அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தேனிருந்த இதழார்
(திருப்பந்தணை நல்லூர்)
முருகா!
எப்பொழுதும் உனது திருவடித்
தியானத்தில் இருப்பேன்.
திருவடிப் பேற்றை அருள்வாய்.
தான
தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
தேனி
ருந்தஇத ழார்ப ளிங்குநகை
யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ......
தென்புரூவர்
தேன
மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு
சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ......
புண்டரீகம்
சூனி
யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
தோகை சந்தமணி வாரு டன்கலவி ......
யின்பமூடே
சோக
முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல்
தோட லங்கலணி மார்ப மும்பரிவு ....ளங்கொள்வேனே
ஓந
மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
யோசை தங்குமபி ராமி யம்பிகைப ......
யந்தவேளே
ஓல
மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும்
ஓது கெந்தருவர் பாட நின்றுநட ......
னங்கொள்வேலா
ஏனல்
மங்கைசுசி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ......
லங்குமார்பா
ஏர்க
ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
தேன்
இருந்த இதழார், பளிங்கு நகை-
யார், குளிர்ந்த மொழியார், சரங்கள் விழி
சீர் சிறந்த முகவார், இளம்பிறைஅது ......என்
புரூவர்,
தேன்
அமர்ந்த குழலார், களம் கமுகி-
னார், புயம் கழையினார், தனம் குவடு
சேர் சிவந்த வடிவார், துவண்டஇடை, ...... புண்டரீகம்
சூனியம்
கொள் செயலார், அரம்பை தொடை-
யார், சரண் கமல நேர் இளம்பருவ
தோகை, சந்தம் அணிவார் உடன் கலவி ......இன்பம்
ஊடே,
சோகம்
உண்டு விளையாடினும், கமல
பாதமும், புயம் ஈராறும், இந்துள பல்
தோடு அலங்கல் அணி மார்பமும், பரிவு......உளம் கொள்வேனே.
ஓ
நம, அந்த சிவரூபி, அஞ்சுமுக
நீலி, கண்டி, கலியாணி, விந்து ஒளி
ஓசை தங்கும் அபிராமி, அம்பிகை, ......பயந்த வேளே!
ஓலம்
ஒன்று அவுணர் சேனை, மங்கையர்கள்
சேறுடன் குருதி ஓட, எண் திசையும்
ஓது கெந்தருவர் பாட, நின்று நடனம் ......கொள்வேலா!
ஏனல்
மங்கை, சுசி ஞான அரம்பை, எனது
ஆயி, சந்த்ரமுக பாவை, வஞ்சி, குற
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு ...... இலங்கு
மார்பா!
ஏர்
கரந்தை, அறுகோடு, கொன்றை, மதி,
ஆறு அணிந்த சடையார், விளங்கும் எழில்
ஈறுஇல் பந்தணைநலூர் அமர்ந்துவளர் ......
தம்பிரானே.
பதவுரை
ஓ(ம்) நம அந்த சிவரூபி --- ஓம்
நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து வடிவான சிவத்துடன் கலந்தவள்,
அஞ்சுமுக நீலி --- ஐந்து
திருமுகங்களைக் கொண்ட பார்வதி தேவி,
கண்டி --- உருத்திராக்க மாலை
அணிந்தவள்,
கலியாணி --- மங்களம் மிக்கவள்,
விந்து ஒளி ஓசை தங்கும் அபிராமி ---
நாத விந்து வடிவான அழகினை உடையவள்,
அம்பிகை பயந்த வேளே --- அம்பிகை
ஈன்றருளிய செவ்வேளே!
ஓலம் ஒன்ற அவுணர்
சேனை ---
பேராரவாரத்துடன் போர் புரிய வந்த அரக்கர் சேனைகளும்,
மங்கையர்கள் --- அவரது பெண்டிர்களும்,
சேறுடன் குருதி ஓட --- உடல் மாண்டு
குருதியானது புழுதியில் கலந்து சேறு போல ஓட,
எண் திசையும் ஓது கெந்தருவர் பாட ---
எட்டுத் திக்குகளிலும் இருந்து கந்தருவர்கள் புகழ்ந்து பாட,
நின்று நடனம் கொள் வேலா --- திருநடனம்
புரிந்து அருளுகின்ற வேலாயுதப் பெருமானே!
