அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தனுநுதல் வெயர்வுஎழ
(திரிபுவனம்)
முருகா!
திருவடி அருள்வாய்
தனதன
தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல்
வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் ......
அன்புபேசித்
தழுவிய
மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ......
தொண்டையூறல்
கனவிலு
நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ......
கின்றதோதான்
கதிபெற
விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ......
தம்பெறேனோ
முனைமலி
குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ......
அம்புராசி
முறையிட
முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ......
டங்கல்வீரா
அனுபவ
மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ......
கொண்டநாதா
அகிலமு
மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள்
...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
தனுநுதல்
வெயர்வு எழ, விழி குழி தர, வளை
சத்திக்க, சில தித்திக் கப்படும் ...... அன்புபேசி,
தழுவிய
மகளிர் தம் முகிழ்முலை உரமிசை
தைக்க, சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டைஊறல்,
கனவிலும்
நுகர்தரு கலவியின் வலை இடை
கட்டுப் பட்டு, உயிர் தட்டுப் பட்டு அழி ...... கின்றதோ
தான்?
கதிபெற, விதிஇலி, மதிஇலி, உனது இரு
கச்சு உற்றச் சிறு செச்சைப் பத்ம ...... பதம்பெறேனோ?
முனை
மலி குலிசை தன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ர தனத்துக்கு இச்சித! ......
அம்புராசி
முறையிட, முதுநிசி சரர்திரள் முதுகிட,
முட்டப் பொட்டு எழ வெட்டி, குத்தும் ...... மடங்கல்வீரா!
அனுபவம்
அளிதரு நிகழ்தரும் ஒருபொருள்
அப்பர்க்கு அப்படி ஒப்பித்து, அர்ச்சனை ...... கொண்டநாதா!
அகிலமும்
அழியினும் நிலைபெறு திரிபுவ-
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள்
...... தம்பிரானே.
பதவுரை
முனை மலி குலிசை தன் --- கூர்முனையை உடைய
வச்சிராயுதன் ஆகிய இந்திரனின் மகளான தேவயானை அம்மையின்,
ம்ருகமத --- மான்மதம் என்னும் கத்தூரியைப்
பூசிக்கொண்டுள்ளதும்,
புளகித --- புளகாங்கிதம் தருவதுமான,
முத்தச் சித்ர தனத்துக்கு இச்சித --- முத்து
மாலைகளை அணிந்துள்ள அழகிய மார்பங்கள் மீது
இச்சை கொண்டவரே!
அம்புராசி முறை இட --- கடல்
"ஓ" என்று முறையிட்டு அலற,
முது நிசிசரர் திரள் முதுகு இட --- வலிமை
மிக்க அரக்கர்கள் கூட்டாமானது போர்க்களத்தில் புறமுதுகு இட்டு ஓட,
முட்டப் பொட்டு எழ --- அவர்களை எல்லாம்
முழுவதுமாக அழிந்து பொடியாகும்படி,
வெட்டிக் குத்தும் --- வெட்டிக்
குத்திய
அடங்கல் வீரா --- வீரத்தில் சிங்கம் போன்றவரே!
அனுபவம் அளிதரு
நிகழ்தரும்
--- ஞானானுபவத்தை அன்போடு அருளவல்லதாகிய,
ஒரு பொருள் --- ஒப்பற்ற ஓங்காரத்தின்
உட்பொருளை,
அப்பர்க்கு --- சிவபெருமானுக்கு,
அப்படி ஒப்பித்து --- ஓதவேண்டிய முறையில்
ஓதி அருள் புரிந்து,
அர்ச்சனை கொண்ட நாதா --- அவரால் வழிபடப்பெற்ற
தலைவரே!
