அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆடல்மதன் அம்பின் (ஸ்ரீ புருஷமங்கை)
முருகா!
மெய்ப்பொருளை உணர்த்தி அருள்வாய்.
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லமப் கொங்கையின் ...... மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே
வேடரென நின்ற ஐம்புல
னாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே
தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண்
ஜானகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே
சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ்
சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆடல் மதன் அம்பின் மங்கையர்
ஆல விழியின் பிறங்கு ஒளி
ஆரம் அது அலம்பு கொங்கையின் ...... மயல் ஆகி,
ஆதி குருவின் பதங்களை
நீதியுடன் அன்புடன் பணி-
யாமல், மனம் நைந்து நொந்து,உடல் ...... அழியாதே,
வேடர் என நின்ற ஐம்புலன்,
நாலு கரணங்களின் தொழில்
வேறுபட நின்று,உணர்ந்து அருள் ...... பெறுமாறு,என்
வேடை கெட வந்து,சிந்தனை
மாயை அற வென்று,துன்றிய
வேத முடிவின் பரம்பொருள் ...... அருள்வாயே.
தாடகை உரம் கடிந்து,ஒளிர்
மாமுனி மகம் சிறந்து, ஒரு
தாழ்வுஅற நடந்து,திண்சிலை ...... முறியா,ஒண்
ஜானகி தனம் கலந்தபின்,
ஊரில் மகுடம் கடந்து, ஒரு
தாயர் வசனம் சிறந்தவன் ...... மருகோனே!
சேடன் முடியும் கலங்கிட,
வாடை முழுதும் பரந்து எழ,
தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட,...... நடம் ஆடும்,
சீர் மயில! மஞ்சு துஞ்சிய
சோலை வளர் செம்பொன் உந்திய
ஸ்ரீபுருடமங்கை தங்கிய ...... பெருமாளே.
பதவுரை
தாடகை உரம் கடிந்து--- தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து,
ஒளிர் மாமுனி மகம் சிறந்து--- பெருமை விளங்குகின்ற விசுவாமித்திர முனிவரின் வேள்வியைச் சிறப்புற நடத்திக் கொடுத்து,
ஒரு தாழ்வு அற நடந்து--- ஒப்பற்ற (அகலிகையின்) சாபம் நீங்குமாறு (பாத தூளி படும்படி) நடந்து,
திண் சிலை முறியா--- (ஜனக மன்னனின் அவையினில்) வலிமையான சிவதனுசை முறித்து,
ஒண் ஜானகி தனம் கலந்த பின்--- இயற்கை அழகு பெற்ற சீதையின் மார்பகங்களை அணைந்த பிறகு,
ஊரில் மகுடம் கடந்து,ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே--- அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற (மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக் கொண்டவராகிய இராமபிரானின் திருமருகரே!
சேடன் முடியும் கலங்கிட--- ஆதிசேடனின் முடிகளும் கலக்கம் கொள்ள,
வாடை முழுதும் பரந்து எழ--- காற்று எங்கும் பரவி வீச,
தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் சீர் மயில---தேவர்கள் களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, திருநடனத்தைச் செய்யும் அழகிய பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவரே!
மஞ்சு துஞ்சிய சோலை --- மேகம் படிந்துள்ள சோலைகள்,
வளர் செம் பொன் உந்திய--- செவ்விய செல்வம் பெருகி நிற்பதுவுமான
ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே--- நாங்குநேரி என்று வழங்கப்படுகின்ற ஸ்ரீபுருடமங்கை திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில்--- போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்க் கணைகளைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆலகால விடம் போன்ற பார்வையில் காட்டுகின்ற பொய்யான அன்பினால்,
பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி--- ஒளி விளங்குகின்றமுத்து மாலைகள் அசைவதுமான மார்பகங்களில் மயக்கம் கொண்டு,
ஆதி குருவின் பதங்களை--- ஆதிமுதற் பொருளாகிய சிவபரம்பொரளுக்கும் குருவாகிய தேவரீரது திருவடிகளை,
நீதியுடன் அன்புடன் பணியாமல்--- உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல்,
மனம் நைந்து நொந்து--- மனம் வருந்தி நொந்து,
உடல் அழியாதே--- உடல் அழிவுறாமல்,
வேடர் என நின்ற ஐம்புலன்--- வேடர்கள் போல் நிற்கும் சுவை,ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும்,
நாலு கரணங்களின் தொழில்--- மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நாலு அந்தக்கரணங்களின் செயல்களும்,
வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு--- என்னைத் தாக்காத வகையில், அவற்றை வேறாகக் கண்டு,நான் வேறுபட்டு நின்று,உன்னை உணர்ந்து,தேவரீரது திருவருளைப் பெறும்படி,
என் வேடை கெட வந்து--- எனது ஆசைகள் கெட்டுப் போகுமாறு, எனது உள்ளத்தில் இருந்து,
சிந்தனை மாயை அற வென்று--- எனது சிந்தையை மயக்கும் மாயையினது ஆற்றலை வெற்றிகொண்டு,
துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே--- சிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.