ஏனல் மங்கை --- தினைப்புனத்தைக்
காவல் கொண்டிருந்து மங்கை,
சுசிஞான ரம்பை --- தூயஞானம் பொருந்திய
அழகி,
எனது ஆயி --- எனது தாய்,
சந்த்ரமுக பாவை --- சந்திரனைப் போன்ற
ஒளிமுகம் கொண்ட பாவை,
வஞ்சி --- வஞ்சிக் கொடி போன்றவள் ஆகிய
குறமானொடு --- குறமகளாகிய
வள்ளிநாயகியோடு,
உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும்
மார்பா --- தேவர்கள்
வளர்த்த மான் ஆகிய தேவயானை அம்மை அணைந்து அழகு விளங்கும் திருமார்பரே!
ஏர் கரந்தை --- அழகிய
திருநீற்றுப் பச்சை,
அறுகு --- அறுகம்புல்,
ஓடு --- மண்டை ஓடு,
கொன்றை --- கொன்றை மலர்,
மதி --- பிறைச் சந்திரன்,
ஆறு --- கங்கை நதி,
அணிந்த சடையார் விளங்கும் ---
ஆகியவற்றை அணிந்த திருச்சடையை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும்,
எழில் ஈறு இல் பந்தணைந(ல்)லூர் அமர்ந்து
வளர் தம்பிரானே --- முடிவில்லாத அழகு உள்ளதும் ஆகிய
திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருந்து அருள் புரியும் தனிப்பெருந்தலைவரே!
தேன் இருந்த இதழார் --- தேன் என
இனிக்கும் இதழூறலை உடையவர்கள்,
பளிங்கு நகையார் --- பளிங்கு போன்ற
பற்களை உடையவர்கள்,
குளிர்ந்த மொழியார் --- இனிய
மொழியினை உடையவர்கள்,
சரங்கள் விழி --- அம்புகளைப் போன்ற
கண்களை உடையவர்கள்,
சீர் சிறந்த முகவார் --- அழகு மிக்க
முகத்தை உடையவர்கள்,
இளம் பிறையது என் புரூவர் --- இளம்பிறை
என்று சொல்லக்கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர்கள்,
தேன் அமர்ந்த குழலார் --- வண்டுகள்
மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்,
களம் கமுகினார் --- பாக்கு மரத்தைப்
போன்ற கழுத்தினை உடையவர்கள்,
புயம் கழையினார் --- மூங்கில் போன்ற
தோள்களை உடையவர்கள்,
தனம் குவடு --- மலை ஒத்த முலைகளை உடையவர்கள்,
சேர் சிவந்த வடிவார் --- சிவந்த நிறம்
உடையவர்கள்,
துவண்ட இடை --- துவளுகின்ற இடையை
உடையவர்கள்,
புண்டரீகம் --- தாமரை போன்ற
பெண்குறியினை உடையவர்கள்,
சூனியம் கொள் செயலார் --- மயக்கும்
தொழிலில் வல்லவர்கள்,
அரம்பை தொடையார் --- வாழைத் தண்டு போன்ற
தொடையினை உடையவர்கள்,
சரண் கமல நேர் --- தாமரை போன்ற
பாதங்களை உடையவர்கள்,
இளம் பருவ தோகை --- இளம் பருவத்தை
உடைய மயில் போன்ற சாயலை உடையவர்கள்,
சந்தம் அணிவாருடன் கலவி இன்பம் ஊடே ---
சந்தனக் கலவையைப் பூசிக்கொள்ளுகின்ற பெண்களோடு கூடி மகிழ்வதாகிய இன்ப அனுபவத்தில்
உண்டாகும்,
சோகம் உண்டு விளையாடினும் --- சோர்வு
கொண்டு அவர்களோடு காம விளையாட்டில் ஈடுபட்டு இருந்தாலும்,
கமல பாதமும் --- தேவரீரது
திருவடித் தாமரைகளையும்,
புயம் ஈராறும் --- பன்னிரு
திருத்தோள்களையும்,
இந்துளம் பல் தோடு அலங்கல் அணி மார்பமும்
--- கடப்ப மலரோடு பல மலர்களால் தொடுத்த மாலைகள் அணியப்பெற்ற திருமார்பினையும்,
பரிவு உளம் கொள்வேனே --- உள்ளத்தில்
அன்பு வைத்து சிந்தித்த வண்ணமாக இருப்பேன்.
பொழிப்புரை
ஓம் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து
வடிவான சிவத்துடன் கலந்தவள்; ஐந்து திருமுகங்களைக்
கொண்ட பார்வதி தேவி; உருத்திராக்க மாலை
அணிந்தவள்; மங்களம் மிக்கவள்; நாத
விந்து வடிவான அழகினை உடையவள் ஆகிய அம்பிகை ஈன்றருளிய செவ்வேளே!
