நாள் வழிபாட்டிற்கு





இறையருளை வேண்டி நாளும் வழிபட
--------

 "துப்புஆடு திருமேனிச் சோதிமணிச் சுடரே!
     துரியவெளிக்குள் இருந்த சுத்தசிவ வெளியே!
  அப்பு ஆடு சடைமுடிஎம் ஆனந்த மலையே!
     அருட்கடலே! குருவே! என் ஆண்டவனே! அரசே!
  இப்பாடு பட எனக்கு முடியாது துரையே!
     இரங்கிஅருள் செயல்வேண்டும், இதுதருணம் கண்டாய்,
  தப்பு ஆடுவேன் எனினும் என்னைவிடத் துணியேல்,
     தனிமன்றுள் நடம்புரியும் தாள்மலர் எந்தாயே".

வடலூர் இராமலிங்க சுவாமிகள் பாடிய திருவருட்பா.

நாளும் துக்க நிவிர்த்தி வேண்டி, இறைவனை இந்தப் பாடலைச் சொல்லி வழிபடலாம்.

இதன் பொருள் ---
    
     ஒப்பற்ற திருச்சிற்றம்பலத்தில் திருநடம் செய்யும் திருவடியாகிய தாமரையை உடைய எனது தந்தையே!

     பவளம் போன்ற செம்மை நிறம் பொருந்திய திருமேனியுடன் ஒளி செய்கின்ற மாணிக்கச்சுடர் போன்றவனே!

     துரியவெளியில் விளங்குகின்ற சுத்த சிவ வெளியே!

     கங்கை தங்கிய சடையை உடைய முடிகொண்ட எங்கள் இன்ப மலையே!

      திருவருட்கடல் போன்றவனே!

      எனது குருவே!

      என்னை ஆண்டு அருளும் தலைவனே!

     அருளரசனே!

      இத் துன்பங்களை அனுபவிக்க என்னால் முடியாது; எனக்குத் துரையே!  என்மீது கருணை வைத்து அருள் செய்யவேண்டும்.  நான் தவறுகள் செய்யும் இயல்பினை உடைய மனிதப் பிறவி. அது கருதி, என்னைக் கைவிட நினைக்காதே. அருள் புரிவதற்கு இது ஏற்ற தருணம் ஆகும்.

----------------------------

     துப்பு --- பவளம். சிவபெருமான் பவளம் போல் திருமேனி உடையவன்.

     அப்பு --- நீர். இங்கே கங்கை நீரைக் குறித்தது. கங்கையைச் சணையில் தரித்தவர் சிவபெருமான்.

     தப்பு --- தவறு. தவறு செய்யும் இயல்பினை உடையது ஆன்மா.

     தாள் மலர் --- திருவடி மலர்.







No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...