திரு இடைமருதூர் --- 0868. படியை அளவிடு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

படியை அளவிடு (திருவிடைமருதூர்)

முருகா!
உமது திருநாமங்களைப் பாடி உய்ந்து,
உயிர்கட்கு உதவி நற்குணம் உடையவனாக
அடியேன் வாழ்தல் வேண்டும்.


தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான


படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
     தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
     பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ......செம்பொன்மேனிப்

பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
     திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
     பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச்

சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
     குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
     சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ..... றுய்ந்துபாடித்

தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
     பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
     தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ

கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
     பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
     கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ......கண்டுசேரக்

கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
     றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
     கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ......துங்கவேலா

அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
     பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
     கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா

அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
     கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
     றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ......தம்பிரானே.


பதம் பிரித்தல்


படியை அளவு இடுநெடிய கொண்டலும், சண்டனும்
     தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்,
     பரவ அரிய நிருபன், விரகன், சுடும் சம்பனன், .....செம்பொன்மேனிப்

பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும்
     திருவளரும் முளரியொடு திங்களும், கொன்றையும்,
     பரிய குமிழ் அறுகு, கன தும்பையும், செம்பையும் ......துன்று, மூலச்

சடைமுடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும்
     குமரன், றுமுகவன், மதுரம் தரும் செஞ்சொலன்,
     சரவணையில் வருமுதலி, கொந்தகன், கந்தன்என்று ......உய்ந்துபாடித்

தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன்,
     பகிர ஒரு தினைஅளவு பண்பு கொண்டு அண்டிலன்,
     தவநெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் ......சிந்தியாதோ?

கடுகுபொடி தவிடுபட, மந்திரம் தந்திரம்
     பயிலவரு நிருதர் உடலம் பிளந்து,ம்பரம்
     கதறி, வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் ......கண்டுசேரக்

கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கும் நின்று
     அலகை பல திமிலைகொடு தந்தனந் தந்தனம்
     கருதி அசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் ......துங்கவேலா!

அடல்புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம்
     பெரிய குருபர! குமர! சிந்துரம் சென்று அடங்கு
     அடவிதனில் உறை குமரி, சந்து இலங்கும் தனம் ...... தங்கும் மார்பா!

அருணமணி வெயில் இலகு தண்டையம் பங்கயம்
     கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
     அழகுபெற நெறிவருடி, அண்டரும் தொண்டு உறும் ......தம்பிரானே.

பதவுரை

          மந்திரம் கடுகு பொடி தவிடுபட --- அசுரர்களுடைய வீடுகள் கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபட்டு அழியவும்,

        தந்திரம் பயிலவரும் --- உபாயங்களை மிகவும் பழகிப் போருக்கு வந்த

        நிருதர் உடலம் பிளந்து --- அசுரர்களின் உடல்களைப் பிளந்தும்,

         அம்பரம் கதறி --- விண்ணுலகம் அச்சத்தால் ஓ என்று வாய்விட்டுக் கதறவும்,

        வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு --- உதிர ஆறு பொங்கி வரும் மகிழ்ச்சியைப் பார்த்து,

          சேர கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கும் நின்று --- சேர வந்து கழுகுகளும், நரிகளும், காக்கைகளும், கருடன்களும் அப் போர்க்களத்தில் உயரப் பறந்து மகிழவும்,

         அலகை --- பேய்கள்,

       பல திமிலை கொடு --- பல வகையான பம்பை வாத்தியங்களைக் கொண்டு,

       தந்தனம் தந்தனம் கருதி இசை --- தந்தனம் தந்தனம் என்ற தாளங்களை எண்ணி வாசிக்கவும்,

       பொசியும் நசை கண்டு கண்டு --- அந்தப் பறவைகளும் பேய்களும் அசுரர்களின் நிணங்களைப் புசிக்கும் விருப்பத்தினைக் கண்டு கண்டு

      இன்புறும் துங்க வேலா --- மகிழ்ச்சி அடைகின்ற தூய வேற்படையை உடையவரே!

         அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் --- தன்னை அடைந்தவர்களது பாவங்களைப் போக்குவதில் வலிமை பொருந்திய, திருவிடைமருதூரில் வந்து எழுந்தருளி உள்ள

       குணம் பெரிய குருபர --- அருட்குணத்தில் பெரியவராகிய குருமூர்த்தியே!

         குமர ---  குமாரக் கடவுளே!

