விதியை மதியால் வெல்லலாம்




விதியை மதியால் வெல்லலாம்.
----

உயிர்களுக்குக் கதி மூன்று உண்டு. அவை... 1. அதோகதி, 2. ஊர்த்துவகதி, 3. பரகதி என்பன ஆகும். 

கதி என்பதற்கு வழி என்று பொருள்.

அதோகதி என்பது கீழ்நோக்கிச் செல்லும் கதி. இது மீளாத துன்பத்தைத் தரும் நரகத்தைக் குறிக்கும்.

ஊர்த்துவகதி என்பது மேல்நோக்கிச் செல்லுதல் ஆகும். கீழான பிறவிக்குச் செல்லாமல் திரும்பவும் மனிதப் பிறவிக்கே வருவது.

பரகதி என்பது வீடுபேறு என்னும் மோட்சத்தைக் குறிக்கும்.

அதோகதியை முயற்சி ஏதும் இல்லாமலே அடையலாம். பாவத்தையே பயின்ற உயிர்கள் இந்த கதியை எளிதாக அடையலாம். அதோகதிக்கு உள்ளது மலநடை.

ஊர்த்துவகதிக்கு முயற்சி இன்றியமையாதது. புண்ணியம் செய்த உயிர்கள் அதோகதியை அடையமாட்டா. பாவம் செய்யும் உயிர்கள் ஊர்த்துவ கதிக்கு வரமாட்டா. ஊர்த்துவகதியில் உள்ளது அறநடை.

நடை என்பது ஒழுக்கம் எனப்படும். 

மலம் என்பது அழுக்கு. உயிர்க்கு உள்ள அழுக்கு மலம் எனப்படும். அது முயற்சியால் களையக் கூடிய அழுக்கே ஆகும்.

அறவழி ஒழுக்கத்தினால் பெறப்படும் நன்மையையும், மல ஒழுக்கத்தினால் அடையப்படும் தீமையையும் பகுத்து உணர்ந்து, அதோகதியில் செல்வதை விடுத்து, ஊர்த்துவகதியில் செல்வதற்கு முயற்சி வேண்டும்.

அதோகதிக்கும், ஊர்த்துவகதிக்கும் மேலானது பரகதியாகும். தனக்கு மேலாக ஒன்று இல்லாதது. அங்கே சென்றவர் திரும்பி வருவதில்லை. அங்கே விளைவது அழியாத பேரின்பம். இந்தப் பரகதியானது எல்லா உயிர்க்கும் கிடைப்பது இல்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி பிறவி உண்டாகின்றது. நாமாக வேண்டி மனிதப் பிறவி வருவதில்லை. விரும்பி யாரும் குருடாகவோ, செவிடாகவோ, முடமாகவோ, ஏழையாகவோ, செல்வந்தனாகவோ, அறிவுடையவராகவோ, அறிவில்லாதவராகவோ பிறப்பதில்லை. எல்லாம் விதிப்படியே நிகழ்கின்றது. விதி என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தற்கு என்று விதிக்கப்பட்ட பிராரத்த வினையைக் குறிக்கும். இதை யாராக இருந்தாலும் அனுபவித்தே கழிக்கவேண்டும். இதில் இருந்து தப்பியவர் யாரும் இல்லை.

முயற்சியே இல்லாமல், மனம் போனபடி குறிக்கோள் இல்லாமல் வாழ்கின்றவருக்கு விதியை வெல்லக்கூடிய மதி இருக்காது.

தேடிச் சோறுநிதம் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே...

இவர்கள் வாழ்ந்து மடிவார்கள். இவர்கள் அடைவது அதோகதி ஆகும்.

ஆற்று வெள்ளத்தைக் கடக்கவேண்டுமானால், "எனக்கு நீந்தத் தெரியும்" என்று ஒருவன் தனது முயற்சியால் முயன்றால், ஒருவேளை முடியவும் கூடும். அல்லாமல் முடிந்து போகவும் கூடும். அவரவர் சமத்தைப் பொறுத்தது. இது ஊர்த்துவகதியில் கொண்டு சேர்க்கும். மீண்டும் பிறவிக்கே வரும் நிலை இது. ஆனால், துன்பம், மரணம் என்னும் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால், கடலைக் கடக்கவேண்டுமானால், தெப்பம் ஒன்று அவசியம் தேவை. பிறவியைக் கடலுக்கு உருவகப்படுத்துவர் பெரியோர். பிறவிக் கடலைக் கடந்தால், பிறவி அற்ற, துன்பம் அற்ற, பேரின்ப நிலையாகிய பரகதியை அடையலாம்.

