திரு இடைமருதூர் --- 0867. இலகு குழைகிழிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இலகு குழைகிழிய (திருவிடைமருதூர்)

முருகா!
வண்தமிழால் பாடி வழிபட்டு உய்ய அருள் புரிவாய்


தனன தனதனன தான தானதன
     தனன தனதனன தான தானதன
     தனன தனதனன தான தானதன ...... தந்ததான


இலகு குழைகிழிய வூடு போயுலவி
     யடர வருமதன னூல ளாவியெதி
     ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம்

இனிமை கரைபுரள வாகு லாவுசரி
     நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
     லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக

மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
     லிறுக இறுகியநு ராக போகமிக
     வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை

மதுர கவியடைவு பாடி வீடறிவு
     முதிர அரியதமி ழோசை யாகவொளி
     வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ

கலக அசுரர்கிளை மாள மேருகிரி
     தவிடு படவுதிர வோல வாரியலை
     கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக்

கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
     பரவு மமரர்குடி யேற நாளும்விளை
     கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே

அலகை யுடனடம தாடு தாதைசெவி
     நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
     அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ......ணந்தகோவே

அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
     கருது குமரகுரு நாத நீதியுள
     தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


இலகு குழை கிழிய, ஊடு போய் உலவி
     அடர வருமதன நூல் அளாவி, எதிர்
     இளைஞர் உயிர் கவர, ஆசை நேர் வலை பொ... திந்தநீலம்

இனிமை கரை புரள, வாகு உலாவு சரி
     நெறிவு கலகல என வாசம் வீசுகுழல்
     இருளின், முகம் நிலவு கூர, மாண்உடைய ...... கன்றுபோக,

மலையும் இதழ் பருகி, வேடை தீர,உடல்
     இறுக இறுகி, அநுராக போகம் மிக
     வளரும், ளகு தன பார மீதினில்  ...... முயங்குவேனை,

மதுர கவி அடைவு பாடி, வீடு அறிவு
     முதிர, அரிய தமிழ் ஓசை ஆக ஒளி
     வசனம் உடைய வழிபாடு சேரும் அருள் ...... தந்திடாதோ?

கலக அசுரர் கிளை மாள, மேருகிரி
     தவிடு பட உதிர, ஓல வாரி அலை
     கதற, வரி அரவம் வாய் விடா, பசி  ...... தணிந்தபோகக்

கலப மயிலின்மிசை ஏறி, வேதநெறி
     பரவும் அமரர் குடி ஏற, நாளும்விளை
     கடிய கொடியவினை வீழ, வேலைவிட ...... வந்தவாழ்வே!

அலகை உடன் நடம் அது ஆடு தாதைசெவி
     நிறைய, மவுன உரையாடு நீப! எழில்
     அடவி தனில் உறையும் வேடர் பேதையை ...... மணந்தகோவே!

அமணர் கழுவில் விளையாட வாது படை
     கருது குமர! குரு நாத! நீதி உளது
     அருளும் இடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.


பதவுரை

         கலக அசுரர் கிளை மாள --- போர் புரிந்த அசுரர் கூட்டம் மாளவும்,

       மேரு கிரி தவிடு பட உதிர --- மேரு மலை தவிடு பொடியைப் போல உதர்ந்து போகவும்,

      ஓல வாரி அலை கதற --- ஓ என்று ஒலிக்கின்ற அலைகளை உடைய கடல் கதறவும்,

        வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போகக் கலப மயிலின் மிசை ஏறி --- வரிகளை உடைய பாம்பினைத் தனது கூர்வாயில் பற்றி விடாது, பசி தணியப் பெற்ற, தோகையினை உடைய மயிலை மீது ஏறி வந்து,

      வேத நெறி பரவும் அமரர் குடியேற --- வேதநெறியைப் போற்றுகின்ற தேவர்கள் தங்கள் வாழிடமாகிய பொன்னுலகத்தில் மீளவும் குடிபுகும்படியாகவும்,

         நாளும் விளை கடிய கொடிய வினை வீழ --- நாள்தோறும் விளைகின்ற கொடிய பொல்லாத வினைகள் வெந்து ஒழியவும்,

      வேலை விட வந்த வாழ்வே --- வேலாயுதத்தை விடுத்து அருள் புரிய வந்த செல்வமே!