         சிந்துரம் சென்று அடங்கும் --- யானைகள் போய் அடங்குகின்ற

        அடவிதனில் உறை குமரி --- வனத்தில் வாழ்கின்ற வள்ளியம்மையாருடைய

        சந்து இலங்கும் தனம் தங்கும் மார்பா --- சந்தனம் மணக்கின்ற தனபாரங்கள் பொருந்துகின்ற திருமார்பை உடையவரே!

         அருண மணி --- சிவந்த இரத்தின மணிகள்

       வெயில் இலகு --- ஒளி வீசுகின்ற,

       தண்டை அம் பங்கயம் --- தண்டை அணிந்ததும் தாமரை போன்றதும்

        கருணை பொழிவன கழலில் --- திருவருளைப் பொழிகின்றதும் வீரக் கழலை அணிந்ததும் ஆகிய திருவடியை

         அந்தமும் தம்பம் என்று அழகு பெற --- முடிவில் பற்றுக்கோடாக அழகு பெறும்படி,

       நெறி வருடி --- நன்னெறியில் நின்று வருடி,

       அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே --- தேவர்களும் தொண்டு செய்கின்ற தனிப் பெரும் தலைவரே!

          படியை அளவு இடு நெடிய கொண்டலும், --- பூமியை ஒரடியாக அளந்த நீண்ட வடிவு உடைய மேகம் போன்ற நீலநிறம் உடைய திருமாலும்,

        சண்டனும் --- இயமனும்,

         தமர சதுமறை அமரர் சங்கமும் --- ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தேவர்கள் கூட்டமும்,

     சம்புவும் --- பிரதேவனும்,

        பரவ அரிய நிருபன் --- போற்றுதற்கு அரியவராகிய தலைவரும்,

         விரகன் சுடும் சம்பனன் --- காமநோயைச் செய்கின்ற மன்மதனை நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவரும், நிறைவை உடையவரும்,

      செம்பொன் மேனிப் பரமன் --- சிவந்த பொன் போன்ற மேனியை உடைய பெரிய பொருளும்,

         எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் --- அழகு பொருந்தியவரும், பாம்புகளையும், கங்கா நதியையும், மேன்மை வளருகின்ற தாமரை மலருடன் நிலவையும், கொன்றையையும்,

         பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூலச் சடை முடியில் அணியும் நல்ல சங்கரன் கும்பிடும் குமரன் --- பருத்த குமிழம் பூவையும், அறுகம் புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்குகின்ற இளம்பூரணரே!

          அறுமுகவன் --- ஆறுமுகப் பெருமானே!

         மதுரம் தரும் செம் சொல்லன் --- இனிமை தருகின்ற செவ்வையான சொற்களை உடையவரே!

       சரவணையில் வரு முதலி --- சரவணப் பொய்கையில் தோன்றி வந்த முதன்மையானவரே

         கொந்து அகன் --- பூங்கொத்துக்கள் நிறைந்த இடத்தில் இருப்பவரே!

         கந்தன் என்று --- கந்தப் பெருமானே! என்று துதித்து,

         உய்ந்து பாடித் தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் --- உய்வு பெறும்படி தேவரீரது திருப்புகழைப் பாடி, மனம் தணிதலை உடைய நல்ல சத்தத்துடன் சொல்லுகின்ற வழிகளில் ஒன்றிலேனும் அடியேன் சென்றவன் அல்லன்.

         பகிர ஒரு தினைஅளவு பண்பு கொண்டு அண்டிலன் --- ஏழைகளுக்கு தினை அளவாவது பங்கிட்டுத் தரும் நற்குணத்தைக் கொண்டு தேவரீரைப் பொருந்தினேன் இல்லை.

         தவநெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ --- தவ வழியில் நின்று அன்புடன் ஒழுகி சீர் பெறுகின்ற உறுதியானது அடியேனுக்கு உண்டாகுமாறு உமது திருவுள்ளம் நினைக்க மாட்டாதோ?

பொழிப்புரை


         அசுரர்களுடைய வீடுகள் கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபட்டு அழியவும், உபாயங்களை மிகவும் பழகிப் போருக்கு வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்தும், விண்ணுலகம் அச்சத்தால் ஓ என்று வாய்விட்டுக் கதறவும், உதிர ஆறு பொங்கி வரும் மகிழ்ச்சியைப் பார்த்து, கழுகுகளும், நரிகளும் சேர்ந்து, காக்கைகளும், கருடன்களும் அப் போர்க்களத்தில் உயரப் பறந்து மகிழவும், பல பேய்கள் கூடி பலவகையான பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியவும், அந்தப் பறவைகளும் பேய்களும் அசுரர்களின் நிணங்களைப் புசிக்கும் விருப்பத்தினைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகின்ற தூய வேற்படையை உடையவரே!