பேராரவாரத்துடன் போர் புரிய வந்த
அரக்கர் சேனைகளும், அவரது
பெண்டிர்களும் உடல் மாண்டு
குருதியானது புழுதியில் கலந்து சேறு போல ஓட, எட்டுத் திக்குகளிலும் இருந்து
கந்தருவர்கள் புகழ்ந்து பாட, திருநடனம் புரிந்து அருளுகின்ற
வேலாயுதப் பெருமானே!
தினைப்புனத்தைக் காவல் கொண்டிருந்த
மங்கை; தூயஞானம் பொருந்திய
அழகி; எனது தாய்; சந்திரனைப் போன்ற ஒளிமுகம் கொண்ட பாவை; வஞ்சிக் கொடி போன்றவள் ஆகிய குறமகளாகிய
வள்ளிநாயகியோடு, தேவர்கள் வளர்த்த
மான் ஆகிய தேவயானை அம்மை அணைந்து அழகு விளங்கும் திருமார்பரே!
அழகிய திருநீற்றுப் பச்சை, அறுகம்புல், மண்டை ஓடு, கொன்றை மலர், பிறைச் சந்திரன், கங்கை நதி ஆகியவற்றை அணிந்த திருச்சடையை உடைய
சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், முடிவில்லாத அழகு உள்ளதும் ஆகிய
திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருந்து அருள் புரியும் தனிப்பெருந்தலைவரே!
தேன் என இனிக்கும் இதழூறலை உடையவர்கள்; பளிங்கு போன்ற பற்களை உடையவர்கள்; இனிய மொழியினை உடையவர்கள்; அம்புகளைப் போன்ற கண்களை உடையவர்கள்; அழகு
மிக்க முகத்தை உடையவர்கள்; இளம்பிறை என்று
சொல்லக்கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர்கள்; வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்; பாக்கு மரத்தைப் போன்ற கழுத்தினை
உடையவர்கள்; மூங்கில் போன்ற
தோள்களை உடையவர்கள்; மலை ஒத்த முலைகளை
உடையவர்கள்; சிவந்த
நிறம் உடையவர்கள்; துவளுகின்ற இடையை
உடையவர்கள்; தாமரை போன்ற
பெண்குறியினை உடையவர்கள்; மயக்கும்
தொழிலில் வல்லவர்கள்; வாழைத் தண்டு போன்ற
தொடையினை உடையவர்கள்; தாமரை போன்ற பாதங்களை
உடையவர்கள்; இளம் பருவத்தை உடைய
மயில் போன்ற சாயலை உடையவர்கள்; சந்தனக் கலவையைப்
பூசிக்கொள்ளுகின்ற பெண்களோடு கூடி மகிழ்வதாகிய இன்ப அனுபவத்தில் உண்டாகும், சோர்வு கொண்டு அவர்களோடு காம
விளையாட்டில் ஈடுபட்டு இருந்தாலும்,
தேவரீரது
திருவடித் தாமரைகளையும், பன்னிரு
திருத்தோள்களையும், கடப்ப மலரோடு பல
மலர்களால் தொடுத்த மாலைகள் அணியப்பெற்ற திருமார்பினையும், உள்ளத்தில் அன்பு வைத்து சிந்தித்த
வண்ணமாக இருப்பேன்.
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில் பெண்களின்
அழகையும், அவர் செயலையும்
கூறி,
அவரது
முயக்கில் மயங்கி இருக்கும்போதும் முருகப் பெருமான் திருவடிகளை ஒருபோதும்
மறக்கமாட்டேன் என்று தமது உள்ள உறுதியைக் காட்டி அருளுகின்றார் அடிகளார்.
எல்லாவிதமான தீய குணங்களுக்கும், தீய செயல்களுக்கும் காரணமாக அமையும் காம
உணர்வு. உள்ளத்தை மயக்கி அறிவையும் கெடுத்து, தீ நெறியில் கொண்டு
சேர்ப்பது காம உணர்வு.
பொன்னாசையும் மண்ணாசையும்
மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய
பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும் அன்றி அவ்வாசை
மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச்
செய்யும். ஆதலால், இம்மாதர் ஆசை மிகமிகத் தூரத்திலே
அகல வேண்டும்.
கள்ளானது குடித்தால் அன்றி
மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு பண்ணும்.
ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள் வேறொன்றும் இல்லை.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. ---
திருக்குறள்.
