முருகனைத் தொழுவோம்







அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் சொல்லப்பட்டுள்ள வேண்டுகோள்களைச் சொல்லி முருகனைத் தொழுவோம்.
எல்லா நலமும் பெறுவோம்.
---------------------

திருப்புகழ் மந்திர அருச்சனை
(அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்களில் இருந்து தொகுக்கப் பெற்றது)

ஓம் அபிராம தருண அகதீரா
   நமோநம
ஓம் அரகர சேயே
   நமோநம
ஓம் அரிமருகோனே
நமோநம
ஓம் அருண சொரூபா
நமோநம
ஓம் அழகான மேனிதங்கிய வேளே
நமோநம


ஓம் அறுதி இல்லானே
நமோநம
ஓம் அறுமுக வேளே
நமோநம
ஓம் ஆகமசார சொரூபா
   நமோநம
ஓம் ஆடகத் திரிசூலா
   நமோநம
ஓம் ஆதரித்து அருள் பாலா
நமோநம


ஓம் ஆதிசற்குண சீலா
   நமோநம
ஓம் ஆரணத்தினார் வாழ்வே
நமோநம
ஓம் ஆரணற்கு அரியானே
நமோநம
ஓம் ஆர்யை பெற்ற சீராளா
நமோநம
ஓம் ஆறிரட்டி நீள் தோளா
நமோநம


ஓம் இகபர மூலா
நமோநம
ஓம் இமையவர் வாழ்வே
நமோநம
ஓம் உந்திஆமை ஆனவர்க்கு இனியானே
நமோநம
ஓம் உமைகாளி பகவதி பாலா
நமோநம
ஓம் உம்பர்கள் சாமீ
நமோநம


ஓம் எம்பெருமானே
நமோநம
ஓம் ஒண்தொடி மோகா
நமோநம
ஓம் கங்காளவேணி குரு ஆனவா
நமோநம
ஓம் கதிதோயப் பாதகம் நீவு குடாரா
நமோநம
ஓம் கந்தா குமார சிவதேசிகா
நமோநம


ஓம் கருணை அதீதா
நமோநம
ஓம் கீதகிண்கிணி பாதா
நமோநம
ஓம் சங்கம்ஏறும் மாதமிழ்த் திரயவேளே
நமோநம
ஓம் சததள பாதா
நமோநம
ஓம் சத்தி பாணீ
நமோநம


ஓம் சரவண ஜாதா
நமோநம
ஓம் சமதள ஊரா
நமோநம
ஓம் சிங்கார ரூபமயில் வாகனா
நமோநம
ஓம் சிந்தூர பார்வதி சுதாகரா
நமோநம
ஓம் சிவசிவ அரகர தேவா
நமோநம


ஓம் சீதள வாரிஜ பாதா
நமோநம
ஓம் சித்தான சோதிகதிர் வேலா
நமோநம
ஓம் சுரர்பதி பூபா
நமோநம
ஓம் சூரை அட்டுநீள் பேரா
நமோநம
ஓம் சேவல மாமயில் பிரீதா
நமோநம


ஓம் சோபம் அற்றவர் சாமீ
நமோநம
ஓம் ஞான பண்டித சாமீ
நமோநம
ஓம் ஞான பண்டித நாதா
நமோநம
ஓம் ஞான முத்தமிழ்த் தேனே
நமோநம
ஓம் தத்துவ வாதீ
நமோநம


ஓம் தற் பிரதாபா
நமோநம
ஓம் தன்மராச தூதனைத் துகைபாதா
நமோநம
ஓம் திசையினும் மிசையினும் வாழ்வே
நமோநம
ஓம் திரிபுரம் எரிசெய்த கோவே
நமோநம
ஓம் திருதரு கலவி மணாளா
நமோநம


ஓம் தீபமங்கள ஜோதீ
நமோநம
ஓம் தீரசம்ப்ரம வீரா
நமோநம
ஓம் துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய்
நமோநம
ஓம் தூய அம்பல லீலா
நமோநம
ஓம் தெரிசன பரகதி ஆனாய்
நமோநம


ஓம் தேவகுஞ்சரி பாகா
நமோநம
ஓம் தேவர்கள் சேனை மகீபா
நமோநம
ஓம் நாகபந்த மயூரா
நமோநம
ஓம் நாத சற்குரு நாதா
நமோநம
ஓம் நாத நிஷ்கள நாதா
நமோநம