         தன்னை அடைந்தவர்களது பாவங்களைப் போக்குவதில் வலிமை பொருந்திய, திருவிடைமருதூரில் வந்து எழுந்தருளி உள்ள அருட்குணத்தில் பெரியவராகிய குருமூர்த்தியே!

         குமாரக் கடவுளே!

         யானைகள் சென்று உறங்குகின்ற வனத்தில் வாழ்கின்ற வள்ளியம்மையாருடைய சந்தனம் மணக்கின்ற தனபாரங்கள் பொருந்துகின்ற திருமார்பை உடையவரே!

         சிவந்த இரத்தின மணிகள் ஒளி வீசுகின்ற, தண்டை அணிந்ததும் தாமரை போன்றதும் திருவருளைப் பொழிகின்றதும் வீரக் கழலை அணிந்ததும் ஆகிய திருவடியை முடிவில் பற்றுக்கோடாக அழகு பெறும்படி, நன்னெறியில் நின்று வருடி, தேவர்களும் தொண்டு செய்கின்ற தனிப் பெரும் தலைவரே!

         பூமியை ஒரடியாக அளந்த நீண்ட வடிவு உடைய மேகம் போன்ற நீலநிறம் உடைய திருமாலும், இயமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தேவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரியவராகிய தலைவரும்,  காமநோயைச் செய்கின்ற மன்மதனை நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவரும், நிறைவை உடையவரும், சிவந்த பொன் போன்ற மேனியை உடைய பெரிய பொருளும், அழகு பொருந்தியவரும், பாம்புகளையும், கங்கா நதியையும், மேன்மை வளருகின்ற தாமரை மலருடன் நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம் பூவையும், அறுகம் புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்குகின்ற இளம்பூரணரே!

         ஆறுமுகப் பெருமானே!

         இனிமை தருகின்ற செவ்வையான சொற்களை உடையவரே!

சரவணப் பொய்கையில் தோன்றி வந்த முதன்மையானவரே

         பூங்கொத்துக்கள் நிறைந்த இடத்தில் இருப்பவரே!

         கந்தப் பெருமானே!

         என்று துதித்து, உய்வு பெறும்படி தேவரீரது திருப்புகழைப் பாடி, மனம் தணிதலை உடைய நல்ல சத்தத்துடன் சொல்லுகின்ற வழிகளில் ஒன்றிலேனும் அடியேன் சென்றவன் அல்லன்.

         ஏழைகளுக்கு தினை அளவாவது பங்கிட்டுத் தரும் நற்குணத்தைக் கொண்டு தேவரீரைப் பொருந்தினேன் இல்லை.

         தவ வழியில் நின்று அன்புடன் ஒழுகி சீர் பெறுகின்ற உறுதியானது அடியேனுக்கு உண்டாகுமாறு உமது திருவுள்ளம் நினைக்க மாட்டாதோ?

விரிவுரை


படியை அளவிடு நெடிய கொண்டலும் ---

திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது? ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ? கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்!
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ? தகைவுஇல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.


விரகன் சுடும் சம்பனன் ---

விரகம் - காமநோய். அதனைச் செய்பவனாகிய மன்மதனை உணர்த்தியது. இரண்டன் உருபு தொக்கி நின்றது. சம்பனன் - நிறைவுடையோன். "குறைவிலா நிறைவே" என்பார் மணிவாசகர்.


செம்பொன் மேனிப் பரமன் ---

சிவபெருமானுடைய திருமேனி மாற்றறியாத செழும் பசும்பொன் போன்றது. "பொன்னார் மேனியனே" என்பார் வன்தொண்டப் பெருமான். "பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி" என்பார் சேரமான் பெருமாள் நாயனார்.

அரவங்களும் கங்கையும்........ சடைமுடியில் அணி ---

சிவபெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ளவற்றை எல்லாம் இங்கு அடிகள் தொகுத்து இனிது கூறியருளினார்.  தலையலங்காரம் உடையவர் ஆதலின் பெருமானுக்குப் "பிஞ்ஞகன்" என்ற திருநாமம் ஏற்பட்டது.