கள் உண்டல் காமம் எமன்ப
கருத்து அறை போக்குச் செய்வ,
எள் உண்ட காமம் போல
எண்ணினில் காணில் கேட்கில்
தள்ளுண்ட விடத்தின், நஞ்சம்
தலைக்கொண்டால் என்ன, ஆங்கே
உள்ளுண்ட உணர்வு போக்காது,
உண்டபோது அழிக்குங் கள் ஊண். --- திருவிளையாடல் புராணம்.
இதன் பொருள் ---
கள் உண்ணுதலும் காமமும் என்று
சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள் உணவானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினாலும், கண்டாலும், கேட்டாலும் தவறுதலுற்ற இடத்திலும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அப்பொழுதே, உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது. உண்ட பொழுதில் மட்டுமே அதனை
அழிக்கும்.
தீயைக் காட்டிலும் காமத் தீ
கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும்
சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால்
நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது
நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
--- நாலடியார்.
தொடில்சுடின் அல்லது காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ, --- திருக்குறள்.
தீயானது தொட்டால் தான் சுடும். காமத் தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம்
பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.
உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும், குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீ அதே.
நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில் காமமே.
--- கந்தபுராணம்.
அறம் கெடும், நிதியும் குன்றும்,
ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும்
போகி
நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும், மறையோர் மன்னர்
வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை மாதர்
குணங்களை விரும்பினோர்க்கே. ---
விவேகசிந்தாமணி.
காமமே குலத்தினையும்
நலத்தினையும்
கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள்
அனைத்தையும்
புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச்
செல்லாமல்
வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும்
பகையாக்கிக்
கழுத்து அரியும் கத்தி தானே. ---
விவேகசிந்தாமணி.
ஒக்க நெஞ்சமே! ஒற்றி
யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து
வாழ்த்தினால்,
மிக்க காமத்தின்
வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர
ஓடுமே. --- திருவருட்பா.
"நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின், முற்றிழாய், பிற்பயக்கும் பீழை பெரிது" என்றார்
குமரகுருபர அடிகள். மிக்க காமம் என்பது,
தொடக்கத்தில் விளைக்கின்ற சிறிது பொழுதே இருக்கும் தன்மையை உடைய இன்பத்தைக்
காட்டிலும், பின்னர் விளைக்கின்ற நெடுங்காலம் வருத்துவதாகிய துன்பம் பெரியதாகும்.
புறப்பகை கோடியின் மிக்குஉறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றுஅஞ்சிக் காப்ப அனைத்து உலகும்
சொல்ஒன்றின் யாப்பார் பரிந்துஓம்பிக் காப்பவே
பல்காலும் காமப் பகை. --- நீதிநெறி விளக்கம்.
உலகம் முழுவதையும் தமது ஒரு
வார்த்தையினாலே தமது வசமாக்க வல்ல ஆற்றல் படைத்த முனிவரும், காமமாகிய உட்பகை தம்மை அணுகாவண்ணம் எப்போதும் வருந்தியும் தம்மைக்
காத்துக் கொள்வர். ற்றதுபோல, அறிவு உடையார் வெளிப்பகை தமக்குக் கோடிக்கு மேல் உண்டானாலும்
அஞைசமாட்டார். ஆனால், அகப்பகை ஆகிய காமப்பகைக்கு அஞ்சித் தம்மைக்
காத்துக் கொள்வர்.
தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்
தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல்உணர்வினைத் தொலைக்கும்,
ஏம நல் நெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம் அன்றியே ஒரு பகை உண்டு கொல் கருதில். --- கந்தபுராணம்.
காமமே கொலைகட்க்கு எல்லாம்
காரணம், கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம்
காரணம், கூற்றம் அஞ்சுங்
காமமே கள் உண்டற்கும்
காரணம், ஆதலாலே
காமமே நரக பூமி
காணியாக் கொடுப்பது என்றான். ---
திருவிளையாடல் புராணம்.
இதன் பொருள் ---
காமமே கொலைகளுக்கு எல்லாம்
காரணமாய் உள்ளது. கண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றவனும்
அஞ்சுதற்கு உரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலாலே, காமம் ஒன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக் காணி ஆட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.
கொலை அஞ்சார், பொய்ந்நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ, ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்
காமம் கதுவபட் டார். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
காமத்திற்கு வசப்பட்டவர்கள்
கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல வெட்கப்பட மாட்டார்கள். தம்முடைய
பெருமையைக் காத்துக்கொள்ளவும் செய்யமாட்டார்கள். திருட்டுத் தொழில் ஒன்று மட்டுமா? அதற்கு மேலும் பலவகையான தீய செயல்களையும் புரிவார். இந்தக் காம உணர்வானது
பொழியோடு பாவத்தையும் தருவது ஆகும் என்றும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு இருக்க, காமத்தால் பீடிக்கப்பட்டவர்கள் வேறு என்ன தான்
செய்ய மாட்டார்கள். எல்லாத் தீமைகளையும் புரிவர்.