பொழிப்புரை
தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, பெருமை விளங்குகின்ற விசுவாமித்திர முனிவரின் வேள்வியைச் சிறப்புற நடத்திக் கொடுத்து, ஒப்பற்ற அகலிகையின் சாபம் நீங்குமாறு (பாத தூளி படும்படி நடந்து, ஜனக மன்னனின் அவையினில் வலிமையான சிவதனுசை முறித்து, அழகு ஒளி விளங்கும் சீதையின் மார்பகங்களை அணைந்த பிறகு, அயோத்தியில் தனது பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற மாற்றாந் தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக் கொண்டவராகிய இராமபிரானின் திருமருகரே!
ஆதிசேடனின் முடிகளும் கலக்கம் கொள்ள, காற்று எங்கும் பரவி வீச, தேவர்கள் களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, திருநடனத்தைச் செய்யும் அழகிய பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவரே!
மேகம் படிந்துள்ள சோலைகளோடு கூடி, செவ்விய செல்வம் பெருகி நிற்பதுவுமான நாங்குநேரி என்று வழங்கப்படுகின்ற ஸ்ரீபுருடமங்கை திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்க் கணைகளைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆலகால விடம் போன்ற பார்வையில் காட்டுகின்ற பொய்யான அன்பினால், ஒளி விளங்குகின்றமுத்து மாலைகள் அசைவதுமான மார்பகங்களில் மயக்கம் கொண்டு, ஆதிமுதற் பொருளாகிய சிவபரம்பொரளுக்கும் குருவாகிய தேவரீரது திருவடிகளை, உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல், மனம் மெலிவுற்று நொந்து,உடல் அழிவுறாமல், வேடர்கள் போல் நிற்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களின் செயல்களும், என்னைத் தாக்காத வகையில், அவற்றை வேறாகக் கண்டு,நான் வேறுபட்டு நின்று,உன்னை உணர்ந்து,தேவரீரது திருவருளைப் பெறும்படி, எனது ஆசைகள் கெட்டுப் போகுமாறு, எனது உள்ளத்தில் இருந்து,எனது சிந்தையை மயக்கும் மாயையினது ஆற்றலை வெற்றி கொண்டு, சிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.
விரிவுரை
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில்---
ஆடல் --- போர், துன்பம்.
ஆல விழி --- நச்சுத் தன்மை பொருந்திய கண்கள்.
நஞ்சு உண்டவரைக் கொல்லும், சிறிது சிறிதாகக் கொல்லும்.
விலைமாதரின் கண்கள் பார்வை அளவிலேயே உடனே கொல்லும்.
பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி---
ஆரம் --- முத்து. முத்தகளால் ஆன மாலையைத் தமது மார்பில் விலைமாதர் அணிந்து உள்ளனர்.
அலம்புதல் --- அலைதல், ததும்புதல்.
ஆதி குருவின் பதங்களை ---
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய சிவபரம்பொருளுக்கு, "ஆதிப் பிரான்" என்று ஒரு திருநாமம் உண்டு.
நீதியுடன் அன்புடன் பணியாமல்---
நீதி --- உண்மை, முறைமை, ஒழுக்கநெறி.
இறைவனை உரிய ஒழுக்கநெறியில் நின்று, உள்ளத்தில் உண்மை அன்பு வைத்து வழிபடவேண்டும்.
மனம் நைந்து நொந்து உடல் அழியாதே---
இறைவனை வணங்காதவர்களுடைய மனமானது வருந்தும்படியாக முடியும். மனம் நைந்தால், உடலும் நைந்து போகும்.
"பந்தம் அற நின்னை எண்ணாப் பாவிகள் தம் நெஞ்சம், பகீர் என நடுங்கு நெஞ்சம்" என்றார் வள்ளல்பெருமான்.
