அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அறுகுநுனி பனி
(திருவிடைமருதூர்)
திருவிடைமருதூர் முருகா!
அடியேன் அவமே பிறந்து
அழியாமல்,
அத்துவித முத்தி
பெற்று உய்ய அருள் புரிவீர்.
தனதனன
தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான
தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா ...... தனதன தனதான
அறுகுநுனி
பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி
தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ... அவரொருபெரியோராய்
அழகுபெறு
நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு
வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு
சுடர்போலே
வெறுமிடிய
னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி
யவர்களொடு
சீறி
ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட
மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ......விதிதனை நினையாதே
மினுகுமினு
கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள்
போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற
வருநாளில்
வறுமைகளு
முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை
சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ......மனையவள் மனம்வேறாய்
மறுகமனை
யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு
வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள்
பலபேச
இறுதியதொ
டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ
லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி
லிடும்வாழ்வே
இணையடிகள்
பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக
போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர்
பெருமாளே.
பதம் பிரித்தல்
அறுகுநுனி
பனி அனைய சிறியதுளி, பெரியது ஒரு
ஆகம் ஆகி, ஓர் பால ரூபமாய்,
அருமதலை குதலைமொழி தனில்உருகி, அவருடைய
ஆயி
தாதையார் மாய மோகமாய்,
அருமையினில் அருமையிட, மொளுமொளுஎன உடல்வளர
ஆளு மேளமாய், வால ரூபமாய், ..... அவர் ஒரு பெரியோராய்
அழகுபெறு
நடைஅடைய, கிறுதுபடு மொழி பழகி,
ஆவி ஆய ஓர் தேவி மாரும் ஆய்,
விழுசுவரை, அரிவையர்கள் படுகுழியை, நிலைமைஎன,
வீடு
வாசலாய், மாட கூடமாய்,
அணுஅளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி,
ஆசை ஆளராய், ஊசி வாசியாய், ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடியன்
ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,
மேலை வீடுகேள், கீழை வீடுகேள்,
திடுதிடு என நுழைவதன்முன், எதிர்முடுகி, அவர்களொடு
சீறி, ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,
விரகினொடு வருபொருள்கள் சுவறிஇட, மொழியும்ஒரு
வீணி யார்சொலே மேலது ஆயிடா, ......விதிதனை நினையாதே,
மினுகுமினுகு
எனும் உடலம் அறமுறுகி நெகிழ்வு உறவும்,
வீணர் சேவையே பூணு பாவியாய்,
மறுமை உளது எனும்அவரை, விடும்,விழலை அதனில்,வரு
வார்கள்
போகுவார், காணுமோ எனா,
விடுதுறவு பெரியவரை, மறையவரை, வெடுவெடு என
மேளமே சொலாய், ஆளி வாயராய் ........மிடைஉற
வருநாளில்
வறுமைகளும்
முடுகிவர, உறுபொருளும் நழுவ, சில
வாதம், ஊது காமாலை, சோகை நோய்,
பெருவயிறு, வயிறுவலி, படுவன்வர, இருவிழிகள்
பீளை
சாறிடா, ஈளை மேலிடா,
வழவழ என உமிழும்அது கொழகொழ என ஒழுகிவிழ
வாடி, ஊன் எலாம் நாடி
பேதமாய், ......மனையவள் மனம்வேறாய்
மறுக, மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில்
மாதர் சீ எனா, வாலர் சீ எனா,
கனவுதனில் இரதமொடு குதிரைவர, நெடிய சுடு-
காடு
வா எனா, வீடு போ எனா,
வலது அழிய, விரகு அழிய, உரைகுழறி, விழிசொருகி,
வாயு மேலிடா, ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச,
இறுதி
அதொடு அறுதி என உறவின்முறை கதறிஅழ,
ஏழை மாதராள் மோதி மேல்விழா,
எனது உடைமை எனது அடிமை எனும்அறிவு சிறிதும்அற,
ஈ
மொலேல் எனா, வாயை ஆ எனா,
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய், ......எரிதனில் இடும்வாழ்வே
இணையடிகள்
பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்,
ஏசிடார்களோ? பாச நாசனே!
இருவினை, மும்மலமும் அற, இறவியொடு பிறவி அற,
ஏக
போகமாய், நீயும் நானுமாய்
இறுகும்வகை, பரமசுகம் அதனை அருள், இடைமருதில்
ஏக நாயகா! லோக நாயகா! ...... இமையவர்
பெருமாளே.
பதவுரை
இடை மருதில் ஏக நாயகா ---
திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கும் தனிப்பெரும் தலைவரே!
லோக நாயகா --- உலகங்கட்கு
எல்லாம் முதல்வரே!
இமையவர் பெருமாளே --- தேவர்களுக்கு
எல்லாம் தலைவராகிய பெருமையின் மிக்கவரே!
அறுகு நுனி பனி அனைய
சிறிய துளி
--- அறுகம் புல்லின் மேல் உள்ள பனி போன்ற மிகவும் சிறிய துளியானது,
பெரியது ஒரு ஆகம் ஆகி --- பெரியது ஒரு
உடம்பாகி,
ஓர் பால ரூபமாய் --- ஒப்பற்ற குழந்தை
உருவம் கொண்டு பிறந்து,
அவருடைய ஆயி தாதையார் --- அக்
குழந்தையினுடைய தாயும் தந்தையும்,
அரு மதலை குதலை மொழி
தனில் உருகி
--- அருமையான குழந்தையின் மழலைச் சொற்களைக் கேட்டு உள்ளம் உருகி,
