திரு இடைமருதூர் --- 0869. புழுகொடு பனிநீர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புழுகொடுபனி (திருவிடைமருதூர்)

முருகா!
சிவஞான போதத்தை அருள் புரிய,
குருவாக வந்தருள்வாய்.


தனதனதன தான தானன
தனதனதன தான தானன
     தனதனதன தான தானன ...... தந்ததான


புழுகொடுபனி நீர்ச வாதுட
னிருகரமிகு மார்பி லேபன
     புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை

பொதுவினில் விலை கூறு
மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
     பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே

மெழுகெனவுரு காவ னார்தம
திதயகலக மோடு மோகன
     வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன்

மிடைபடுமல மாயை யால்மிக
கலவியஅறி வேக சாமிநின்
     விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய்

எழுகிரிநிலை யோட வாரிதி
மொகுமொகுவென வீச மேதினி
     யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக

இமையவர்சிறை மீள நாய்நரி
கழுகுகள்கக ராசன் மேலிட
     ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச்

செழுமதகரி நீல கோமள
அபிநவமயி லேறு சேவக
     செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே

திரைபொருகரை மோது காவிரி
வருபுனல்வயல் வாவி சூழ்தரு
     திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


புழுகொடு பனிநீர் சவாதுஉடன்
இருகரம் மிகு மார்பில் லேபன
     புளகித அபிராம பூஷித ...... கொங்கையானை

பொதுவினில் விலை கூறுமாதர்கள்,
     மணி அணிகுழை மீது தாவடி
     பொருவன கணை போல் விலோசன ...... வந்தியாலே,

மெழுகு என உருகா அனார் தமது
இதய கலகமோடு, மோகன
     வெகுவித பரிதாப வாதனை ...... கொண்டு, நாயேன்

மிடைபடும் மல மாயையால், மிக
கலவிய அறிவு ஏக, சாமி! நின்
     விதரண சிவஞான போதகம் ...... வந்துதாராய்.

எழுகிரி நிலை ஓட, வாரிதி
மொகுமொகு என வீச, மேதினி
     இடர் கெட, அசுரேசர் சேனை ...... முறிந்துபோக,

இமையவர் சிறை மீள, நாய்நரி
கழுகுகள் ககராசன் மேலிட,
     ரணமுக கண பூத சேனைகள் ...... நின்று உலாவ,

செழு மதகரி நீல கோமள
அபிநவ மயில் ஏறு சேவக!
     செயசெய முருகா! குகா! வளர் ...... கந்தவேளே!

திரைபொரு கரை மோது காவிரி
வருபுனல் வயல் வாவி சூழ்தரு
     திருவிடைமருதூரில் மேவிய ...... தம்பிரானே.


பதவுரை

      எழுகிரி நிலை ஓட --- ஏழு மலைகளும் நிலைபெயர்ந்து ஒடவும்,

     வாரிதி மொகுமொகு என வீச --- கடல் மொகுமொகு எனப் கொப்புளித்து அலைகள் மிகுதியாக வீசவும்,

     மேதினி இடர் கெட --- உலக மக்கள் துயர் நீங்கவும்,

     அசுரேசர் சேனை முறிந்து போக --- அசுரர்களுடைய சேனைகள் நிலைகெட்டு அழிந்து போகவும்,

       இமையவர் சிறைமீள --- தேவர்கள் சிறையில் இருந்து மீளவும்,

     நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட --- நாய்களும், நரிகளும், சூழ்ந்துள்ள போர்க்களத்தில், கழுகுகளும்,  பறவைகளின் அரசனாகிய கருடன் வானத்தில் வட்டமிடவும்,

     ரணமுக --- போர்முகத்தில்,

     கண பூதசேனைகள் நின்று உலாவ --- பூதகண சேனைகள் நின்று உலாவவும்,

      செழு மதகரி --- செழுமை மிக்க பிணிமுகம் என்னும் யானையின் மீதும்,

     நீல கோமள அபிநவ மயில் ஏறு சேவக --- நீலநிறமும் அழகும் உள்ள புதுமை மிக்க மியலின் மீதும் ஏறுகின்ற வீரரே!

     செயசெய முருகா --- வெற்றி மிகுத்த முருகப் பெருமானே!

     குகா --- அடியவர்களின் இதயம் என்னும் குளையில் வீற்றிருப்பவரே!

     வளர் கந்தவேளே --- அருள் வளரும் கந்தக் கடவுளே!

      திரைபொரு கரை மோது காவிரி வருபுனல் --- அலைகள் மோதுகின்ற கரையினை உடைய காவிரியில் பாய்ந்து வரும் நீரானது,

     வயல் வாவி சூழ்தரு --- வயல்களிலும், குளங்களிலும் சூழ்ந்துள்ள,

     திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே --- திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!.