         அலகையுடன் நடம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடு நீப --- பேய்களுடன் நடனம் புரியும் தந்தையார் ஆகிய சிவபரம்பொருளின் திருச்செவி நிறையுமாறு மவுன உபதேசம் புரிந்து அருளிய, கடப்ப மாலையை அணிந்தவரே!

         எழில் அடவி தனில் உறையும் --- அழகிய காட்டில் வாழ்ந்திருந்,

       வேடர் பேதையை மணந்த கோவே --- வேடர் மகளாகிய வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த தலைவரே!

         அமணர் கழுவில் விளையாட --- சமணர்கள் கழுமரத்தில் துடிக்க,

        வாது படை கருது குமர --- வாதப் போர் புரிந்தருளிய குமாரக் கடவளே!

        குரு நாத --- குருநாதரே!

         நீதி உளது அருளும் --- நீதி உள்ளதை அருள்பவரே!

       இடை மருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே --- சிறந்த முனிவர்கள் போற்ற, திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள தனிப்பெருந்தலைவரே!

         இலகு குழை கிழிய --- விளங்குகின்ற குண்டலங்களைத் தாக்கும்படியாக

       ஊடு போய் உலவி --- அவற்றினிடையே பாய்ந்து,

       அடர வரு --- தாக்க வருகின்றதும்,

       மதன நூல் அளாவி எதிர் இளைஞர் --- காம சாத்திரத்தை அறிந்து அனால் தாக்குண்டு எதிரே வருகின்ற இளைஞர்களின்

      உயிர் கவர --- உயிரைக் கவர்வதற்காகவே விரிக்கப்பட்ட,

      ஆசை நேர் வலை பொதிந்த நீலம் --- ஆசை என்னும் வலை பொதிந்துள்ள (வஞ்சகம் பொருந்திய) கரிய கண்களின் பார்வையுடன்,

         இனிமை கரை புரள --- இனிமை அளவின்றிப் பெரு,

       வாகு உலாவு சரி நெறிவு கலகல என --- கைகளில் விளங்குகின்ற வளையல்கள் கலகல என்று ஒலிக்க,

     வாசம் வீசும் குழல் இருளின் --- மணம் வீசுகின்ற கூந்தலின் இருளில் (கருமையில்)

     முகம் நிலவு கூர --- முகமானது நிலவு போன்று ஒளி,

       மாண் உடை அகன்று போக ---அழகிய ஆடையானது விலக,

     மலையும் இதழ் பருகி --- இதழோடு இதழ் மோதுவதால், அவரது வாயிலிருந்து ஊறும் எச்சிலைப் பருகி,

     வேடை தீர --- காம வேட்கை தணியுமாறு,

      உடல் இறுக இறுகி --- உடலை இறுக அணைத்து,

     அநுராக போக மிக வளரும் --- காமப் பற்றால் உண்டான சுகம் பெருகி வளர,

     இள தனபாரம் மீதினில் முயங்குவேனை --- இளமையான கொங்கைப் பாரங்களைத் தழுவி இன்புறுகின்ற அடியேனுக்கு,

      மதுர கவி அடைவு பாடி --- இனிமையான பாடல்களை நிரம்பப் பாடி,

     வீடு அறிவு முதிர --- வீட்டின்ப ஞானம் முதி,

     அரிய தமிழோசை ஆக --- அருமையான தமிழோடு கூடிய இசையால்,

     ஒளி வசனம் உடைய வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ --- அறிவார்ந்த சொற்களால் ஆன வழிபாட்டினைப் புரியும்படி திருவருளைத் தரமாட்டாயோ?



பொழிப்புரை

         போர் புரிந்த அசுரர் கூட்டம் மாளவும், மேரு மலை தவிடு பொடியைப் போல உதர்ந்து போகவும், ஓ என்று ஒலிக்கின்ற அலைகளை உடைய கடல் கதறவும், வரிகளை உடைய பாம்பினைத் தனது கூர்வாயில் பற்றி விடாது, பசி தணியப் பெற்ற, தோகையினை உடைய மயிலை மீது ஏறி வந்து, வேதநெறியைப் போற்றுகின்ற தேவர்கள் தங்கள் வாழிடமாகிய பொன்னுலகத்தில் மீளவும் குடிபுகும்படியாகவும், நாள்தோறும் விளைகின்ற கொடிய பொல்லாத வினைகள் வெந்து ஒழியவும், வேலாயுதத்தை விடுத்து அருள் புரிய வந்த செல்வமே!

