திருவள்ளுவர் மாண்பு

 

 

திருவள்ளுவர் மாண்பு

-----

 

     திருவள்ளுவ நாயனாரை, மெத்தப் படித்த சிலர், "வள்ளுவன்" என்றும், அவர் அருளிச் செய்த திருக்குறளை, "குறள்" என்றும் வாய் கூசாமல் சொல்லி வருகின்றனர்.

 

     சாதாரண மனிதர் ஒருவரையே "அவன்" "இவன்" என்றால் சினம் வருகின்றது. மரியாதை தெரியவில்லை என்று சொல்லுகின்றோம்.

 

     நாம் உய்ய வழி காட்டிய நாயனாரை, மரியாதைக் குறைவாகப் பேசலாமா? சிந்தியுங்கள்.

 

     திருவள்ளுவ மாலையில், அசரீரி என்ற தலைப்பில் ஒரு வெண்பா உள்ளது.

 

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு

உருத்தகு நல்பலகை ஒக்க -- இருக்க

உருத்திர சன்மர் என உரைத்து,வானில்

ஒருக்க ஓ என்றது ஓர் சொல்.

 

இதன் பொருள் ---

 

     அருட்செல்வத்தையும், அதற்குத் தக்க தெய்வத் தன்மையையும் உடைய திருவள்ளுவரோடு, அவர் இருத்தற்குத் தனது உருவத்தினாலே தக்க நல்ல சங்கப் பலகையிடத்து, உருத்திரசன்மர் ஒருவரே ஒப்ப இருக்க என்று கூறி, ஆகாயத்தில் இருந்து அவ் இடத்தில் உள்ள புலவர்களின் கருத்தை எல்லாம் ஒற்றுமை செய்யும்படி ஒரு வாக்கியம் ஓ என்று இரைந்து எழுந்தது.

 

     திரு என்பது அறிவு உடையாரால் விரும்பப்படும் தன்மை. வள்ளுவர் --- ஈகை உடையார். (வண்கை - ஈகை) வேத,புராண இதிகாசங்களில் இலைமறை காய்போல் இருந்த உண்மைகளை எல்லாம். தமிழ் மக்கள் எளிதில் அறிந்து உய்யுமாறு, தொகுத்து வழங்கிய வள்ளன்மை உடையவர் என்ற காரணம் பற்றி திருவள்ளுவர் எனப் பெயர் வழங்கல் ஆயிற்று.

 

     திருக்குறளை அரங்கேற்றத் தொடங்கிய காலத்து, தெய்வப் புலவராகிய அவரோடு ஒப்ப இருந்து கேட்பதற்குத் தகுதி உடையார் யார் என யாவரும் எண்ணி நின்ற போது, இந்த அசரீரி வாக்கியம் பிறந்தது. அப்போது, அங்கு நின்று கேட்ட புலவர்களுள் ஒருவர் அதனை இவ்வாறு பாடலாகச் செய்தார் என்று சொல்லப்படுகின்றது.

 

     திருவள்ளுவரோடு ஒப்ப இருக்கும் தகுதி பெற்றவர், முருகப் பெருமானின் திரு அவதாரமாய் வணிகர் மரபில் தோன்றிய உருத்திரசன்மர் என்பதால், திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது சாலப் பொருத்தமானதே ஆகும்.

 

     மேலும், வேதா என்னும் பிரமனே, தன் உருவை மறைத்து, திருவள்ளுவராக அவதரித்து, நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களின் திறத்தை, அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பொருளாகத் தமிழில் தந்து அருளிய திருக்குறள் என்னும் திருமுறையை எனது தலையானது வணங்கட்டும், வாயானது துதிக்கட்டும், மனமானது தியானிக்கட்டும், செவியானது கேட்கட்டும் என்று, உக்கிரப் பெருவழுதியார் என்னும் புலவர் பாடியருளிய பாடலொன்றும் திருவள்ளுவமாலையில் உள்ளது.

 

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான் மறைந்து, வள்ளுவனாய்த் தந்து உரைத்த ---  நூல்முறையை

வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நல்நெஞ்சம்

சிந்திக்க, கேட்க செவி.     