மாய மோகம் ஆய் --- மயக்கத்துடன்
அக் குழந்தையின் மேல் மிகுந்த அன்பு வைத்து,
அருமையினில் அருமை இட
---
அருமையினும் அருமையாக ஆடை ஆபரணங்களை இட்டு வளர்க்க,
மொளு மொளு என உடல் வளர --- மொளு
மொளு என்று உடலானது விரைந்து வளர்ச்சியுற,
ஆளும் மேளமாய் --- அப்படி வளர்ந்த
அந்த ஆள் மேள தாளங்களுடன் கூடி,
வால ரூபம் ஆய் --- வாலப் பருவத்தை
அடைந்து,
அவர் ஒரு பெரியோராய் –-- அந்த மனிதர் ஒரு
பெரிய மனிதராக விளங்கி,
அழகு பெறு நடை அடைய --- அழகு மிக்க
நடையை அடைந்து,
கிறிது படு மொழி
பழகி
--- அரட்டலான சொற்களைப் பேசிப் பயின்று,
ஆவி ஆய ஓர்
தேவிமாரும் ஆய் --- உயிருக்கு நிகரான மனைவிகள் பலரை அடைந்து,
விழு சுவரை --- கூரை விழுந்த
சுவர் போன்ற இந்த உடம்பையும்,
அரிவையர்கள் படு
குழியை ---
பெண்களுடைய அழிவதற்கு ஏதுவான பள்ளத்தையும்,
நிலைமை என --- நிலைபேறானது
என்று எண்ணி,
வீடு வாசலாய் மாட
கூடமாய்
--- வீடு வாசல் மாடம் கூடம் ஆகிய இவைகளுடன் கூடி வாழ்ந்து,
அணு அளவு தவிடும் இக --- அணு அளவு
தவிடுதானும் இங்கே,
பிதிர விட மனம் இறுகி --- சிதறவிடாமல்
பாதுகாத்து மனமானது மிகவும் கெட்டித் தன்மையை அடைந்து,
ஆசை ஆளராய் --- ஆசையை மிகவும்
உடையவர் ஆகி,
ஊசி வாசி ஆய் --- ஊசி நுனி அளவு
நுட்பமாக வட்டியைக் கணக்கிட்டு வாங்கிச் செல்வத்தைச் சேர்த்து,
அவி உறு சுடர் போலே --- அணைந்து போகப்
போகின்ற விளக்கைப் போல சுடர்விட்டு எரிந்து,
வெறு மிடியன் ஒரு
தவசி
--- ஒன்றும் இல்லாத வறுமையாளனாகிய ஒரு தவசீலன்,
அமுது படை எனும்
அளவில்
--- ஐயா, சிறிது அன்னம் கொடும்
என்று கேட்டவுடனே,
மேலை வீடு கேள் --- மேல் வீட்டில்
போய்க் கேளும்,
கீழை வீடு கேள் --- கீழ் வீட்டில்
போய்க் கேளும் என்று கூறியும்,
திடு திடு என
நுழைவதன் முன்
--- அவ் வறியவன் திடுதிடு என்று சிறிது விரைவாக வாசல் படி ஏறி பசியைப் பொறுக்க
மாட்டாமல் நுழைய முயலும் முன்பாக,
எதிர் முடுகி --- அவனுக்கு எதிராக
விரைந்து சென்று,
அவர்களொடு சீறி --- அவர்கள் மேல்
மிகவும் கோபித்து,
ஞாளி போல் ஏறி வீழ்வதாய் --- நாயைப்
போலே அவர் மேல் வீழ்ந்து கடிப்பது போல் பேசியும்,
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட
மொழியும்
--- வஞ்சனை வழியில் வந்த செல்வமானது வற்றிப் போகுமாறு தீமையான காரியங்களில்
செல்லுமாறு கூறும்,
ஒரு வீணியார் சொலே
மேலது ஆய்
--- தனிப்பட்ட வீணர்களின் வெற்றுரைகளே மேலான அறிவுரைகளாகக் கருதி அதன்படி
தீநெறிகளில் நடந்தும்,
இடா விதி தனை
நினையாதே
--- ஆன்றோர்கள் இது இப்படி என்று வரம்பிட்ட விதிமார்க்கத்தைச் சிறிதும்
சிந்தியாமல்,
மினுகு மினுகு எனும்
உடலம்
--- வேளை தவறாமல் உண்பதனால் மினுமினுப்பினை அடைந்த உடலானது,
மற முறுகி நெகிழ்வு
உறவும்
--- பாவமே முதிர்ந்து தளர்ச்சி அடையவும்,
வீணர் சேவையே பூணு
பாவியாய்
--- வீணான வெற்றர்களைச் சந்திப்பதையே சிறந்த பயனாகக் கருதி, புல்லர்களுடன் உறவு செய்கின்ற பாவியாகி,
மறுமை உளது எனும்
அவரை
--- இம்மையில் செய்தது எல்லாம் மரணத்திற்குப் பின்னும் மறுபிறப்பிலும் வரும் என்று
கூறும் நல்லோர்களைப் பார்த்து,
விடும் விழலை --- இந்த வீணான
சொற்களை விடும்,
அதனின் வருவார்கள்
போகுவார் காணுமோ எனா --- வருகின்றவர்களையும்
போகின்றவர்களையும் நீர் பார்த்தீரா என்று ஏளனமாகப் பேசி,
விடு துறவு பெரியவரை
மறையவரை
--- பந்த பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும், மறையவர்களையும்,
வெடு வெடு என மேளமே
சொலாய்
--- வெடு வெடு என்று கடுமையாக மேளம் ஒலிப்பது போல் வைது,
ஆளி வாயராய் --- வீம்பு பேசும்
வாயை உடையவர் ஆகி,
மிடை உற வரு நாளில் --- நெருக்கடியான இடையூறுகள்
வரத் தொடங்கிய சமயத்தில்,
வறுமைகளும் முடுகி வர ---
தரித்திரங்களானது விரைந்து வரவும்,
உறு பொருளும் நழுவ --- முன் பொருந்தி
இருந்த செல்வம் எல்லாம் கையை விட்டு நழுவி நீங்கவும்,
சில வாதம் --- வாத நோய்களில்
சிலவும்,
ஊது காமாலை --- ஊது காமாலையும்,
சோகை நோய் --- சோகை முதலிய
நோய்களும்,
பெரு வயிறு --- மகோதரம் என்னும்
வயிறு பெருத்தலும்,
வயிறு வலி –-- வயிற்று வலியும்,
படுவன் வர --- ஒரு வகையான
சிலந்தி நோயும் வந்து சேரவும்,
இரு விழிகள் பீளை
சாறு இடா
--- இரண்டு கண்களிலும் பீளை வழியவும்,
ஈளை மேலிடா --- கோழை மேலிடவும்,
உமிழும் அது --- உமிழ்கின்ற
எச்சிலானது
வழ வழ என --- வழ வழ என்றும்,
கொழ கொழ என --- கொழ கொழ என்றும்,
ஒழுகி விழ --- நாறு போல் ஒழுகி
மார்பிலும் மண்ணிலும் விழவும்,
ஊன் எலாம் வாடி --- உடலில் சதைகள்
முழுவதும் சுருக்கத்தை அடைந்து,
நாடி பேதமாய் --- வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்று நாடிகளும்
ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை இன்றி மாறுபட்டும்,
மனையவள் மனம் வேறாய்
மறுக
--- முன் ஒற்றுமையாய் இருந்த இல்லாளுடைய உள்ளம் வேற்றுமை அடையவும், அதனால் உள்ளம் சுழற்சி அடையவும்,
மனை உறும் அவர்கள்
நணுகு நணுகு எனும் அளவில் --- வீட்டின் பக்கமாக வருபவர்களை
வாரும் வாரும் என்று அழைத்தவுடன்,
மாதர் சீ எனா வாலர்
சீ எனா
--- பெண்கள், சீ விழுந்து கிட