இறைவனை வணங்குகின்றவர் நெஞ்சம் எப்போதும் ஆனந்தவெள்ளத்தில் திளைத்து இருக்கும். "துய்ய! நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய்ச்சுக ரூபமான நெஞ்சம்" என்றார் வள்ளல்பெருமான்.
வேடர் என நின்ற ஐம்புலன்---
உயிர்கள் இன்பப் பொருளைத் துன்பப் பொருள் என்றும், துன்பப் பொருளை இன்பப் பொருள் என்றும் மாறி உணர்தற்குக் காரணம், ஆணவ மலம் உயிரறிவை வேறுபடுத்திப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணரவொட்டாது தவறாக உணரச் செய்தலே ஆகும்.
மக்கள் ஞானத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணாதிருப்பதற்குக் காரணம், அந்த ஞானத்தின்மேல் அவர்களுக்கு வேட்கை உண்டாகாமை. நீர் வேட்கை இல்லாதவர் நீரை நாடமாட்டார்; பசி எடுக்காதவர் உணவை நாடமாட்டார். அதுபோல, ஞானத்தில் வேட்கை இல்லாதவர் அதனைப் பற்றி எண்ணமாட்டார்; அதனை அடைவதற்கு முயல மாட்டார்.
ஞானத்தில் வேட்கை உண்டாகாமைக்குக் காரணம்?உயிரறிவை அஞ்ஞானத்துட் படுத்துவதாகிய ஆணவ மலமே அதற்குக் காரணம். ஆணவ மலம் மேலான ஞானத்தில் நாட்டம் செல்லாதபடி தடுக்கும்; கீழான உலகப் பொருளையே நாடி நிற்கும்படி செய்யும். இவ்வாறு ஆணவ மலம் அறியாமையைச் செய்வதுடன், அந்த அறியாமையையே அறிவு போலக் காட்டி நிற்கும்! அதாவது, தன்னை உடையவர் உயர்ந்த நூல்களை ஓதி உணர்ந்தவராக இருந்தாலும், அவற்றின் பொருளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லிப் பெருமையடையும் நிலையைப் பெற்றிருந்தாலும், அவ்வழியிலே நில்லாது அவரைத் தவறி நடக்கும்படி செய்யும்; தான் மேற்கொண்ட ஒழுக்கம் தீயதாயினும் அதனைச் சரியானது என்றே எண்ணச் செய்யும்.
பொருளியல்பைத் தவறாக உணர்தல் அஞ்ஞானம் ஆகும். உயிர் அஞ்ஞானத்தில் கட்டுண்டு நிற்கின்ற வரையில் அது உறவல்லாத அசத்தோடு உறவாடித் துன்புறும். தான் பெறத்தக்க பேரின்பம் எங்கும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்றலை அறியாதிருக்கும்
இந்த உடம்பாகிய வீட்டில் ஐம்புல வேடர் வாழ்கின்றனர். அவர்கள் செய்யும் அநியாயம் அளப்பில. புலன்களை வேடர் என்பது தொன்றுதொட்டு வந்த ஆன்றோர் வழக்கு.
"குருதி புலால் என்பு தோல் நரம்புகள்
கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய
குடர், நிணம்,ரோமங்கள்,மூளை,என்பன ......பொதிகாயக்
குடில் இடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல
அடவியில் ஓடும் துராசை வஞ்சகர்
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய,...... அதனாலே
சுருதி புராணங்கள் ஆகமம் பகர்
சரியை க்ரியா அண்டர் பூசை,வந்தனை,
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும்......முயலாதே"
எனத் திருவானைக்காத் திருப்புகழில் அருளி உள்ளார்.
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து என,
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு,
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே".
ஆன்மா ஐம்பொறி முதலிய கருவிகளைச் சார்ந்து அவற்றையே தானாகவும், அவற்றால் உண்டாகும் சிற்றறிவாகிய புலனறிவையே தனது அறிவாகவும் கொண்டு,தன் உண்மையியல்பை மறந்து வாழும் நிலை,அரசகுமாரன் ஒருவன் சிறுவயதிலேயே காணாமற் போய்க்காட்டிலே வேடர் கூட்டத்திலே அகப்பட்டு அவர்களோடு கூடி வளர்ந்து தன்னையும் வேடர் மகனாகவே கருதித் தான் அரசன் மகன் என்பதையே மறந்து வாழ்வதைப் போன்றது.
