கல்லாமையால் வரும் தீமை.
-----
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்களின் வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழித்து,பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால் உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.
கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று,மனைவியோடு போகம் புசித்து,கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால்,தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.
அவ்வாறு கற்றலின் சிறப்பைக் "கல்வி" என்னும் அதிகாரத்தில் உடன்பட்டு அருளிய நாயனார், "கல்லாமை" என்னும் அதிகாரத்தில் கற்றலைச் செய்யாமையால் வரும் இழிவை எதிர்மறையாக அறிவுறுத்துகின்றார். இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "உயிரோடு மனித வடிவில் இருக்கின்றனர் என்று சொல்லும் அளவினர் அல்லாமல், தமக்கும் பிறர்க்கும் பயன் தராமையால்,கல்லாதவர்கள், பயன் விளையாத களர் நிலத்தைப் போன்றவர்கள்" என்கின்றார் நாயனார்.
களர் நிலம் என்பது நெல் முதலியன பயிரிடுவதற்குத் தகுதியாகாத பயனற்ற நிலம். கல்லாதவரும் தம்மைப் பிறரால் மதிக்கப்படுதல் இல்லாமையோடு, பிறர்க்கும் அறிவினை உதவப் பயன்படார் என்றார்.
உளர்என்னும் மாத்திரையர் அல்லால், பயவாக்
களர் அனையர், கல்லாதவர்.
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
களர் நிலத்தில் எந்த வித்தும் முளைக்காது. உணவுக்கு உரிய எந்தப் பொருளும் விளையாது. ஆகவே, களர் நிலத்தை யாரும் விரும்பமாட்டார்கள். மக்களுள் யாருக்கும் பயன் தராமல், பாழாய்க் கிடக்கின்ற நிலத்தைக் காட்டி, "பயவாக் களர்" என்றார் நாயனார். மனிதனுக்கு உள்ளீடாக இருக்கவேண்டிய அறிவும், அன்பும் இல்லாமையால்,கல்லாதவன் எவர்க்கும் பயன் இல்லாதவன் ஆகின்றான். நிலத்திற்கு உரிய இனிய தன்மை களருக்கு இல்லை. மனிதனுக்கு உரிய, அரிய அறிவு மாண்பு, கல்லாத மனிதனுக்கு இல்லை.
உழுது பண்படுத்தி, நீர் பாய்ச்சிப் பலவகைகளிலும் விளைகின்ற நிலம் போல,கல்வி அறிவு உள்ளவன் எல்லோருக்கும் பயன் உள்ளவனாக வாழ்ந்து, புகழப் பெறுகின்றான். கல்லாதவன் ஒரு பயனும் இன்றி வீணே இருப்பதால், அவனை யாரும் மதிப்பதில்லை.
உலகப் பொருள்களைக் கண்டு பயன்பெறுவதற்கு உடலில் கண் அமைந்துள்ளது போல, பரம்பொருளை நோக்கி மகிழ்வதற்கு, கல்வி ஆகிய கண் உயிரில் உள்ளது. கற்றிடும் அடியவர் புத்தியில் இறைவன் உறைகின்றான். மற்றவர் அறியாதபடி மறைந்து நிற்கின்றான். சேந்தனார் இதனை அருமையாகத் தமது பாடல் ஒன்றில் காட்டி உள்ளார்.
"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுஉள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே". --- திருவிசைப்பா.
இறைவன் கற்றவர் விழுங்கும் கனியாக உள்ளான் என்று கற்றவரின் சிறப்பை வெளிப்படுத்தியவர், மற்றவர் அறியா மாணிக்க மலை என்று சொல்லி, கல்லாதவரின் இழிவைக் காட்டினார். "கற்றவர் உண்ணும் கனியே போற்றி" என்றார் அப்பர் பெருமான்.
எல்லாம் அறிய வல்ல இறைவனைக் கல்வி அறிவு ஓரளவுக்குக் காட்டி அருளுகின்றது. அந்த அருளால் உள்ளம் தெளிந்து ஞானக் காட்சியால் இறைவனை உணர்ந்து, உயிர் பேரின்ப நிலையை அடைகின்றது. இந்த அரிய பேறு, கல்லாதவனுக்கு இல்லாமல் போகின்றது. போகவே, அவனது மனம் கல்லாகவே இருக்கின்றது.
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கி,தன்கருணை
வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனை,
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
என்று இறைவன் தன்னை ஆட்கொண்டு அருளிய அருமைப் பாட்டினை மணிவாசகப் பெருமான் மேற்கண்டவாறு பாடியருளினார். கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயாகிய என்னை, கல்லைப் பிசைந்து கனியாக்கியது போல ஆக்கிக் கொண்டான் இறைவன் என்கின்றார். கல்லாதவன் மனிதன் கல்லாய் இழிகின்றான். கற்ற போது கனியாய் இனிக்கின்றான்.
"கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள், தன்னைக் கற்றார்கள் உற்று ஓரும் காதலானை" என்றார் அப்பர் பெருமான். "கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
"வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்;
அல்லாதவர்கள் அறிவு பல என்பார்;
எல்லா இடத்தும் உளன் எங்கள் தம்இறை,
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே" --- திருமந்திரம்.
இது கல்லாமை என்னும் தலைப்பில், திருமூல நாயனார் பாடி அருளிய திருமந்திரம்.
கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து, அதன்கண் பொருந்தி உயர்வு அடைகின்றனர். அல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக் கண்டு தடுமாற்றம் அடைந்து எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் இறைவன் எங்கும் நிறைந்து நிற்பினும், கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.
அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் இழிவை இப்படி எல்லாம் எடுத்துக் காட்டி, கற்றறிந்த ஞானிகள் தாம் கண்ட இன்ப நிலையை, மற்றவரும் பெற்று உய்ய வழிகாட்டி உள்ளனர்.
கல்லாமையால் உண்டாகும் கேட்டினை, வள்ளல்பெருமான் மிக அருமையாக உருவகப்படுத்திப் பாடி அருளினார்.
மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான்,நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான்,சும்மா இரான், காம
மடுவின் இடை வீழ்ந்து சுழல்வான்,
சினமான வெஞ்சுரத்து உழலுவன்,உலோபமாம்
சிறுகுகையின் ஊடு புகுவான்,
செறுமோக இருளிடைச் செல்குவான்,மதம்எனும்
செய்குன்றில் ஏறி விழுவான்,
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான்,சிறிதும், அந்தோ!
என்சொல் கேளான், எனது கைப்படான்,மற்று இதற்கு
ஏழையேன் என்செய்குவேன்?
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!.
இதன் பொருள் --- செல்வம் மிகுந்துள்ள சென்னை மாநகரில், கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற கந்தப் பெருமானே! குளிர்ந்த ஒளியை உடைய தூய மணிகளில் சிறந்த மணியே! ஆறுமுகம் கொண்ட மணியே! எனது மனம் ஆகிய சிறுவன், அறிவாகிய குருவையும் மதிப்பது இல்லை. உனது திருப்புகழை விரும்பி உரைக்கும் கல்வியையும் கற்பதில்லை. சும்மாவும் இருக்கமாட்டான். காமம் என்கின்ற மடுவினில் விழுந்து கரையேற முடியாமல் சுழல்கின்றான். சினம் என்கின்ற கடுமையான பாதையில் திரிகின்றான். கஞ்சத் தனம் என்னும் சிறிய குகையில் புகுந்து கொள்ளுகின்றான். பகை செய்கின்ற மோக இருளில் சென்று இடர்ப்படுகின்றான். மதம் என்னும் சிறு குன்றின் மேல் ஏறி விழுகின்றான். மதம் பிடித்து உள்ளதால், மாச்சரியம் என்னும் பொறாமை அவனிடத்தில் குடி கொண்டு உள்ளது. மாச்சரியம் என்னும் பெரும்பள்ளத்தில் இறங்குகின்றான். ஐயோ, என் சொல்லைக் கொஞ்சமும் கேளாது, எனது கைக்கும் அகப்படாமல் இருக்கின்றான். ஏழையாகிய நான் இதற்கு என்ன செய்ய முடியும். நீ தான் துணை புரியவேண்டும்.
கல்லாமையால் விளைகின்ற கேட்டினை உணர்ந்து, திருவருள் நெறியில் நின்று, இறைவன் திருப்புகழைக் கற்று உய்தி பெறுதல் வேண்டும்.
நூல்கள் என்னும்போது உலகநூல்கள் வேறு, அறிவு நூல்கள் வேறு. உலகநூல்களால் உண்டாகும் அறிவு, உயிருக்கு உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்காது. அறிவு நூல்களால் உண்டாகும் அறிவு, தனக்கு உண்டான தடுமாற்றத்தையும் போக்கும், பிற உயிர்க்கு உண்டான தடுமாற்றத்தையும் போக்கும். இந்த அறிவுதான் பயனுள்ளது என்பதை,
"அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய்
தன்நோய் போல் போற்றாக் கடை"
என்னும் திருக்குறளால் தெளியலாம். பிற உயிர்கள் படும் துன்பத்தை, தான்படும் துன்பமாக மதித்து நடந்து கொள்ளாத போது, தான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ?
எனவே, இத்தகைய சிறந்த அறிவினை உலகநூல்கள் தரமாட்டா. அறிவுநூல்களும் அருள்நூல்களுமே தரும்.
No comments:
Post a Comment