அகிலமும் அழியினும்
நிலைபெறு திரிபுவனத்து --- உலகில் உள்ள அனைத்தும் அழிந்தாலும், அழியாது நிலைபெற்று இருக்கக்கூடிய திரிபுவனம்
என்னும் திருத்தலத்தில்,
பொற்பு உறு சித்திச் சித்தர்கள்
தம்பிரானே --- பொலிவு மிக்க சித்திகள் கைவரப் பெற்ற சித்தர்கள் போற்றுகின்ற தனிப்பெருந்தலைவரே!
தநுநுதல் வெயர்வு எழ --- வில்லைப் போன்ற நெற்றியில்
வியர்வை துளிர்க்க,
விழி குழிதர --- கண்கள் குவிய,
வளை சத்திக்க --- கைவளையல்கள் ஒலி எழுப்ப,
சில தித்திக்கப்படும் அன்பு பேசித் தழுவிய
--- சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசித் தழுவுகின்ற,
மகளிர் தம்
முகிழ்முலை உரம் மிசை தைக்க --- விலைமாதர்களின் அரும்பு போன்ற முலைகள் எனது மார்பில்
பொருந்த அணைத்து,
சர்க்கரை கைக்கப்பட்டன தொண்டை ஊறல் ---
சருக்கரையும் கசக்கும்படியான இனிமையைத் தருகின்ற அவர்களது வாயில் உறும் எச்சிலைப் பருகி,
கனவிலு(ம்) நுகர்தரு --- (அதே
நினைவாக இருப்பதால்,) கனவிலும் அதைப் பருகுவதான இன்பத்தை அனுபவித்து,
கலவியின் வலைஇடை கட்டுப்பட்டு --- அவர்களோடு
கலந்து மகிழுகின்ற வலையில் அகப்பட்டுக் கிடந்து,
உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் ---
எனது உயிரானது சிக்குப்பட்டு அழிந்து போதல் தகுமோ?
கதிபெற விதிஇலி --- நற்கதியைப் பெறுவதற்கான
நல்லூழ் இல்லாதவன்,
மதிஇலி --- அறிவில்லாதவன் ஆகிய அடியேன்,
உனது இரு கச்சு உற்றச் சிறு செச்சைப் பதம்
பெறேனோ --- பெரிய அரைப் பட்டிகையை அணிந்துள்ள, தேவரீருடைய வெட்சி
மலர்கள் சூடப்பட்டுள்ள திருவடிகளை அடியேன் பெறமாட்டேனா? (பெறுமாறு அருள் புரியவேண்டும்)
பொழிப்புரை
கூர்முனையை உடைய வச்சிராயுதன் ஆகிய இந்திரனின்
மகளான
தேவயானை அம்மையின், மான்மதம் என்னும் கத்தூரியைப்
பூசிக்கொண்டுள்ளதும், புளகாங்கிதம் தருவதுமான, முத்து
மாலைகளை அணிந்துள்ள அழகிய மார்பங்கள் மீது
இச்சை கொண்டவரே!
கடல் "ஓ" என்று முறையிட்டு அலற, வலிமை மிக்க அரக்கர்கள் கூட்டாமானது போர்க்களத்தில்
புறமுதுகு இட்டு ஓட, அவர்களை
எல்லாம் முழுவதுமாக அழிந்து பொடியாகும்படி, வெட்டிக் குத்திய, வீரத்தில் சிங்கம் போன்றவரே!
ஞானானுபவத்தை அன்போடு அருளவல்லதாகிய, ஒப்பற்ற ஓங்காரத்தின் உட்பொருளை, சிவபெருமானுக்கு, ஓதவேண்டிய முறையில் ஓதி அருள் புரிந்து, அவரால் வழிபடப்பெற்ற தலைவரே!
உலகில் உள்ள அனைத்தும் அழிந்தாலும், அழியாது நிலைபெற்று இருக்கக்கூடிய திரிபுவனம்
என்னும் திருத்தலத்தில்,
பொலிவு
மிக்க சித்திகள் கைவரப் பெற்ற சித்தர்கள் போற்றுகின்ற தனிப்பெருந்தலைவரே!
