நல்ல சுற்றம், நட்பு அமைந்தால், நலம் பல சிறக்கும்





நல்ல சுற்றம், நட்பு அமைந்தால் நலம் பல சிறக்கும்

---------------

     அன்பு நீங்காத சுற்றமானது ஒருவனுக்கு அமையப் பெற்றால், அந்த சுற்றமானது கிளைத்தல் குறையாத செல்வங்கள் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

     சுற்றம் என்பதற்கு, சுற்றி இருப்பது என்று பொருள் கொண்டு, நம்மைச் சுற்றி இருக்கும் உறவையும், நட்பையும் கொள்ளலாம்.

"விருப்பு அறாச் சுற்றம் இயையின், அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்"                --- திருக்குறள்.    


     உள்ளத்தில் பகைமை உணர்வைக் கொண்டிருந்து, புறத்தில் அன்பு உள்ளவரக்ளைப் போல் காட்டிக் கொள்ளுதல் இல்லாத சுற்றத்தாரைக் குறித்து இவ்வாறு சொன்னார்.

     "புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வேறு ஆதல் வேண்டும்" என்றார் குமரகுருமர அடிகள். "முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா, வஞ்சகரை அஞ்சப்படும்" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில். முகத்தினால் இனிமையாகப் பழகி, உள்ளத்தில் கொடுமையை வைத்திருக்கும் வஞ்சகர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும் என்பது இத் திருக்குறளின் பொருள்.

     ஒருவன் வளமாக வாழ்கின்றபோது, வந்து சேருகின்ற உறவினர்கள், வானத்து விண்மீன்கள் போலப் பலராக இருப்பர். ஆனால், இயலாமை, வறுமைத் துன்பம் வந்து விடுகிறபோது, சொந்தம் என்று சொல்லிக் கொண்டு, நட்பு என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் மிகச் சிலராகவே இருப்பார்கள். இது தான் உலகியல் என்கின்றது பின்வரும் "நாலடியார்" பாடல்...

காலாடு போழ்தில் கழிகிளைஞர், வானத்து
மேலாடு மீனின் பலர் ஆவர், --- ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட!
தொடர்பு உடையேம் என்பார் சிலர்.      --- நாலடியார்.


     நீர் நிறைந்து இருந்தபோது குளத்தில் மகிழ்ந்து இருந்து, நீர் வறண்டபோது, குளத்தை விட்டு நீங்குகின்ற நீர்ப்பறவை போல, செல்வம் மிகுந்து இருந்த காலத்தில் கூடி இருந்து, வறுமை வந்தபோது, விட்டு சொல்லாமல் நீங்குவோர் உறவினர் ஆகார்.

     அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும், அல்லியும், நெய்தலும்போல, நீர் உள்ள காலத்து நன்கு வளர்ந்து, நீர் அற்ற காலத்தில் சேர்ந்து அழிவதைப் போல, வறுமை வந்தபோதும், துன்பம் வந்தபோதும், நீங்காது சேர்ந்து இருந்து, நம்மோடு கூடித் துன்பத்தை அனுபவிப்பவரே சிறந்த உறவினர் ஆவார்.

     இக் கருத்தை, "மூதுரை" என்னும் நூலில் ஒரு பாடலாக வடித்துக் காட்டுகின்றார் ஔவைப் பிராட்டியார்.
        
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு".                --- மூதுரை.


     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்வதற்கு எழுந்த நூல்கள் சில. அவற்றுள்,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடலைக் காண்போம்....


"வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர்அரக்கு
இல்உற்றும் உய்ந்தார், இரங்கேசா! - நல்ல
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்".              