         பேய்களுடன் நடனம் புரியும் தந்தையார் ஆகிய சிவபரம்பொருளின் திருச்செவி நிறையுமாறு மவுன உபதேசம் புரிந்து அருளிய, கடப்ப மாலையை அணிந்தவரே!

         அழகிய காட்டில் வாழ்ந்திருந்வேடர் மகளாகிய வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த தலைவரே!

         சமணர்கள் கழுமரத்தில் துடிக்க வாதப் போர் புரிந்தருளிய குமாரக் கடவளே!

     குருநாதரே!

         நீதி உள்ளதை அருள்பவரே!

     சிறந்த முனிவர்கள் போற்ற, திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள தனிப்பெருந்தலைவரே!

         விளங்குகின்ற குண்டலங்களைத் தாக்கும்படியாக
அவற்றினிடையே பாய்ந்து தாக்க வருகின்றதும், காம சாத்திரத்தை அறிந்து அதனால் தாக்குண்டு எதிரே வருகின்ற இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்காகவே விரிக்கப்பட்ட, ஆசை என்னும் வலை பொதிந்துள்ள (வஞ்சகம் பொருந்திய) கரிய கண்களின் பார்வையுடன், இனிமை அளவின்றிப் பெரு, கைகளில் விளங்குகின்ற வளையல்கள் கலகல என்று ஒலிக்க, மணம் வீசுகின்ற கூந்தலின் இருளில் (கருமையில்) முகமானது நிலவு போன்று ஒளி, அழகிய ஆடையானது விலக, இதழோடு இதழ் மோதுவதால், அவரது வாயிலிருந்து ஊறும் எச்சிலைப் பருகி, காம வேட்கை தணியுமாறு, உடலை இறுக அணைத்து, காமப் பற்றால் உண்டான சுகம் பெருகி வளர, இளமையான கொங்கைப் பாரங்களைத் தழுவி இன்புறுகின்ற அடியேனுக்கு, இனிமையான பாடல்களை நிரம்பப் பாடி, வீட்டின்ப ஞானம் முதி, அருமையான தமிழோடு கூடிய இசையால், அறிவார்ந்த சொற்களால் ஆன வழிபாட்டினைப் புரியும்படி திருவருளைத் தரமாட்டாயோ?


விரிவுரை

இளைஞர் உயிர் கவர, ஆசை நேர் வலை பொதிந்த நீலம் ---

நீலம் --- கருமை, இருள். 

கண்களின் கருமையைக் குறிக்கும். உள்ளத்தில் உள்ள வஞ்சகமாகிய இருளையும் குறிக்கும். கண்களாகிய மாய வலையால், இளைஞர் உயிரைக் கவருகின்றவர்கள் விலைமாதர்கள் என்றார்.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறந்தோர் உள்ளத்தையும் வளைத்துப் பிடிக்கும் விலைமாதர் பார்வையில் இளைஞர் மயங்குவது மிக எளிது.

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய
வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....   ---  திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.
                                                                                 ---  கந்தர் அலங்காரம்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!  --- பட்டினத்தார்.

மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர, அரிய தமிழோசை ஆக, ஒளி வசனம் உடைய வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ ---

     இது அருணகிரிநாதப் பெருமானாரின் வேண்டுதல். இறைவன் பொருள்சேர் புகழை, அரிய தமிழால் பாடிப் பரவுதல் வேண்டும். எனவே,  "அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க, அரிய தமிழை அளித்த முருகப் பெருமானை" "இரவுபகல் பலகாலும், இயல் இசை முத்தமிழ் ஓதித் திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே" என்று வேண்டினார்.

அருணகிரிநாதப் பெருமானின் இந்த விண்ணப்பம் பல தலங்களிலும் செய்யப்பட்டது. "பகர்தற்கு அரிதான செந்தமிழ் இணையில் சில பாடல் அன்பொடு பயிலப் பால காவியங்களை உணராதே" தான் இருப்பதாக இரங்கினார் திருப்பழநியில்.