அரசகுமாரன் உயர்ந்த மன்னர் குலத்தைச் சேர்ந்தவன்; தன் தந்தையோடு கூடியிருந்து அரசச் செல்வத்தை அனுபவித்தற்கு உரியவன். அவ்வுரிமையை இழந்து அவன் இழிந்த வேடர் குலத்தில் வளர்ந்து அவர்க்கு உரிய இழி தொழில்களையே செய்து வாழ்கிறான். அதுபோல ஆன்மா அறிவுடைய சித்து என்னும் மேலான இனத்தைச் சேர்ந்தது. பாசமாகிய உடம்பும் கருவிகளும் அறிவற்ற சடம் ஆகையால் அவை இழிந்த அசித்து என்னும் இனத்தைச் சேர்ந்தவை. சித்தாகிய ஆன்மா தன் தலைவனும் தந்தையும் ஆகிய இறைவனைச் சார்ந்து அவன் வழங்கும் பேரின்பச் செல்வத்தை அனுபவித்தற்கு உரியது. அவ்வுரிமையை இழந்து, இழிவுடைய ஐம்பொறி முதலான கருவிக் கூட்டத்தில் அகப்பட்டுச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாகிச் சிறுமைப்பட்டு வாழ்கிறது.
வேடர் கூட்டத்தில் வளரும் அரசகுமாரன் அறியாப் பருவத்தினனாய் இருக்கும் பொழுது அவனது தந்தையாகிய அரசனே அவனிடம் சென்று,"நீ எனது மகன்" என்று உணர்த்தி அவனை அழைத்தால் அவன் வர இசைவானா? அந்த அறியாப் பருவத்தில் யார் அவனுக்கு உண்மையை உணர்த்தினாலும் உணரான். அவ்வேடர் சூழலை விட்டுப் பிரியச் சிறிதும் இசையான். ஆதலால் உண்மையை உணர்த்தினால் உணரக்கூடிய பருவம் அவனுக்கு எப்பொழுது வாய்க்கும் என்று பொறுத்திருந்து, அப்பருவம் வந்தவுடனே அவனிடம் சென்று அவனை அழைத்தால் அக் கணமே அவன் தான் உலகை ஆள்வதற்கு உரியவன் என்ற உண்மையைத் தெளிய உணர்வான்; அவ்வேடர் சூழலை விட்டு அப்பொழுதே நீங்குவான். தான் இதுகாறும் பிரிந்திருந்த உண்மைத்தந்தையை அடைவான். அரசாளும் திருவைப் பெற்று மகிழ்வான்.
அதுபோல, அரும்பருவம் என்பது ஆன்மாவுக்கும் வேண்டும். ஐம்பொறியும் மனமும் முதலான கருவிகளெல்லாம் அறிவில்லாதவை. நமக்கு வேறானவை. நாம் அறிவுடைய சித்துப்பொருள். நாம் இவற்றோடு கூடியிருப்பது செயற்கையே. நமக்குரிய இயற்கை அல்ல என்ற உண்மையை உணர்வதற்குப் பக்குவம் வேண்டும். ஆதலால் உயிர்க்குயிராய் உள்நிற்கும் இறைவன் அப் பக்குவம் வரும்வரை காத்திருந்து பக்குவம் வந்தவுடன் மானுட வடிவில் குருவுமாய் வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான். "சிவத்தைச் சார்ந்து தூய இறவாத பேரின்பம் நுகர்வதற்கு உரிய நீ ஐம்பொறிகளும் பிறவும் ஆகிய வேடர் கூட்டத்தில் சேர்ந்து பாச ஞானம் உடையவனாய் நின் இயல்பும் நம் இயல்பும் மறந்து துயர் உழந்தாய்" என உணர்த்துவான்.
அவ்வான்மா உணர்த்தியதை உணர்த்தியவாறே உணரக்கூடிய பக்குவம் பெற்றிருந்த காரணத்தால், உலகப்பற்றை உண்டாக்கி மயக்குகின்ற பாசமாகிய இக்கருவிகள் நமக்குப் பகையானவை என்ற உண்மையை உணர்ந்து அவற்றை விட்டு நீங்கும். கருவிகள் தன்னின் வேறானவை என்று உணர்ந்த அளவிலே அவ்வான்மா தனக்கு என்றும் உறவாக உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சார்ந்து விடும்.