 

இதனாலும், திருவள்ளுவர் தெய்வப் புலவரே என்பது தெளிவாகும்.

 

     காரிக் கண்ணனார் என்னும் புலவர் பாடிய பாடலொன்றும், வேதப் பொருள் விளக்கம் பெற, தாமரையோன் ஆகிய பிரமனே திருவள்ளுவராக அவதாரித்து, 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளை உலகிற்குத் தந்தான் என்றும் தெரிவிக்கின்றது.

 

ஐயாறும் நூறும் அதிகாரம் மூன்றுமா

மெய் ஆய வேதப் பொருள் விளங்க - பொய்யாது

தந்தான் உலகிற்குத் தான், வள்ளுவன் ஆகி,

அம் தாமரை மேல் அயன்.

 

     திருமால் வாமனனாக அவதரித்து, தனது இரண்டு திருவடிகளால் உலகம் அனைத்தையும் ஒருங்கே அளந்தான். மெய்யறிவினை உடைய திருவள்ளுவரும், தாம் அருளிய குறள் வெண்பாக்களின் இரண்டு சிறிய அடிகளால், இந்த உலகத்தில் உள்ளோர் நினைந்த எல்லாவற்றையும் அளந்தார்.

 

     பரணர் என்னும் புலவர் பெருமான் திருவள்ளுவ மாலையில் பாடியருளிய பாடல் இவ்வாறு தெரிவிக்கின்றது.

 

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால் 

ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் --- வால் அறிவின் 

வள்ளுவரும், தம் குறள் வெண்பா அடியால், வையத்தார் 

உள்ளுவ எல்லாம் அளந்தார்.

 

     இதில் வியப்பு என்னவென்றால், திருமால் தன்னைத் தானே குறள் வடிவாக்கிக் கொண்டு, பின்பு அந்நிலையில் நில்லாது வளர்ந்து, தனது பேரடிகளால் அளவுபட்ட உலகத்தை அளந்தார். திருவள்ளுவர் தனது நிலையில் மாறாமலேயே, தன்னில் இருந்து திருக்குறள் வெண்பாக்களை உண்டாக்கினார். அது தன் நிலையிலேயே நின்று, அதன் சிற்றடிகளால், உலகத்தாரின் அளவு படாத எண்ணங்களை எல்லாம் இன்னமும் அளந்து காட்டிக் கொண்டு இருக்கின்றது.

 

     திருவள்ளுவரது திருவாயினின்றும் தோன்றிய திருக்குறளின் பெருமையைச் சொல்லப் புகில், அது ஓதுவதற்கு எளிதாக இனிமையான நல்ல சொற்களை உடையதாகவும், அறியப்படுதற்கு அரிய பொருள்களை உடையதால் ஆழம் உடையதாகியும், வேதப் பொருளை விளக்குவதாக உள்ளதால் மேலானதாகவும், பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற நுண்ணளிவு உடையவர்கள் நினைக்கும் போதும், நினைக்கும் போதும், உள்ளத்தை உருக்குவதாகவும் உள்ளது என்று மாங்குடி மருதனார் என்னும் புலவர், திருக்குறளின் சிறப்பை வியந்து ஓதி உள்ளார்

 

ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதாகி,

வேதப் பொருளாய் மிக விளங்கி -- தீது அற்றோர்

உள்ளுதொறும், உள்ளுதொறும், உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.         

 

     எந்தப் பொருளானாலும், யாரும் இயல்பாக அறிந்து தெளியும்படி, திருவள்ளுவர் சொல்லால் வரைந்த திருக்குறளுக்கு உவமானமாக, பழமையான வேதங்கள், மனுநூல், பாரதம், இராமாயணம் ஆகியவையே ஆகும் என்பார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

 

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்

செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் -- முப்பாற்கு,

பாரதம், சீராமகதை, மனு, பண்டை மறை

நேர்வன மற்று இல்லை நிகர். 

 

     பூவிலே சிறந்தது தாமரை. பொன்னிலே உயர்ந்தது சாம்பூநதம். பசுக்களிலே சிறந்தது காமதேனு. யானைகளிலே சிறந்தது அயிராவதம். தேவர்களுக்குள்ளே திருமால். அதுபோல, நூல்களுக்குள்ளே திருக்குறளே சிறந்தது என்று அறிவுடையோர் சொல்லுவர் என்கின்றார் கவிராசப் பெருந்தேவனார். 