இது வயலூரில் சித்தித்தது என்பதை,

பக்கரை, விசித்ர மணி, பொற்கலணை இட்டநடை,
     பட்சி-எனும்  உக்ரதுர ...... கமும், நீபப்
பக்குவ மலர்த்தொடையும், அக்குவடு பட்டு ஒழிய,
     பட்டு உருவ விட்டு அருள் கை ...... வடிவேலும்,

திக்கு அது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு
     சிற்றடியும், முற்றிய பன் ...... இருதோளும்,
செய்ப்பதியும் வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பு என எனக்கு  அருள்கை ...... மறவேனே.

என வரும் திருப்புகழ்ப் பாடலால் அறியலாம். இந்த அனுக்கிரகத்தை மறவாமல், பின்வருமாறு பாடி அருளினார் அருணை வள்ளல்

"பூர், பச்சிம, தட்சிண, உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஒதும் சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை, சிறிது அடியேனும் செப்ப என வைத்து, லகில் பரவத் தெரிசித்த அனுக்ரகம் மறவேனே" என்னும் திருச்செங்கோட்டுத் திருப்புகழில்

திருப்பந்தணை நல்லூரில் "நிதி பொங்கப் பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து, நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்" என்று வேண்டினார்.  திருவிடைமருதூரில் 'மதுரகவி அடைவு பாடி, வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ" என்றார். கும்பகோணத்தில், "செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ" என்றும், சப்தஸ்தானத் திருப்புகழில் "சலசம் மேவிய பாதம் நினைத்து, முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் தணிய ஓசையில் ஒத எனக்கருள் புரிவாயே" என்றும் வேண்டினார்.


கலக அசுரர் கிளை மாள.... வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை கடிய கொடிய வினை வீழ, வேலை விட வந்த வாழ்வே ---

முருகப் பெருமான் விடுத்து அருளிய வேல் என்னும் ஞானசத்தியானது, ஆணவ மல வடிவாய் இருந்து சூரனை அழித்ததோடு, மாயா மலமாகிய தாரகனை அழித்தது. கன்ம மலமாகிய சிங்கமுகனை அழித்தது. இந்த மும்மலங்களின் சார்பாக இருந்தவை அனைத்தும் வேலாயுத்ததால் அழிந்தன.

வினைகள் அற்றதால், சூரபதுமன், பெருமானுக்கு மயிலாகவும், கொடியாகவும் இருக்கும் பேரருளைப் பெற்றான். " மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்" என்பது கந்தபுராணம்.

எனவே, வினைகளை அறுத்து அருள் புரியவல்லது ஞானசத்தியாகிய வேலாயுதம்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலால் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


அலகையுடன் நடம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடு நீப ---

"மவுன உபதேச சம்பு" ஆகிய சிவபெருமானுக்கே மவுன உபதேசத்தை அருள் புரிந்தவர் குமாரக் கடவுள். இந்த வரலாற்றை, "தணிகைப் புராணம்" கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர்.

பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல், நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையால்ம் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.      ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
                                         --- அபிராமி அந்தாதி.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
                                         --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
                                        --- சிவஞான சித்தியார்.


எழில் அடவி தனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே ---

அறுமுக வள்ளல், வேடர் பேதையாகிய வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு

"தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில்", திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர், தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில், பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு "வள்ளி" என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண்
     நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம்
     இறைவியாய் இருக்கும்நின்னைப்                                
பூந்தினை காக்க வைத்துப்
     போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
     அயன் படைத்திலன்கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய்,
     மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன்
     பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும்
     உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச்
     செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின்,
     முறுவலும் புரியாய் ஆயின்,                               
விழிஒன்று நோக்காய் ஆயின்
     விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின்,
     மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும்,
     பராமுகம் தவிர்தி என்றான்.    
    
உலைப்படு மெழுகது என்ன
     உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல
     வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள்
     கலம்கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ,
     அறுமுகன் ஆடல் எல்லாம். --- கந்தபுராணம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா! நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன், ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால், அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான், யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள்மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற்பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது, அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய சுற்றத்தாரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார்.

முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.


அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர ---

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர்.  "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.

