கும்பகோணம் --- 0876. தும்பிமுகத்து ஆனை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தும்பி முகத்தானை (கும்பகோணம்)

முருகா!
மாதர் மீது வைத்த மயக்கத்தை மாற்றி அருளவேண்டும்.


தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான


தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
     றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர்

தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
     தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச்

செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
     செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே

சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
     திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ

தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
     சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச்

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
     தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன்

கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
     கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண

கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தும்பிமுகத்து ஆனைபணைக் கொம்பு அதுஎன, தாவிமயல்
     தொந்தம் எனப் பாயும் முலைக் ...... கனமாதர்,

தும்பி, மலர்ச் சோலை,முகில், கங்குல், ருள் காரின் நிறத்
     தொங்கல், மயில் சாயல் எனக் ...... குழல்மேவி,

செம்பொன் உருக்கு ஆனமொழி, சங்கின்ஒளிக் காமநகை,
     செம் கயலைப் போலும் விழிக் ...... கணையாலே,

சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ரமுகப் பாவையர், தித்
     திந்திம் என உற்றுஆடும் அவர்க்கு ...... உழல்வேனோ?

தம்பிவர, சாதிதிருக் கொம்புவர, கூடவனச்
     சந்தமயில் சாய்விலகிச் ...... சிறைபோக,

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தி, அரக்கோர்கள் விழ,
     தங்க நிறத்தாள் சிறையைத் ...... தவிர் மாயோன்

கொம்பு குறிக் காளம், டுத் திந்தம் என உற்று ஆடி,நிரைக்
     கொண்டு வளைத்தே மகிழ் அச் ...... சுதன் ஈண

கொஞ்சு சுகப்பாவை இணைக் கொங்கைதனில் தாவிமகிழ்க்
     கும்பகொணத்மு ஆறுமுகப் ...... பெருமாளே.


பதவுரை

      தம்பி வர --- தம்பியாகிய இலக்குவன் உடன் வரவும்,

     வனச்சந்த மயில் சாய் விலகி --- அழகான மயிலின் சாயலானது அழிய,

     சாதி திருக்கொம்பு கூட வர --- சிறந்த கொம்பு போன்ற இடையினை உடைய சீதாபிராட்டி கூட வரவும்,

     சிறைபோக --- அவள், இராவணனால் சிறை பட்டுப் போ,

      சண்டர் முடித் தூள்கள் பட --- கடுங்கோபம் உடையவர்களான இராவணாதி அரக்கர்களின் மணிமுடிகள் தூளாகிப் போ,

     அரக்கோர்கள் சிந்தி விழ --- அரக்கர்களின் மடிந்து விழப் போர் புரிந்து,

     தங்க நிறத்தாள் சிறையைத் தவிர் மாயோன் --- பொன் நிறம் உடையவளான சீதைதேவியைச் சிறை மீட்டவரான திருமால்,

      கொம்பு குறி --- புல்லாங்குழலைத் தனக்குக் குறியாகக் கொண்டவன்,

     காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி --- மடுவிலே இருந்த காளிங்கன் என்னும் பாம்பின் தலை மீது நடனம் செய்தவன்,

     நிரைக் கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ---  பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவனாகிய கண்ணபிரான்,

      ஈண --- ஈன்றெடுத்த,

     கொஞ்சு சுகப் பாவை --- கொஞ்சும் கிளி போன்றவளாகிய வள்ளி நாயகியின்,

     இணைக் கொங்கை தனில் தாவி மகிழ் --- இரு கொங்கைகளைத் தழுவி மகிழ்ந்து,

     கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே --- கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆறுதிருமுகங்களைக் கொண்ட பெருமையில் மிக்கவரே!