             

பூவிற்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்பூநதம்,

ஆவிற்கு அருமுனி ஆ, யானைக்கு அமரர் உம்பல்,

தேவில் திருமால், எனச் சிறந்தது என்பவே

பாவிற்கு வள்ளுவர் வெண்பா.

                      

     ஆகவே, இத்தகு அருமை பெருமைகளை உடைய திருக்குறளை ஓதாத நாவுக்கு, இன்சொல் சொல்லி வாழ்தல் இல்லை. மனத்திற்கு சொற்களின் சுவையை அறிதல் உண்டாகாது. இதைத் தவிர உடம்புக்கு நல்ல செயலும் இல்லை என நினைத்து, அப்படிப்பட்டவரிடம் திருமகள் சேரமாட்டாள் என்கிறது இன்னொரு திருவள்ளுவமாலைப் பாடல்.

 

தேவில் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்

பாவில் சிறந்திடு முப்பால் பகரார் -- நாவிற்கு

உயல் இல்லை, சொல்சுவை ஓர்வு இல்லை, மற்றும்

செயல் இல்லை என்னும் திரு. ---  உறையூர் முதுகூற்றனார்.

 

வடமொழியிலே வேதம் உள்ளது. தமிழிலே திருவள்ளுவனார் அருளிய திருக்குறள் உள்ளது.

 

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின் இது

சீரியது என்று ஒன்றைச் செப்ப அரிதால் --- ஆரியம்

வேதம் உடைத்து, தமிழ் திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து.         ---- வண்ணக்கஞ் சாத்தனார்.

 

     புற இருளை நீக்க வேண்டுமானால், தகளி, திரி, நெய், தண்டு ஆகிய பொருள்களைக் கொண்டு விளக்கினை ஏற்ற வேண்டும். திருவள்ளுவர், இந்த உலகில் வாழ்வோரின் அக இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கும் பொருட்டு, அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும், இன்பத்தை நெய்யாகவும், செம்மையான சொல்லை நெருப்பாகவும், திருக்குறள் பாவைத் தண்டு ஆகவும் கொண்டு, உலகத்தில் வாழும் மனிதர்களின் மனத்துள்ள அஞ்ஞானமாகிய இருளை நீக்கும் அருள்ஞான விளக்கினை ஏற்றினார் என்று நப்பாலத்தனார் என்னும் புலவர் போற்றிப் பாடியுள்ளார்.

 

அறம் தகளி, ஆன்ற பொருள் திரி, இன்பு

சிறந்த நெய், செஞ்சொல் தீத் தண்டு ---  குறும்பாவா

வள்ளுவனார் ஏற்றினார், வையத்து வாழ்வார்கள்

உள்இருள் நீக்கும் விளக்கு.

 

     அதனால், திருவள்ளுவ தேவர் அருளிய திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிபு என்னும், மூவர் அருளிய தமிழ்த் திருமுறைகளும், முனிபுங்கவர் ஆகிய மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும் ஆகிய இந்த அருள் நூல்கள் பொருளால் மாறுபடாதவை என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.         

        

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.     

 

     "தண் தமிழின் மேலாம் தரம்" என்று ஆறு நூல்களை வரிசைப்படுத்தி அருளினார் உமாபதிசிவம் என்னும் அருளாளர். அந்த வரிசையில் முதலில் வருவது திருக்குறளே. மேலும், ஒரு மூல நூலுக்கு வரையப்பட்ட உரை நூலும் அந்த வரிசையில் வருகிறது என்றால் அந்த நூலின் சிறப்பு விளங்கும்.  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வகுத்த உரையும் இதில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

        

வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே

தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை-ஒள்ளியசீர்த்

தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாந் தரம்.    

 

     மாமூலனார் என்னும் புலவர் திருவள்ளுவரை, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவர் என்கிறார். திருவள்ளுவர் தெய்வப் புலவர்.