குரு நாத ---

கு --- அந்தகார இருள்
ரு --- போக்குபவன்.

ஆணவ இருளை அகற்றுபவன் குரு. முருகன் குரு என்ற பேருக்கு உரியவன். ஆதலின், அப் பெருமான் எழுந்தருளிய மலை "குருமலை" எனப்படும். குரு, குருபரன், குருநாதன், குருசாமி, குருமூர்த்தி, பரமகுரு என்றெல்லாம் அப் பெருமானுடைய பெயர்கள் அமைந்திருப்பதை அறிக.

சனகாதி முனிவர்கள் நால்வரும் வேதங்களையும் ஆறு அங்கங்களையும் கற்று வல்லவர்கள். கேள்வியிலும் வல்லவர்கள். கற்றல் கேட்டல் உடைய பெரியோராகிய அவர்களுக்கும் உண்மைப் பொருள் அனுபவமாக விளங்கவில்லை. உண்மைப் பொருள் என்பது, மனவாக்குகளால் எட்ட முடியாததான பூரணப் பொருளாகவும், வேதங்களுக்கு அப்பாலாய் நின்றது. எல்லாப் பொருள்களிலும் நிறைந்ததாய் உள்ளது. அதுதான் என்றும், இதுதான் என்றும் சுட்டி அறியப்படாதது அது. அதனை அது இருந்தபடி இன்னது என்று சனகாதி முனிவர்க்கு மோன நிலையைக் காட்டி அறிவுறுத்தியவர் தென்முகக்கடவுளாக வீற்றிருந்த சிவபெருமான்.

அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை,
     ஆதலினால் அது எனலும் அறவே விட்டு,
மதுஉண்ட வண்டு எனவும் சனக னாதி
     மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தார் என்றும்,
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்ட
     படிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த
கதிகண்டு கொள்ளவும், நின் அருள்கூர் இந்தக்
     கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன்.

அன்று நால்வருக்கும் ஒளிநெறி காட்டும்
     அன்புடைச் சோதியே! செம்பொன்
மன்றுள் முக்கண்ணும், காளகண்டமுமாய்
     வயங்கிய வானமே! என்னுள்
துன்றுகூர் இருளைத் துரந்திடும் மதியே!
     துன்பமும் இன்பமும் ஆகி
நின்ற வாதனையைக் கடந்தவர் நினைவே!
     நேசமே நின்பரம் யானே.

அறிந்தஅறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை,
மறிந்த மனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.                 --- தாயுமானார்.


முப்பாழ் கடந்த முழுப்பாழுக்கு அப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண், --- தப்பாது

தீரா இடும்பைத் திரிபு என்பது யாதுஒன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன்காண், --- ஆராது

நித்தம் தெரியா நிலை மேவிய நமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண், --- வித்தர்என

யாதுஒன்றும் தேராது இருந்த நமக்கு, இவ்வுலகம்
தீது என்று அறிவித்த தேசிகன்காண்... --- திருவருட்பா.           
             
ரமுடன் அபரம் பகர்நிலை இவை எனத்
திரம்உற அருளிய திருவருட் குருவே!

மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே!

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணம் உறத் தெரித்து உள் குலவு சற்குருவே!

பதிநிலை பசுநிலை பாச நிலை எலாம்
மதிஉறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே!

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரம்உற விளங்கும் சாந்த சற்குருவே!

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரம்உற வளர்த்து வயங்கு சற்குருவே!

சிவ ரகசியம் எலாமு தெரிவித்து, னக்கே
நவநிலை காட்டிய ஞான சற்குருவே!

சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருட் சிவகுருவே!

அறிபவை எல்லாம் அறிவித்து, என் உள்ளே
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே!

கேட்பவை எல்லாம் கேட்பித்து, என் உள்ளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே!

காண்பவை எல்லாம் காட்டுவித்து, னக்கே
மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே!

செய்பவை எல்லாம் செய்வித்து, ஏனக்கே
உய்பவை அளித்து, ன் உள் ஓங்கு சற்குருவே!

உண்பவை எல்லாம் உண்ணுவித்து, ன் உள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே!

சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து,
ஏக அக்கரப் பொருள் ஈந்த சற்குருவே!

சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்து, ன்உள் விளங்கு சற்குருவே!

