அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மதியஞ் சத்திரு
(திருப்பந்தணை நல்லூர்)
முருகா!
தவத்தைப் புரிந்து,
உம்மை வழிபடும்
புத்தியினைப் பெற்று,
அருமையான சந்தத் தமிழ்ப்
பாடல்களைப் பாடி
வழிபட அருள்.
தனனந்
தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ்
சத்திரு நிறைந்த மாமுக
மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென
மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல
மருவும்
பொற்குட மெழுந்த மாமுலை
வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென
வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே
நிதமிந்
தப்படி யிருந்து வாறவர்
பொருள்தங் கப்பணி கலந்து போய்வர
நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ......
வுழலாதே
நிதிபொங்
கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ......
மருள்தாராய்
நதிமிஞ்
சச்சடை விரிந்த நாயக
னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை
நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ......
னருள்பாலா
நவகங்
கைக்கிணை பகர்ந்த மாமணி
நதிபங் கிற்குல வுகந்து காபுரி
நகர்பொங் கித்தழை யவந்து வாழ்வுறு ......முருகோனே
கெதிதங்
கத்தகு கணங்கள் வானவர்
அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளைபொங் கக்ருபை புரிந்து வாழ்கென .....அருள்நாதா
கெருவம்
பற்றிகல் விளைந்த சூரொடு
தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்
கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
மதி
அஞ்ச, திரு நிறைந்த மாமுகம்,
மயில் அஞ்சக் கிளி இனங்கள் ஆம் என
மதுரம் செப்பிய மடந்தை, மேனகை, ...... ரதிபோல
மருவும்
பொன் குடம் எழுந்த மாமுலை,
வளர் வஞ்சிக் கொடி நடந்தவாறு என
வரு துங்கக் கடல் அணங்கு போல்பவர், ......தெரு ஊடே
நிதம்
இந்தப் படி இருந்து, வாறவர்
பொருள் தங்க, பணி கலந்து போய்வர,
நெறி தந்திட்டு, அவர் வசங்கள் ஆம்என ......உழலாதே,
நிதி
பொங்கப் பல தவங்களால் உனை
மொழியும் புத்திகள் தெரிந்து, நான் உனை
நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும்
......அருள்தாராய்.
நதி
மிஞ்சச் சடை விரிந்த நாயகன்,
உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை
நலம் என்று உள்குளிர் சிவன், பராபரன் ......அருள்பாலா!
நவ
கங்கைக்கு இணை பகர்ந்த மாமணி
நதி பங்கில் குலவு கந்துகாபுரி
நகர் பொங்கித் தழைய வந்து வாழ்வுறு
......முருகோனே!
கெதி
தங்கத் தகு கணங்கள், வானவர்,
அரி, கஞ்சத்தவர், முகுந்தர், நாவலர்,
கிளைபொங்க க்ருபை புரிந்து, வாழ்க என .....அருள்நாதா!
கெருவம்
பற்றி இகல் விளைந்த சூரொடு
தளம் அஞ்சப்பொருது எழுந்து, தீ உகள்
கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேல் உள ......
பெருமாளே.
பதவுரை
நதி மிஞ்சச் சடை
விரிந்த நாயகன் --- பொங்கி ஓடும் கங்கை தங்கிய விரிந்த திருச்சடையை உடைய
தலைவன்,
உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை ---
உமாதேவியார் அன்போடு செய்கின்ற மிகுதியான பூசையை
நலம் என்று உள்குளிர் சிவன் --- நன்று
என ஏற்று, உள்ளம்
குளிர்ந்த சிவபெருமான்,
பராபரன் அருள் பாலா --- மேலான பரம்பொருள் அருளிய
குழந்தையே!
நவ கங்கைக்கு இணை
பகர்ந்த
--- புதுமை மிக்க கங்கை நதிக்கு இணையாகச் சொல்லப்படும்,
மா ம(ண்)ணி நதி பங்கில் குலவு ---
பெரிய மண்ணியாற்றின் கரையில் விளங்குகின்ற,
கந்துகாபுரி நகர் பொங்கித் தழைய வந்து
வாழ்வுறு முருகோனே --- கந்துகாபுரி எனப்படும் திருப்பந்தணைநல்லூர் என்னும்
திருத்தலம் விளக்கமுற வீற்றிருக்கும் முருகப் பெருமானே!