சங்கரன் கும்பிடும் குமரன் ---

ஒவ்வொருவருக்கும் குருநாதன் வேண்டுவது அவசியம்.  குருமூர்த்தியை இன்றி சிவஞானம் பெற இயலாது. குருபரன் ஆகி, சனகாதி முனிவர்களுக்கு, "கல்லாலின் புடை அமர்ந்து, எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொல்லி" அருளிய பரமேசுரரே தனக்கு ஒரு குரு வேண்டும் என்று கருதினார். அவர் சேர்ந்தறியாக் கையன், பின் தாழ் சடையன். ஆதலினால், தனக்குத் தானே மகன் ஆகி, தானே குருவாகி, தானே சீடனாகித் தன்னிடம் தானே பிரணவப் பொருள் கேட்டு, தன்னைத் தானே தொழுது சிஷ்ய பாவத்தை உலகறிய உணர்த்தினர்.

ஆதலின், சீடனாக நின்ற சிவம் வேறு, குருவாகி இருந்த குமரன் வேறு என்று மலையற்க.

மதுரம் தரும் செஞ்சொலன் ---

செஞ்சொல் --- இனிய தமிழ். "இனிமையும் நீரமையும் தமிழ் எனல் ஆகும்" என்ற நிகண்டின்படி, தமிழ் இனிமையாதலின், இனிய தமிழைப் பேசுபவர் முருகன் என உணர்த்துகின்றனர்.

தென்திசையைக் குறிக்க வந்தபோது அடிகள், செஞ்சொல் மாதிசை என்றே குறிக்கின்றனர்.

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமும் இகல் செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுஉயர் ...மகமேரு
செண்டு மோதினர் அரசருள் அதிபதி.....     ---  (பஞ்சபாதகம்) திருப்புகழ்.

சிவபெருமானுக்கு "ஓம்" என்னும் ஒருமொழிக்கு உரை விரித்து உபதேசித்த போதும், செந்தமிழ் மொழியாலேயே உரைத்தனர் எனக் குறிப்பிடுகின்றனர்.

கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே...   --- (அம்பொத்த)  திருப்புகழ்.

இன்சொல் விசாகா க்ருபாகர
செந்திலில் வாழ்வாகி யேஅடி
யென்றனை ஈடேற வாழ்வருள் பெருமாளே.. ---  (கொம்பனையார்) திருப்புகழ்.

தணிய ஒரு புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் ---

தணிதல் --- பலவாறு உழலும் மனத்தின் வேகம் தணிதலைக் குறிக்கின்றது.

தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரைஒழித்து
என்செயல் அழிந்து அழிந்து அழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப்...     படுவேனோ. ---  (அந்தகன்)  திருப்புகழ்.

இறைவனைப் பாடுதல், துதித்தல், தியானித்தல், பாவனை புரிதல் முதலிய வகைகளில் ஒன்றையாவது மேற்கொள்ள வேண்டும்.

சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும், காயக் கிலேசமும் போக்குதற்கே.      ---  கந்தர் அலங்காரம்.

---     தியானமும் பாவனையும் உள்ளத்தின் தொழில்.
---     பாடுதலும் துதித்தலும் வாக்கின் தொழில்.
---     சேவித்தலும் வழிபடுதலும் உடம்பின் தொழில்.


பகிரவொரு தினையளவு பண்புகொண்டு அண்டிலன் ---

இறைவனிடத்தில் அன்பு செய்கின்றவர்க்கு அன்பு பெருகும்.  அதனால் இறைவன் எங்கும் இருக்கின்றான் என்ற எண்ணமும் உண்டாகும்.  இறைவன் எல்லா உயிர்களிலும் உயிர்க்கு உயிராய் உறைகின்றான். ஆதலின், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்யும் அருள் வரும். அதனாலேயே இறைவன்பால் அன்பு செய்யாதார்க்கு உயிர்கள்பாலும் அன்பு செய்ய இயலாது.  உயிர்களிடம் அன்பு செய்யாதவர், "நான் ஈசுவர பத்தி உடையேன்" என்பது, "நான் மலடி மகன்" என்பதுபோலும்.  உயிர்களிடம் அன்பிலாதவர் ஈசுரபத்தி செய்வது வெறும் நடிப்புத் தான். அது உண்மையாகாது.

உண்மையாக மனைவியினிடம் அளவிறந்த காதல் உடையவன் மனைவியின் தொடர்புடைய மாமன், மாமி, மைத்துனன், மனைவியின் உற்றார், உறவினர், மனைவியின் பிறந்த ஊரார் முதலிய அனைவரிடமும் அன்பு செய்கின்றான். மனைவிபால் அன்பு இல்லாதவன் மனைவியைச் சேர்ந்தோரையும் வெறுப்பான். ஆதலின் இறையன்பே ஜீவகாருண்யத்திற்கு வழியாம்.

இறைவன் ஆன்மகோடிகளின் உயிர்க்கு உயிராக உறைகின்றான்.  ஆதலின் எல்லா உயிர்களும் இறைவனுடைய கோயில்கள்.