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே! --- திருவருட்பா.

என்றெல்லாம் பலவாறாக குருவின் அருமை பெருமைகள் போற்றப்பட்டு உள்ளன. அந்த குருநாதனாகிய சிவபரம்பொருளுக்கும் குருவாக இருந்தவர் முருகப் பெருமான்.
எல்லோருக்கும் அருட்குருவாக உள்ளவர் முருகப் பெருமான் ஒருவரே. அவருக்கு யாரும் குருவாக இல்லை என்பதை,
  
இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருள்
     குரு என உற்று இருந்தாய், அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத-
     லால் உன் அடி உளமே கொண்ட
கனத்த அடியவருடைய கழல் கமலம்
     உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மறிப்பதுவும் ஒழிந்திடுமே,
     குறக் கொடியைச் சேர்ந்திட்டோனே.     

என்ற பாம்பன் சுவாமிகள் மிக அழகுபடப் பாடி இருப்பதைக் காண்க.

நீதி உளது அருளும் ---

நீதி உள்ளதை அருளும் நீதி வடிவானவன் இறைவன் என்பதை,

"சோதியைச் சுண்ணவெண் ணீறுஅணிந் திட்டஎம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர் தாம்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே".

"நீதி நின்னைஅல்லால் நெறியாதும் நினைந்துஅறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை ஒன்றினையும்
சேதீ சேதம்இல்லாத் திருவான்மி யூர்உறையும்
ஆதீ உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே".

என வரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருட்பாடல்களாலும்,

"சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே! பரனே! பால்கொள்வெண் ணீற்றாய்!
    பங்கயத் தயனுமா லறியா
நீதியே! செல்வத் திருப்பெருந் துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே! அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே"

எனவரும் மணிவாசகத்தாலும் அறியலாம்.

இடை மருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே ---

திருவிடைமருதூர் ஒரு சிறந்த திருத்தலம். வடக்கே கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ஜுனம் என்னும் திருப்பருப்பதம். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ஜுனம். இது மத்தியில் விளங்குவதால், மத்யார்ஜுனம். அர்ஜுனம் --- மருது.

மல்லிகை மருது, புடைமருது, இடைமருது. மருத மரத்தின் கீழ் பெருமான் எழுந்தருளி உள்ளனர். மகாலிங்கேசுவரர்.

சோழநாடே பெரிய சிவாலயம்

திருவிடைமருதூர்                       --- கருப்பக் கிரகம்.
தென்மேற்கில் திருவலஞ்சுழி         ---  விநாயகர்.
மேற்கில் சுவாமிமலை                  ---  முருகர்.
வடக்கில் ஆப்பாடி                       ---  சண்டீசர்.
வடகிழக்கில் சூரியனார்கோயில்
                         மாந்துறை             ---  சூரியர்
வடகிழக்கில் சிதம்பரம்                 ---  நடராசர்.
வடகிழக்கில் சீகாழி                     ---  வைரவர்.
கிழக்கில் திருவாவடுதுறை             ---  நந்தீசர்.
தென்கிழக்கில் திருவாரூர்             ---  சோமாஸ்கந்தர்.
தெற்கில் ஆலங்குடி                      ---  தட்சிணாமூர்த்தி.

இத்தகைய பெரிய கோயிலின் கருப்பக்கிரகம் திருவிடைமருதூர்.

வரகுண தேவருக்கு பிரம்மகத்தி நீங்கிய திருத்தலம்.  பட்டினத்தடிகளும் பத்திரகிரியாரும் வைகிய திருத்தலம்.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
 தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்அடைந்தார்க்கு இடைமருதனே

என்று அப்பர் சுவாமிகளால் இனிது பாடப்பெற்ற அருமைத் திருத்தலம்.

இத் தலத்தைக் குறித்துத் திருவெண்காடர் திருவாய் மலர்ந்து அருளிய மும்மணிக்கோவை மிகவும் விழுமிய கருத்துக்களை உடையது. அண்மையில் புலவர் சிகாமணியாக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய திருவிடைமருதூர் உலா மிகச் சிறந்த பிரபந்தமாகும்.

கருத்துரை

முருகா! வண்தமிழால் பாடி வழிபட்டு உய்ய அருள் புரிவாய்

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...