞாலம் தன்னில்                     

ஏந்திழையார்கட்கு எல்லாம் 

     இறைவியாய் இருக்கும்நின்னைப்                               

பூந்தினை காக்க வைத்துப் 

     போயினார்,புளினர் ஆனோர்க்கு                       

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

     அயன் படைத்திலன்கொல் என்றான்".  

 

"வார் இரும் கூந்தல் நல்லாய்,

     மதி தளர்வேனுக்கு உன்தன்                  

பேரினை உரைத்தி,மற்று உன் 

     பேரினை உரையாய் என்னின்,                                    

ஊரினை உரைத்தி,ஊரும் 

     உரைத்திட முடியாது என்னில்

சீரிய நின் சீறுர்க்குச் 

     செல்வழி உரைத்தி என்றான்".

 

"மொழிஒன்று புகலாய் ஆயின்,

     முறுவலும் புரியாய் ஆயின்,                               

விழிஒன்று நோக்காய் ஆயின் 

     விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                               

வழி ஒன்று காட்டாய் ஆயின்,

     மனமும் சற்று உருகாய் ஆயின்                              

பழி ஒன்று நின்பால் சூழும்,

     பராமுகம் தவிர்தி என்றான்".

     

"உலைப்படு மெழுகது என்ன 

     உருகியே,ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல 

     வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள் 

     கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ 

     அறுமுகன் ஆடல் எல்லாம்". 

 

இவ்வாறு எந்தை கந்தவேள்உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில்வேட்டுவர் தலைவனாகிய நம்பி,தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார்.நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால்இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணிஅதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பிவேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

 

நம்பி சென்றதும்முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன். தாமதிக்காமல் வா" என்றார். 

 

என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயாநீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதேநம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர்.விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனேமுருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

 

நம்பிஅக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக.உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்திதிருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பிஅவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாதுஉமக்கு வேண்டியது யாது?"என்று கேட்டான்.பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கிஇளமை அடையவும்உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும்தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழமுனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லிதனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

 

பிறகுஅக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ!ஆறு மலை தாண்டிச் சென்றால்ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன்நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்றுசுனையில் நீர் பருகினார் பெருமான். 

 

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடிபக்குவ அனுபவம் பெறபக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர்ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்துசகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால்,அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார்பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்கமுருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார் என்று கொள்வதும் பொருந்தும்.)

 

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது.ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமாபுனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோஎமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும்,நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறிதினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

 

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய்,முதல்வா!" என்றார்.அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடிகிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்துவிநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

 

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகிஅது கண்டு ஆனந்தமுற்றுஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால்அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார்.பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்துபிரணவ உபதேசம் புரிந்து,"நீ தினைப்புனம் செல். நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

 

கான்ஆளும் எயினர் தற்சாதி வளர்குற

     மானொடு மகிழ் கருத்தாகி மருள்தரு

     காதாடும் உனதுகணு பாணம் எனதுடை .....நெஞ்சுபாய்தல்

காணாது மமதை விட்டுவி உய அருள்

     பாராய்,என்உரை வெகுப் ப்ரீதி இளையவ!

     காவேரி வடகரைச் சாமி மலைஉறை ...... தம்பிரானே.  --- சுவாமிமலைத் திருப்புகழ்.

                                

வேடர் செழும் தினை காத்துதண் மீதில் இருந்த பிராட்டி,

     விலோசன அம்புகளால் செயல் ...... தடுமாறி,

மேனி தளர்ந்துருகாப் பரிதாபம் உடன்புன மேல் திரு

     வேளை புகுந்த பராக்ரமம்,...... அதுபாடி...                --- பொதுத் திருப்புகழ்.

                                

சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே--- 

 

சூரபதுமன் கடலில் பெரியதொரு மரமாக நின்றபோது,சந்திர சூரியர்கள் முதலானோர் அஞ்சினர் என்பதைக் கந்தபுராணம் கூறும்.

 

நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும்அம்புலியும்,நீத்தம்

அடுங்கதிர் படைத்த கோவும்,அளகையை ஆளி தானும்,

கடம் கலுழ்கின்ற ஆசைக் கரிகளும்,கடாவில் செல்லும்

மடங்கலும்,வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்.

 

அந்த சூரபதுமனை எம்பெருமான் முருகவேள் தனது ஒப்பற்ற ஞானசத்தியாகிய வேலை விடுத்து அருளி வென்றார்.

 

சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி ---

 

அருணகிரிப் பெருமான் பாடியுள்ளதைப் போலவேஇத் திருத்தலம் சோலைகளாலும்வயல்களாலும் சூழப் பெற்று அழகுற விளங்குகின்றது.

 

திருஇலஞ்சி என்னும் திருத்தலம் தென்காசி இரயில் நிலையத்துக்கு ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! திருவருள் புரிவாய்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...