அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இந்துகதிர்
(கும்பகோணம்)
முருகா!
சிவஞான தரிசனம் அருள்வாய்
தந்ததனத்
தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச்
சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு
எண்குணமுற்
றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே
கந்தமெழுத்
தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக்
கந்தமதித்
தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே
திந்ததிமித்
தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை
சிந்தைதிகைத்
தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா
குந்தியரித்
தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே
கும்பிடகைத்
தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இந்துகதிர்ச்
சேர் அருணப் பந்தி, நடுத் தூண் ஒளிபட்டு,
இன்ப ரசப் பால்அமுதச் ...... சுவைமேவும்,
எண்குணம்
உற்றோன் நடனச் சந்த்ர ஒளிப் பீடகம்உற்று,
எந்தை நடித்து ஆடும் மணிச் ...... சபை ஊடே,
கந்தம்
எழுத்து ஓடு உறு சில் கெந்த மணப் பூ இதழைக்
கண்டு, களித்தே, அமுதக் ...... கடல்மூழ்கி,
கந்த
மதித்து ஆயிரஎட்டு அண்டம் அதைக் கோல்புவனக்
கண்டம் அதைக் காண எனக்கு ...... அருள்வாயே
திந்ததிமித்
தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தம் எனக் காளமணி, ...... தவில்ஓசை,
சிந்தை
திகைத்து, ஏழுகடல் பொங்க, வரிச் சூர் மகுடச்
செண்டு குலைத்து ஆடும் மணிக் ......
கதிர்வேலா!
குந்தி
அரி தாழ் துளபச் செந்திருவைச் சேர்,
களபக்
கொண்டல் நிறத்தோன் மகளைத் ...... தரைமீதே
கும்பிட, கைத்தாளம் எடுத்த அம்பொன்உருப்
பாவைபுகழ்க்
கும்பகொணத்து ஆறுமுகப் ...... பெருமாளே.
பதவுரை
திந்ததிமித் தீதகுடட்
டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என --- திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட்
டாடுடுடிட் டிந்தம் என்ற தாள ஒத்துக்கு ஏற்ப
காளம் --- ஊதுகொம்பு,
மணி --- மணி,
தவில் ஓசை --- தவில் ஆகியவைகள் ஒலிக்கவும்,
சிந்தை திகைத்து ஏழுகடல் பொங்க
--- அசுரர்களின் மனம் திகைக்கும்படியாக ஏழு கடல்களும் பொங்க,
அரிச் சூர் மகுடச் செண்டு
குலைத்து ஆடு
--- சிங்கம் போன்ற சூரபதுமனின் மகுடத்தில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து
விளையாடும்
மணிக் கதிர்வேலா --- அழகிய ஒளி
வீசும் வேலாயுதரே!,
குந்தி அரித் தாழ் துளப --- வண்டுகள் மொய்க்கும்
துளவமாலையை அணிந்தவரும்,
செந்திருவைச் சேர் --- திருமகளை மணந்தவரும்,
களப --- சந்தனக் கலவையைப் பூசுபவரும்,
கொண்டல் நிறத்தோன் மகளை --- மேக
நிறத்தவருமான திருமாலின் மகளாகிய வள்ளிநாயகியை
தரை மீதே கும்பிட --- வள்ளிமலையில் வணங்கும்
பொருட்டு,
கைத் தாளம் எடுத்து --- கைத்தாளம் இட்டு
வந்து,
அம்பொன் உருப் பாவை புகழ் --- அழகிய பொன்னால்
ஆன பதுமையைப் போன்ற வள்ளிநாயகியைப் புகழ்ந்து போற்றியவரே!
கும்பகொணத்து ஆறுமுக
--- கும்பகோணம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!
இந்து கதிர்ச் சேர் --- சந்திர
மண்டலத்தின் ஒளியைச் சென்று முட்டி
அருணப் பந்தி நடுத்
தூண் ஒளிபட்டு
--- அங்கு சிவந்து திரண்ட நடுத்தூண் போன்ற பாகத்தில் ஒளி பட்டு,
இன்ப ரசப் பால்
அமுதச் சுவைமேவு --- இன்பச்சுவை தரும் பால் போல் அமுதமான இனிமை பொருந்திய
எண்குணமுற்றோன் நடன --- எண்குணத்தவன் ஆன
இறைவன் திருநடனம் புரிந்தருளும்,
சந்த்ர ஒளிப் பீடகம் உற்று --- நிலவொளி வீசும் இடத்தைத் தரிசித்து,
எந்தை நடித்து ஆடு
மணிச் சபையூடே --- எமது தந்தையாகிய அம்பலவாணப்பெருமான் ஆனந்தத் திருநடனம்
புரிந்தருளும் அழகிய சபையின்கண்,
கந்தம் எழுத்தோடு
உறு சிற் கெந்தமணப் பூவிதழை கண்டு களித்தே அமுதக் கடல்மூழ்கி --- கூட்டமான ஐம்பத்தொரு
எழுத்துகளின் வடிவில், சின்மயஞானம் என்னும் இதழைக்
கொண்ட வாசம் மிக்க மலரை உண்மை அறிவால் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கி,
கந்த --- கந்தக் கடவுளே!