எனவும், வாலிபர்கள் சீ
பேசாமல் கிட என்று கூறவும்,
கனவு தனில் இரதமொடு
குதிரை வர
--- குதிரைகள் பூட்டிய தேர் வந்து தன்னை அழைப்பது போன்ற கனவுகள் கண்டும்,
நெடிய சுடு காடு வா
எனா
--- சுடுகின்ற வனமாகிய ஈமதேயம்,
அப்பா, உனது ஆட்டம் முடிந்து விட்டது, என்னிடத்திற்கு வா, என்று அழைக்கவும்,
வீடு போ எனா --- கிழவா, உனது நாள் முடிந்து விட்டது, இதை விட்டு விரைந்து போ என்று வீடு
விரட்டவும்,
வலது அழிய --- வல்லமை ஒழியவும்,
விரகு அழிய --- உபாயங்கள்
நீங்கவும்,
உரை குழறி விழி
சொருகி ---
சொற்கள் குழறவும், கண்கள் சொருகவும்,
வாயு மேலிடா --- பிராண வாயுவானது
மேல் மேல் விசைந்து எழவும்,
ஆவி போகு நாள் --- உயிரானது உடலை
விட்டுப் பிரிகின்ற நாளில்,
மனிதர்கள் பல பேச ---
சுற்றியிருக்கின்ற மனிதர்கள் தத்தம் கருத்திற்கு இசைந்தவாறு பலப்பல பொருள்கள்
பற்றிப் பேசவும்,
இறுதி அதொடு அறுதி
என உறவின் முறை கதறி அழ --- முடிவு பெற்ற அத்துடன் மரணம்
வந்துவிட்டது என்று பதறி, சுற்றத்தார்கள் ஓ
என்று ஒலமிட்டு அழவும்,
ஏழை மாதராள் மோதி
மேல் விழா
--- பெண்பாலாகிய மனைவி, மார்பில் அறைந்து
கொண்டு மேல் விழுந்து அழவும்,
எனது உடைமை --- இவைகள் என்னுடைய
சொத்துக்கள்,
எனது அடிமை --- இவர்கள் என்னுடைய
அடிமைகள்
எனும் அறிவு சிறிதும் அற --- என்று
எண்ணி மகிழ்கின்ற அறிவானது ஒரு சிறிதும் இல்லாமல் நீங்கவும், (மரணப் படுக்கையில் படுத்திருக்கும் அப்
பிணத்தின் வாயில்),
ஈ மொலேல் எனா --- ஈக்கள் மொலேல்
என்று உடலை மொய்க்கவும்,
வாயை ஆ எனா --- வாய் ஆ என்று அகன்று
கிடக்கவும்,
இடுகு பறை சிறு பறைகள்
திமிலையொடு தவில் அறைய –-- ஒடுக்கமான பறைகள், சிறிய பறைகள், பம்பையுடன் தவில் என்ற பறையும் ஒலிக்க,
ஈம தேசமே பேய்கள்
சூழ்வதாய்
--- சுடுகாட்டிற்குப் பேய்கள் சூழக் கொண்டு போய்,
எரிதனில் இடும்
வாழ்வே ---
நெருப்பில் போட்டுக் கொளுத்துகின்ற வாழ்வே ஆகும். (இத்தகைய நிலையை)
இணை அடிகள் பரவும்
உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ --- தேவரீரது இரண்டு
திருவடிகளைப் போற்றி செய்யும் உன் சிறந்த அடியார்கள் பெறுவார்களாயின், தேவரீரை உலகத்தார் நிந்திக்க
மாட்டார்களா?
பாச நாசனே --- பாசத்தை நாசம்
செய்யும் பெருமானே!
இரு வினை மும் மலமும் அற --- நல்வினை தீவினை என்னும் இருவினைகள், ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்கள் அற்றுப் போகவும்,
இறவி ஒடு பிறவி அற --- இறப்பும்
பிறப்பும் இல்லாமல் தொலையவும்,
ஏக போகமாய் நீயும்
நானுமாய் இறுகும் வகை --- தேவரீரும் அடியேனும் ஒன்றுபட்டு
அத்துவிதமாகக் கலக்கும் வகையான,
பரம சுகம் அதனை அருள் --- பேரின்பப்
பெருவாழ்வை அருள் புரிவீர்.
பொழிப்புரை
திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கும்
தனிப்பெரும் தலைவரே!
உலகங்கட்கு எல்லாம் முதல்வரே!
தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய
பெருமையின் மிக்கவரே!
அறுகம் புல்லின் மேல் உள்ள பனி போன்ற
மிகவும் சிறிய துளியானது, பெரிய ஒரு உடம்பாகி, ஒப்பற்ற குழந்தை உருவம் கொண்டு பிறந்து, அக் குழந்தையினுடைய தாயும் தந்தையும், அருமையான
குழந்தையின் மழலைச் சொற்களைக் கேட்டு உள்ளம் உருகி, மயக்கத்துடன் அக் குழந்தையின் மேல் மிகுந்த
அன்பு வைத்து, அருமையினும் அருமையாக
ஆடை ஆபரணங்களை இட்டு பாலூட்டி சீராட்டி வளர்க்க, மொளுமொளு என்று உடலானது விரைந்து
வளர்ச்சியுற, அப்படி வளர்ந்த அந்த
ஆள் மேள தாளங்களுடன் கூடி, வாலப் பருவத்தை
அடைந்து, அந்த
மனிதர் ஒரு பெரிய மனிதராக விளங்கி,
அழகு
மிக்க நடையை அடைந்து, அரட்டலான சொற்களைப்
பேசிப் பயின்று, உயிருக்கு
நிகரான மனைவிகள் பலரை அடைந்து, கூரை விழுந்த சுவர்
போன்ற இந்த உடம்பையும், பெண்களுடைய அழிவதற்கு
ஏதுவான பள்ளத்தையும், நிலைபேறானது என்று
எண்ணி, வீடு வாசல் மாடம்
கூடம் ஆகிய இவைகளுடன் கூடி வாழ்ந்து, அணு
அளவு தவிடுதானும் இங்கே, சிதறவிடாமல்
பாதுகாத்து மனமானது மிகவும் கெட்டித் தன்மையை அடைந்து, ஆசையை
மிகவும் உடையவர் ஆகி, ஊசி நுனி அளவு
நுட்பமாக வட்டியைக் கணக்கிட்டு வாங்கிச் செல்வத்தைச் சேர்த்து, அணைந்து
போகப் போகின்ற விளக்கைப் போல, ஆரம்பத்தில்
சுடர்விட்டு எரிந்து, ஒன்றும் இல்லாத
வறுமையாளனாகிய ஒரு தவசீலன்,
"ஐயா, சிறிது அன்னம் கொடும்" என்று
கேட்டவுடனே, "மேல் வீட்டில் போய்க்
கேளும்”, "கீழ் வீட்டில் போய்க் கேளும்"
என்று கூறியும், அவ் வறியவன் (ஐயா
என்று கூறி) திடுதிடு என்று சிறிது விரைவாக வாசல் படி ஏறி பசியைப் பொறுக்க
மாட்டாமல் நுழைய முயலும் முன்பாக,
அவனுக்கு
எதிராக விரைந்து சென்று, அவர்கள் மேல் மிகவும்
கோபித்து, நாயைப் போலே அவர்
மேல் வீழ்ந்து கடிப்பது போல் பேசியும், வஞ்சனை வழியில் வந்த
செல்வமானது வற்றிப் போகுமாறு தீமையான காரியங்களில் செல்லுமாறு கூறும், தனிப்பட்ட வீணர்களின் வெற்றுரைகளே மேலான
அறிவுரைகளாகக் கருதி அதன்படி தீ நெறிகளில் நடந்தும், ஆன்றோர்கள் இது இப்படி என்று வரம்பிட்ட
விதிமார்க்கத்தைச் சிறிதும் சிந்தியாமல், வேளை