கருவி கரணங்களை வேறாக உணர்ந்த ஆன்மா வேறு முயற்சியின்றியே இறைவனை அடையும் என்பது எப்படி முடியும்? என்ற ஐயம் எழலாம். ஊசலில் அமர்ந்து ஆடுகின்ற ஒருவன், அந்த ஊசலின் கயிறுகள் முழுதும் அறுந்து விடுமாயின், அப்பொழுதே தரையை அடைவான். தரையைச் சார்வதற்கு அவன் செய்ய வேண்டிய முயற்சி ஏதும் இல்லை, அதுபோலவே, கருவிகளின் நீங்கிய ஆன்மா அப்பொழுதே வேறு முயற்சியின்றி இறைவனாகிய தனது இனிய உறவை அடைந்துவிடும்.
இறைவனை அடைதல் என்றால், இடம் பெயர்ந்து சென்று அவனைச் சேர்தல் என்பது அல்ல. அவன் எங்குமாய் நிறைந்து நிற்கும் பெருமையை உடையவன். அவன் உயிருக்கு வேறாய் நில்லாது உயிர்க்கு உயிராய் என்றுமே உடனாய் நிற்பவன். அவனைத் தன்னுள்ளே உணர்ந்து,அவனிடத்தே அழுந்துதலே அவனைச் சென்று அடைதல் ஆகும். அம்முறையில் அப்பக்குவ ஆன்மா சிவ்ததைத் தலைப்பட்டுப் பேரின்பம் நுகர்ந்திருக்கும்.
நாலு கரணங்களின் தொழில் வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு---
கருவி கரணங்களைத் தனக்கு வேறான சடப் பொருள்கள் என்பதை ஆன்மா உணரவேண்டும்.
நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி
நாம் அல்ல; நாமும் அரன் உடைமை-ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;
முற்செய் வினையும் தருவான் முன்.
இதன் பொருள்:
செவி முதலிய பொறிகள் நமது அறிவு விளங்குதற்குத் துணை செய்கின்ற கருவிகளே ஆகும். அவை மாயையின் காரியங்களேயன்றி நாம் ஆவன அல்ல. மேலும்,அவை செயற்படுதலும் இறைவனது விருப்பத்தின் படியன்றி நம் விருப்பத்தின்படி அல்ல. வினைகள் வருவதற்கு வாயிலாய் உள்ள நுகர்ச்சிப் பொருள்களும் அங்ஙனமே மாயையின் காரியங்களேயன்றி நாம் ஆவன அல்ல; நம் இச்சைப்படி செயற்படுவனவும் அல்ல.
மேற் கூறியவற்றைக் கொண்டு வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நாமும் முதல்வனது வழியில் நிற்றற்குரிய பொருளாவோம். தனித்து நிற்கும் உரிமை சிறிதும் நமக்கில்லை.
இவ்வாறு தமது தன்மையையும் பாசங்களின் இயல்பையும் உள்ளவாறு உணர்ந்து, தாம் செய்வனவற்றை யெல்லாம் முதல்வன் செயலாகவே கொண்டு, அவனது அருள்வழி அடங்கி நிற்பார்க்கு அவர் எந்த உடம்பில் நின்று எந்த வினையைச் செய்தாலும் அவை ஆகாமியம் ஆதல் இல்லை.
பிராரத்த வினையும் அவர்க்கு உரிய நுகர்ச்சியாய் உயிரைச் சென்று தாக்காது; அதனை ஊட்டுவிப்பவனாகிய இறைவனது முன்னிலையில் உடல் ஊழாய் வந்து நிற்கும்.
இதன் பதவுரை
இந்திரியம் நாம் அல்ல --- நமது அறிவு விளங்குதற்குத் துணை செய்கின்ற ஐம்பொறிகள் முதலியவை நமக்குக் கருவிகளேயன்றி அவையே நாம் அல்ல.
நம் வழியில் அல்ல --- அவை செயற்படுவதும் நம் விருப்பத்தின் படியல்ல. (இறைவன் விரும்பிய படியேயாம்)
வழி நாம் அல்ல (நம் வழியின் அல்ல) --- ஐம்பொறிகளால் பற்றப்படும் நுகர்ச்சிப் பொருள்களும் நம்மால் நுகரப்படுவனவேயன்றி அவை நாம் ஆகா. அவை நமக்கு வந்து வாய்ப்பதும் நம் விருப்பத்தின்படியல்ல. இறைவன் விருப்பப்படியே யாம்.
நாமும் அரன் உடைமை --- மேற்கூறியவற்றைக் கொண்டு வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நமது அறிவும் செயலும் இறைவன் செலுத்தினால் அன்றித் தாமாகச் செயற்படுவன அல்ல ஆகையால் நமக்கென்று என்ன சுதந்திரம் இருக்கிறது? நாம் முதல்வனது வழியில் நிற்றற்குரிய அடிமை ஆவோம்.