மதித்து --- போற்றி வணங்கி,
ஆயிர எட்டு அண்டம் அதை --- ஆயிரத்தெட்டு
இதழ்த் தலமாகிய உச்சிப் பெருவெளியில் அனுபவித்த இன்பத்தை
கோல்புவனக்
கண்டம் அதைக் காண எனக்கு அருள்வாயே --- இந்த புவனத்தில் கண்டு இன்புற அடியேனுக்கு
அருள் புரிய வேண்டும்.
பொழிப்புரை
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தம் என்ற தாள ஒத்துக்கு ஏற்ப,
ஊதுகொம்பு, மணி, தவில் ஆகியவைகள் ஒலிக்கவும், அசுரர்களின் மனம் திகைக்கும்படியாக ஏழு
கடல்களும் பொங்க, சிங்கம் போன்ற சூரபதுமனின்
மகுடத்தில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து விளையாடும் அழகிய ஒளி வீசும் வேலாயுதரே!,
வண்டுகள் மொய்க்கும் துளவமாலையை
அணிந்தவரும், திருமகளை
மணந்தவரும், சந்தனக் கலவையைப்
பூசுபவரும், மேக
நிறத்தவருமான திருமாலின் மகளாகிய வள்ளிநாயகியை வள்ளிமலையில்
வணங்கும் பொருட்டு, கைத்தாளம் இட்டு வந்து, அழகிய பொன்னால் ஆன பதுமையைப் போன்ற வள்ளிநாயகியைப்
புகழ்ந்து போற்றியவரே!
கும்பகோணம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
பெருமையில் மிக்கவரே!
சந்திர மண்டலத்தின் ஒளியைச் சென்று முட்டி, அங்கு சிவந்து திரண்ட நடுத்தூண் போன்ற
பாகத்தில் ஒளி பட்டு, இன்பச்சுவை
தரும் பால் போல் அமுதமான இனிமை பொருந்திய எண்குணத்தவன்
ஆன இறைவன் திருநடனம் புரிந்தருளும், நிலவொளி வீசும்
இடத்தைத் தரிசித்து, எமது தந்தையாகிய அம்பலவாணப்பெருமான்
ஆனந்தத் திருநடனம் புரிந்தருளும் அழகிய சபையின்கண், கூட்டமான ஐம்பத்தொரு எழுத்துகளின் வடிவில், சின்மயஞானம் என்னும் இதழைக்
கொண்ட வாசம் மிக்க மலரை உண்மை அறிவால் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கி, கந்தக் கடவுளே! உம்மைப் போற்றி வணங்கி, ஆயிரத்தெட்டு இதழ்த் தலமாகிய உச்சிப் பெருவெளியில்
அனுபவித்த இன்பத்தை இந்த புவனத்தில் கண்டு
இன்புற அடியேனுக்கு அருள் புரிய வேண்டும்.
விரிவுரை
இந்து
கதிர்ச் சேர் அருணப் பந்தி நடுத் தூண் ஒளிபட்டு ---
இந்து
--- சந்திரன், கதிர் --- ஒளி.
அருணம்
--- சிவப்பு, பந்தி --- ஒழுங்கு.
"மூன்று
மண்டலத்தின் முட்டிய தூணின்" என்னும் ஔவையார் வாக்கு இங்கு சிந்திக்கத்தக்கது.
மனித
உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. அவை மூன்று மண்டலமாகப் பகுக்கப்பட்டுள்ளன்.
மூலாதாரமும், சுவாதிட்டானமும், அக்கினி மண்டலம்; மணிபூரகமும், அனாகதமும் சூரிய மண்டலம்; விசுத்தியும், ஆக்கினையும் சந்திர மண்டலம் எனப்
பெறும். இங்ஙனம் ஆறு ஆதாரங்கள்,
இரண்டு
இரண்டாய்ப் பிணைந்து இருக்கின்றன. இந்த மூன்று மண்டலத்தினும் ஊடுருவிச் செல்லும்
தூண்போல், குலவித் தொங்கி
எழுகிறது குண்டலினி.
பிராணவாயு
கும்பகம் ஆக, மூலக் கனல்
மூண்டெழும். தகதக எனும் கனல் வெம்மைக்குத் தக்கபடி, மேன்மைக் குண்டலினி மேல் நோக்கும்.
