கும்பகோணம் --- 0877. பஞ்சுசேர் நிர்த்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பஞ்சுசேர் நிர்த்த (கும்பகோணம்)

முருகா!
விலைமாதர் மயக்கில் ஆழாமல்,
தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு உய்ய அருள்.


தந்தனா தத்தத் ...... தனதான


பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்

பங்கமார் தொக்கிற் ...... படியாமற்

செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்

செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ

பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்

பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா

குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா

கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்,

பங்கம்ஆர் தொக்கில் ...... படியாமல்,

செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழால்,உன்

செம்பொன் ஆர்வத்தைப் ...... பெறுவேனோ?

பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்

பங்கில்வாழ் சத்திக் ...... குமரஈசா!

குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா!

கும்பகோ ணத்தில் ...... பெருமாளே.


பதவுரை

         பஞ்சபாணத்தற் பொரு தேவர் --- ஐந்து மலர்க் கணைகளைக் கொண்ட மன்மதனைச் சுட்டு எரித்த ஞானவொளி வடிவினராகிய சிவபெருமானின் 

         பங்கில் வாழ் சத்திக் குமரேசா --- இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தி ஈன்ற குமாரக் கடவுளே!

         குஞ்சரீ வெற்புத் தனநேயா --- ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானை அம்மையின் மலை போன்ற மார்பை நேசித்தவரே!

         கும்பகோணத்தில் பெருமாளே --- கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர் --- பஞ்சு போன்ற மென்மையான நடனம் ஆடும் பாதங்களை உடைய விலைமாதர்களின்

         பங்கம் ஆர் தொக்கில் படியாமல் --- குற்றம் நிறைந்த பரிச உணர்வில் வீழ்ந்து விடாமல்,

         செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் --- செம்மையான சொற்கள் அமைந்த அழகிய தமிழால் பாடல்களைப் பாடி

       உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ --- உமது மேலான அன்பை அடியேன் பெறுவேனோ?


பொழிப்புரை

     ஐந்து மலர்க் கணைகளைக் கொண்ட மன்மதனைச் சுட்டு எரித்த ஞானவொளி வடிவினராகிய சிவபெருமானின்  இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தி ஈன்ற குமாரக் கடவுளே!

         ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானை அம்மையின் மலை போன்ற மார்பை நேசித்தவரே!

         கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         பஞ்சு போல் மென்மையான நடனம் ஆடும் பாதங்களை உடைய விலைமாதர்களின் குற்றம் நிறைந்த பரிச உணர்வில் வீழ்ந்து விடாமல், செம்மையான சொற்கள் அமைந்த அழகிய தமிழால் பாடல்களைப் பாடி உமது மேலான அன்பை அடியேன் பெறுவேனோ?


விரிவுரை

        
பங்கம் ஆர் தொக்கில் படியாமல் ---

பங்கம் --- குற்றம்.  தொக்கு --- தோல்.

விலைமாதர்களின் பரிசத்தால் உண்டான காம உணர்வில், மதிமயங்கி அழிவுபட நேரும்.

உயிர்கள், ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு, குற்றம் உண்டாக நடந்து அழிகின்ற இயல்பினை உடையவை என்பதை, "கோயில் நான்மணி மாலை" என்னும் நூலில், பட்டினத்தடிகள் காட்டி உள்ளமை உணர்தற்கு உரியது.

"அழுக்கு உடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி,
விளைவாய்த் தூண்டிலின் உள் இரை விழுங்கும்
பன்மீன் போலவும்,
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்,
ஆசையாம் பரிசத்து யானை போலவும்,
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவது உணராது செறுவுழிச் சேர்ந்தனை;
நுண்ணூல் நூற்றுத் தன் அகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோடு, இயற்றுவது அறியாது,
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி,
கறவை நினைந்த கன்று என இரங்கி
மறவா மனத்து மாசுஅறும் அடியார்க்கு
அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என் நினைந்தனையே.