இதற்கு மதி நிச்சயம் தேவை. அந்த மதி தான் தெப்பம்.
பிறவியாகிய கடலில் இருந்து, முத்தியாகிய கரையினைச் சேர்வதற்கு, தெப்பமாக இருந்து உதவுவது இறைவன் திருநாமம். அதை உறுதியாகப் பற்றிக் கொண்டால், பிறவிக் கடலைக் கடந்து, முத்திக் கரையை அடைந்து விடலாம்.

இதுதான், விதியை மதியால் வெல்வது ஆகும். விதி வலியதுதான். அதனை நமது முயற்சியால் மட்டுமே வென்றுவிட முடியாது. கடலைக் கடக்கத் தெப்பம் போல், விதியை வெல்ல, இறைவன் திருநாமம் துணை வேண்டும். இறைவன் திருநாமத்தை எண்ணுவதுதான் மதி.

"ஊழில் பெருவலி யாவுள, மற்று ஒன்று
சூழினும் தான் முந்துஉறும்"

என்று ஊழின் வலிமையைப் பற்றி, "ஊழ்" என்னும் அதிகாரத்திலே தெரிவித்த திருவள்ளுவ நாயனார், "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில்,

"ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்"

என்று ஊழை வெல்லுகின்ற உபாயத்தையும் அருளிச் செய்தார்.

ஊழை வெல்லுகின்ற உபாயம் எது? ஔவைப் பிராட்டியார், "நல்வழி" என்னும் நூலில் காட்டுகின்றார் பாருங்கள்...

"சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை; --- உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

இதன் பொருள் ---

"சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாட்சர மந்திரத்தை எப்போதும் தியானிப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம் (அபாயம்) உண்டாகாது. விதியை வெல்வதற்கு இதுவே சிறந்த வழி (உபாயம்) ஆகும். இதுவே சிறந்த அறிவும் (மதி) ஆகும்.

இவ்வாறு இறை திருநாமத்தைச் சிந்திக்காத, மற்ற அறிவு எல்லாம் விதியின்படியே ஆகிவிடும்.

"சிவாயநம" என்று ஔவையார் காட்டினார். அவரவர் வணங்குகின்ற தெய்வத்திற்கு உரிய மந்திரத்தை எப்போதும் உச்சரித்து வரலாம்.

எப்போதும் என்றால், வேறு எந்த வேலையும் செய்யாமல் என்று பொருள் அல்ல. அவரவருக்கு உள்ள கடமைகளைச் செவ்வனே இறைச் சிந்தனையோடு முடித்து, எஞ்சிய காலத்தில் வீண்பொழுது போக்காமல், இறைவன் திருநாமத்தை எண்ணி வரவேண்டும். வீணான பொழுது போக்கால் எந்த லாபமும் இல்லை.

புண்ணியம் என்று எண்ணி, இறைவன் திருநாமத்தைச் சொல்லுவதால், புண்ணியம் மட்டும்தான் கிடைக்கும். புண்ணியமும் பிறவியில் கொண்டு சேர்க்கும். மீண்டும் துன்பம்தான்.

இறைவன் திருநாமத்தை, பிறவியில் இருந்து ஈடேறுவதற்காகச் சொல்லுங்கள். காமியம் வேண்டாம். நிஷ்காமியமாகச் சொல்லுங்கள். நாளும் பயின்று வந்தால், நீங்கள் மறந்தாலும், உங்களுடைய நாக்கு, தானாகவே இறைவன் திருநாமத்தை உச்சரிக்கும் நிலை வந்து விடும்.

அப்பர் பெருமான் பரகதியை வேண்டும் பாடல்....

கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்;
உருவாய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்;
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய் சிவகதி நீ, பாதிரிப்புலியூர் அரனே.

இதன் பொழிப்புரை ---

திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன். கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன். வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...