மூல
நிலத்தில் அதோமுகமாய்
முகிழ்த்து விழியின் பொடுதுயிலும்
மூரிப் பாம்பைக் கால் அனலை
மூட்டி
எழுப்பி நிலம்ஆறும்
சீல
மொடும்போய்த் தரிசித்துச்
செழுமா
மதியின் அமுதகடல்
தேக்கித் திளைத்தங்(கு) அசைவறுமோர்
தெய்வத்
தவத்தோர் உளவிழியில்
காலும்
தீபம் மினல்பந்தம்
கடிகூர்
விரிசு கதிர்மதிபோல்
காட்டும் ஒளியாய், இவையாவும்
கடந்தாங்கு
அழிவில் பேரொளியாய்
சால
விளங்கும் விந்துவெனும்
தடமா
மயிலோய் தாலேலோ!
தமரக் கடலைக் கடைந்தமுதம்
தருவோன்
மருகா தாலேலோ!
என்று
சிதம்பர அடிகள் கூறும் திருப்போரூர்ச் சந்நிதிமுறைக் குறிப்பு, இங்குக் எண்ணத் தகும்.
மூன்று
மண்டலத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற
பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும்
அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும்ஓர்
எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே! --- சிவவாக்கியர்.
கொண்ட
விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன்
ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம்
மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே. --- திருமந்திரம்.
உடம்பில்
உள்ள மூலாக்கினியை உள்முகமாகப் பிராணவாயுவைச் செலுத்தும் யோக சாதனையால் சுடர்விட்டு
மூளுமாறு செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்தால், அந்த மூலக்கனல் கொல்லனுடைய உலைக்
களத்தில் நெருப்பு சுடர்விட்டு எரிவது போல் மூண்டு எழும்.
நாளும்அதிவேக
கால்கொண்டு தீமண்ட
வாதிஅனல்ஊடு
போய்ஒன்றி --- (மூளும்வினை) திருப்புகழ்.
நாட்டத்தைப்
புருவ நடுவே வைத்து தியானிக்க வல்லார்க்கு, அங்கே ஜோதிமலை தோன்றும். அந்த
ஜோதிமலைக்கு இடையே ஒரு வீதியும்,
அவ்வீதியில்
கற்பக விருட்சமும் தோன்றும்.
ஆணிப்பொன்
னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி. ---
திருவருட்பா.
ஆணிப்
பொன்னம்பலம் --- மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சபை.
ஜோதி
மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி - அம்மா
வீதிஉண் டாச்சுத டி. --- திருவருட்பா.
சோதி
மலை --- சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார்.
வீதியில்
சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி - அம்மா
மேடை
இருந்தத டி. --- திருவருட்பா.
மேடைமேல்
ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி - அம்மா
கூடம் இருந்தத டி. --- திருவருட்பா.
கூடத்தை
நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி - அம்மா
மாடம் இருந்தத டி. --- திருவருட்பா.
ஏழ்நிலைக்
குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி. --- திருவருட்பா.
கற்ப
கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி
மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி
விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமல்
---
(கட்டிமுண்ட)
திருப்புகழ்.
…. …. வானின்கண்
நாமமதி
மீதில் ஊறுங்கலா இன்ப
நாடியதன்
மீதுபோய் நின்ற ஆனந்த
மேலைவெளி
ஏறி நீஇன்றி நான்இன்றி
நாடியினும்
வேறு தான்இன்றி வாழ்கின்றது ஒருநாளே. --- (மூளும்வினை) திருப்புகழ்.
இன்ப
ரசப் பால் அமுதச் சுவைமேவு ---
"தவள
நிலவு ஒழுகு அமிர் தாரை" என்பார் தாயுமான அடிகளார்.
மூலக்கனல்
மூண்டதனால் மதிமண்டலம் என்னும் சந்திரமண்டலம் வெதும்பி, பொங்கி வழியும் அமுதத்தை அருந்துவர்
சிவயோகியர். அது சோமபானம் எனப்படும்.
ஒடிச்சென்று
அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின்
உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்
சென்றுஅங்கே தேனை முகந்துண்டு
பாடியுள்
நின்ற பகைவரைக் கட்டுமே. --- திருமந்திரம்.
எண்குணமுற்றோன்
---
சிவபெருமானுக்கு
எட்டு அருட்குணங்கள் உண்டு. நிர்க்குணன்
என்று அவருக்கு ஒரு பெயரும் உண்டு. அதற்குக் "குணம் இல்லாதவர்" என்பது
பொருள். அந்த குணம் பிராகிருத குணங்களாகிய சத்துவம், இராஜஸம், தாமதம் என்னும் முக்குணங்கள் ஆகும்.