"உயிர்களை எல்லாம் சமமாக எண்ணி இரங்குபவரே உத்தமர் ஆம். அவ் உத்தமருக்கு ஏவல் செய்யவும் அவர் புகழை ஓதவும் நான் விழைகின்றேன்" என்பார் வடலூர் வள்ளலார்.

எவ்வுயிரும் பொது எனக்கண்டு இரங்கி, உப
         கரிக்கின்றார் யாவர், அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
         செயல்எனவே தெரிந்தேன், இங்கே
கவ்வைஇலாத் திருநெறி, அத் திருவாளர்
         தமக்குஏவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதுஎன் கருத்து,அவர்சீர் ஓதிடஎன்
         வாய்மிகவும் ஊர்வதாலோ.          ---  திருவருட்பா.

ஆதலினால் வறியவரைக் கண்டு இரங்கி மனத்தாலும் வாக்காலும் பொருளாலும் உபகரிக்க வேண்டும்.

இறைவனை இடையறாது நினைக்க வேண்டும். அவ்வாறு நினைப்பது தொடக்கத்தில் இயலாது. ஆதலின், "அரைக் கணம் நேரமாவது நினை" என்று சுருங்க உபதேசிப்பது போல், வாரிவாரி வழங்கிவேண்டும். தலையையும் கொடுக்க முயன்றான் குமணன். அவ்வாறு வள்ளன்மை தொடக்கத்தில் வராது.  ஆதலின், "பகிர நினைவு ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்" என்றார்.

பகிர நினைவுஒரு தினைஅள விலும்இலி,
     கருணை இலி,உனது அருணையொ டுதணியல்
          பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப்
பரவு மிடறுஇலி, படிறுகொடு இடறுசொல்
     பழகி, அழகுஇலி, குலம்இலி, நலம்இலி,
          பதிமை இலி,பவு ஷதும்இலி மகிமைஇலி......        --- திருப்புகழ்.

தவநெறியில் ஒழுகி ---

தவமாகிய நெறி எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத் தொகை.  தவம் என்பது துன்பத்தைப் பொறுத்தலும் உயிர்கட்குத் துன்பம் செய்யாது இருத்தலும்.

உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.                      ---  திருக்குறள்.

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை,
     
வெறியனை, நிறைபொறை வேண்டிடா மத
          
சடலனை, மகிமைகள் தாழ்ந்த வீணணை, ...... மிகுகேள்வி

தவநெறி தனைவிடு தாண்டு காலியை,
     
அவமதி அதனில்பொ லாங்கு தீமைசெய்
          
சமடனை, வலிய அசாங்கம் ஆகிய ...... தமியேனை,

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
     
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
          
விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய ...... வினையேனை,

வெகுமலர் அதுகொடு வேண்டி ஆகிலும்,
     
ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யான்உனை
          
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள்தொழ ...... அருள்வாயே.
                                                                                          ---  திருப்புகழ்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூர் இறைவனிடத்தில் தவநெறியை வேண்டிப் பெற்றனர்.

"மலைஆர் அருவித் திரள் மாமணி உந்திக்
குலையாரக் கொணர்ந்து எற்றி,ஓர் பெண்ணை வடபால்
கலைஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே".

என்பது சுந்தரர் தேவாரம்.

பண்படும் கங்கணம் சிந்தியாதோ ---

கங்கணம் - நல்ல காரியங்களைச் செய்வதற்கு உறுதி பூண்டு கையில் நூல் கட்டிக் கொள்வது. "கங்கணம் கட்டிக் கொண்டான்" என்பது உலக வழக்கு.
  
அடல் புனையும் இடைமருது ---

அடல் --- வல்லமை.

பாவங்களை நீக்குவதில் வல்லமை உடையது திருவிடைமருதூர்.  மதுரையில் அரசு புரிந்த வரகுண பாண்டியருக்கு வந்த பிரமகத்தி திருவிடைமருதூரில் விலகியதை ஈண்டு நினைவு கூரற்பாலது.

அந்தமும் தம்பம் என்று அழகு பெற ---

முடிவில் பற்றுக்கோடாக விளங்குவது முருகன் திருவடி.  முருகவேளின் திருவடியை வானவர் வருடி வழிபடுகின்றனர்.


கருத்துரை


முருகா! உமது திருநாமங்களைப் பாடி உய்ந்து, உயிர்கட்கு உதவி நற்குணம் உடையவனாக அடியேன் வாழ்தல் வேண்டும்.

  

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...