ஆம் என்னில் --- என்று இவ்வாறு சிந்தித்து உணர்ந்து எல்லாவற்றையும் முதல்வன் செயலாகவே கண்டு கொண்டு நிற்பாராயின்
இறை பணியார்க்கு --- அத்தகைய இறை பணியில் நிற்பார்க்கு
எத்தனுவில் நின்றும் வினையில்லை --- அவர் எந்த உடம்பில் நின்று எந்த வினையைச் செய்யினும் ஆகாமிய வினை உண்டாதல் இல்லை.
முன் செய் வினையும் --- ஆகாமிய வினையைத் தோற்றுவித்தே வருவதாகிய பிராரத்த வினையும்(உயிருக்கு உரிய நுகர்ச்சியாய்ச் சென்று தாக்காது)
தருவான் முன் --- அதனை ஊட்டுவிக்கின்ற இறைவன் முன்னிலையில் உடல் அளவாய்க் கழியும்.
சிறந்த பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை அமர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சிறிது நேரத்தில் நம்மை அறியாமலே தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றுகிறது. இமைகள் மூடுகின்றன. விழிகளைத் திறக்க எவ்வளவோ பாடுபடுகிறோம். என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். முடியவில்லை. நம் விருப்பத்தையும் மீறி, நம் வசத்தில் நில்லாமல் கண், செவி முதலிய கருவிகள் செயற்படாமல் போகின்றன என்பதை இது காட்டுகிறது. புறக் கருவிகளாகிய இவையே நம் வசத்தில் இல்லாத பொழுது,மனம் முதலிய அகக்கருவிகள் எப்படி நம் வசத்தில் அடங்கி நிற்கும்? ஆகவே கருவிகள் செயற்படுவது இறைவனது விருப்பத்தின் படியேயன்றி, நாம் விரும்பியபடியன்று என்பது விளங்கும்.
பாராதி பூதம் நீ அல்லை - உன்னிப்
பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,
ஆராய் உணர்வு நீ என்றான் - ஐயன்
அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி. --- தாயுமானார்.
ஒரு வீட்டிற்குள் ஒரு மனிதன் குடி இருப்பது போல், இவ் உடம்புக்குள் உயிர் உறைகின்றது. குடியிருக்கும் மனிதன் வேறு, வீடு வேறுபோல், உயிர் வேறு, உடம்பு வேறு என்று உணர்க.
"குடம்பை தனித்துஒழிய புள்பறந்து அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு". --- திருக்குறள்.
அனித்தம் ஆன ஊன் நாளும் இருப்பது ஆகவே, நாசி
அடைத்து,வாயு ஓடாத ...... வகை சாதித்து,
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும்,ஆயாச
அசட்டு யோகி ஆகாமல்,...... மலமாயை
செனித்த காரிய உபாதி ஒழித்து,ஞான ஆசார
சிரத்தை ஆகி,யான்வேறு,என்...... உடல்வேறு,
செகத்து யாவும் வேறு ஆக,நிகழ்ச்சியா மநோதீத,
சிவச் சொரூப மாயோகி ...... எனஆள்வாய். --- திருப்புகழ்.
உடலம் வேறு,யான்வேறு,கரணம் வேறு வேறாக
உதறி,வாசக அதீத ...... அடி ஊடே
உருகி,ஆரிய ஆசார பரம யோகி ஆமாறு, உன்
உபய பாத ராசீகம் ...... அருள்வாயே.
என் வேடை கெட வந்து---
வேடை --- வேட்கை.
துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே---
துன்றுதல் --- நெருங்குதல், பொருந்துதல்,
சிறந்த வேதங்களின் முடிவாகப் பொருந்தி உள்ள உண்மையைத் தனக்கு உபதேசித்து அருள் புரியுமாறு வேண்டுகின்றார்.
தாடகை உரம் கடிந்து, ஒளிர் மாமுனி மகம் சிறந்து, ஒரு தாழ்வு அற நடந்து, திண் சிலை முறியா, ஒண் ஜானகி தனம் கலந்த பின்---
விசசுவாமித்திர முனிவர் புரிந்த வேள்வியை, மாரீசன் தாடகை முதலிய அரக்கர்கள் பன்னெடுங்காலமாகத் தடுத்துக் கெடுத்து வந்தார்கள். இராமச்சந்திரமூர்த்தி, தாடைகையையும், சுபாகுவையும், வதைத்தும், மாரீசனைக் கடலில் வீழ்த்தியும் வேள்விக் காவல் செய்து, முடித்துக் கொடுத்தார்.