நிலைத்த இன்பமான பேரின்பத்தில்
திளைத்து இருப்பவர்கள், உலக
இன்பமாகிய பாழும் சேறு போன்ற நரகத்தில் விழமாட்டார்கள். சிற்றின்பத்தை விழைபவர்
மற்ற அனைத்து இன்பங்களையும் கூடவிட்டு விடுவார்கள் என்று நீதிநெறி விளக்கப் பாடல்
கூறும்.
சிற்றின்பம் சில்நீரது ஆயினும், அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப, - முற்றும் தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ?
பார்இன்பப் பாழ்ங்கும்பியில். ---
நீதிநெறி விளக்கம்.
பின்வரும் திருப்புகழிலும், கந்தர்
அலங்காரப் பாடலிலும் அடிகளார், இக் கருத்தைக்
காட்டி உள்ளார்...
இருள் அளகம் அவிழ, மதி
போத முத்து அரும்ப,
இலகு கயல் புரள, இரு பார பொன் தனங்கள்
இளக, இடை துவள, வளை
பூசல் இட்டு இரங்க,
......எவராலும்
எழுத அரிய கலை நெகிழ, ஆசை மெத்த, உந்தி
இனிய சுழி மடுவின் இடை மூழ்கி, நட்பொடு அந்த
இதழ் அமுது பருகி, உயிர் தேகம் ஒத்து இருந்து .....முனிவு ஆறி,
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து,
முக வனச மலர் குவிய, மோகம் உற்று அழிந்து,
மொழி பதற, வசம் அழிய, ஆசையில் கவிழ்ந்து ......விடுபோதும்,
முழுது உணர உடைய முது மாதவத்து உயர்ந்த
பழுதில் மறை பயிலுவ என
ஆதரித்து நின்று
முநிவர் சுரர் தொழுது உருகு
பாத பத்மம் என்றும் ...... மறவேனே.
---- திருப்புகழ்.
கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முது கூளித் திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண் டெனக் கொட்டி ஆட வெம் சூர்க் கொன்ற ராவுத்தனே.
---
கந்தர் அலங்காரம்.
ஓ(ம்)
நம அந்த சிவரூபி ---
ஓங்கார வடிவமாகவும், திருவைந்தெழுத்து வடிவமாகவும் உள்ளது சிவபரம்பொருள்.
"உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா"
என்று மணிவாசகப் பெருமான் போற்றினார்.
"நற்றவத்தோர்
தாம்காண நாதாந்தத்து அஞ்செழுத்தால்
உற்று
உருவாய் நின்று ஆடல் உள்ளபடி - பெற்றிடநான்
விண்ணார்
பொழில்வெண்ணை மெய்கண்ட நாதனே!
தண்ணார்
அருளாலே சாற்று".
"எட்டும்
இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம்
புதல்வா நவிலக்கேள் சிட்டன்
சிவாயநம
என்னும் திருஎழுத்து அஞ்சாலே
அவாயம்
அற நின்று ஆடுவான்".
எனவரும்
உண்மை விளக்கப் பாடல்களாலும் தெளியலாம்.
எழில்
ஈறு இல் பந்தணைந(ல்)லூர் அமர்ந்து வளர் தம்பிரானே ---
"திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்"
என்று வழங்குகிறது.
கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து
வசதிகள் உள்ளன.
இறைவர்
--- பசுபதீசர்.
இறைவியார்
--- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல
மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம் --- சூரியதீர்த்தம்.
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத்
திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.
இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து
வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு. உமாதேவி பந்துகொண்டு
விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார்.
உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது
என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம்
முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக்
கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார்.
பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து
வணங்க, அம்பிகையை
பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப்
பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம்
வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும்
பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர்
ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த
இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும்
கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம்
பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின்
பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு
புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து
சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.
பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால்
சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின்
பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின்
குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.
காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம்.
இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து
வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன்
துறை என்றழைக்கப்படுகிறது.
தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன்
ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.
சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு
"திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கருத்துரை
முருகா! எப்பொழுதும் உனது
திருவடித் தியானத்தில் இருப்பேன். திருவடிப் பேற்றை அருள்வாய்.
No comments:
Post a Comment