ஓம் நாத விந்து கலாதீ
நமோநம
ஓம் நாதகீத விநோதா
நமோநம
ஓம் நாவல ஞான மனோலா
நமோநம
ஓம் நிருபமர் வீரா
நமோநம
ஓம் நீதி தங்கிய வேளே
நமோநம


ஓம் நீப புஷ்கள தாளா
நமோநம
ஓம் நீலமிக்க கூதாளா
நமோநம
ஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா
நமோநம
ஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே
நமோநம
ஓம் பரசூரர் சேத தண்ட விநோதா
நமோநம


ஓம் பவுருஷ சீலா
நமோநம
ஓம் பரிமள நீபா
நமோநம
ஓம் பாரினிலே ஜெயவீரா
நமோநம
ஓம் பார்வதியாள் தரு பாலா
நமோநம
ஓம் பாலகுமார சுவாமீ
நமோநம


ஓம் பூதமுற்றுமே ஆனாய்
நமோநம
ஓம் பூதலம் தனை ஆள்வாய்
நமோநம
ஓம் பூரணக் கலை சாரா
நமோநம
ஓம் பூரணத்துளே வாழ்வாய்
நமோநம
ஓம் பூஷணத்து மாமார்பா
நமோநம


ஓம் போக அந்தரி பாலா
நமோநம
ஓம் போக சொர்க்க பூபாலா
நமோநம
ஓம் போதகம் தரு கோவே
நமோநம
ஓம் போத நிர்க்குண போதா
நமோநம
ஓம் போதவன் புகழ் சாமீ
நமோநம


ஓம் மறைதேடும் சேகரமான ப்ரதாபா
நமோநம
ஓம் மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா
நமோநம
ஓம் மா அசுரேச கடோரா
நமோநம
ஓம் முத்தி ஞானீ
நமோநம
ஓம் மேகம் ஒத்த மயூரா
நமோநம


ஓம் ரத்ன தீபா
நமோநம
ஓம் வாழ் ஜகத்ரய வாழ்வே
நமோநம
ஓம் வான பைந்தொடி வாழ்வே
நமோநம
ஓம் விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா
நமோநம
ஓம் விந்துநாத சத்து ரூபா
நமோநம


ஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா
நமோநம
ஓம் வீமசக்ர யூகாளா
நமோநம
ஓம் வீர கண்டைகொள் தாளா
நமோநம
ஓம் வீறுகொண்ட விசாகா
நமோநம
ஓம் வெகுகோடி நாம சம்பு குமாரா
நமோநம


ஓம் வேடர்தம் கொடி மாலா
நமோநம
ஓம் வேத சித்திர ரூபா
நமோநம
ஓம் வேத மந்திர சொரூபா
நமோநம
ஓம் வேத மந்திர ரூபா
நமோநம
ஓம் வேல் மிகுத்த மாசூரா
நமோநம


ஓம் வேத வித்தகா சாமீ
நமோநம
ஓம் வேதனத்ரய வேளே
நமோநம
ஓம் ஜகதீச பரம சொரூபா
நமோநம

----------------------------------------

"நமோநம" என்றால் போற்றி போற்றி என்று பொருள்.

வடமொழியில் ஒரு சொல்லின் இறுதியில் : இது போன்ற புள்ளியை வைத்து இருப்பர். இது விசர்கம் எனப்படும். இதன் உச்சரிப்பு, இந்தக் குக்கு முன்வரும் எழுத்தைப் பொறுத்தது. உதாரணம், பின்வருமாறு :---

பவந்த:   ---   இதை, "பவந்தஹ" என்று படிக்கவேண்டும்.
ஸ்திதி:    ---    இதை, "ஸ்திதிஹி" என்று படிக்கவேண்டும்.
ப்ரபு:     ---   இதை, "ப்ரபுஹு" என்று படிக்கவேண்டும்.
குணை:    ---     இதை, "குணைஹி" என்று படிக்கவேண்டும்.
ப்ருவோ: ---   இதை, "ப்ருவோஹோ" என்று  படிக்கவேண்டும்.

இதன்படி, வடமொழியில், நம: --- என்று வரும், அதை "நமஹ" என்று படிப்பார்கள்.

ஆனால், தமிழ் மொழியில் விசர்கம் இல்லை. எனவே, நம என்று படித்தாலே போதும்.  

மேற்குறித்த, 108 அருச்சனை நாமங்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களில் இருந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தொகுத்து, அன்பர்கள் பலருக்கும் வழங்கி உள்ளேன். அதுமுதல் தேவையான போது வழங்கி வருகின்றேன்.