தவறாமல் உண்பதனால் மினுமினுப்பினை அடைந்த உடலானது, பாவமே முதிர்ந்து தளர்ச்சி அடையவும், வீணான வெற்றர்களைச் சந்திப்பதையே சிறந்த
பயனாகக் கருதி, புல்லர்களுடன் உறவு
செய்கின்ற பாவியாகியும், யாராவது நல்லோர்கள், "ஐயா, இம்மையில் செய்தது மறுமையில் வரும். "முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்" என்று கூறினால், அவ்வாறு
கூறும் நல்லோர்களைப் பார்த்து,
"இம்
மாதிரியான வீணான சொற்களை இனி இங்கே கூறாதேயும், வருகின்றவர்களையும் போகின்றவர்களையும்
நீர் பார்த்தீரா" என்று ஏளனமாகப் பேசி, பந்த பாசங்களை விட்ட துறவிகளாகிய
பெரியோர்களையும், மறையவர்களையும், வெடுவெடு என்று கடுமையாக மேளம் ஒலிப்பது
போல் வைது, வீம்பு பேசும் வாயை
உடையவர் ஆகி, நெருக்கடியான
இடையூறுகள் வரத் தொடங்கிய சமயத்தில், தரித்திரங்களானது
விரைந்து வரவும், முன் பொருந்தி இருந்த
செல்வம் எல்லாம் கையை விட்டு நழுவி நீங்கவும், வாத நோய்களில் சிலவும், ஊது காமாலையும், சோகை முதலிய நோய்களும், மகோதரம் என்னும் வயிறு பெருத்தலும், வயிற்று வலியும், ஒரு வகையான சிலந்தி நோயும் வந்து
சேரவும், இரண்டு கண்களிலும் பீளை வழியவும், கோழை மேலிடவும், உமிழ்கின்ற எச்சிலானது வழவழ என்றும், கொழகொழ என்றும், நாறு போல் ஒழுகி மார்பிலும் மண்ணிலும்
விழவும், உடலில் சதைகள்
முழுவதும் சுருக்கத்தை அடைந்து,
வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்று நாடிகளும்
ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை இன்றி மாறுபட்டும், முன் ஒற்றுமையாய் இருந்த இல்லாளுடைய
உள்ளம் வேற்றுமை அடையவும், அதனால் உள்ளம்
சுழற்சி அடையவும், வீட்டின் பக்கமாக
வருபவர்களை "வாரும் வாரும்" என்று அழைத்தவுடன், பெண்கள், "சீ விழுந்து கிட" எனவும், வாலிபர்கள் "சீ பேசாமல் வாயை
மூடிக் கொண்டு முடங்கிக் கிட" என்று கூறவும், குதிரைகள் பூட்டிய தேர் வந்து தன்னை
அழைப்பது போன்ற கனவுகள் கண்டும்,
சுடுகின்ற
வனமாகிய ஈமதேயம், "அப்பா உனது ஆட்டம் முடிந்து விட்டது, என்னிடத்திற்கு
வா" என்று அழைக்கவும்,
"கிழவா, உனது நாள் முடிந்து விட்டது, இதை விட்டு விரைந்து போ" என்று
வீடு விரட்டவும், வல்லமை ஒழியவும், உபாயங்கள் நீங்கவும், சொற்கள் குழறவும், கண்கள் சொருகவும், பிராண வாயுவானது மேல்மேல் விசைந்து
எழவும், உயிரானது உடலை
விட்டுப் பிரிகின்ற நாளில், சுற்றியிருக்கின்ற
மனிதர்கள் தத்தம் கருத்திற்கு இசைந்தவாறு பலப்பல பொருள்கள் பற்றிப் பேசவும், முடிவு பெற்ற அத்துடன் மரணம்
வந்துவிட்டது என்று பதறி, சுற்றத்தார்கள் "ஓ"
என்று ஒலமிட்டு அழவும், பெண்பாலாகிய மனைவி
மார்பில் அறைந்து கொண்டு மேல் விழுந்து அழவும், இவைகள் என்னுடைய சொத்துக்கள், இவர்கள் என்னுடைய அடிமைகள் என்று எண்ணி
மகிழ்கின்ற அறிவானது ஒரு சிறிதும் இல்லாமல் நீங்கவும், (மரணப் படுக்கையில் படுத்திருக்கும் அப்
பிணத்தின் வாயில்), ஈக்கள் மொலேல் என்று
உடலை மொய்க்கவும், வாய் "ஆ" என்று அகன்று
கிடக்கவும், ஒடுக்கமான பறைகள், சிறிய பறைகள், பம்பையுடன் தவில் என்ற பறையும் ஒலிக்க, சுடுகாட்டிற்குப் பேய்கள் சூழக் கொண்டு
போய், நெருப்பில் போட்டுக்
கொளுத்துகின்ற வாழ்வே ஆகும். (இத்தகைய
நிலையை) தேவரீரது இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும், உன் சிறந்த அடியார்கள் பெறுவார்களாயின், தேவரீரை உலகத்தார் நிந்திக்க
மாட்டார்களா?
பாசத்தை நாசம் செய்யும் பெருமானே!
நல்வினை தீவினை என்னும் இருவினைகள், ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்கள் அற்றுப் போகவும்,
இறப்பும் பிறப்பும் இல்லாமல் தொலையவும், தேவரீரும் அடியேனும் ஒன்றுபட்டு
அத்துவிதமாகக் கலக்கும் வகையான, பேரின்பப்
பெருவாழ்வை அருள் புரிவீர்.
விரிவுரை
அறுகுநுனி
பனி அனைய சிறிய துளி ---
ஆன்மாவானது
நல்வினை தீவினைக்கு ஈடாக சுவர்க்க நரகங்களினால் இன்ப துன்பங்களைத் துய்த்து, விண்ணிலிருந்து மழை வழியாக இம்
மண்ணுலகம் எய்தி, ஆடவனிடம்
சேர்கின்றது. அங்ஙனம் சேர்ந்த ஆன்மா இரு திங்கள் தந்தையிடம் இருந்து, தாயின் கருவில் எய்துகின்றது. அங்ஙனம்
எய்தும் போது அதன் வடிவம் அறுகம்புல்லின் மீதுள்ள பனித்துளி போன்ற சிறிய அளவே
ஆகும். அத்துணைச் சிறிய அளவாக இருந்த ஒன்று இத்துணைப் பெரிய உடம்பாக ஆகின்றது.
பனியின்
விந்துளி போலவே கருவின்உறும்
அளவில்
அங்குஒரு சூசமாய், மிளகுதுவர்
பனைதெ
னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப்
பருவமும்
தலை கீழதாய் நழுவி,நி லம்
மருவி, ஒன்பது வாசல்சேர் உருவம்உள
பதுமையின்
செயல் போலவே, வளிகயிறின் ......உடனாடி
மனவிதம்
தெரியாமலே மலசலமொடு,
உடல்
நகர்ந்து, அழுது ஆறியே, அனைமுலையின்
மயம்
அயின்று,ஒரு பாலனாய் இகமுடைய
......செயல்மேவி
வடிவம்
முன்செய்த தீமையா லெயும்உனையும்
அற
மறந்து, அக மீதுபோய் தினதினமும்
மனம்
அழிந்து உடல் நாறினேன் இனிஉனது ......கழல்தாராய்..
--- திருப்புகழ்.
அருமதலை
குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி
தாதையார் மாய மோகமாய் ---
குழந்தைகள்
பேசும் இனிய மொழி கனியமுதினும் சுவை உடையது.