      புழுகொடு பனிநீர் சவாது உடன் --- புனுகு சட்டத்தோடு, பனி நீர், சவ்வாது கலந்து,

     இருகரம் மிகு மார்பில் --- இரு கைகளிலும், மார்பிலும்,

     லேபனம் --- அழகுறப் பூசி,

     புளகித அபிராம பூஷித கொங்கை யானை --- புளகாங்கிதம் தரும் அழகுள்ளதாய், அணிகலன்களைப் பூண்டுள்ள, மலை போன்ற மார்பகங்களை,

      பொதுவினில் விலைகூறும் மாதர்கள் --- பொது இடத்தில் நின்று விலை கூறுகின்ற விலைமாதர்களின்,

     மணிஅணி குழை மீது --- இரத்தன பணிகள் பதித்த குண்டலங்களின் மீது,

     தாவடி பொருவன --- தாவிப் போர் புரிகின்,

     கணை போல் விலோசன வந்தியாலே --- அம்புகள் போன்ற கண்களால் உண்டாகிய கொடுமையாலே,

      மெழுகு என உருகா --- எனது உள்ளமானது மெழுகு போல் உருகி,

     அ(ன்)னார் தமது இதய கலகமோடு --- அவர்களது உள்ளத்தில் தோன்றும் கலகத்தால்,

     மோகன --- மனமயக்கம் கொண்டு,

     வெகுவித பரிதாப வாதனை கொண்டு --- மிகுதியாக வருந்தத் தக்க துன்பத்தை அடைந்து உள்ள,

      நாயேன் மிடைபடும் மலம் மாயையால் --- நாயைப் போன்றவனாகிய என்னைச் சூழ்ந்துள்ள மலங்களினால் உண்டாகும் அறிவு மயக்கத்தால்,

     மிக கலவிய அறிவு ஏக --- கலக்கம் அடைந்த எனது அறிவு நீங்,

     சாமி --- என்னை உடையவரே!

     நின் விதரண --- தேவரீரது பெருங்கொடையா,

     சிவஞான போதகம் வந்து தாராய் --- சிவத்தை அறிகின்ற மெய்யறிவினைத் தந்து அருள வரவேணும்.


பொழிப்புரை


     ஏழு மலைகளும் நிலைபெயர்ந்து ஒடவும், கடல் மொகுமொகு எனப் கொப்புளித்து அலைகள் மிகுதியாக வீசவும், உலக மக்கள் துயர் நீங்கவும், அசுரர்களுடைய சேனைகள் நிலைகெட்டு அழிந்து போகவும், தேவர்கள் சிறையில் இருந்து மீளவும், நாய்களும், நரிகளும், சூழ்ந்துள்ள போர்க்களத்தில், கழுகுகளும், பறவைகளின் அரசனாகிய கருடன் வானத்தில் வட்டமிடவும், போர்முகத்தில், பூதகண சேனைகள் நின்று உலாவவும், செழுமை மிக்க பிணிமுகம் என்னும் யானையின் மீதும், நீலநிறமும் அழகும் உள்ள புதுமை மிக்க மியலின் மீதும் ஏறுகின்ற வீரரே!

     வெற்றி மிகுத்த முருகப் பெருமானே!

     அடியவர்களின் இதயம் என்னும் குளையில் வீற்றிருப்பவரே!

     அருள் வளரும் கந்தக் கடவுளே!

         அலைகள் மோதுகின்ற கரையினை உடைய காவிரியில் பாய்ந்து வரும் நீரானது, வயல்களிலும், குளங்களிலும் சூழ்ந்துள்ள, திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!.

         புனுகு சட்டத்தோடு, பனி நீர், சவ்வாது கலந்து, இரு கைககளிலும், மார்பிலும், அழகுறப் பூசி, புளகாங்கிதம் தரும் அழகுள்ளதாய், அணிகலன்களைப் பூண்டுள்ள, மலை போன்ற மார்பகங்களை,  பொது இடத்தில் நின்று விலை கூறுகின்ற விலைமாதர்களின், இரத்தன பணிகள் பதித்த குண்டலங்களின் மீது, தாவிப் போர் புரிகின், அம்புகள் போன்ற கண்களால் உண்டாகிய கொடுமையாலே,  எனது உள்ளமானது மெழுகு போல் உருகி, அவர்களது உள்ளத்தில் தோன்றும் கலகத்தால், மனமயக்கம் கொண்டு, மிகுதியாக வருந்தத் தக்க துன்பத்தை அடைந்து உள்ள நாயைப் போன்றவனாகிய என்னைச் சூழ்ந்துள்ள மலங்களினால் உண்டாகும் அறிவு மயக்கத்தால், கலக்கம் அடைந்த எனது அறிவு நீங், என்னை உடையவரே! தேவரீரது பெருங்கொடையா, சிவத்தை அறிகின்ற மெய்யறிவினைத் தந்து அருள வரவேணும்.




விரிவுரை

     இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்கள் நிலையையும், அவர்களால் காம வயப்பட்ட ஆடவர் படுகின்று துன்பத்தையும் எடுத்துக் கூறி, அத் துன்பத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், அதற்கு இறைவனருளால், சிவத்தை அறியும் மெய்யறிவைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் அருணகிரிநாத வள்ளல்.
  
