மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு





பொன்னும் பொருளும் நிறைய இருந்தால்தான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும் என்று பலரும் கருதுகின்றனர்.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மனதைச் செம்மையாக வைத்துக் கொண்டாலே போதும்.

ஒருவருடைய மனநிலை பாதிப்பு அடைவது அவருடைய எண்ணங்களால் தான்.

ஒருவருடைய உள்ளம் உடைவது அவருடைய மன உணர்வுகளாலே தான்.

ஒருவர் செயலே அவரது வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்களுக்குக் காரணம்.

ஒருவரது எண்ணங்களே அவர் சலிப்பு அடைவதற்குக் காரணம்.

ஒருவருடைய எண்ணத்தில் உருவாகும் கோபமே, அவரை ஆத்திரம் அடையச் செய்வதும், அதனால் அறிவு இழக்கச் செய்வதும்.

அவமானம் உண்டானது என்று நினைத்தால், அதற்கான அருவருப்பான வடிவத்தைக் கொடுத்தது, அவமானப்பட்டவருடைய மனமே.

நீங்கள் உங்கள் மனதிற்குள் யாரையாவது திட்டவோ சபிக்கவோ செய்தால், அது அவரைச் சிறிதும் பாதிக்காது. உங்கள் மனம்தான் பாதிக்கப்படும்.

அவரவர் செய்த பாவம், புண்ணியம் அவரவர்க்குப் பலனைத் தந்தே தீரும். கேடு செய்தவர்க்கு கேடு தன்னாலே வரும். நன்மை செய்தவர்க்கு நன்மை தன்னாலே வரும். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

உங்கள் மனம் தான் நல்ல எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் உருவாக்க வல்லது.

உங்கள் மனத்தைக் கெடாமல் வைத்துக் கொள்வதற்கு, பொன்னோ பொருளோ தேவையில்லை.

உங்கள் எண்ணங்களுக்குத் தலைவனும் நீங்கள் தான்.  அடிமையும் நீங்கள் தான். எண்ணங்களை ஆட்கொண்டால் உங்களுக்கு மகிழ்ச்சி. எண்ணங்களுக்கு அடிமை ஆனால் துன்பம்.

ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் குற்றம் அற்ற நல்ல அடிமை ஆவான். உலகத்தில் உள்ள யாவர்க்கும் என்பது குறிப்பு. ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே, உலகத்தைத் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...