      தும்பி முகத்து ஆனை --- துதிக்கையோடு சேர்ந்த முகத்தை உடைய யானையின்,

     பணைக் கொம்பு அது என --- பருத்த தந்தம் போன்றது என்று,

     தாவி மயல் தொந்தம் எனப் பாயும் --- வெளிப்பட்டு காம மயக்கத்தை உண்டு பண்ணுகின்ற

     முலை கன மாதர் --- முலைகளைக் கொண்டு பெருமையோடு திரிகின்ற விலைமாதர்கள்,

      தும்பி மலர்ச் சோலை --- வண்டுகள் மொய்த்துள்ள மலர்ச் சோலை,

     முகில் --- கரு மேகம்

     கங்குல் இருள் --- இரவின் இருள்,

     காரின் நிற --- கருமை நிறம்  

     தொங்கல் மயில் சாயல் என --- தோகை மயிலின் அழகு என்று சொல்லத்தக்க,

     குழல் மேவி --- கூந்தலை உடையவர்களாய்,

      செம்பொன் உருக்கான மொழி --- அழகிய பொன்னை உருக்கியது போலும் மொழி,

     சங்கின் ஒளிக் காம நகை --- சங்கின் ஒளி போன்று வெண்மையான பற்கள் விளங்கத் தோன்றுகின்ற காமப் புன்னகை,  

     செம்கயலைப் போலும் விழிக் கணையாலே --- சிவந்த மீனைப் போன்று விளங்கும் கண்களாகிய அம்புகளைக் கொண்டு,

      சிந்தை தகர்த்து ஆளும் --- கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆட்கொள்ளுகின்ற,

     இதச் சந்த்ரமுகப் பாவையர் --- இதமான ஒளி வீசும் சந்திரனைப் போலும் முகத்தை உடைய பதுமைகள்,

     தித்திந்திம் என உற்று ஆடும் --- தித்திந்திம் என்ற தாள ஒத்துடன் நடனம் புரிகின்ற

     அவர்க்கு உழல்வேனோ --- அவர்களுக்காக அடியேன் உழலுவது தகுமோ?
  

பொழிப்புரை


         தம்பியாகிய இலக்குவன் உடன் வரவும், அழகான மயிலானது தனது சாயல் அழி, உயர்ந்த கொம்பு போல இடையை உடையவளும், திருமகளுமான சீதாதேவி உடன் வரவும், கானகத்தை அடைந்து வாழுகின்ற காலத்தில், இராவணனால் அவள் சிறை பட்டுப் போ, கடும் கோபம் உடையவர்களான இராவணாதி அரக்கர்களின் மணிமுடிகள் தூளாகிப் போ, அரக்கர்களின் உடம்புகள் சிந்தி விழும்படி போர் புரிந்து, பொன் நிறம் உடையவளான சீதையை சிறை மீட்டவரான திருமால், புல்லாங்குழலைத் தனது குறியாகக் கொண்டவன், மடுவிலே இருந்த காளிங்கன் என்னும் பாம்பின் தலை மீது நடனம் செய்தவன், பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவனாகிய கண்ணபிரான், ஈன்றெடுத்த, கொஞ்சும் கிளி போன்றவளாகிய வள்ளி நாயகியின், இரு கொங்கைகளைத் தழுவி மகிழ்ந்தவரே!

     கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆறுதிருமுகங்களைக் கொண்ட பெருமையில் மிக்கவரே!

         துதிக்கையோடு சேர்ந்த முகத்தை உடைய யானையின், பருத்த தந்தம் போன்றது என்று வெளிப்பட்டு காம மயக்கத்தை உண்டு பண்ணுகின்ற முலைகளைக் கொண்டு பெருமையோடு திரிகின்ற விலைமாதர்கள், வண்டுகள் மொய்த்துள்ள மலர்ச் சோலை, கருமேகம், இரவின் இருள், கருமை நிறம், தோகை மயிலின் அழகு என்று சொல்லத்தக்க, கூந்தலை உடையவர்களாய், அழகிய பொன்னை உருக்கியது போலும் மொழி, சங்கின் ஒளி போன்று வெண்மையான பற்கள் விளங்கத் காம உணர்வு தோன்றப் புன்னகைத்து,  சிவந்த மீனைப் போன்று விளங்கும் கண்களாகிய உம்புகளைக் கொண்டு, கண்டோர் மனத் திண்மையை சிதற வைத்து ஆட்கொள்ளுகின்ற, இதமான ஒளி வீசும் சந்திரனைப் போலும் முகத்தை உடைய பதுமைகள். தாள ஒத்துடன் நடனம் புரிகின்ற அவர்களுக்காக அடியேன் உழலுவது தகுமோ?