எனவே, முக்குணம் இல்லாதவர்.
இங்கே
எண்குணம் என்றது இறைவனுடைய அருட்குணங்கள் ஆகும். அவையாவன ---
1. தன்வயத்தன் ஆதல் (சுவதந்திரத்துவம்.)
2. தூய உடம்பினன் ஆதல் (விசுத்த தேகம்.)
3. இயற்கை உணர்வினன் ஆதல் (நிராமயான்மா)
4. முற்றுணர்தல் (சர்வஞ்ஞத்துவம்)
5. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் (அநாதிபோதம்.)
6. பேரருள் உடைமை (அலுப்தசத்தி)
7. முடிவில் ஆற்றல் உடைமை (அநந்த சத்தி)
8.
வரம்பில்
இன்பம் உடைமை (திருப்தி)
"கோள்இல்
பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை
வணங்காத் தலை". --- திருக்குறள்.
நடன
சந்த்ர ஒளிப் பீடகம் உற்று எந்தை நடித்து ஆடு மணிச் சபை ---
சந்திர
ஒளி விளங்குகின்ற இடம் புருவமத்தி. புருவமத்தியே திருச்சிற்றம்பலம் என்னும் இறைவன்
ஆனந்தத் திருக்கூத்து இயற்றும் இடம்.
நெற்றிக்கு
நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப்
பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப்
பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம்
பலம்என்று தேர்ந்துகொண் டேனே. --- திருமந்திரம்.
சிற்கெந்தமணப்
பூவிதழை கண்டு களித்தே அமுதக் கடல்மூழ்கி ---
சிற்கெந்தம்
--- உண்மை அறிவு மணம். சிவமணம்.
இது
சீவனுக்கு உள்ளே கமழ்வது.
பூவினிற்
கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்
குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம்
போல உணரவல் லார்கட்கு
நாவி
அணைந்த நடுதறி ஆமே. --- திருமந்திரம்.
கோல்புவனக்
கண்டம் அதைக் காண எனக்கு அருள்வாயே ---
ஏழாவது
உலகமாகிய பிரமரந்திரம். ஆறாதாரம் கடந்தபின், பிரமரந்திர வழியே மேலைப் பெருவெளிக்குச்
செல்லுதல் வேண்டும்.
தங்கிய
தவத்து உணர்வு தந்து, அடிமை முத்திபெற
சந்திர
வெளிக்குவழி அருள்வாயே....
--- (ஐங்கரனை) திருப்புகழ்.
இந்த
புவனத்தில் கண்டு இன்புற அடியேனுக்கு அருள் புரிய வேண்டும்.
கும்பகொணத்து
ஆறுமுக ---
இலக்கியத்தில் "குடமூக்கு"
என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற
பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித்
தென்கரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை
- தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து
நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை
- திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.
இறைவர்
--- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார்
--- மங்களாம்பிகை.
தல
மரம் --- வன்னி.
திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள்
அருளப் பெற்றது.
பேரூழிக்
காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன்
தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.
குரு
சிம்மராசியில் நிற்க, சந்திரன்
கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது.
இத்தீர்த்தம், அமுதகும்பம்
வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது
புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த
பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக
குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும்
பெயரையும் பெற்றது.
தலவரலாற்றின்
படி - 1. அமுதகும்பம்
வைத்திருந்த இடம் - கும்பேசம்,
2. அமுதகும்பம்
வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த
வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில்
வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான்
அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த
பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.
"கோயில் பெருத்தது
கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.
உலகப்
புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான
மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.
இத்தலத்தில்
பதினான்கு கோயில்களும், பதினான்கு
தீர்த்தங்களும் உள்ளன.
கும்பகோணத்தில்
குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்;
குடந்தைகீழ்க்
கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக்
காரோணம் --- சோமேசர் கோயில்.
மூர்க்க
நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி;
ஏமரிஷி
பூசித்த பதி.
மூர்க்க நாயனார்
வரலாறு
தொண்டைவள
நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில்
சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண்
மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று
அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை
இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.
இவ்வாறு
ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை
முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில்
ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற
நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார்
இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.
பல
பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த
பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச்
சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி
இருந்தனர். சூதினில் வல்ல இவர்,
முதற்சூது
தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால்
மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும்
பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.
இவ்வாறு
பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.
கருத்துரை
முருகா! சிவஞான தரிசனம்
அருள்வாய்
No comments:
Post a Comment