குழல்இனிது
யாழ்இனிது என்ப,தம் மக்கள்
மழலைச்
சொல்கோளா தவர். --- திருக்குறள்.
குழறிக்
குழறிக் கூறும் மழலை மொழியால் உருகாதார் யாரும் இல்லை. ஆதலின், தாய் தந்தையர் மழலை மொழியால் உருகி, அன்பு பெருகி, அம் மகவை நிரம்ப ஆடையாபரணாதிகளால்
அலங்கரித்து மகிழ்வர்.
அருமையினில்
அருமையிட மொளு மொளு என உடல் வளர, ஆளு
மேளமாய் வாலரூபமாய் அவர் ஒரு பெரியோராய் ---
குழந்தையை
மிக்க அருமையாக சிறந்த உணவுகளை நல்கி நாளும் நன்கு வளர்க்க, அக் குழந்தையின் உடம்பு மிக விரைவாக
வளர்ந்தது. அக் குழந்தை மேள தாளத்துடன் ஓங்கி பெரிய மனிதனாகி விட்டனன்.
அழகுபெறு
நடை அடைய கிறுதுபடு மொழி பழகி ஆவி
ஆய ஓர் தேவிமாரும் ஆய் ---
இளமை
முறுக்கினால் வீதிகளில் அழகாக நடந்தும், தன்
ஒத்த இளைஞர்களோடு கிண்டலும் கிறுதுமாக அரட்டல் மொழிகளைப் பேசியும், காமாதுரனாகிப் பல பெண்களுடன் கூடி
தடுமாறலானான்.
தேவி
என்று ஒருமையில் கூறாமல் தேவிமார் என்று பன்மையாகக் கூறியது சிந்தித்தற்குறியது.
விழு
சுவரை
---
மேல்
கூரை விழுந்த சுவரைப் போல் பயனின்றி நிற்பதனால், இவ் உடம்பை சுவர் என்றனர். உவம
ஆகுபெயராக உடம்பு எனப் பொருள் செய்யப் பெற்றது.
நிலைமையென
வீடு வாசலாய் மாடகூடமாய் ---
நிலையில்லாத
பொருள்களை எல்லாம் நிலையுடையவையாக எண்ணி மயங்கி இருப்பர். ஆடம்பரமாக, பெரிய மாடி வீடும், மாடு கன்று ஆள் அடிமை ஆகிய இவைகளுடன்
வாழ்ந்து மகிழ்வர்.
அணு
அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி, ஆசையாளராய் ஊசிவாசியாய் ---
தவிடும்
இக எனப் பிரிக்கப் பட்டது. உம்மை இழிவுச் சிறப்பு. இக – இவ்வுலகில் எனப் பொருள்
செய்யப்பட்டது. தவிடு மிக எனப் பிரித்துக்
கொண்டால், தவிடு மிகவும் எனப்
பொருள்படும். தவிடுமிகள் என்று பாடம்
இருக்குமாயின், தவிடு உமிகள் என்று
பொருளாகும்.
தவிடு
கூட சிதறவிடாமல் படிக்கு, அத்துணை கெட்டியாக
மனம் இறுகி ஆசைவயத்தவர் ஆவர்.
கவடு
கோத்தெழும் உவரி மாத்திறல்
காய்வேல் பாடேன், ஆடேன், வீடா ...... னதுகூட
கருணை
கூர்ப்பன, கழல்க ளார்ப்பன,
கால்மேல் வீழேன், வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன்,
தவிடின்
ஆர்ப்பதம் எனினும் ஏற்பவர்
தாழாது ஈயேன், வாழாதே சா ...... வதுசாலத்
தரமும், மோக்ஷமும் இனி என் ஆக்கைச
தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே.. ---
திருப்புகழ்.
சிறுமிக்
குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக்
குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக்
குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக்
குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. --- கந்தர் அந்தாதி.
இதன்
பொருள் -----
சிறு --- சிறிதான, உமிக்கும் --- குற்றுமி உயையாயினும், பகிர மர நிகர்வீர் --- பிறர்க்கு இட்டு
உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, சிதை --- அழிந்து போவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் --- ஒதுக்கிடமும் ஆகிய இவ்
உடலின்கண், துமி --- ஒரு தும்மல்
உண்டாகும் அக் காலையினும், குமர --- குமாரக் கடவுளே!, சரணம் --- உனக்கு அடைக்கலம், என்னீ்ர் --- என்று சொல்லுங்கள், உய்விர் --- பிழைப்பீர்கள், செம் --- சிவந்த, தினைமேல் --- தினைப் புனத்தில் வாசம்
செய்த, சிறுமிக்கு --- வள்ளிநாயகிக்கு, மரபு --- தமது மரபின் வழிகளை, உரைத்து --- எடுத்து உரைத்து, நின்றோன் --- குறையிரந்து நின்றவனும், சிலை --- வில்லை உடைய, வேட்டுவன் --- வேடத் திருமேனியை உடைய
கண்ணப்ப நாயனார், எச்சில் --- ஊன்
முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை, து --- உவப்புடனே உண்டவராகிய, மிக்கும் --- மேன்மையாக, அரவு --- பாம்பு ஆபரணத்தை, அணி --- தரித்த, முடியான் --- முடியை உடைய பரமசிவனது, மகன் --- மைந்தனுமாகிய குமாரக்
கடவுளினது, சீறடிக்கு --- சிறிய
திருவடியைக் கருதிக் கொண்டே.
ஆசை
வயத்தர் ஆகி அத்துணை அழுத்தத்துடன் இருப்பர்.
வாசி
--- வட்டிமேல் வட்டி வாங்கும் பணம். ஊசியின் நுனி அளவுகூட விடாமல் அவ்வளவு
நுட்பமாகக் கணக்குப் பார்த்து, வட்டிமேல் வட்டி வாங்கிப்
பொருள் சேர்ப்பர்.
"ஊசி
வாசியாய்" என்பதற்கு, ஊசிபோன இடத்தைத்
தேடுபவரைப் போலே பணம் தேடி எனப் பொருள் கொள்வாரும் உளர்.
அவி
உறு சுடர் போலே ---
அணைந்து
போகின்ற விளக்கு திரி முழுவதும் பற்றிக் கொண்டு, அதிகமாகச் சுடர் விட்டு எரிந்து அணைந்து
விடும். அதுபோலே, அளவுக்கு மீறிய
ஆடம்பரமாக தன்னிலை மீறி நடப்பர்.
இனி, அவியுறு சுடர்போலே என்பதனைப் பின்னே
வருகின்ற வெறுமிடியன் என்ற சொற்றொடரோடு சேர்த்து, "அணைந்து போகின்ற விளக்கைப் போல
துடிதுடித்துக் கொண்டு உணவை நாடி வருகின்ற இரவலன்" எனினும் பொருந்தும்.
வெறு
மிடியன் ஒரு தவசி அமுதுபடை எனும் அளவில் மேலைவீடு கேள் கீழைவீடு கேள் ---
ஒரு
பற்றுக்கோடும் இல்லாத தரித்தரின் என்பதனை வெறுமிடியன் என்றனர்.
