நரை வரும் முன் நல்லறிவு
முதுமை வந்தால் மூன்று
கால்
------
"நரைவரும்
என்று எண்ணி, நல்அறிவாளர்
குழவி
இடத்தே துறந்தார்; --- புரைதீரா
மன்னா
இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு
எழுந்திருப் பார்".
நாலடியார்
என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.
இதன்
பொருள் ---
பழுதற்ற
அறிவினை உடையோர், தமக்கு மூப்பு வரும், அதற்கு
அறிகுறியாக தலைமுடி நரைத்துப் போகும் என்பதை அறிந்து, இளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில்
பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம்
நீங்குதல் இல்லாததும், நிலையில்லாததும் ஆகிய இளமைக்
காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல், இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி,
உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள், முதுமை வந்து, தலைமுடியும்
நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து
தள்ளாடுவார்கள்.
இளமைப் பருவத்தை அறவழியில் பயன்
படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு
மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து.
இளமையில் கருத்து இருந்த தலைமயிர்,
முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன்.
ஆதலால், அவன் "நரன்"
என்ற நாமத்தை உடையவன் ஆயினான்.
மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும்
நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும்
கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும்.
சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும்
செய்கின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர்.
"வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது? இதற்குள் நரைத்து
விட்டதே? தேன் பட்டுவிட்டது
போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால்
நிகழ்கின்றன என்பதை அவர் அறியார்.
"அவனன்றி ஓரணுவும் அசையாது", "அரிது அரிது
மானுடராய்ப் பிறத்தல் அரிது", "எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படி, உயர்ந்த பிறவியாகிய இம் மனிதப்
பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்? மற்ற உயிர்களுக்கு
உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக்
கூடாது? அது ஆண்டவனுக்கு
அருமையும் அல்ல. அதானல் ஆண்டவனுக்கு நட்டமும் இல்லை. சிலர் வெளுத்த
மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச்
செலவழிக்கின்றனர். அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.
மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம்
பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும்
உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று.
எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி
கிடைத்தது.
"பெறுதற்கரிய
பிறவியைப் பெற்றும்
பெறுதற்கரிய
பிரான்அடி பேணார்"
என்பார்
திருமூலர்.
இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப்
பெற்று, பிறவியின் பயனாகிய
பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்து, அவநெறியில் சென்று அலைந்து உழலாவண்ணம், இவ் உடம்பு ஒரு படித்தாக இராது என்றும், முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி
வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூர்தல் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத்
தந்து இருக்கின்றான்.
நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னமாகும்.
நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்து, சன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும்.
அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின்
அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே நரை வந்து விட்டதே? இனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே? கூற்றுவன் பாசக் கயிறும் வருமே? இதுகாறும் என் ஆவி ஈடேற்றத்திற்கு உரிய
சிந்தனையை அறிவில்லாத நான் செய்தேனில்லை. இதுகாறும் உன்னை அடையும் நெறியை
அறிந்தேனில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு
அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.
நரை வந்தும் நல்லுணர்வு இன்றி அலையும் மனிதர்
மிகவும் கீழ்மக்கள் ஆவர். இதுபற்றி,
சங்க
காலத்துப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.
பல்சான் றீரே!
பல்சான் றீரே!
கயல்முள் அன்ன
நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பில்
பல்சான் றீரே!
கணிச்சிக்
கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர்
மாதோ?
நல்லது செய்தலு ஆற்றீர்
ஆயினும்,
அல்லது செய்தலு ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல்லாற்றுப் படூஉ
நெறியும் ஆர்அதுவே. --- புறநானூறு.
இதன் பொருள் ---
பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! பலவான
குணங்கள் அமையப் பெற்றவர்களே! மீன் முள்போல நரைத்து திரைத்த தாடையுடன் கூடி ஒரு
பயனும் இல்லாமல் மூத்துக் கிடக்கும் பலராகிய மூத்தோர்களே.
மழுவாகிய கூர்மையான படையைத் தாங்கிய ஒருவன் (கூற்றுவன்)
இனி விரைவில் வருவான். உங்கள் உயிரைப் பற்றி இழுத்துக் கொண்டு போகும்போது நீங்கள்
வருந்துவீர்கள், வீணே அழுது புலம்புவீர்கள்.
நல்லது செய்தல் இனி உங்கள் தளர்ந்த வயதில்
முடியாமல் இருக்கலாம். ஆயினும் நல்லது அல்லாததாவது செய்யாமல் இருக்க முயலுங்கள்.
அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அந்தப் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது
செய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்.
கருமை நிறம், அழுந்தல் குணம் என்னும் தாமதகுணத்தைக்
குறிக்கும். வெண்மை நிறம் அமைதிக் குணம் என்னும் சத்துவகுணத்தைக் குறிக்கும். வயது
ஏற ஏற, சத்துவகுணம் அடைய வேண்டும் என்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் நமக்கு
நரையைத் தந்து அருளினான்.
தாமதகுணம் மிகுந்து இருந்தால், அத்
தாமதகுணத்தின் அடையாளமான எருமையின் மீது வந்து, உடம்பில் இருந்து உயிரைக்
கூறுபடுத்தி, இயமன் கொண்டு போவான்.
சத்துவகுணம் மிகுந்து இருந்தால், வெண்மை
நிறமுடையதும், இரண்டாயிரம் தந்தங்களை உடையதும் ஆகிய, அயிராவணம் என்னும் வெள்ளை யானையுடன்
வந்து, சிவகணங்கள், நமது உயிரை, உடம்பில் இருந்து கூறுபடுத்தி, சிவலோகத்துக்கு
வெள்ளையானையின் மேல் அமரச் செய்து அழைத்துச் செல்வார்கள்.
ஒரே நாளில் திடீர் என்று எல்லா மயிர்களும்
ஒன்றாக நரைத்து விடுவது இல்லை. ஒவ்வொன்றாக நரைக்கின்றது. அங்ஙனம் நரைக்கும் தோறும்
நல்லுணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மயிர் நரைக்கும்தோறும் நம்மிடம் உள்ள ஒவ்வொரு
தீக்குணத்தையும் விடவேண்டும்.
"நத்துப்
புரை முடியீர்! நல்லுணர்வு சற்றும் இலீர்!" என்று கிழவடிவில் வந்து தன்னை
விரும்பிய முருகவேளைக் குறித்து,
வள்ளியம்மையார்
கூறினார். முடி நரைத்த பிறகாவது நல்லுணர்வு வரவேண்டும்.
No comments:
Post a Comment