எண்ணுதற்கு,ஆக்க,அரிதுஇரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கி முனிவன் வேள்வியை.
மண்ணினைக் காக்கின்றமன்னன் மைந்தர்கள்.
கண்ணினைக் காக்கின்றஇமையின் காத்தனர்.
காட்டிலே இராமபிரான், தனது தம்பியாகிய இலக்குவனோடும்,விசுவாமித்திர மாமுனியோடும் வருகையில், அங்கிருந்த கல் ஒன்றின் மீது, இராமபிரானுடைய அழகிய திருவடி பட்டதும், முன் ஒரு சாபத்தால் கல்லாய் இருந்த அகலிகை,தன் துன்பம் தீர்ந்து பழைய உருவினை அடைந்தாள்.
இனைய நாட்டினை இனிது சென்று,
இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின்
புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து, இழி
மாதவப் பன்னி,
கனையும் மேட்டு உயர்
கருங்கல் ஓர் வெள் இடைக் கண்டார்.
கண்ட கல் மிசைக் காகுத்தன்
கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற,
வேறுபட்டு, உருவம்
கொண்டு மெய் உணர்பவன்
கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணம் ஆய் நின்றனள்;
மாமுனி பணிப்பான்.
இந்திரன் கௌதம முனிவரின் பன்னியான அகலிகை மேல் காதல் கொண்டு, முனிவரைத் தமது குடிலை விட்டு,காலைக் கடன் கழிக்கச் செல்லுமாறு உபாயம் செய்து போக்கி, கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். இதனை அறிந்ததும் அகலிகையைக் கல்லாகுமாறு கௌதம முனிவர் சபித்தார்.
முனிவர் அருளியபடியே, இராமபிரானுடைய திருவடியின் துகள் பட்டவுடன் கௌதமருக்கு மனைவியாக ஆவதற்கு முன் இருந்த கன்னி அகலிகையாக அத் திருவடித் துகள் அருளியது.
மா இரு விசும்பில் கங்கை
மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு
மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த
தேவர் கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி,
அகலிகை ஆகும், என்றான்
பொன்னை ஏர் சடையான் கூறக்
கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ்
உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு
ஒன்று முடிந்தது உண்டோ?
‘அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த
ஆறு அருளுக ‘என்றான்.
அவ் உரை இராமன் கூற, அறிவனும்
அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள்
செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை
அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன் வனமுலை
நணுகல் உற்றான்.
தையலாள் நயன வேலும்
மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி
உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி,
மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன்
உருவமே கொண்டு புக்கான்
புக்கு, அவேளாடும் காமப்
புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும்,
உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள்,
தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல்
முனிவனும் முடுகி வந்தான்.
சரம் தரு சாபம் அல்லால்
தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த
வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும்
நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர்
பூசையாய்ப் போகல் உற்றான
தீ விழி சிந்த நோக்கிச், செய்ததை
உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச் சுடுசரம்
அனைய சொல்லால்,
‘ஆயிரம் மாதர்க்கு உள்ள
அறிகுறி உனக்கு உண்டாக‘என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
இயைந்தன இமைப்பின் முன்னம்.
எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும்
நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போயபின்றை,
மெல்லியலாளை நோக்கி, விலை
மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான்; கரும்
கல் ஆய் மருங்கு வீழ்வாள்.
பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே என்பர்,
‘அழல் தரும் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக ‘என்னத்,
‘தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக்
கல் உருத் தவிர்தி‘என்றான்.
அந்த இந்திரனைக் கண்ட
அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட,
மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து,
சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்;
தையலும் கிடந்தாள் கல்லாய்.
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின்
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
தீது இலா உதவி செய்த
சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன
பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
‘மாதவன் அருள் உண்டாக
வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை ‘என்று
பொன் அடி வணங்கிப் போனான்.
அருந்தவன் உறையுள் தன்னை
அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா
விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக்
கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல்,
புனித மாதவனை நோக்கி.
‘அஞ்சன வண்ணத்தான் தன்
அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை
வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை,
நீ அழைத்திடுக‘என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும்
கருத்துள் கொண்டான்.