மிடியுடையவன்
மட்டுமன்று. தவம் செய்பவன் என்பதனையும் உணர்த்த, 'ஒரு தவசி' என்றனர். இத்தகைய இரவலன் வந்து, "ஐயா, சிறிது அன்னம் படையும்" என்று
கேட்டவுடன், மிகவும் தாராளமாக
"மேல் வீட்டில் போய்க் கேள்,
கீழ்
வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர்.
திடுதிடு
என நுழைவதன் முன் எதிர்முடுகி, அவர்களொடு
சீறி, ஞாளிபோல் ஏறி
வீழ்வதாய்
---
அவ்
இரவலன் பசி பொறுக்கமாட்டாமல்,
"ஐயா, எல்லா இடங்களிலும் கேட்டேன், ஒன்றும் கிடைக்கவில்லை. ஏதாவது
கொடும்" என்று கூறி சிறிது படி ஏறி, வீட்டிற்குள்
நுழைய முயலுமுன், அவனது எதிரில்
முடுகிப் போய், நாய்போல் சீறி
விழுந்து விரட்டி அடிப்பர்.
விரகினொடு
வரு பொருள்கள் சுவறியிட,
மொழியும்
ஒரு வீணியார் சொலே மேலதாய் ---
விரகு
--- வஞ்சனை. வஞ்சனை வழியில் வந்த பொருள் விரைவில் கெடும்.
அழக்
கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பாலவை. --- திருக்குறள்.
அவ்வாறு
பொருள் கேடுறுதற்குச் சில துன்மந்திரிகள் சேர்வர். அறம் சிறிதும் செய்யாத அம் மதியிலியின் செல்வம்
அழிய வழக்குக்கும் வம்புக்கும் பரத்தையர்க்கும் குடிக்கும் பிற தீமைகளுக்குமாக
செலவுகள் இழுத்து விடுவர். அவர்கள் சொற்கள் அவனுக்கு அப்போது கரும்பாக இனிக்கும்.
விதி
தனை நினையாதே
---
பெரியோர்கள்
விதித்த செய்வன இவை, தவிர்வன இவை என
நினைந்து பாராமல் மனம் போன போக்கில் போய்க் கெடுவர்.
மினுகு
மினுகு எனும் உடலம் மறமுடுகி நெகிழ்வு உறவும், வீணர் சேவையே பூணு பாவியாய் ---
காலம்
தவறாமலும், விரதம் முதலியவைகள்
இன்றியும், கதவு அடைத்துக்
கொண்டு சுவையுள்ளவைகளை வயிறு புடைக்க, விலாப்
புடைக்கத் தின்று உடலை வளர்ப்பதனால், அவ்
உடம்பு மினுமினு என்று விளக்கெண்ணெய் தடவப் பெற்றது போல் பளபளப்பு உடையதாகின்றது.
அன்றியும் நல்லோர்கள் நட்பு கொள்லாமல் வீணர்களுடன் கூடி சல்லாபம் புரிந்து
மகிழ்வர்.
மறுமை
உளது எனும் அவரை விடும்,
விழலை
அதனில் வருவரார்கள் போகுவார் காணுமோ எனா ---
யாதாமொரு
பெரியவர் வந்து, "அப்பனே, இப்படி நன்மை தீமை இன்றி நடவாதே. இம்மையில் செய்தது, மறுமைக்கு வரும். தீவினை உருத்து வந்து ஊட்டும். ஆதலின், நல்வழியில் நடப்பாய்" என்று
கூறினால், "ஓய், உளறாதீர். புண்ணியம் பாவம் சிவப்பா கறுப்பா? யாருங்காணும் பார்த்தது? மறுபிறப்பு உண்டு என உமக்கு
யாருங்காணும் சொன்னது? இந்த வீண்
வார்த்தைகளை எல்லாம் விட்டுத் தொலையும்.
இந்த வெறும் கட்டுகளை நம்புகின்ற ஆள் நான் அன்று" என்று இவ்வகையாக
ஏளனமாகப் பேசுவர்.
விடுதுறவு
பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளிவாயராய் ---
பாசபந்தங்களை
விட்ட பெரியவர்களையும், வேதங்களை ஓதும்
அந்தணர்களையும் வெடுவெடு என்று வசவு மொழிகளைக் கூறி, மேளம்போல் பரிகசிப்பர்.
ஆதாளி
வாயர் --- வீம்பு பேசுபவர்.
இடைக்குறையாக
ஆளிவாயர் என வந்தது.
அகதியை
மறவனை ஆதாளி வாயனை... --- (அவகுண) திருப்புகழ்.
ஆதாளியை
ஒன்று அறியேனை... --- கந்தர் அநுபூதி.
மிடையுற
வருநாளில் ---
மிடை
--- நெருக்கம். மேற்கூறியபடி பலப்பல துர்க்குணக் களஞ்சியமாக வாழ்ந்த மனிதனுக்குப்
பொழுது திரும்பி, பலப்பல நெருக்கடிகள்
வந்து சேரத் தொடங்கின.
வறுமைகளும்
முடுகி வர, உறுபொருளும் நழுவ ---
வறுமைகள்
என்று பன்மையாகக் கூறியது சிந்தனைக்கு உரியது.
செல்வம் பலவகைப்படும். பொருட்செல்வம், சொற்செல்வம், செவிச்செல்வம், கலைச்செல்வம், மக்கள் செல்வம் முதலியனவாம். இத்தகைய
எல்லாச் செல்வங்களும் குறைந்து மிடி ஏற்பட்டது.
சில
வாதம் ஊது காமாலை …...... படுவன் வர ---
வறுமை
முதலிய துன்பத்துடன் பலவகையான நோய்களும் வந்து துன்புறுத்துகின்றன. படுவன் --- ஒரு
வகை நோய்.
கனைகொள்இருமல்
சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவு
மூப்பினோடு எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு
பைம்பொழில் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற
வேடத்தான் வீரட்டானம் சேர்துமே. --- திருஞானசமபந்தர்.
மனை
உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா ---
கிழவர்
ஒரு பழம்பாயும், நோயும், கிழிந்த தலையணையும், எச்சில் உமிழ வறட்டியும் சாம்பலும், ஒரு தடியும் ஆக இருப்பர். அவரோடு ஒருவரும் பேச ஒருப்படார்கள். உலகச் செய்தியும் அவருக்கு ஒன்றும்
தெரிந்துகொள்ள அனுகூலம் இராது. தெரிந்து
கொள்ள அவருக்கு அவா மிகுதியுண்டு. யாராவது தன்னுடன் பேசமாட்டார்களா என்று
எதிர்பார்ப்பார். தமது வீட்டின் அருகில் யாராவது சென்றால், "ஆரங்கே, அப்பா, இப்படி வந்து போயேன்" என்று
அழைப்பார். அங்ஙனம் அழைத்தவுடன் வீட்டில் உள்ள மாதர்களும் வாலிபர்களும் "சீ
சீ பேசாமல் கிட" என்று ஏசுவர்.
காலினோடு
கைகளும் தளர்ந்து, காம நோய்தனால்
ஏலவார்
குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு
நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு
கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. --- திருஞானசமபந்தர்.
கனவுதனில்
இரதமொடு குதிரை வர, நெடிய சுடுகாடு வா
எனா, வீடு போ எனா ---
பெரிய
குதிரைகள் பூட்டிய தேர் வந்து, தன் வீட்டின் எதிரில்
நின்று இவரை அழைப்பது போலவும், தன்னைப் பலர்
விரட்டுவது போலவும் கனவு வரும்.