ஆசையே மேலும் மேலும் பல பிறவிகளை ஆக்குவிக்கும். ஆசையானது மனத்தில் முளைக்கும் தோறும், அறிவு என்னும் வாளால் அறுத்து நீக்குதல் அறிவுடைமை ஆகும். அப்போதுதான், பொருள்களின் மேல் வைத்த பற்று நீங்கி, இறைவன் திருவருட் பற்று உண்டாகும்.

ஆசைக்கு அடிமைப்பட்டவன் அகிலலோகத்தினுக்கும் அடிமைப் பட்டவன் ஆவான். ஆசையினைத் தனக்கு அடிமையாகக் கொண்டவன், அகிலலோகத்தையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் ஆவான்.

ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.      --- நீதிவெண்பா.

மீனானது தூண்டில் முள்ளில் கோத்த இரையை, தன்னைப் பிடிக்க வைத்த வஞ்சக இரை என்று எண்ணாமல், அதன் சுவைக்கு ஆசைப்பட்டு, அதனை விழுங்கி இறந்தது.

விட்டில் பூச்சியானது, சுடர் விட்டு எரியும் விளக்கினைக் கண்டு, அது தான் உண்ணும் ஒரு பழம் எனப் பார்வையால் உணர்ந்து, அதனை உண்ண வந்து மடிந்தது. உலகவர் தமது கண்ணால் ஒரு உருவத்தைக் கண்டு மயங்கி, அதனால் கிடைக்கும் இன்பத்தைப் பொய் எனக் கருதாது, மெய் எனக் கருதி அழிவர்.

வேடர்கள் வஞ்சனையால் இசைக்கும் இசையால் மயங்கி வந்து, பறவைகள் தமக்கு விரித்துள்ள வலையில் விழும்.`

யானையானது, தன்னைப் பிடிப்பதற்காக வைத்த பார்வை யானையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டி வந்து, தன்னைப் பிடிப்பதற்காக வைத்த குழியில் விழுந்து துன்பமுறும்.  அதுபோல, உடல் சுகத்தை வேண்டி, வேசையர்கள் இன்பத்தை நாடி, மாந்தர் அழிவர்.

வண்டுகள் மலர் மணத்தை விரும்பிச் சென்று, சில மலர்களை மொய்த்து, அதனால் உயிர் நீங்கும்.

இவ்வாறு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் வழி, பரிசம், சுவை, பார்வை, மணம், ஓசை என்னும் ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு அழிதல் கூடாது, என்பதை அறிவுறுத்த, படுகுழியில் விழுந்த யானையைப் போல, தான் அழிதல் கூடாது என்று அடிகளார் வேண்டுகின்றார். யானையானது படுகுழியில் விழுந்தால், தேற வாய்ப்பு இல்லை.


செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் ---

இது அருணகிரிநாதப் பெருமானாரின் வேண்டுதல். இறைவன் பொருள்சேர் புகழை, அரிய தமிழால் பாடிப் பரவுதல் வேண்டும். எனவே,  "அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க, அரிய தமிழை அளித்த முருகப் பெருமானை" "இரவுபகல் பலகாலும், இயல் இசை முத்தமிழ் ஓதித் திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே" என்று வேண்டினார்.

அருணகிரிநாதப் பெருமானின் இந்த விண்ணப்பம் பல தலங்களிலும் செய்யப்பட்டது. "பகர்தற்கு அரிதான செந்தமிழ் இணையில் சில பாடல் அன்பொடு பயிலப் பால காவியங்களை உணராதே" தான் இருப்பதாக இரங்கினார் திருப்பழநியில்.

இது வயலூரில் சித்தித்தது என்பதை,

பக்கரை, விசித்ர மணி, பொற்கலணை இட்டநடை,
     பட்சி-எனும்  உக்ரதுர ...... கமும், நீபப்
பக்குவ மலர்த்தொடையும், அக்குவடு பட்டு ஒழிய,
     பட்டு உருவ விட்டு அருள் கை ...... வடிவேலும்,

திக்கு அது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு
     சிற்றடியும், முற்றிய பன் ...... இருதோளும்,
செய்ப்பதியும் வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பு என எனக்கு  அருள்கை ...... மறவேனே.