கெதி தங்கத் தகு
கணங்கள்
--- நற்கதி பொருந்துவதற்குத் தகுதியான கணங்கள்,
வானவர் --- தேவர்கள்,
அரி --- இந்திரன்,
கஞ்சத்தவர் --- தாமரை மலரில்
இருக்கும் பிரமதேவன்,
முகுந்தர் --- திருமால்,
நாவலர் கிளை பொங்க --- புலவர்கள்
ஆகிய இவர்களின் திருக்கூட்டம் சிறப்புற்று விளங்க,
க்ருபை புரிந்து வாழ்க என அருள் நாதா ---
அருள் சுரந்து "வாழுங்கள்" என்று அருள் புரிந்த தலைவரே!
கெருவம் பற்றி இகல்
விளைந்த சூரோடு --- தான் என்னும் அகந்தையால் வந்த பகைமை உணர்வு பூண்டிருந்த
சூரபதுமனோடு,
தளம் அஞ்சப் பொருது எழுந்து ---
அவனது சேனைகளும் அஞ்சும்படி போர் புரிந்து,
தீ உகள் கிரவுஞ்சக் கிரி வகிர்ந்த வேல் உள
பெருமாளே --- தீய குணத்தால் துள்ளி எழுந்த கிரவுஞ்ச
மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமையில் மிக்கவரே!
மதி அஞ்ச --- சந்திரன்
அஞ்சும்படி,
திரு நிறைந்த மாமுகம் --- பொலிவு
பெற்றுள்ள அழகிய முகம்,
மயில் அஞ்சக் கிளி இனங்கள் ஆம் என ---
இவர் சாயலுக்கு முன் நமது சாயல் எம்மாத்திரம் என்று மயிலானது அச்சம்கொள்ள, கிளிக் கூட்டம் போல
விளங்கி,
மதுரம் செப்பிய
மடந்தை
--- இனிமையான சொற்களைப் பேசும் பெண்களான
மேனகை ரதிபோல --- தேவலோகத்தில் உள்ள மேனகை, இரதியைப் போல,
மருவும் பொன்குடம் எழுந்த மாமுலை ---
பொருந்தி உள்ள அழகிய பொற்குடம் போன்று விளங்கும் பருத்தமுலைகளுடன்,
வளர் வஞ்சிக்கொடி நடந்தவாறு என வரு ---
தழைத்து வளர்கின்ற வஞ்சிக் கொடி போன்று ஒசிந்து நடந்து வருகின்ற,
துங்கக் கடல் அணங்கு
போல்பவர்
--- உயர்ந்த கடலில் எழுந்த இலக்குமியைப் போன்ற அழகினை உடையவர்கள்,
தெரு ஊடே --- தெருவின் ஊடே
நிதம் இந்தப்படி இருந்து --- நாளும்
இவ்விதமாய் இருந்து,
வாறவர் பொருள் தங்கப் ப(ண்)ணி கலந்து
--- வருகின்றவரின் பொருள் தம்மிடத்தே தங்குமாறு செய்து, அவர்களுடன் கலந்து,
போய் வர நெறி தந்திட்டவர் வசங்களாம் என
உழலாதே --- இன்பத்தை அனுபவித்த பின் போகவும், மீண்டும் இன்பம்
வேண்டி வரவும்
செய்பவர்களின் வசப்பட்டவனாக உழலாமல்,
நிதி பொங்கப் பல
தவங்களால்
--- அருட்செல்வம் நிறைந்து வழியுமாறு தவங்களைப் புரிந்து,
உனை மொழியும் புத்திகள் தெரிந்து ---
தேவரீரது திருப்புகழைப் பாடிப் பரவும்படியான அறிவு விளங்கி,
நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து
பாடவும் அருள் தாராய் --- அடியேன் உம்மை ஒருமிக்க சந்தங்களோடு கூடிய தமிழ்ப்
பாடல்கள் பலவும் பாடி உய்ய அருள் புரிவாயாக.
பொழிப்புரை
பொங்கி ஓடும் கங்கை தங்கிய விரிந்த
திருச்சடையை உடைய தலைவன்; உமாதேவியார் அன்போடு
செய்கின்ற மிகுதியான பூசையை நன்று என ஏற்று, உள்ளம் குளிர்ந்த சிவபெருமான்; மேலான பரம்பொருள் அருளிய குழந்தையே!