சுடுகாடு
வா எனவும், ஒருவரையும் நிழலுக்கு
ஒதுங்க விடாமல் விரட்டி மிகவும் பாதுகாத்து வந்த வீடு போ எனவும் கூற நிற்பர்.
மனிதர்கள்
பல பேச
---
மேல்
சுவாசம் கொண்டு ஆவி பிரியும் தருணத்தில் அவரைக் காண வந்தவர்கள், வீட்டிலும் திண்ணையிலும் நடையிலுமாக
இருந்து பலப்பல கருத்துப்படப் பேசுவர்.
ஒருவர், "இனி தேறாது"
என்பர். ஒருவர் "இதற்குள் போகாது, இன்னும்
சில காலம் இருந்து செய்த பாவங்களை எல்லாம் அனுபவிப்பான்" என்பர். ஒருவர், "எச்சில் கையில் காக்கை ஓட்டாத பாவி, என்ன கொண்டு போகப் போகின்றான், எல்லாவற்றையும் வைத்துவிட்டுத் தான்
போகப் போகின்றான், அரைநாண் கூட அவனுடன்
போகாது" என்பர். சிலர்,
"ஒருவர்
சொத்துக்கும் ஆசைப்பட மாட்டான்,
அவனுடைய
சொத்தையும் ஒருவனுக்கும் தரமாட்டான். அவன் வரை செட்டாக இருந்தான், போய்விட்டான்" என்பர். சிலர், "இன்னும் கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம்" என்பர்.
இறுதியதொடு
அறுதி என.......... எரிதனில் இடும் வாழ்வே ---
இதுதான்
முடிவு என்று உறவினர் சுற்றி அழுவர்.
மனைவி மார்பின் நீது கோதி மேல் வீழ்ந்து அழுவள். இவை எனது உடைமை, இவர் எனது அடிமை என்று இறுமாந்து இருந்த
எண்ணங்கள் ஒரு சிறிதும் இன்றி வீங்கும்.
வாய் திறந்து விகாரமாக இருக்கும்.
திறந்த வாயில் ஈக்கள் வந்து மொய்க்கும்.
பலவிதமான பறைகள் ஒலிக்க ஈமதேயத்திற்குக் கொண்டு போய் எரியிலிட்டுச்
சாம்பாரக்குவர்.
இவ்வளவு
தான் மனிதனுடைய வாழ்வு. முடிசார்ந்த
மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பர் ஆவர்.
ஒருபிடி
சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே... --- கந்தர் அலங்காரம்.
அறுகுநுனி
பனி அளவாய் இருந்த ஒன்று உருவாகி,
இடையில்
இத்தனை நாடகம் ஆடி, முடிவில் ஒன்றும்
இன்றி அருவாகி மறைந்து ஒழிந்து மறுபிறப்பு எடுக்க நீங்கிவிட்டது.
"வளர்
பிறை போல எயிறும் உரோமமும்
சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட
வடிவும் இலங்க
மாலை போல் யம
தூதர்கள் வந்து.....
வலைகொடு
வீசி உயிர்கொடு போக,
மைந்தரும் வந்து குனிந்து அழ, நொந்து
மடியில் விழுந்து
மனைவி புலம்ப,
மாழ்கினரே இவர் காலம்
அறிந்து.....
பழையவர்
காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட நின்றவர், பந்தர்
இடும் என வந்து, பறை இட, முந்தவே
பிணம் வேக விசாரியும்
என்று.....
பலரையும்
ஏவி, முதியவர் தாமும்
இருந்த சவம் கழுவும் சிலர் என்று,
பணிதுகில் தொங்கல்
களபம் அணிந்து,
பாவகமே செய்து, நாறும் உடம்பை.....
வரிசை
கெடாமல் எடும்என, ஓடி
வந்து, இள மைந்தர் குனிந்து சுமந்து,
கடுகி நடந்து, சுடலை அடைந்து,
மானிட வாழ்வு என
வாழ்வு என நொந்து,.....
விறகுஇட
மூடி, அழல்கொடு போட,
வெந்து விழுந்து முறிந்து, நிணங்கள்
உருகி, எலும்பு கருகி அடங்கி,
ஓர் பிடி நீறும் இலாத
உடம்பை
நம்பும் அடியேனை இனி
ஆளுமே". --- பட்டினத்தடிகள்.
இணையடிகள்
பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ, பாசநாசனே ---
மேலே
கூறிய எரியில் இடும் வாழ்வு முருகன் அடியார்க்கு உண்டாகாது. எம்பெருமானுடைய
திருவடிகள் இரண்டையும் இடையறாது பரவி வழிபடும் அடியார்கள் ஏனைய மனிதர்களைப் போல
வறிதே இறந்துபட்டு அவர்களது உடம்பை எரிப்பார்களாயின், அந்த இழிவு இறைவனையே சேரும். ஆதலினால், ஏசிடார்களோ என்று அடிகள்
கூறுகின்றனர். அடியார்களுக்கு எய்தும்
இகழும் புகழும் இறைவனையே சேரும்.
நானிலத்தோர்
முன்னே நலன்இழந்து நான்இருந்தால்
கானநறும்
பூங்கள ஈச! --– ஈனம் உரைத்து
என்னைச்
சிரிப்பார் என்று எண்ணாதே, எம்பெருமான்,
உன்னைச்
சிரிப்பாரும் உண்டு. --- அதிவீரராம பாண்டியர்.
பெறுவதுவும்
என்றதில் உள்ள உம்மை எதிர்மறை.
கூகா
எனஎன் கிளைகூடி அழப்
போகா
வகைமெய்ப் பொருள் பேசியவா...
என்று
கந்தர் அநுபூதியில் அடிகள் தனக்குக் கிடைத்த அரும்பெரும் நிலையை வியந்து கூறுமாறு
காண்க.
இருவினை
மு மலமும் அற இறவியொடு பிறவி அற ---
பிறவாமைக்குக்
காரணங்கல் இருவினை ஒப்பும் மலபரிபாகமும் ஆம்.
இருவினை
ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட
ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக்
கொண்டுஅருள் சத்திமுன் கூட்டிப்
பெருமல
நீக்கிப் பிறவாமை சுத்தமே. --- திருமூலர்.
நல்வினை
தீவினை என்ற இருவினைகளும் ஒப்பு வந்தபோது, ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும்
விலகும். அப்போது சத்திநிபாதம்
எய்தும். அங்ஙனம் அருள் பதிந்த பின்
ஆன்மா பதியுடன் ஒன்று படும்.
ஏகபோகமாய்
நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனை அருள் ---
ஆன்மா
இறையுடன் இரண்டறக் கலத்தலே அத்துவித முத்தி ஆகும். கட்டையில் தீயும், தீயில் நீரும், தேனில் சுவையும், மலரில் மணமும், வானில் வளியும், கண்ணில் ஒளியும் போல் ஆன்மா பதியுடன்
அத்துவிதம் ஆகும்.