இதன் பொருள் ---

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வில்லுக்கு அதிபன் --- வில்வித்தையில் தன்னை ஒப்பார் இல்லாத விதுரனுடைய, விரகினால் --- முன் புத்தியினால், ஐவர் --- பஞ்சபாண்டவர், அரக்கு இல் உற்றும் --- (துரியோதனன் கட்டின வஞ்சக) அரக்கு மாளிகைக்குள் இருந்தும், உய்ந்தார் --- பிழைத்துப் போனார்கள்,  (ஆகையால், இது) நல்ல விருப்பு அறா சுற்றம் இயையின் --- என்றும் ஒருபடித்தான அன்பு அகலாத சுற்றம் ஒருவனுக்குப் பொருந்தி இருக்குமானால், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் --- (அது) வளர்ந்துகொண்டே இருக்கும் பலவித செல்வங்களையும் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- அன்புடைய சுற்றத்தால் ஆக்கம் பலவும் வளரும்.

        விளக்கவுரை --- திருதராட்டிரனும் துரியோதனனும் புரோசனன் என்னும் மந்திரியுடன் தனி இடத்திலிருந்து, பாண்டவர் ஐவரையும் கொல்லும் வழியை ஆலோசித்தபோது, வாரணாவத நகரத்திற்குப் பாண்டவரை அனுப்புமாறு தனது தந்தையைத் துரியோதனன் வேண்டுகின்றான். அமைச்சன் புரோசனனை விட்டு வாரணாவதத்தை அலங்கரிக்கச் சொல்லுகின்றான். திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதம் சென்று வாழப் பணித்து, புரோசனனையும் அவனுக்கு மந்திரியாக உடன் அனுப்புகின்றான். பாண்டவர்கள் இதை உண்மையான உபசரிப்பு என்று நம்புகின்றனர்.  புரோசனன் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அழைத்துப் போகின்றான். பாண்டவர்களுடன் விதுரர் நெடுந்தூரம் சென்று, துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக உணர்த்துகின்றார். "காடு தீப் பற்றி எரியும் போது, எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார். இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர். பின் விதுரர் அத்தினாபுரம் திரும்பிவிட்டார்.

     வாரணாவதம் சென்ற பாண்டவர்கள் சிவதரிசனம் செய்து, அவர்கள் தங்குவதற்கு என அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்குச் செல்லுகின்றனர். மாளிகையின் அழகை வியந்தவாறே கவனித்து,  புரோசனன் மீது பாண்டவர்கள் சந்தேகம் கொள்ளுகின்றனர். மாளிகையில் பாண்டவர்கள் தங்கி இருக்கும் காலத்து, சிற்பி ஒருவன் பீமனிடம் வந்து, மாளிகையில் நிலவறை அமைத்துள்ளது பற்றிக் கூறி, 'தீங்கு நிகழ்ந்தபோது அதன் வழித் தப்புக!' என்று சொல்லி, பின்வருமாறு நடந்ததை விவரிக்கின்றான்.

     "உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிரனது கட்டளையினால், சிற்பிகள் புதுமையாக, பெரிய இந்த வாரணாவத நகரத்திலே அழகிய இந்த மாளிகையைச் செய்த பொழுது,  தரும சொரூபியாகிய, உமது சிறிய தந்தையான விதுரர், மாளிகை கட்டுவதற்கு வந்த புரோசனன் என்னும் மந்திரியினது வஞ்சனையை அறிந்து, என் மீது நம்பிக்கை வைத்து, இம் மாளிகையை அமைக்கும் சிற்பிகளுள் ஒருவனாய் இருந்து தொழில் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பினார்.

     உங்களுக்கு அடியவனான நானும், மற்றைய சிற்பிகளுடன் இருந்து,  அரக்கினால் ஒரு மாளிகையை இவ்வாறு செய்து அமைத்து, இனி நிகழும் பயன்களை எல்லாம் ஆலோசித்து, விதுரர் அறிவுரையின்படிக்கு, நீண்ட நிலவறையின் (சுரங்க வழி) வழியானது மலைக்குகை போலச் சென்று நீண்ட காட்டினைச் சேரும் வகையில் முடியும்படி, இந்த மாளிகையில் ஒரு மண்டபத்தைச் செய்துள்ளேன்.

