மலர் வழிபாடு




விநாயகர் சதுர்த்தி
---------------------------

இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். கோர்வையாக இருக்கவேண்டும் என்பது கருதி நீண்டு விட்டது. நிறைய இருந்தாலும், சிறிதளவு தான் இப்போது தருகின்றேன்.

சற்றுப் பொறுமையாக, ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துத் தெளிவு பெறுங்கள்.

விநாயகப் பெருமானுக்கு 21 வகையான மலர்களைச் சாத்தி வழிபடவேண்டும் என்று சொல்லுவார்கள்.

பொதுவாகவே, இறைவனுக்கு எட்டு வகையான மலர்கள் உகந்தவை என்று நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. "புட்ப விதி" என்று ஒரு நூல் உள்ளது. அதில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் எந்த எந்த விதமாகிய எட்டு மலர்களைக் கொண்டு வழிபடவேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

இந்த மலர்களை எல்லாம் அவை மலரும் பக்குவத்தில் பறித்துச் சாத்தவேண்டும் என்பதுதான் விதி. அன்று அலர்ந்த மலர்கள் என்று சொல்லப்படும். வழிபாட்டிற்கு முந்திய நாளில் மலர்ந்த மலர்கள் உகந்தவை அல்ல. அப்போது அலர்ந்த மலர்களும், பூச்சிக்கடி, வண்டுக்கடி, மயிர்ச்சுற்று இல்லாமல் இருக்கவேண்டும்.

மலர்களை எப்போது, எப்படிக் கொய்யவேண்டும் என்பது குறித்து, பெரியபுராணத்தில் ஒரு பாடல்...

"வைகறை உணர்ந்து போந்து
     புனல்மூழ்கி வாயும் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
     நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல
     கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும்
     திருப்பள்ளித் தாமம் கொய்து".

இதன் பொழிப்புரை : விடியற்காலையில் துயில் எழுந்து, திருக்குளத்திற்குச் சென்று நீராடி, வாயையும் கட்டிக்கொண்டு, திரளான மலர்கள் நெருங்கிய நறுமணம் கமழும் திருநந்தனவனத்தை அடைந்து, கையினால் ஆராய்ந்து, நல்ல மணம் உடையனவும், அன்று அலரும் பருவம் உடையனவும் ஆகிய அரும்புகளை, அவை மலர்தற்குரிய சமயத்தில் தெய்வங்களுக்கு எல்லாம் தலைமையானவராகிய சிவபெருமானுக்கு அணிவித்தற்குரிய திருமாலைக்கு ஆகின்ற மலர்களைக் கொய்து.

இன்றைய சூழலில், ஊர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு அன்று அலர்ந்த மலர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு இது சாத்தியம் இல்லை. கடைகளில் விற்கும் மலர்களைக் கொண்டுதான் செய்யவேண்டி இருக்கும். இவைகள் அன்று அலர்ந்த மலர்கள் அல்ல. வாடியும் வதங்கியும் இருக்கும். வேறு வழியில்லாமல், ஒன்றுக்குப் பத்தாக காசு கொடுத்து வாங்கி வருவோம்.

மலர் இல்லையானால், இறைவனுக்கு அபசாரம் செய்த்தாக ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.

என்ன செய்யலாம்? குழப்பமாக உள்ளது அல்லவா? குழப்பமே வேண்டாம். சிரமம் ஏதும் இல்லாமல் இறைவனை வழிபட வழி உண்டு. எளிமையான வழியை நமது முன்னோர் நமக்கு வகுத்துக் காட்டி உள்ளார்கள். விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா?

மலர்கள் இல்லை என்றால் கலவைப்பட வேண்டாம். ஒரு செடியில் சில மலர்கள் என்றால், பல இலைகள் இருக்கும். இலைகளும் இறையருளால் வந்தவையே. இலைகள் இல்லாமல் மலர்கள் இல்லை. இலைகளை இட்டே வழிபடலாம் என்பதற்குப் பிரமாணமாகப் பின்வரும் பாடல்களைக் காட்டுகின்றேன்.

"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழல் வீரா"

இது அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ் பாடல் ஒன்றில் வருவது.

பத்திரம் என்றால் இலை என்றும் ஒரு பொருள் உண்டு.

அன்பு நெறியில் உறுதியுடன் நிற்கின்ற அடியார்கள்.
அன்புடன் முருகன் திருவடியில் பச்சிலைகளை அருச்சித்தால், அப் பச்சிலைக்கு மெச்சி அருள் புரியும் கருணைத் தெய்வம் முருகன் என்பது இதன் பொருள்.
----------------------------

அடுத்து, எல்லார்க்கும் இயல்கின்ற எளிமையான வழிமுறையைத் திருமூலர் அறிவுறுத்துகின்றார்.

"யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே".  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை இட்டு வணங்கினாலே போதும். கோ பூசை செய்ய வேண்டும் என்பதில்லை. பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் உண்கிற உணவில்,  ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்து யாரையும் வாயாரப் புகழ்ந்துதான் பேசவேண்டும் என்பதில்லை. யாரிடத்திலும் இனிய சொல்லைச் சொன்னாலே போதும்.

---------------------------

"போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு,
     புனல் உண்டு, எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே,
     இணையாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்,தென்
     தோணி புரேசர்,வண்டின்
தாதும் பெறாத அடித் தாமரை
     சென்று சார்வதற்கே".            ---  பட்டினத்தார்.

இதன் பொருள் ---
கிண்ணத்தையும், சொக்கட்டான் காயையும் ஒப்பாக அமையப் பெறாத முலைகளை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டவரும், சீகாழி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்று அடைவதற்கு, இப்போது, நல்ல மலர்களைப் பெறாவிடில், பச்சிலை உண்டு. அந்தப் பச்சிலையும் இல்லையானால், எல்லா இடங்களிலும் நீர் உண்டு. இவை ஏதும் கிடைக்கப் பெறாத போது, மனம் உள்ளதே, அதைக் கொண்டு வழிபட்டால் போதும்.

----------------------------------------------


"பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி"....   ---  பதினோராம் திருமுறை.

இதன் பொருள் ---

அன்பு உள்ள அடியவர்கள், மலர் கிடைக்காதபோது, பச்சிலையை இட்டு வணங்கினாலும், அவர்களுக்குத் தரிசனம் தந்து, இந்தப் பிறவியில் அவர்களுடைய இஷ்டகாமியங்களை அருளிச் செய்வதோடு, மோட்சத்தையும் அருள் புரிகின்ற சிவபெருமானது திருவடி ஒருபுறம் திகழ்ந்து உள்ளது.

-----------------------

"பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத, திரிபு ராந்தக",.. ---  பதினோராம் திருமுறை.
இதன் பொருள் ---
பத்தியால் கிளைத்த உண்மையான அன்போடு, நொச்சி இலையையாவது, கரந்தை என்னும் திருநீற்றுப் பச்சை இலையையாவது கொண்டு பச்சிலையால் அருச்சனை புரிந்து வணங்குகின்ற தொண்டர்கள், கருவில் சேராதபடி (மறுபிறவி இல்லாதபடி) காத்து அருள் புரிகின்ற திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவா, முப்புரங்களை எரித்தவனே!.
-------------------------------

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சி, சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்.       --- கச்சித் திருஅகவல்.

இதன் பொருள் ---

பச்சிலையைக் கிள்ளி அருச்சித்தாலும், அடியார்கள் மீது இரக்கம் கொண்டு, அவர்களுடைய பத்திக்கு மெச்சி, சிவபதம் ஆகிய மோட்சத்தை அனுக்கிரகிக்கின்றவனை, முத்திக்குத் தலைவனை, நித்தியமாய் உள்ள முதற்பொருளை, வானுலகும் மண்ணுலகும் எல்லாமும் படைத்த பெரியவனை, திருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஏகாம்பரநாதனை, தனிமுதலாக உள்ள இறைவனை வணங்கிப் பணியுங்கள்.

----------------------------------------

கல்லால் எறிந்தும், கை வில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான்இனி ஏது செய்வேன்?
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குருமணியே.  --- தாயுமானார்.

இதன் பொருள் ---

உயிர்களைக் கொல்லாமையை விரதமாகக் கொண்டுள்ள அடியவர்கள் காணுமாறு அருட்காட்சி கொடுத்து அருள் புரிகின்ற, முக்கண்களை உடைய குருநாதனே! உன்னைக் கல்லால் எறிந்து வழிபட்டார் சாக்கிய நாயனார். கையில் இருந்த வில்லால் அடித்தான் அருச்சுனன். இனிமையான கனிரசம் துதும்பும் பாடல்களால் துதித்தார்கள் பலர். நல்ல பச்சிலைகளைத் தூவி வழிபட்டனர் சிலர். இவ்வாறு உனது தொண்டர்கள் எல்லாம் ஈடேறினார்கள். (அவர்களிடத்தே உண்மை அன்பு இருந்தது) உன்னிடத்தில் அன்பு இல்லாதவனாகிய நான் இனி என்ன செய்வேன்?

--------------------------

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல் யோக நெறியும் செயேன், அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே.         ---  தாயுமானார்.

இதன் பொருள் ---

         பரம்பொருளே! உயிர்களுக்கு எல்லாவற்றையும் உதவி அருள் புரிகின்ற உன்னை, நான் ஒன்றிலாவது பாவனையாவது செய்து, புல்லையாவது, பச்சிலையையாவது உனது திருவடியில் போட்டு, வணங்கி நிற்கவில்லை. யோகநெறியில் பயிலவில்லை. அருள் நூல்களையும், நீதி நூல்களையும் கற்கவும் இல்லை. நான் எப்படி பரகதியைக் காணமுடியும்?

---------------------------------------

"எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...