வில்லைப் போன்ற நெற்றியில் வியர்வை துளிர்க்க, கண்கள்
குவிய, கைவளையல்கள் ஒலி எழுப்ப, சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசித் தழுவுகின்ற, விலைமாதர்களின்
அரும்பு போன்ற முலைகள் எனது மார்பில் பொருந்த அணைத்து, சருக்கரையும் கசக்கும்படியான இனிமையைத் தருகின்ற
அவர்களது வாயில் உறும் எச்சிலைப் பருகி, அதே
நினைவாக இருப்பதால், கனவிலும் அதைப் பருகுவதான இன்பத்தை அனுபவித்து, அவர்களோடு கலந்து மகிழுகின்ற வலையில் அகப்பட்டுக்
கிடந்து, எனது உயிரானது சிக்குப்பட்டு
அழிந்து போதல் தகுமோ?
நற்கதியைப் பெறுவதற்கான நல்லூழ் இல்லாதவனும், அறிவில்லாதவனும் ஆகிய அடியேன், பெரிய அரைப் பட்டிகையை அணிந்துள்ள, தேவரீருடைய வெட்சி
மலர்கள் சூடப்பட்டுள்ள திருவடிகளை அடியேன் பெறமாட்டேனா? (பெறுமாறு அருள் புரியவேண்டும்)
விரிவுரை
தநுநுதல்
வெயர்வு எழ
---
தனு
--- வில். நுதல் --- நெற்றி.
வில்லைப்
போன்ற நெற்றியினை உடைய விலைமாதர்கள்,
விழி
குழிதர
---
அணைத்து
மகிழும் போது கண்கள் குவிந்து கொள்ளும்.
மகளிர்
தம் முகிழ்முலை உரம் மிசை தைக்க ---
உரம்
--- மார்பு.
முனை
மலி குலிசை தன் ---
குலிசம்
--- வச்சிராயுதம்.
வச்சிராயுதம்
கொண்ட இந்திரனின் மகளாக, அவனது தெய்வீகத் தன்மை பொருந்திய அயிராவதம் என்னும்
யானையால் வளர்க்கப்பட்டவர் தேவயானை அம்மையார்.
ம்ருகமத ---
மிருகம்
என்னும் மானின் உடம்பில் இருந்து கிடைக்கும் ஒரு நறுமணப் பொருள், கத்தூரி எனப்படும் மிருகமதம்.
அனுபவம்
அளிதரு நிகழ்தரும் ஒரு பொருள், அப்பர்க்கு
அப்படி ஒப்பித்து, அர்ச்சனை கொண்ட நாதா ---
திருக்கயிலை
மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள்
அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை இழைத்து
பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது
விழித்த பிரமதேவன அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே
மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.
பின்னர்
ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல்மேனியாரைத்
தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று
எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! உனது பெருமையை உலகம் எவ்வாறு
அறியும்? மறைகளால் மனத்தால்
வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும்
உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல்
பூத்த முகத்தினராய் ஆறுமுகப் பரம்பொருளை நோக்கி,
“அமரர் வணங்குங் குமர
நாயக! அறியாமையின் காரணமாகவாவது,
உரிமைக்
குறித்தாவது நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர்
அறிந்து, ஒரு பிழையும்
செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர்.
அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார்.
ஆதலால் நான்முகனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன்.
அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினை. எல்லார்க்கும் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று
எம்பிரானார் இனிது கூறினர். எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்"
என்னும் ஒப்பற்ற ஓர் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன், உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல்
எவ்வாறு? அங்ஙனம்
அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினாலன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.
அரனார்
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத
உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும்
தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச்
சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம்
தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று, உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய
ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச்
சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம்
செய்ததாலேயே அத் தணிகைமலை "கணிகவெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,
கதிர் வேல் அண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல்
எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி
நின்று, பிரணவ உபதேசம்
பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை
உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து
பிரணவோபதேசம் பெற்றனர்.