புதுமை மிக்க கங்கை நதிக்கு இணையாகச்
சொல்லப்படும், பெரிய மண்ணியாற்றின்
கரையில் விளங்குகின்ற,
கந்துகாபுரி
எனப்படும் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலம் விளக்கமுற வீற்றிருக்கும்
முருகப் பெருமானே!
நற்கதி பொருந்துவதற்குத் தகுதியான
கணங்கள், தேவர்கள், இந்திரன், தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன், திருமால், புலவர்கள்
ஆகிய இவர்களின் திருக்கூட்டம் சிறப்புற்று விளங்க, அருள் சுரந்து "வாழுங்கள்"
என்று அருள் புரிந்த தலைவரே!
தான் என்னும் அகந்தையால் வந்த பகைமை
உணர்வு பூண்டிருந்த சூரபதுமனோடு,
அவனது
சேனைகளும் அஞ்சும்படி போர் புரிந்து, தீய
குணத்தால் துள்ளி எழுந்த கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமையில்
மிக்கவரே!
சந்திரன் அஞ்சும்படி பொலிவு பெற்றுள்ள அழகிய முகத்துடன் உள்ள இவரது சாயலுக்கு முன் நமது சாயல்
எம்மாத்திரம் என்று மயிலானது அச்சம்கொள்ள, கிளிக் கூட்டம் போல
விளங்கி; இனிமையான சொற்களைப்
பேசும் பெண்களான
தேவலோகத்தில்
உள்ள மேனகை, இரதியைப் போல, பொருந்தி உள்ள அழகிய பொற்குடம் போன்று
விளங்கும் பருத்த முலைகளுடன், தழைத்து வளர்கின்ற
வஞ்சிக் கொடி போன்று ஒசிந்து நடந்து வருகின்ற, உயர்ந்த கடலில் எழுந்த இலக்குமியைப்
போன்ற அழகினை உடையவர்கள்; தெருவின் ஊடே நாளும் இவ்விதமாய் இருந்து, வருகின்றவரின் பொருள் தம்மிடத்தே
தங்குமாறு செய்து, அவர்களுடன்
கலந்து,
இன்பத்தை
அனுபவித்த பின் போகவும், மீண்டும் இன்பம் வேண்டி வரவும் செய்பவர்களின்
வசப்பட்டவனாக உழலாமல், அருட்செல்வம்
நிறைந்து வழியுமாறு தவங்களைப் புரிந்து, தேவரீரது
திருப்புகழைப் பாடிப் பரவும்படியான அறிவு விளங்கி, அடியேன் உம்மை ஒளிமிக்க சந்தங்களோடு
கூடிய தமிழ்ப் பாடல்கள் பலவும் பாடி உய்ய அருள் புரிவீராக.
விரிவுரை
நிதி
பொங்கப் பல தவங்களால், உனை மொழியும்
புத்திகள் தெரிந்து, நான் உனை நிகர்
சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய் ---
நிதி
பொங்க --- இறைவனுடைய கருணை நிதியானது நிறைந்து விளங்க,
நிகர்
--- ஒளி, சிறப்புமிக்க,
சொரிந்து
--- மிகுதியாகப் பாடி.
தமிழ்
மிகவும் இனிமையான மொழி. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என்பது
நிகண்டு.
சந்தம்
--- அழகு, நிறம், செய்யுள்
வண்ணம்.
அருள்
ஒளி விளங்கும் அருமையான சந்தம் மிக்க பாடல்களை, அழகுத் தமிழில் நிறையப் பாடி முருகப்
பெருமானுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் அருணகிரிநாதப் பெருமான்.
இறைவனைப்
பாடி வழிபடவேண்டும் என்னும் புத்தி முதலில் விளங்கவேண்டும் என்பதால்
"மொழியும் புத்திகள் தெரிந்து" என்றார்.
தமிழால்
வழிபடும் பேற்றினைத் தமக்கு அருளுமாறு முருப்பெருமானை வேண்டினார். முருகப்
பெருமானே வேண்டினார். முருகப் பெருமான் மட்டுமா? சிவபெருமானும் அழகு தமிழ்ப் பாடல்கள் மிகுதியாகப்
பெற்று,
அடியவர்க்கு
அருள் புரிந்தவர். திருமால், "பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்
சென்றவர்".