குணங்களால் உயர்ந்த வள்ளல்,
கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி,
மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து,
ஆண்டு அருந்தவனொடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி,
மணி மதில் கிடக்கை கண்டார். --- கம்பராமாயணம்.
கௌதமர் மணப்பதற்கு முன் கன்னி அகலிகை; மணந்த பின்
பன்னி அகலிகை. இந்திரன் தீண்டிய பின் தூய்மை இழந்த அகலிகை.
இராமருடைய திருவடியில் துகள், கல்லான அகலிகையை, அமுதத்துடன் பாலாழியில் பிறந்தபோது இருந்த கன்னி அகலிகையாகச் செய்துவிட்டது.
மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு
பாலன் ஆகி உதித்து,ஒர் முநிக்கு ஒரு
வேள்வி காவல் நடத்தி, அ கற்கு உரு ...... அடியாலே
மேவியே, மிதிலைச் சிலை செற்று, மின்
மாது தோள் தழுவிப் பதி புக்கிட,
வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின் ...... னவனோடே
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில்,
வாழும் வாலி படக்கணை தொட்டவன்,
நாடி இராவணனைச் செகுவித்தவன் ...... மருகோனே! --- (ஆலகாலப் படப்பை) திருப்புகழ்.
கல்லிலே பொன் தாள் படவே, அது
நல்ல ரூபத்தே வர,கான் இடை
கெளவை தீரப் போகும் இராகவன் ...... மருகோனே. --- கொள்ளையாசை (திருப்புகழ்).
வெடுத்த தாடகை சினத்தை,ஓர் கணை
விடுத்து,யாகமும் நடத்தியே, ஒரு
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் ...... மருகோனே! --- (தொடுத்தவாள்) திருப்புகழ்.
மிதிலை நகரில், சனகப் பேரரசர் வசம் இருந்த சிவவில்லினை மொளுக்கு என முறிந்து விழச் செய்து,அவரது திருமகளாகிய சீதாதேவியை இராமபிரான் திருமணம் புணர்ந்தார்.
சிலை மொளுக்கு என முறிபட,மிதிலையில் சனக மன் அருள்
திருவினைப் புணர் அரி திரு ...... மருகோனே!
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது,கதலிகள் வளர்
திரு இடைக்கழி மருவிய ...... பெருமாளே. --- திருப்புகழ்.
ஊரில் மகுடம் கடந்து,ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே---
சீதையைத் திருமணம் புணர்ந்த பின்னர், அயோத்திக்கு வந்த இராமபிரானுக்கு முகடம் சூட்டி, அரசபாரத்தை அளித்து, தான் தவம் புரியப் போவதாக தயரதன் முடிவு எடுத்து, மகுடம் சூட்டுவதற்கு உரிய நாளும் குறிக்கப்பட்டது. மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் சூழ்ச்சியால், தசரதனிடம், தனது மகன் பரதன் ஆரசாள வேண்டும் என்றும், இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரியவேண்டும் என்றும் பெற்ற வரத்தின் காரணமாக, இராமன் மணிமுடி தரிப்பது தவிர்க்கப்பட்டு, கைகேயியின் வார்த்தை தவறால்,இராமன் காட்டுக்குச் செல்கின்றான்.
இராமனைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தாய், தந்தை, சகோதரன் என்று பாகுபாடு உண்டு. இருமுதுகுரவர் எனப்படும் தாய்தந்தை இருவரும் என்ன ஏவினாலும், ஏன் என்று கேளாமல், உடனே கீழ்ப்படிய வேண்டும் என்ற கொள்கையுடையவன். அதனால், கைகேயி அரசன் உன்னை காட்டிற்குச் செல்ல ஆணை இட்டுள்ளான்' என்று கூறினவுடன், மறுவார்த்தை பேசாமல், "எந்தையே ஏவ, நீரே உரை செய இயைவது உண்டேல்,உய்ந்தனன் அடியேன்” என்றும், "மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?" என்றும் கூறி "விடையுங் கொண்டேன்,மின் அவரி கானம் இன்றே மேவினன்" என்று மணிமுடியைத் துறந்து, நாட்டை விட்டுக் காட்டுக்குச் சென்றான்.
ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே---
நாங்குநேரி என்று வழங்கப்படுகின்ற ஸ்ரீபுருடமங்கை என்ற திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24மைலில் உள்ளது.
கருத்துரை
முருகா! மெய்ப்பொருளை உணர்த்தி அருள்வாய்.
No comments:
Post a Comment