விரிவுரை

தும்பி மலர்ச் சோலை, முகில், கங்குல் இருள், காரின் நிறம், தொங்கல் மயில் சாயல் என, குழல் மேவி ---

மரல்க் கொத்துக்களைச் சூடியுள்ளதால், வண்டுகள் மொய்த்துள்ள மலர்ச் சோலை போலவும், அடர்ந்து இருப்பதால் கரு மேகம் போலவும்,  கருத்து இருப்பதால் இரவின் இருள், கருமை நிறம் போலவும், விரிந்து படர்ந்து இருப்பதால் தோகை மயிலின் அழகு என்று சொல்லத்தக்க கூந்தல் என்று இத்தனை அடைகளைக் கொடுத்தார் அடிகளார்.

செம்பொன் உருக்கான மொழி ---

பொன்னை யாரும் விரும்புவார்கள். யாரும் விரும்புகின்ற மொழியினை உடைழவர்கள் விலைமாதர்கள். ஆளுக்கு ஏற்ற விதம் மயக்கும் சொற்களைப் பேசுவார்கள்.

சங்கின் ஒளிக் காம நகை ---

சங்கின் வெண்மை நிறத்தை ஒத்த பற்கள் தெரியக் காட்டி, காம உணர்வு தோன்ற புன்னமை புரிபவர்கள்.

செம்கயலைப் போலும் விழிக் கணையாலே சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ரமுகப் பாவையர் ---

சிவந்த கயல் மீனைப் போன்ற கண்கள். அவை ஆடவரை மயக்கித் தமது வலையில் படுத்தும். மீனானது வலையில் விழுந்து துன்புறும்.  மீன் பொன்ற கண்களால் விலைமாதர் விரிக்கும் வலையில் காமுகர் விழுந்து துன்றுபுவர்.

அம்பு போன்ற கண்களால் துறவியர் மனத்தையும் சிதைக்கும் வல்லமை உடையவர்கள் விலைமாதர்கள்.

மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
     வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், .....முநிவோரும்
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?   --- திருப்புகழ்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்து, ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ......அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு, .....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.   ---  திருப்புகழ்.


விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய
வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....    ---  திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.
                                                                                 ---  கந்தர் அலங்காரம்.

"காய்சின வேல் அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போது, உள்ள மீன் இழந்தார்"     --- திருக்கோவையார்.

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.


காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி ---

யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று, மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்து, பாம்பினுடன் போர்புரிந்து வென்று அப் பாம்பின் படத்தின்மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.

காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.

"லகரமே போல் காளிங்கன் அல் உடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கு அரி"

என்றார் பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய சண்முக கவசத்தில்.

காளிங்க நர்த்தனத்தின் உட்பொருள் இதுதான்.


நிரைக் கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ---  

கண்ணன் பசுக்களை மேய்த்துக் காத்தது
-----
பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான். அவன் நல்ல மேய்ப்பன்.

பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம், அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்து, பருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டி, தக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்து, அவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யாது, நன்மையே செய்வது போல், கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள், ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

"தேங்காதே புக்க இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள், நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள்.

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்" என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான்.  விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.

வேதம் ஓதுவதன் பலன், எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் காக்கவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் நிகழ்ந்தது.

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.


கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே ---

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

கருத்துரை

முருகா! மாதர் மீது வைத்த மயக்கத்தை மாற்றி அருளவேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...