வீட்டில் இருந்தபடியே, முருகன் படத்தை வைத்தோ, அல்லது விளக்கை ஏற்றி வைத்தோ, இந்த திவ்விய நாமங்களைச் சொல்லி வழிபடலாம்.

உங்கள் இதயமாகிய தாமரையே மலர்.
உங்கள் மனமே நைவேத்தியப் பொருள்.
உங்கள் அன்பே அபிஷேக நீர் அல்லது தீர்த்த நீர்.
உங்கள் பிராணனே தூபம்.
உங்கள் அறிவே தீபம்.

இந்த ஆடிக் கிருத்திகை தொடங்கி, எல்லா கிருத்திகை நாள்களிலும், சஷ்டி நாள்களிலும் வழிபட்டு வாருங்கள்.

வழிபாட்டின் முடிவில், பின்வரும் பாடல்களை மனதாரச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே,
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே,
வேதாகம ஞான விநோத, மனோ
தீதா, சுரலோக சிகா மணியே.                

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனைஆள்,
கந்தா, கதிர்வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்,
கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

நாள்என் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என்செயும், கொடும்கூற்று என்செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.   

எனக்கு அவலம் வாராமல் எந்நாளும் காத்து,
மனக்கவலை மாற்றும் மருந்து ஆம் --- புனச்சிறுமி
முத்துவடக் கோடு உழுத முந்நான்கு தோள் உடையான்
தத்து புனல் போரூரன் தாள்.

ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி,
தீது புரியாத தெய்வமே --- நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே, நாயேன்
பிழைக்கின்ற ஆறு நீ பேசு.

நோய்உற்று அடராமல், நொந்து மனம் வாடாமல்,
பாயில் கிடவாமல், பாவியேன் --- காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி, எனை, ஒண் போரூர் ஐயா, நின்
சீஅடிக்கீழ் வைப்பாய் தெரிந்து. 

மருள்உடையேன் செய்தபிழை, வண்போரூர் ஐயா,
அருள்உடைய நீ பொறுத்து இங்கு ஆளாய், - தெருள்உடையாய்,
வேறுதுணை காணேன், வினையேன் தனக்கு உரிய
ஆறுதுணை ஆறு ஆனனம்.

முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவார், வியாதி அடைந்து நையார்,
ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,
பொருகாலன் நாடு புகார், சமராபுரிப் புண்ணியனே.

உள்ளக் கவலை எலாம் ஒழிந்தேன், ஒழியாது செய்யும்
கள்ளக் கருமங்கள் யாவும் விண்டேன், கலைவாணியுடன்
வள்ளக் கமல மலர்மாது தந்து அருள் வாழ்வு அடைந்தேன்,
தெள்ளத் தெளிந்தனன் போரூர் முருகனைச் சேவைசெய்தே.


ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
                        இயல்பும், என்னிடம் ஒருவர் ஈது
            இடுஎன்ற போது, அவர்க்கு இலைஎன்று சொல்லாமல்
                        இடுகின்ற திறமும், இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும், நான் என்றும்உள்
                        நினைவிடா நெறியும், அயலார்
            நிதிஒன்றும் நயவாத மனமும், மெய்ந் நிலைநின்று
                        நெகிழாத திடமும், உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
                        தீங்கு சொல்லாத தெளிவும்,
            திரம்ஒன்று வாய்மையும், தூய்மையும் தந்து,நின்
                        திருவடிக்கு ஆள் ஆக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
                        தலம்ஓங்கு கந்தவேளே,
            தண்முகத் துய்யமணி, உண்முகச் சைவமணி,
                        சண்முகத் தெய்வமணியே.

ஏலம் வைத்த புயத்தில் அணைத்து,
அருள் வேல் எடுத்த சமர்த்தை நினைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைத்தவை அருள்வோனே,

முருகா!

நினைத்த காரியம் அனுக்கூலமே புரி முருகா!
அருள் தாராய்.

என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

மூவிரு முகங்கள் போற்றி,
     முகம் பொழி கருணை போற்றி,
ஏவரும் துதிக்க நின்ற
     ஈராறு தோள் போற்றி, காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
     மலரடி போற்றி, அன்னான்
சேவலும் மயிலும் போற்றி,
     திருக்கை வேல் போற்றி போற்றி.

வழிபாட்டின் முடிவில், முடிந்தால் கற்பூரம் காட்டி மகிழுங்கள்.

அகிலாண்ட நாயகியாகிய வள்ளியின் மணவாளப் பெருமாள்
எல்லா நலங்களையும் அருளவேண்டும்.
              

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...