     வேறு ஒருவரும் அறியாத உபாயத்தால், அந்த மண்டபத்தில் ஒரு தூணை, பீமா! நீ உனது வலிமைகொண்டு பெயர்த்தெடுத்து விடும்படி,  அந் நிலவறைக்குச் செல்ல வழியை அமைத்து வைத்துள்ளேன். இச் செய்தி நம்பத்தக்கது என்று உள்ளத்திலே கொண்டு, தீங்கு நிகழ்ந்தபொழுது அவ்வழியாகத் தப்பித்துச் சென்று விடுங்கள்". பணிவுடன் சொன்னான்.

     இவ்வாறு பணிவுடன் சொன்ன சிற்பிக்குப் பரிசு அளித்து, பாண்டவர் பகலில் வேட்டையாடி, இரவில் தூக்கம் இன்றி விழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். புரோசனனுடன் நெருங்கிப் பழகிய பாண்டவர், ஒரு நாள் இரவில், அவனையும் தம் மாளிகையில் துயிலச் செய்கின்றார்கள். அவன் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து, அரக்கு மாளிகைக்கு பீமன் தீ வைத்து, தாயுடனும் சகோதரர்களுடனும் சுரங்க வழியாகத் தப்பி, வனத்தை அடைகின்றார்கள்.

     வளமாக வாழும்போது கூடி இருந்து மகிழ்வது உறவு அல்ல. வாழ்விலே தாழ்வு வந்தபோது, உடன் இருந்து பரிவு காட்டுவதே உறவு ஆகும். இது, நட்புக்கும் பொருந்தும். சிரித்துப் பேசி மகிழ்வது நட்பு அல்ல. துன்பம் வந்தபோது, உடனிருந்து துடைக்கத் துணை புரிவதே நட்பு ஆகும்.

     விருப்பறாச் சுற்றமாகிய விதுரர் ஒருவர் இருந்ததனால், ஐவருக்கும் ஆபத்தில் இருந்து நீக்கி, அருப்பு அறா ஆக்கம் தந்தது.

     பாட்டுப் பாடுவது என்றால் இனிமையான குரலில் கணீர் என்று பாடவேண்டும். குரல் தழுதழுத்துப் பாடுவதை வி, மௌனமாய் இருப்பதுதான் நல்லது. தெளிவில்லாத கல்வி, கேள்வியை விட, கல்வி கற்காமல் இருப்பதே நல்லது. எப்போதும் மனத் தெளிவு இல்லாமல் இருக்கும் நண்பனை விட, நீண்ட நாள் பகைவனே நல்லவன் ஆவான். இந்தக் கருத்து அமைந்த பாடல் ஒன்று பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வருகின்றது. பாடலைப் பார்ப்போம்.


"இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
     வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
     இருப்பதுவே தக்க தாகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
     கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
     றியபகையே வண்மை யாமே".

இதன் பொருள் ---

     இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் --- அணிகலன்கள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட தண்டலையாரின் வளம்பொருந்திய நாட்டிலே, எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய் இருப்பதுவே  தக்கது ஆகும் --- பாடத் தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக் காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும். குழை குழைத்த கல்வியினும்  கேள்வியினும் கல்லாமை குணமே --- தெளிவற்ற  கல்வி கேள்விகளைவிடக் கல்லாமையே நன்றாகும்.  நாளும் வழுவழுத்த உறவு அதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் --- எப்போதும் மனத் தெளிவற்ற நட்பைக் காட்டினும், நீங்காத பகைமை உணர்வு பொருந்திய பகையே வளமுடையதாகும்.

பகைவன் என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தெளிவில்லாத உறவும், நட்பும் உடன் இருந்தே கெடுப்பவை. எப்போது, எப்படிக் கெடுக்கும் என்பதுதான் தெரியாது.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...