என வரும் திருப்புகழ்ப் பாடலால் அறியலாம். இந்த அனுக்கிரகத்தை மறவாமல், பின்வருமாறு பாடி அருளினார் அருணை வள்ளல்

"பூர், பச்சிம, தட்சிண, உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஒதும் சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை, சிறிது அடியேனும் செப்ப என வைத்து, லகில் பரவத் தெரிசித்த அனுக்ரகம் மறவேனே" என்னும் திருச்செங்கோட்டுத் திருப்புகழில்

திருப்பந்தணை நல்லூரில் "நிதி பொங்கப் பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து, நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்" என்று வேண்டினார்.  திருவிடைமருதுாரில் 'மதுரகவி அடைவு பாடி..வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ" என்றார். கும்பகோணத்தில், "செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ" என்றும், சப்தஸ்தானத் திருப்புகழில் "சலசம் மேவிய பாதம் நினைத்து, முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் தணிய ஓசையில் ஒத எனக்கருள் புரிவாயே" என்றும் வேண்டினார்.

தமிழால் வழிபடும் பேற்றினைத் தமக்கு அருளுமாறு அருணகிரிநாதப் பெருமான் முருப்பெருமானை வேண்டினார். முருகப் பெருமானும் அவ்வறே விரும்பினார். முருகப் பெருமான் மட்டுமா? சிவபெருமானும் அழகு தமிழ்ப் பாடல்கள் மிகுதியாகப் பெற்று, அடியவர்க்கு அருள் புரிந்தவர். திருமால், "பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்றவர்".

முத்தமிழால் போற்றிப் பாடினால் மட்டுமல்ல. முத்தமிழால் வைதாலும் வாழவைப்பவன் முருகப் பெருமான்.

"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி, உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே" என்று வேண்டினார் அருணைவள்ளல். பெருமானும் அவ்வாறே அருள் புரிந்து, என்றும் வாடாத அருள்மணம் வீசும் பாமாலைகளைச் சூடிக்கொண்டவன்.


பஞ்சபாணத்தற் பொரு தேவர் ---

பஞ்ச பாணத்தன் --- மன்மதன். ஐந்து மலர்களைக் கணைகளாகக் கொண்டவன்.

மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகளாக உள்ளவை, தாமரைப்பூ, மாம்பூ, முல்லைப்பூ, அசோகம்பூ, நீலோற்பலப்பூ என்ற மலர்கள்.

தாமரைப்பூ --- நினைப்பு ஊட்டும்;
மாம்பூ --- பசலை நிறம் தரும்;
அசோகம்பூ --- உணர்வை நீக்கும்;
முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்;
நீலோற்பலப்பூ --- கொல்லும்.

தலைவனை நாடிய தலைவிக்கு அந் நினைவை அதிகப்படுத்துவது மன்மதன் விடுகின்ற தாமரைப் பூங்கணை.

நினைக்கும் அரவிந்தம், நீள்பசலை மாம்பூ,
அனைத்துணர்வு நீக்கும் அசோகம், --- வனத்தில்உறு
முல்லை இடைகாட்டும், மாதே முழுநீலம்
கொல்லும் மதன் அம்பின் குணம்       --- இரத்தினச் சுருக்கம்.


பஞ்சபாணத்தனை சிவபெருமான் எரித்த வரலாறு

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி,
"மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 

குஞ்சரீ வெற்புத் தனநேயா ---

குஞ்சரம் --- யானை.

இந்திரனின் ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்டவர் தேவயானை அம்மை.

வெற்புத் தனம் --- மலையை ஒத்த மார்பகம்.

கும்பகோணத்தில் பெருமாளே ---

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.


கருத்துரை

முருகா! விலைமாதர் மயக்கில் ஆழாமல், தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு உய்ய அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...