இந்தனத்தில்
அங்கி, எரிஉறுநீர் தேன்இரதம்
கந்தமலர்ப்
போது, வான்கால், ஒளிகண் --- சந்ததமும்
அத்துவிதம்
ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே
நிற்கும் முறை. --- சிவபோகசாரம்.
முத்தியைப்
பலர் பலவாறு கூறி உழலுவர். சிவசமவாதம், ஐக்கியவாதம்
முதலிய பல பேதங்கள் உள. அவைகளை எல்லாம் நெறி செய்து அடிகள் கூறிய முத்தியை அடியில்
வரும் முத்தி நிச்சயத் திருவெண்பாவால் அறிந்து தெளிந்து உறுதியும் உய்வும் பெறுக.
உள்ளமல
நீங்கி ஓங்கு சிவானந்த
வெள்ளம்
திளைத்ததுவாய் மேவுதலே --- கள்அவிழ்பூங்
கொத்தார்
விரிசடையார் கூறு சிவாகமத்தில்
சித்தாந்த
முத்திஎனத் தேறு.
ஆன்மா
தனது சத்தி நிரோதானமான ஆணவமலம் முதலானவற்றை நீங்கி, ஒரு காலத்தும் குறைவில்லாத சிவானந்தப்
பெருங்கடலில் திளைத்து, அச் சிவமும்
ஆன்மாவும் ஒன்று என்றும், இரண்டு என்றும்
பிரித்து அறியமாட்டாத அத்துவித நிலையைப் பெறுதலே, தேன் ஒழுகும் ஆத்திப்பூ மாலையை அணிந்த
விரிசடை விமலன் திருவாய் மலர்ந்து அருளிய சிவாகமத்தில் கூறும் சித்தாந்த முத்தி
எனத் தெளிவாயாக. இதனைப் பட்டினத்தடிகளும் கூறுமாறு காண்க.
பூதமும்
கரணமும் பொறிகள்ஐம் பூலனும்
பொருந்திய குணங்களோர் மூன்றும்
நாதமும்
கடந்த வெளியிலே நீயும்
நானுமாய் நிற்குநாள் உளதோ
வாதமும்
சமய போதமும் கடந்த
மனோலய இன்ப சாகரமே
ஏதும்ஒன்று
அறியேன் யாதும்நின் செயலே
இறைவனே ஏக நாயகனே.
ஆன்மா
பதியுடன் பொருந்தும் போது உண்டாகும் இன்பத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை. ஆதலினால், அதுவே பரம சுகமாம். ஏனைய சுகங்கள்
எல்லாம் சிறிது போது மின்னலைப் போல மறைந்து ஒழிபவைகளாகும்.
தண்அமுத
மதிகுளிர்ந்த கிரணம் வீச,
தடம்பொழில்பூ மணம்வீச, தென்றல் வீச,
எண்அமுதப்
பளிங்குநிலா முற்றத் தேஇன்
இசைவீச, தண்பனிநீர் எடுத்து வீச,
பெண்அமுதம்
அனையவர்விண் அமுதம் ஊட்டப்
பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட்டு ஓட,
கண்அமுதத்து
உடம்புஉயிர்மற்று அனைத்தும் இன்பம்
கலந்துகொளத் தரும்,கருணைக் கடவுள் தேவே. --- திருவருட்பா.
அந்த
இன்பம் எய்தியவர்க்கு ஏனைய இன்பமெல்லாம் கசந்து போகும்.
கரும்பும்
தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும்
கந்தமும் ஆகிய ஆனந்தம்,
விரும்பியே
உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்
கைத்தது தேனும் புளித்ததே. --- திருமந்திரம்.
இடைமருது ---
திருவிடைமருதூர்
ஒரு சிறந்த திருத்தலம். வடக்கே கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ஜுனம் என்னும் திருப்பருப்பதம்.
தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ஜுனம். இது மத்தியில் விளங்குவதால், மத்யார்ஜுனம். அர்ஜுனம் --- மருது.
மல்லிகை
மருது, புடைமருது, இடைமருது. மருத மரத்தின் கீழ் பெருமான்
எழுந்தருளி உள்ளனர். மகாலிங்கேசுவரர்.
சோழநாடே பெரிய
சிவாலயம்
திருவிடைமருதூர் --- கருப்பக் கிரகம்.
தென்மேற்கில்
திருவலஞ்சுழி --- விநாயகர்.
மேற்கில்
சுவாமிமலை --- முருகர்.
வடக்கில்
ஆப்பாடி --- சண்டீசர்.
வடகிழக்கில்
சூரியனார்கோயில் மாந்துறை ---
சூரியர்
வடகிழக்கில்
சிதம்பரம் --- நடராசர்.
வடகிழக்கில்
சீகாழி --- வைரவர்.
கிழக்கில்
திருவாவடுதுறை --- நந்தீசர்.
தென்கிழக்கில்
திருவாரூர் --- சோமாஸ்கந்தர்.
தெற்கில்
ஆலங்குடி --- தட்சிணாமூர்த்தி.
இத்தகைய
பெரிய கோயிலின் கருப்பக்கிரகம் என்னும் கருவறை திருவிடைமருதூர்.
வரகுண
தேவருக்கு பிரம்மகத்தி நீங்கிய திருத்தலம்.
பட்டினத்தடிகளும் பத்திரகிரியாரும் வைகிய திருத்தலம்.
கனியினும்
கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க்
குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன்
தன்அடைந்தார்க்கு இடைமருதனே
என்று
அப்பர் சுவாமிகளால் இனிது பாடப்பெற்ற அருமைத் திருத்தலம்.
இத்
தலத்தைக் குறித்துத் திருவெண்காடர் திருவாய் மலர்ந்து அருளிய மும்மணிக்கோவை
மிகவும் விழுமிய கருத்துக்களை உடையது. அண்மையில் புலவர் சிகாமணியாக விளங்கிய
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய திருவிடைமருதூர் உலா மிகச்
சிறந்த பிரபந்தமாகும்.
ஏகநாயகா ---
மூவரும்
தேவரும் போற்றும் முழுமுதல் பரம்பொருள் முருகவேளே ஆதலின், ஏகநாயகா என்று அருளிச் செய்தனர்.
இதழ்பொதி
அவிழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்,
எறிதிரைய லம்பு பால்உததி ......
நஞ்சராமேல்
இருவிழிது
யின்ற நாரணனும்,
உமைமருவு சந்த்ர சேகரனும்,
இமையவர்வ ணங்கு வாசவனும் ......
நின்றுதாழும்
முதல்வ,சுக மைந்த, பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு ரந்த பால்அமுதம் ...... உண்டவேளே..
---
( உததியறல்) திருப்புகழ்.
லோக
நாயகா ---
உலகங்களுக்கு
எல்லாம் தலைவன்.
கருத்துரை
திருவிடைமருதூர்
முருகா, அடியேன் அவமே பிறந்து
அழியாமல், அத்துவித முத்தி
பெற்று உய்ய அருள் புரிவீர்.
அருமை. அருமை. மிக்க நன்றி ஐயா. தமிழ் கூறும் நல்லுலகம் தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது. முருகனடியார்களுக்கு சிறந்த திருப்புகழ் அமுதம். முருகப்பெருமான் திருவருள் என்றும் உங்களுக்கு துணை நிற்கும். நன்றி ஐயா. - முருகன்.
ReplyDelete