எதிர்
உறும் குமரனை இருந்தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி எனமுது
தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனார்
ஓதாய்
என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக! உயர்பரம
சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
--- (கொடியனைய) திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது ஆகும். உண்மையிலே
சிவபெருமான் உணர, முருகன் உபதேசித்தார்
என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்
தனக்குத்
தானே ஒருதாவரு குருவுமாய்
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான் தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
இறையருளாகிய
திருவருளைப் பெறவேண்டுமானால், குருவருள் இன்றி இயலாது. என்பதால் தான், எந்த வழிபாட்டு
நிகழ்வின்போதும், குருவைத் துதித்த பிறகு தான், அதற்குரிய செயல்கள்
நிகழும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனைப் பட்டினத்தடிகள் தமது
நெஞ்சினுக்கு மிகவும் வலியுறுத்திப் புலம்புமாறு காண்க.
"ஊன்பொதிந்த
காயம்,
உளைந்த
புழுக்கூட்டைத்
தான்
சுமந்தது அல்லால், நீ சற்குருவைப் போற்றாமல்
கான்
பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி,
மீன்
பறந்தால் போலே விசாரம் உற்றாய் நெஞ்சமே!"
"அற்புதமாய்
இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப்
போற்றித் தவம் பெற்று வாழாமல்,
உற்பத்தி, செம்பொன் உடைமை, பெரு வாழ்வை
நம்பி,
சற்பத்தின்
வாயில் தவளை போல் ஆனேனே".
"முன்னம்
நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றி,
பொன்னும்
பணிதிகளும் பூவையும் அங்கே வருமோ?
தன்னைச்
சதமாகச் சற்குருவைப் போற்றாமல்,
கண்
அற்ற அந்தகன் போல் காட்சி உற்றாய் நெஞ்சமே!"
அகிலமும்
அழியினும் நிலைபெறு திரிபுவனம் ---
உலகில்
உள்ள உயிர்கள் உயிர் அல்லாத பொருள்கள் ஆகிய எவை அழிந்தாலும், இறைவன் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் எப்போதும்
பொலிவோடு விளங்கும்.
பெரிய
பெரிய மன்னர்கள் வாழ்ந்திருந்த கோட்டைகள், கொத்தளங்கள் யாவும் இப்போது அவை இருந்த இடம் தெரியாமல்
அழிந்து போயின. ஆயினும், அவரகள் எழுப்பிய திருக்கோயில்கள் காலத்தால் அழியாது
இன்னமும் நிலைபெற்று உள்ளன.
அருணகிரிநாதப்
பெருமானால் "திரிபுவனம்" என்று குறிப்பிடப்பட்ட திருத்தலம், இன்று "திருபுனவம்" என்ற வழங்கப்படுகின்றது.
இது ஒரு தேவார வைப்புத் தலம் ஆகும்.
கும்பகோணத்திற்கும்
திருவிடைமருதூருக்கும் இடையில் உள்ளது. பெரிய
திருச்சுற்றுடன் அமைந்துள்ள இத் திருக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது.
கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின்
உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் திருக் கோயிலில் உள்ளதைப் போன்று வேலைப்பாடுகளுடன்
உள்ளன.
பிரகலாதன், திருமால், தேவர்கள், மக்கள் முதலானவர்களுக்கு விளைந்த கம்பத்தினை
(நடுக்கத்தை) நீக்கியருளியதால் இத்தல இறைவன் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். தமிழில்
"நடுக்கம் தீர்த்த பெருமான்" என்பது பொருள். இத்தலத்து இறைவி அறம்வளர்த்த
நாயகி என்ற திருப்பெயருடன் விளங்குகின்றாள்.
இங்குள்ள
சரபேசுவரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
கருத்துரை
முருகா! திருவடி அருள்வாய்
No comments:
Post a Comment