கக ராசன் மேலிட ---

ககம் --- அம்பு, பறவை, தெய்வம், பாணம், வெட்டுக்கிளி, மணத்தக்காளி.

இங்கு பறவையைக் குறித்து நின்றது.

ககராசன் பறவைகளுக்கு அரசாகிய கருடன்.

செழு மதகரி ---

பிணிமுகம் என்னும் யானையை வாகனமாக உடையவர் முருகப் பெருமான்.

திருமால் முருகவேளை யானையாகித் தாங்கக் கருதினார்.  மாவிரபுரம் என்னும் தலத்தில் அருந்தவம் புரிந்தார்.  திருமுருகன் அவருடைய தவத்துக்கு இரங்கி, அவர்முன் தோன்றி அருளினார். திருமால் அவரை வணங்கி, "முருகவேளே! எனக்கு முன் அவமானம் புரிந்த தாரகன் யானை உருவம் பெற்றுச் சாத்தனாருக்கு வாகனமாக விளங்குகின்றான். அவன் அஞ்சுமாறு அடியேனை யானை வாகனமாகக் கொண்டு அருள் புரிதல் வேண்டும்" என்று வரம் இரந்தனர். ஆறுமுகப் பெருமான் அவ்வண்ணமே அரிமுகுந்தனை யானையாக்கி ஊர்ந்தருளினார்.
அதனால், கயாரூட மூர்த்தி என்று பேர் பெற்றார்.

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி...--- திருமுருகாற்றுப்படை.


திரைபொரு கரை மோது காவிரி வருபுனல் வயல் வாவி சூழ்தரு திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே ---

காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் திருவிடைமருதூரில் இழற்கை எழிலை சுவாமிகள் விளக்கி அருளுகின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடல்களிலும் இதைக் காணலாம். இயற்கை வடிவில் இறைவனைக் காணும் பாங்கு நமக்கு வரவேண்டும். இயற்கையை செடி, கொடி, மரம், மலை, ஆறு என்று பார்க்கக் கூடாது.

பின்வரும் தேவாரப் பாடல்களைக் காண்க... 

மறிதிரை படுகடல் விடம்அடை மிடறினர்
"எறிதிரை கரைபொரும் இடைமருது" எனும்அவர்
செறிதிரை நரையொடு செலவுஇலர் உலகினில்
பிறிதுஇரை பெறும் உடல் பெறுகுவது அரிதே.

சிலை உய்த்த வெங்கணையால் புரமூன்று எரித்தீர், திறல்அரக்கன்
தலை பத்தும் திண்தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்
"இலை மொய்த்த தண்பொழிலும் வயலும்சூழ்ந்த இடைமருதில்
நலம் மொய்த்த கோயிலே" கோயில்ஆக நயந்தீரே.

திருவிடைமருதூர் சிறந்த திருத்தலம். வடக்கே கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ஜுனம் என்னும் திருப்பருப்பதம். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ஜுனம். இது மத்தியில் விளங்குவதால், மத்யார்ஜுனம். அர்ஜுனம் --- மருது.

மல்லிகை மருது, புடைமருது, இடைமருது. மருத மரத்தின் கீழ் பெருமான் எழுந்தருளி உள்ளனர். மகாலிங்கேசுவரர்.

சோழநாடே பெரிய சிவாலயம்

திருவிடைமருதூர்                           --- கருப்பக் கிரகம்.
தென்மேற்கில் திருவலஞ்சுழி             ---  விநாயகர்.
மேற்கில் சுவாமிமலை                      ---  முருகர்.
வடக்கில் ஆப்பாடி                           ---  சண்டீசர்.
வடகிழக்கில் சூரியனார்கோயில்
                                    மாந்துறை       ---  சூரியர்
வடகிழக்கில் சிதம்பரம்                    ---  நடராசர்.
வடகிழக்கில் சீகாழி                        ---  வைரவர்.
கிழக்கில் திருவாவடுதுறை               ---  நந்தீசர்.
தென்கிழக்கில் திருவாரூர்               ---  சோமாஸ்கந்தர்.
தெற்கில் ஆலங்குடி                       ---  தட்சிணாமூர்த்தி.

இத்தகைய பெரிய கோயிலின் கருப்பக்கிரகம் திருவிடைமருதூர்.

வரகுண தேவருக்கு பிரம்மகத்தி நீங்கிய திருத்தலம்.  பட்டினத்தடிகளும் பத்திரகிரியாரும் வைகிய திருத்தலம்.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
 தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்அடைந்தார்க்கு இடைமருதனே

என்று அப்பர் சுவாமிகளால் இனிது பாடப்பெற்ற அருமைத் திருத்தலம்.

இத் தலத்தைக் குறித்துத் திருவெண்காடர் திருவாய் மலர்ந்து அருளிய மும்மணிக்கோவை மிகவும் விழுமிய கருத்துக்களை உடையது. அண்மையில் புலவர் சிகாமணியாக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய திருவிடைமருதூர் உலா மிகச் சிறந்த பிரபந்தமாகும்.

கருத்துரை

முருகா! சிவஞான போதத்தை அருள் புரிய, குருவாக வந்தருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...