முத்தமிழால்
போற்றிப் பாடினால் மட்டுமல்ல. முத்தமிழால் வைதாலும் வாழவைப்பவன் முருகப் பெருமான்.
"அம்புவி
தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி,
உனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே" என்று வேண்டினார் அருணைவள்ளல். பெருமானும்
அவ்வாறே அருள் புரிந்து, என்றும் வாடாத அருள்மணம் வீசும் பாமாலைகளைச்
சூடிக்கொண்டவன்.
நதி
மிஞ்சச் சடை விரிந்த நாயகன் ---
சிவபிரான் கங்கையைத் திருச்சடையில்
தரித்த வரலாறு
முன்னொரு
காலத்தில் உமாதேவியார், திருக்கயிலாய
மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப்
பின்புறத்தில் வந்து அவருடைய இரு கண்களையும்
தமது திருக்கரங்களால் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும்
வருத்தமடையும்படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய
திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியும் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய
இவர்களின் சுடர்களும் மற்றைத் தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம் இருள்மயம் ஆயின.
அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணமொன்றில் உயிர்கட்கெல்லாம் எல்லை
இல்லாத ஊழிக்காலங்கள் ஆயின. அதனை நீலகண்டப்பெருமான் நோக்கி, ஆன்மாக்களுக்குத் திருவருள் செய்யத்
திருவுளங்கொண்டு, தம்முடைய நெற்றியிலே
ஒரு திருக்கண்ணை உண்டாக்கி, அதனால் அருளொடு
நோக்கி, எங்கும் வியாபித்த
பேரிருளை மாற்றி, சூரியன்
முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை ஈந்தார். புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும்
நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை
உமாதேவியார் நோக்கி அச்சமெய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர மலர்களையும்
துண்ணென்று எடுத்தார், எடுக்கும் பொழுது
தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்ற, அதனை உமாதேவியார் நோக்கி திருக்கரங்களை உதறினார்.
அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச் சமுத்திரங்கள்போல்
எங்கும் பரந்தன. அவற்றை அரியரபிரமாதி தேவர்களும் பிறருங் கண்டு திருக்கயிலையில்
எழுந்தருளிய தேவதேவன்பால் சென்று,
வணங்கித்
துதித்து, “எம்பொருமானே! இந்த
நீர்ப்பெருக்கு எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள்
முழுவதையும் கவர்ந்தது. முன்னாளில் விடத்தை உண்டு
அடியேங்களைக் காத்து அருளியதுபோல் இதனையும் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று
வேண்டினார்கள். மறைகளுங் காணாக் கறைமிடற்றண்ணல் அந் நதியின் வரலாற்றை
அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து, தமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின்
மீது விடுத்தார்.
அதனைக்
கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே!
இவ்வண்டங்களை எல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது
திருக்கரத்தில் தோன்றினமையாலும்,
உமது
திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிருமலம் உடையதாகும். அதில் எமது நகரந்தோறும்
இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள். சிவபெருமான்.
திருச்சடையில்
புகுந்திருந்த கங்கையில் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலும் கொடுத்தார்.
அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி,
விடைபெற்றுக்
கொண்டு தத்தம் நகர்களை அடைந்து அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள்
பிரமலோகத்தை அடைந்த கங்கை பகீரத மன்னனுடைய தவத்தினால் பூமியில் மீண்டும் வர, சிவபெருமான் பின்னும் அதனைத்
திருமுடிமேல் தாங்கி, பின் இந்த நிலவுலகில்
செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்று உய்யும்படி
அவர்கள் எலும்பில் பாய்ந்து கடலில் பெருகியது. இதனை ஒழிந்த மற்றை இரு நதிகளும்
தாம் புகுந்த இடங்களில் இருந்தன. தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய
திருக்கரத்தில் தோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள் மேலீட்டால்
சிவபெருமான் அதனைத் தமது திருமுடியில் தரித்த வரலாறு இதுவேயாம்.