அப் பெருமானை 'வள்ளுவன்' என்று சொல்பவனை, பேதை என்கிறார் அவர். அத்தகேயோரின் சொல்லை அறிவு உடையார் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

 

     ஆம். சிலர், வாய் கூசாமல், 'வள்ளுவன் சொன்னான்', 'வள்ளுவன் கூறினான்' 'வள்ளுவன் எழுதினான்' என்று முழங்குகின்றார்கள். இது பேதைமை தானே. வெறுமனே 'குறள்' என்று சொல்லுவதும் எழுதுவதும் அறியாமை தானே.

 

---   'திருவள்ளுவ தேவர்' என்று வாயாரச் சொல்ல வேண்டும். 

---   'திருவள்ளுவர்' என்றும், 'திருக்குறள்' என்றும் வழங்கவேண்டும்.     

 

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந் நான்கின்

திறம் தெரிந்து செப்பிய தேவை -- மறந்தேயும்

வள்ளுவன் என்பான் ஒரு பேதை, அவன் வாய்ச்சொல்

கொள்ளார் அறிவு உடையார்.  

 

அருட்புலவர்கள் திருவள்ளுவரைப் போற்றுவதும், திருக்குறளை வியந்து ஒதுவதும்  , எண்ணுதற்கு உரியது.

 

     "வாக்கிற்கு அருணகிரி" என்று போற்றப்படும், அருணகிரிநாதப் பெருமான் திருவள்ளுவரை, "திருவள்ளுவ தேவர்" என்று தமது திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் காட்டி உள்ளார் என்பது மேலும் சிறப்புக்கு உரியது.

 

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள்

     வியன் இன் உரை பானுவாய் வியந்து உரை

     பழுதில் பெரு சீலநூல்களும், தெரி ...... சங்கபாடல்

 

பனுவல், கதை, காவ்யம் ஆம் எண் எண்கலை

     திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற

     பழமொழியை ஓதியே உணர்ந்து,பல் ......சந்தமாலை,

 

மடல்,பரணி, கோவையார், கலம்பகம்

     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,

     வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு

 

மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,

     விருதுகொடி, தாள மேள தண்டிகை,

     வரிசையொடு உலாவும் மால் அகந்தை ....தவிர்ந்திடாதோ?

 

என்று திருச்செந்தூர்த் திருப்புகழில் பாடி உள்ளார்.

 

திருக்குறளை, "திருவள்ளுவ தேவர் வாய்மை" என்று அருணகிரிநாதர் சிறப்பித்து உள்ளது அற்புதம்.

 

     இத் திருப்புகழுக்கு உரை வகுத்த, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பின் வருமாறு கூறுகின்றார்.

 

"மனிதர்களில் விலங்கு உண்டு;

மனிதர்களில் மனிதர் உண்டு,

மனிதர்களில் தேவர் உண்டு;

ஆசையுள்ளம் படைத்தவன் விலங்கு.

அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன்.

அருள் உள்ளம் படைத்தவன் தேவன்".

 

     "திருவள்ளுவர் அருள் உள்ளம் படைத்தவர். 1330 திருக்குறள் அமுதத்தால் உலகில் உள்ள மன்பதைகளை வாழச் செய்தார். அதனால் அவர் மனித உலகில் தேவர்.

 

     திருவள்ளுவர் பாடியருளிய திருக்குறள் எப்போதும் மாறுபாடு-அழிவு இல்லாத ஒரு பெரிய சத்தியமறை. பொய்யா மொழி எனப்படும். அதற்கு ஈடு அதுதான். அது போன்ற ஒரு நூல் எந்த நாட்டிலும் எம்மொழியிலும் இல்லை என்பது உறுதி. சுருங்கிய சொற்களால் விரிந்த கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட அறிவுக் கருவூலம் அது".

 

     எல்லாவற்றுக்கும் மேலாக, வள்ளல் பெருமான், திருக்குறள் பாக்களை அப்படியே எடுத்தாண்டு இருப்பதும், திருக்குறள் கருத்துக்களை ஆங்காங்கே தமது அருட்பாடல்களில் காட்டி இருப்பதும், திருக்குறளின் பெருமையை மேலும் பறைசாற்றும்.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...