மலைமகளை
ஒருபாகம் வைத்தலுமே, மற்றுஒருத்தி
சலமுகத்தால்
அவன்சடையில் பாயும்அது என்னேடீ,
சலமுகத்தால்
அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே
புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ. --- திருவாசகம்.
உமை
அன்பில் செயும் மிகுந்த பூசனை நலம் என்று உள்குளிர் சிவன் ---
உமாதேவியார்
பல திருத்தலங்களிலும் புரிந்த எல்லை இல்லாத்த பூசனையை சிவபிரான் தமது
திருவுள்ளத்தில் மகிழ்ந்து ஏற்று அருள் புரிந்தார்.
தீ
உகள் கிரவுஞ்சக் கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே ---
தீய
குணத்தால் துள்ளி எழுந்த கிரவுஞ்ச மலையை, தனது
திருக்கையில் இருந்து வேலாயுதத்தை விடுத்துப் போடியாக்கினார் முருகப் பெருமான்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய
மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது
திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும்
வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல்
வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில்
சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை
...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது
உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய
வேலாயுதம், கிரவுஞ்ச
மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில்
அடிகளார் காட்டியபடி, நமது
வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு
என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும்
உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநுபூதியில்.
நவ
கங்கைக்கு இணை பகர்ந்த மா ம(ண்)ணி நதி ---
கங்கை
நதி புனிதமானது என்று சொல்வது வழக்கம்.
மண்ணியாறு
காவிரியின் கிளை ஆறு ஆகும்.
மண்ணுதல்
என்றால் கழுவுதல் என்று பொருள். தன்னில் ஆடுகின்றவர்களின் பாவங்களைப் போக்குவதால், "மண்ணியாறு"
எனப்பட்டதாகவும் காள்ள இடமுண்டு.
கங்கையை
விடவும் புனிதம் வாய்ந்தது, காவிரி ஆறு
என்பதால்,
"கங்கையில்
புனிதம் ஆய காவிரி" என்றார் தொண்ரடிப்பொடி ஆழ்வார்.
"புல்கியும்
தாழ்ந்தும்போந்து தவம் செய்யும் போகரும் யோகரும்
புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரி"
என்றும், "எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே சுழிந்து இழி காவிரி" என்றும், "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம்
அலம்பித் திகழும்
மா
காவிரி" என்றும் காவிரியின் சிறப்பை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றிப் பாடி உள்ளார்.
எனவே, "கங்கைக்கு இணை பகர்ந்த
மாமண்ணி நதி" என்று அடிகளார் சிறப்பித்துப் போற்றினார்.
கந்துகாபுரி
நகர் பொங்கித் தழைய வந்து வாழ்வுறு முருகோனே ---
கந்துகாபுரி
எனப்படுவது திருப்பந்தணைநல்லூர். இது, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்"
என்று வழங்குகிறது.
கும்பகோணம்
- பந்தநல்லூர், திருப்பனந்தாள் -
பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவர்
--- பசுபதீசர்.
இறைவியார்
--- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல
மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம் --- சூரியதீர்த்தம்.
திருஞானசம்பந்தப்
பெருமானும், அப்பர்
பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.
இத்
திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு. உமாதேவி பந்துகொண்டு விளையாட
விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி
மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது
என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம்
முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக்
கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார்.
பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து
வணங்க, அம்பிகையை
பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப்
பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம்
வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து
வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர்
ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த
இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால்
நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப்
பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு,
சினமுற்றுப்
பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால்
அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு
புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து
சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.
பசுவுக்குப்
பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய
பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று.
மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.
காம்பீலி
மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று
பெயர் சூட்டியதோடு, திருக்கோயில்
திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம்
இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.
தனிக்கோயிலாக
பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன்
ஆயனாக வந்தவர்.
சுவாமி
சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று
பெயரிடப்பட்டுள்ளது.
கருத்துரை
முருகா!
தவத்தைப் புரிந்து, உம்மை வழிபடும்
புத்தியினைப் பெற்று, அருமையான சந்தத் தமிழ்ப் பாடல்களைப் பாடி வழிபட அருள்.
No comments:
Post a Comment